பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்... உங்களுக்கு ஏற்றதா?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

வருமான வரி அனுகூலம், வசதிகள் போன்றவற்றுக்காக பல முதலீட்டாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளிலிருந்து கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களுக்கு மாறி வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக கடன் ஃபண்டுகளில் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி ஃபண்ட் (Target Maturity Fund - TMF) என்ற திட்டம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இந்த ஃபண்டில் உள்ள மூலதனத்துக்கு பாதுகாப்பு, எளிதில் பணமாக்கும் தன்மை, வருமானம் மற்றும் வரி அனுகூலம் (Safety, Liquidity, Return and Tax Efficiency) ஆகியவை முக்கியமான காரணங்கள் ஆகும்.

எஸ்.கார்த்திகேயன் 
நிதி ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன் நிதி ஆலோசகர், https://winworthwealth.com/

முதலீட்டில் நெகிழ்வு...

கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் பல வகை கள் இருக்கின்றன. பொதுவாக, கடன் ஃபண்டு களில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும்; எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுக்கும் வசதிகொண்ட ஓப்பன் எண்டட் கடன் ஃபண்டுகள் மிக அதிகம்.

ஆனால், அண்மைக்காலத்தில் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட் (Target Maturity Fund) என்ற ஒரு ஃபண்ட் வகையை பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன; இந்த ஃபண்டின் சிறப்பு அம்சம் என்னவெனில், இது ஓப்பன் எண்டட் கடன் ஃபண்ட் மற்றும் எஃப்.எம்.பி-யின் பலன்களை ஒரு சேரக் கொண்டதாக உள்ளது. அதாவது, டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டு களில் முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்; எப்போது வேண்டுமானாலும் யூனிட்டுகளை விற்றுப் பணமாக்க முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அது கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகளாக இருந்தாலும் வருமானத்துக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருந்தாலும், முதலீட்டாளர்கள் தோராயமாக எவ்வளவு வருமானம் கிடைக்கலாம் என அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். அது போன்றவர்களுக்கு ஏற்றது, டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட். இந்த ஃபண்டுகளில் இவ்வளவு காலம் கழித்து இவ்வளவு வருமானம் கிடைக்கும் என முதலீடு செய்யும்போதே சுட்டிக் காட்டப்படுகிறது.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்...
உங்களுக்கு ஏற்றதா?

முக்கியமான அம்சங்கள்...

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளுக்கு குறிப்பிட்ட முதிர்வுத் தேதி உள்ளது. அதன் முதலீட்டுக் கலவையில் (Portfolio) உள்ள கடன் பத்திரங்களின் (Bonds) முதிர்வுத் தேதியானது இந்த ஃபண்டின் முதிர்வுத் தேதியுடன் ஒத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், காலம் அதிகரிக்க அதிகரிக்க, ஃபண்டின் முதிர்வுக் காலம் குறையும். அத்துடன் போர்ட்ஃபோலியோவில் இருக்கும் அனைத்து பாண்டுகளும் முதிர்வு வரை தக்கவைக்கப்படுகின்றன.

மற்ற கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, வட்டி விகித மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் தன்மையே டி.எம்.எஃப் ஃபண்டுகளின் முக்கியமான சிறப்பாகும். முதிர்வு வரை போர்ட்ஃபோலியோ தக்கவைக்கப்படுவதால், முதலீட்டுக் காலம் முழுவதும் வட்டி விகித மாற்றங்களால் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. அடுத்து, போர்ட்ஃபோலியோ வில் உள்ள பாண்டுகள் முதிர்வு வரை வைத்துக்கொள்ளப்படுவதால், மற்ற கடன் ஃபண்டுகளைவிட டி.எம்.எஃப் ஃபண்டு களின் வருமானம் எப்போதும் கணிக்கக்கூடியதாக உள்ளது. இதனால், வருமானம் குறித்த எதிர்பார்ப்புகள் ஃபண்டின் முதிர்வின்போதான பலன் (Yield to Maturity -YTM) என்கிற ‘யீல்டு டு மெச்சூரிட்டி’ மதிப்புடன் ஒத்துப்போகும் வகையில் இருக்கின்றன.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் ஓப்பன் எண்டட் ஃபண்டுகளாக இருப்பதாலும், இண்டெக்ஸ் ஃபண்டுகளாகவும் இ.டி.எஃப்-களாகவும் கிடைப்பதாலும், குறிப்பாக, எஃப்.எம்.பி-களுடன் ஒப்பிடுகையில் எளிதில் பணமாக மாற்றத்தக்க தன்மை அதிகம் கொண்டுள்ளன. அத்துடன், முதிர்வுக் காலத்தைப் பொறுத்தவரை, இவை அதிக நெகிழ்ச்சித்தன்மை கொண்டுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் தாங்கள் விரும்பும் முதலீட்டுக் காலத்துக்கேற்ப பொருத்தமான முதிர்வுத் தேதியைக் கொண்டுள்ள ஃபண்டைத் தேர்வு செய்ய முடியும்.

என்ன சிறப்பு?

1. இந்த ஃபண்டில் குறிப்பிட்ட காலத்துக்கு அதாவது, ஏதாவது நிதி இலக்கை அடையும் நோக்கத்துடன் முதலீடு செய்யலாம்.

2. நாம் ஏற்கெனவே சொன்னதுபோல், இந்த ஃபண்ட் முதலீடு மூலம் தோராயமாக இத்தனை சதவிகித வருமானம் கிடைக்கும் எனத் தோராயமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

3. மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில் நீண்ட கால மூலதன ஆதாயத்தில் வருமான அனுகூலம் பெற முடியும்.

4. இந்த ஃபண்டில் ரிஸ்க் குறைவாகும். காரணம், அதிக தரக்குறியீடு கொண்ட கடன் பத்திரங்களில் இந்த ஃபண்ட் முதலீடு செய்யப்படுவதாகும். இந்த ஃபண்டில் திரட்டப்படும் பணம் பெரும்பாலும், மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் பாண்டுகள், ஏஏஏ (AAA) தரக் குறியீடு கொண்ட பாண்டுகளில் முதலீடு செய்கின்றன.

5. வங்கிகளின் நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்டுளைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்கும். வருமான வரிக்கு பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டுகளைவிட அதிக லாபகரமாக இருக்கும்.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்...

இந்த ஃபண்டில் முதலீடு செய்யும்போது தோராயமாக சுமார் எவ்வளவு வருமானம் கிடைக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம். இந்தத் தோராய வருமானம் என்பது, ஃபண்டின் முதிர்வு வரை முதலீட்டைத் தொடர்ந்தால்தான் கிடைக்கும். இடையில் யூனிட்டுகளை விற்று விட்டு வெளியேறும்போது, வருமானம் சற்றுக் கூடவோ, குறையவோ செய்யலாம். இந்த ஃபண்ட் திட்டத்தில் முதிர்வுத் தேதியில் முதலீட்டாளர்கள் அனைவரின் வங்கிக் கணக்குக்கு பணம் மாற்றப்பட்டு, திட்டம் நிறைவு செய்யப்படும்.

என்ன ரிஸ்க்..?

பொதுவாக, கிரெடிட் ரிஸ்க் என்ற வட்டி வருமானம் வராத போது, அசல் தொகை வராமல் போவது இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் குறைவாகும். காரணம், மத்திய / மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் கடன் பத்திரங் களில் பணம் முதலீடு செய்யப்படுவதாகும். மேலும், ஏஏஏ தரக்குறியீடு நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் குறைவாகும்.

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் கடன் பத்திரங் களுக்கு அவ்வப்போது வட்டி வருமானம் கிடைக்கும். இதை இது வேறு கடன் பத்திரங்களில் மறுமுதலீடு செய்யும்போது அப்போதைய கடன் சந்தை நிலவரத்துக்கேற்பதான் வட்டி கிடைக்கும். ஆரம்ப முதலீட்டுடன் ஒப்பிடும்போது, சிறிது கூடவோ, குறையவோ செய்யலாம். இதை ‘ரீஇன்வெஸ்ட்மென்ட் ரிஸ்க்’ என்பார்கள்.

இந்தத் திட்டத்தில் மிகக் குறுகிய காலத்தில் ஒருவர் யூனிட்டுகளை விற்று வெளியேறினால், இழப்பு கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இந்த ஃபண்டில், அதன் முதிர்வு காலம் வரைக்கும் முதலீட்டைத் தொடரும்பட்சத்தில் வட்டி விகித மாற்றம் முதலீட்டாளரின் வருமானத்தை பாதிக்காது.

செபி அமைப்பின் ரிஸ்கோ மீட்டர்படி, இந்த ஃபண்டின் ரிஸ்க் தன்மை குறைவானது முதல் நடுத்தரம் (Low-to-Moderate) ஆகும்

என்ன வருமானம் கிடைக்கும்?

தற்போதைய நிலையில், மூன்றாண்டுக்கு மேற்பட்ட நிலையில், இந்த பண்டுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 7.3 சதவிகிதத்திலிருந்து 7.6% வரை வருமானம் கிடைக்கும் என மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங் களால் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.

மூன்றாண்டுகள் கழித்திருக்கும் பட்சத்தில் பணவீக்க விகித சரிக் கட்டல் போக மீதியுள்ள லாபத் துக்கு 20% வருமான வரி கட்டினால் போதும். பணவீக்க விகிதம் சுமார் 6%, ஃபண்ட் வருமானம் கிட்டத்தட்ட 7.5% என்கிறபோது, பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 1.5% லாபத்துக்கு மட்டும் 20% வருமான வரி கட்டினால் போதும். சில சமயங்களில், பணவீக்க விகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில் வரி கட்ட வேண்டி வராது. ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டுக் காலம் எவ்வளவு என்றாலும் முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ (பழைய முறையில் 5%, 20% மற்றும் 30%) அதற்கேற்ப வரி கட்ட வேண்டிவரும்.

யாருக்கு ஏற்றவை?

வட்டி விகித உயர்வு காலத்தில் இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடு மூலம் அதிக வருமானம் கிடைக்கும். அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையில் முதலீடு செய்ய வேண்டிய முக்கிய ஃபண்ட் இதுவாகும். மூன்று ஆண்டுகளுக்குமேல் யூனிட்டுகளை விற்காமல் வைத்திருக்க நினைப்பவர்களுக்கு ஏற்றது. அதாவது, மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு மாற்றாக டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளைக் குறிப்பிடலாம்.

நடுத்தரம் முதல் நீண்ட காலம் வரையிலான முதலீட்டுக் காலம் அதாவது, 5 முதல் 7 ஆண்டுகள் வரை இருந்தால் மற்றும் ஃபண்ட் முதிர்ச்சி அடையும் வரை முதலீட்டைத் தக்கவைக்க முடியும் என்பவர்கள் மட்டுமே இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும்!

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்: இரு வகைகள்..!

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டைப் பொறுத்த வரையில் இரண்டு வகை உள்ளது, ஒன்று, ரெகுலர் மியூச்சுவல் ஃபண்ட். மற்றொன்று, பாசிவ் ஃபண்ட் அல்லது எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என்கிற இ.டி.எஃப் ஃபண்ட் ஆகும்.

பாசிவ் டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள், இ.டி.எஃப்கள் அவற்றின் அடிப்படையாக அமைந்துள்ள பாண்ட் இண்டெக்ஸுக்கேற்ப கடன் பத்திரங்களில் முதலீடு செய்கிறது. இதனால், இந்த ஃபண்டுகளின் போர்ட்ஃபோலியோவில் பெரும் பகுதி இந்தியாவின் பாண்ட் இண்டெக்ஸ்களில் பெருபான்மை அங்கம் வகிக்கிற அரசு பாண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது, டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதியானது அரசு பாண்டுகள், பொதுத்துறை நிறுவனங்களின் பாண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகும். இதனால், பிற கடன் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது, டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளின் கிரெடிட் ரிஸ்க் குறைவாக உள்ளது.