
புதிய மாற்றங்கள்
முதலீட்டாளர்களின் நலனை பாதுகாப்பதற் காக செபி பல நடவடிக்கை களைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன் அடுத்த கட்டமாகத் தற்போது ஒரு புதிய பரிந்துரையை வெளி யிட்டிருக்கிறது. இதற்கான அனைத்துத் தரப்பு கருத்தையும் பிப்ரவரி 16-ம் தேதிக்குள் அளிக்குமாறு செபி கேட்டிருக்கிறது.

ஏன் இந்தப் புதிய பரிந்துரை?
பத்தாண்டுகளுக்கு முன்பு ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்க வேண்டும் எனில், டி.டி அல்லது செக்கை புரோக்கர் களிடம் சமர்ப்பிக்க வேண் டும். ஐ.பி.ஓ-வில் பங்குகள் கிடைத்தால், பிரச்னை இல்லை. பங்கு கிடைக்க வில்லை எனில், நாம் முதலீடு செய்த தொகை திரும்பி வந்து விடும்.
ஆனால், பல நாள்கள் கழித்தே இந்தப் பணம் கிடைத்தது. இதனால் சிறிய முதலீட்டாளர்கள் வேறு ஐ.பி.ஓ அல்லது பங்கில் முதலீடு செய்ய முடியாத நிலை இருந்தது.
இதற்கொரு தீர்வாக ஆஸ்பா (Application Supported by Blocked Amount) என்கிற முறையைக் கொண்டுவந்தது செபி. இந்த முறையில் முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தில், ஐ.பி.ஓ-வில் பங்கு வாங்குவதற்கென ஒதுக்கப்பட்ட தொகை மட்டும் திரும்ப எடுக்க முடியாதபடி ‘லாக்’ (lock) செய்யப்பட்டிருக்கும். ஐ.பி.ஓ-வில் பங்குகள் ஒதுக்கப் பட்டால் அந்தப் பணம் எடுத்துக்கொள்ளப்படும். பங்குகள் ஒதுக்கப்படவில்லை எனில், ஒரு சில நாள்களில் அந்தப் பணம் விடுவிக்கப் படும் (unlock). இது முதலீட் டாளர்களுக்குப் பயனுள்ள தாக இருந்ததால், சாதாரண முதலீட்டாளர்கள் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்வது கணிச மாக உயர்ந்தது.

இரண்டாம் நிலை சந்தையிலும்...
தற்போது இதே முறையை இரண்டாம் நிலை சந்தை (secondary market) மற்றும் டெரிவேட்டிவ் சந்தையிலும் செயல்படுத்தும் திட்ட வடிவை செபி கொண்டு வந்திருக்கிறது. இது பற்றிய கருத்துகளைத்தான் செபி இப்போது கேட்டுள்ளது.
தற்போது பங்குகள் வாங்க வேண்டும் எனில், முதலீட் டாளர்கள் வங்கிக் கணக்கில் இருந்து புரோக்கர் (டிரேடிங் மெம்பர்) வங்கிக் கணக்குக்கு பணம் செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து கிளியரிங் கார்ப்பரேஷனுக்குப் பணம் செல்லும். இதன் பிறகே முதலீட்டாளர்களுக்குப் பங்குகள் ஒதுக்கப்படும்.
பணம் அதிக இடங்களில் பயணிப்பதால், முதலீட் டாளர்களின் ரிஸ்க் அதிகரிக் கிறது. பணம் புரோக்கர்களின் வங்கிக் கணக்கில் இருப்ப தால், அவர்கள் தவறாக பயன் படுத்த வாய்ப்பிருக்கிறது. தற்போது தொழில்நுட்பம் மேம்பட்டுவிட்டதால், புதிய வழிமுறைகளைக் கொண்டுவரவிருக்கிறது செபி. இதன்மூலம் வாடிக்கை யாளர்களின் வங்கிக் கணக்கில் உள்ள நிதியை ‘ப்ளாக்’ செய்து பங்குகளை வாங்க முடியும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?
இந்தப் புதிய பரிந்துரையால் முதலீட்டாளர்களுக்கு சில நன்மைகள் கிடைக்கும். முதலீட்டாளர்களின் பணம், அவர்களின் வங்கிக் கணக்கிலேயே இருக்கும். வங்கிக் கணக்கில் இல்லை எனில், பங்குகளாக இருக்கும். வங்கிக் கணக்கில் இருக்கும்போது சேமிப்புக் கணக்குக்கான வட்டி கிடைக்கும். முக்கியமாக, முதலீட்டாளர்களின் பணத்தை மற்றொருவர் கையாள்வது நடக்காது. இதனால் ஐ.பி.ஓ-வில் முதலீடு செய்யும் சாதாரண முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.
புரோக்கர்களுக்கு என்ன நன்மை?
முதலீட்டாளர்களின் பணத்தை நம்பி செயல்படாத புரோக்கர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மேலும், முதலீட்டாளர்களின் பணம் குறித்த தகவலை அளிக்கும் வேலையும் புரோக்கர்களுக்கு இல்லாமல் போய்விடும். முதலீட்டாளர்களின் எந்தப் பணத்தையும் கையாள்வது இல்லை என்பதால், புரோக்கர்கள் எதிர்கொள்ளும் ரிஸ்க்கும் குறையும்.
ஆனால், புரோக்கரேஜ் தொகையை கிளியரிங் கார்ப்பரேஷன் வாங்கிக் கொடுக்கும் எனப் புதிய பரிந்துரையில் சொல்லியிருக்கிறது செபி. புரோக்கிங் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் செயல் பாட்டுக்கு / முதலீட்டின் அளவுக்கேற்ப புரோக்கரேஜ் தற்போது கட்டணத்தை வசூலிக்கிறது.
இனிவரும் காலத்தில், பலவித புரோக்கிங் கட்டணங்கள் இருக்குமா அல்லது ஒரே நிலையான புரோக்கிங் கட்டணங்கள் மட்டுமே இருக்குமா என்பதில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைப் பொறுத்துதான் புரோக்கிங் நிறுவனங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும்!