படிக்காத பாமரர் முதல் நன்கு படித்து நல்ல பதவியில் உள்ளவர்கள் வரை பலரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகும் செய்திகள் சமீபத்தில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாகவும், அந்த தங்கத்தில் முதலீடு செய்வதாகவும், கூறி ₹2,000 கோடி வரை மோசடி செய்துள்ளது.

கடந்த 8 மாதங்களாக வட்டி மற்றும் அசலை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிய நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அலுவலகத்தை முதலீட்டாளர்கள் முற்றுகையிட்டு புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், விசாரணை செய்ததில் சிவசக்திவேல் என்பவர் தான் இந்த மோசடியை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. சிவசக்திவேல் துபாய்க்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறுகின்றனர். தொடர்ந்து பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பல நிறுவனங்கள் அடுத்தடுத்து ஏமாற்றி விட்டு ஓடினாலும், சென்னையில் பிராவிடண்ட் டிரேடிங் நிறுவனம் மோசடி செய்தவிதம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``நிதி நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் எந்தளவு உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது" என பலரும் கவலையுடன் கூறுகின்றனர்.