கோவிட் வந்த பின்பு காப்பீடு எடுத்துக்கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது காப்பீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பணப் பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடைபெறுகிறது. இதையொட்டி பல மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன... அவற்றிலிருந்து நாம் எவ்வாறு தப்பிப்பது என வழிமுறைகளைச் சொல்லுகிறார் பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சட்டம் & இணக்கத்துறை தலைவர் பி.எம்.அனில். இனி அவர் கூறுவதைப் பார்ப்போம்.

மோசடிகள் இப்படியும் வரும்...
தொலைபேசி அழைப்பு: இல்லாத காப்பீட்டு திட்டத்தை இருப்பதுபோல் ஃபோனில் பேசி நம்ப வைத்து பணம் பறிப்பது.
இ-மெயில்: ஏற்கெனெவே எடுத்த காப்பீட்டின் பிரீமியம் தொகை நிலுவையில் உள்ளது அல்லது இன்னும் வந்து சேரவில்லை என்று பொய்யான தகவல்களை இ-மெயில் மூலம் அனுப்பி பணம் பறிப்பது.
போலி இணைய தளங்கள்: காப்பீட்டு நிறுவனங்கள் போல போலியான இணையதளத்தைத் தொடங்கி, ஆவணங்கள் சரிபார்ப்பு, உடல் நல பரிசோதனை ஏதுமின்றி காப்பீடு தருவதாகக் கூறி பணத்தைப் பறிப்பது.
உறவினர் பெயரை பயன்படுத்துவது: உங்களின் உறவினர்/தெரிந்தவர் பெயரைச் சொல்லி, அவர் எடுத்த பாலிசியின் பயனாளர் தாங்கள்தான் என்று கூறுவது. காப்பீடு தொடர்பான பணத்தைப் பெற நீங்கள் டெபாசிட் செலுத்த வேண்டும் என்று பணம் பறிப்பது.

ஓடிபி அனுப்புதல்: உண்மையான இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இருந்து அழைப்பது போல பேசி, உங்கள் மொபைல் நம்பருக்கு வந்திருக்கும் ஓடிபி எண்ணை பகிருமாறு கேட்பர். பின்னர், அபாயம் மிகுந்த ஆப்ஸ் அல்லது மால்வேரை தரவிறக்கம் செய்யச் சொல்லி, உங்களின் முக்கிய தகவல்களைத் திருடுவர்.
பொய்களைச் சொல்லி விற்பது: பாலிசியில் இல்லாத விஷயங்களை இருப்பதாகச் சொல்லி உங்கள் தலையில் பாலிசியைக் கட்டிவிடுவர்.
அங்கீகாரம் இல்லாதவர்கள்: இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி முகமையின் (IRDAI) கீழ் அங்கீகரிக்கப்படாமல் காப்பீடு வழங்குவது. இது சட்டப்படி குற்றமாகும்.
எப்படி நம்மைக் காத்துக்கொள்வது?
உங்களின் பிறந்தநாள், வங்கி விவரங்கள், யு.பி.ஐ (UPI) விவரங்கள், முகவரி போன்றவற்றை எப்போதும் தொலைபேசியில் சேமித்து வைக்கவோ, பிறர் கேட்டாலோ தெரிவிக்க வேண்டாம்.
எஸ்.எம்.எஸ். அல்லது இ-மெயில் மூலம் வரும் லிங்குகளை க்ளிக் செய்ய வேண்டாம்.
நம்ப முடியாத அளவு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைத் தரும் இணையதளங்களை நம்ப வேண்டாம்.

https செக்யூர்டு இணையதளங்களை மட்டும் நம்பவும். http என்று இருக்கும் தளங்களில் உஷாராக இருக்க வேண்டும்.
காப்பீடு தொடர்பான க்ளெய்ம்களுக்கு எந்தவித முன்பணமோ சேவைக் கட்டணமோ செலுத்த தேவையில்லை என்பதை மறக்க வேண்டாம்.
தெரியாத நபரிடமிருந்து வரும் ஓடிபிகளை எப்போதும் பகிர வேண்டாம்.
காப்பீடு எடுப்பதற்கு முன் ஆவணங்கள் மற்றும் சட்டத் திட்டங்களைப் படித்து தெளிவு பெறுவது கட்டாயம்.
இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளின் அடையாள அட்டைகளைக் கேட்டு அது உண்மைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு பாலிசி எடுக்கவும்.
எக்காரணம் கொண்டும் ஆயுள் காப்பீடு எடுக்க, அதற்கான பிரீமியத்தை ரொக்கமாக கொடுக்க வேண்டாம்.
- அனில் பி.எம், தலைவர் - சட்டம் & இணக்கத்துறை, பஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்ஷூரன்ஸ்.