நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பணம் மிச்சமா... பணம் இழப்பா..? பாதிப்பை ஏற்படுத்தும் 6 ‘செலவுத்’ தவறுகள்!

‘செலவுத்’ தவறுகள்...
பிரீமியம் ஸ்டோரி
News
‘செலவுத்’ தவறுகள்...

மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகத் தரமற்ற பொருள்களை வாங்குவதால், நாம் பணத்தை சேர்ப்பதில்லை; இழக்கவே செய்கிறோம்!

ஏ.எஸ்.முரளிதரன், முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை

நம்மில் பலர் எதிர்காலத் தேவைகளுக்காக அதிகம் சேமிப்பதாக நினைத்து, பல தவறுகளைச் செய்கிறார்கள். அது போன்ற முக்கியமான தவறுகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

ஏ.எஸ்.முரளிதரன் 
முதன்மைச் செயல் அதிகாரி, 
வீரா ஃபின்சர்வ், சென்னை
ஏ.எஸ்.முரளிதரன் முதன்மைச் செயல் அதிகாரி, வீரா ஃபின்சர்வ், சென்னை

1. மலிவு விலையில் மொத்தமாக பர்ச்சேஸ்...

கத்திரிக்காய் உட்பட வீட்டில் அன்றாடம் தேவைப்படும் பொருள்கள் விலை மலிவாகக் கிடைக்கிறது என நம்மவர்கள் மொத்தமாக வாங்கிவிடுகிறார்கள். இப்படி வாங்கிய காய்கறி, பழங்கள் போன்றவற்றை ஃபிரிட்ஜில் அடைத்து வைக்கிறார்கள். இதனால் மின்சார செலவு அதிகரிப்பதுடன் அவை விரைவில் கெட்டுப் போகவும் செய்யும். இதனால் உடல்நலனும் கெடும். சாப்பிடக்கூடிய பொருள்களைத் தேவைக்கு மட்டும் வாங்கிக் கொள்வது நல்லது. உதாரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ50. மூன்று கிலோ வாங்கினால் ரூ.120 எனில், நம்மவர்கள் மூன்று கிலோ வாங்கிவிடுகிறார்கள். நாம் இரண்டு கிலோ அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் எனில், இரண்டு கிலோ ரூ.100-க்கு வாங்கிக்கொள்ளலாம். கூடுதலாக ஒரு கிலோ கிடைக்கிறது என்பதற்காக அதை வாங்கிப் பயன்படுத்தாமல் 20 ரூபாயை இழக்கிறோம். மலிவு விலையில் கிடைக்கிறது என்பதற் காக தரமற்ற பருப்பை வாங்கி வந்து, அதைப் பயன்படுத்த முடியாமல் வீசி எறிவதைப் பார்க்கலாம்.

ஆக, மலிவாகக் கிடைக்கிறது என்பதற்காகத் தரமற்ற பொருள்களை வாங்குவதால், நாம் பணத்தைச் சேர்ப்பதில்லை. இந்த மாதிரியான பொருள்களில் எவற்றை, எந்த அளவுக்கு வாங்க வேண்டும் என்று யோசித்துச் செயல்பட வேண்டும்.

பணம் மிச்சமா... பணம் இழப்பா..? 
பாதிப்பை ஏற்படுத்தும் 6 ‘செலவுத்’ தவறுகள்!

2. பொருள்களின் பராமரிப்பு செலவைத் தவிர்ப்பது...

வீட்டிலுள்ள வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருள்களின் பராமரிப்பு செலவைத் தவிர்ப்பதால், பணத்தைச் சேமிக்க முடியும் எனப் பலரும் நினைக்கிறார்கள். சில நூறு ரூபாய்களை மிச்சப்படுத்த நினைத்து, அன்றாடம் பயன்படுத்தும் இது மாதிரியான பொருள்களை சரியாகப் பராமரிக்கவில்லை எனில், விரைவிலேயே பழுதாகிவிடும். விளைவு, அந்தப் பொருள்களை சீர்செய்ய மிச்சம் செய்ய நினைத்த பணத்தைவிட அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். அல்லது புதிய பொருளை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுவோம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பைக்கை மெக்கானிக்கிடம் தந்து சரிபார்ப்பது, வீட்டில் சுவர்களுக்கு ஆறு வருடத்துக்கு ஒரு முறையாவது பெயின்ட் அடிப்பது என அவசியம் செய்ய வேண்டிய அத்தியாவசியமான செலவுகளைச் செய்வதால் நமக்கு லாபமே கிடைக்கும்.

3. மருத்துவரிடம் செல்வதைத் தவிர்ப்பது...

உடல்நலம் பாதிக்கும்போது மருத்துவரிடம் சென்றால், ஃபீஸ் தர வேண்டும் என்பதற்காக மெடிக்கல் ஷாப்பில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிடுகிறார்கள். தொடர்ச்சியான தலைவலி, காய்ச்சல் எனில், பணத்தைப் பற்றிக் கவலைப்ப டாமல் மருத்துவரை உடனடியாகத் தேடிச் சென்று வைத்தியம் பார்த்துக்கொள்வதே சரியாக இருக்கும். சரியாகக் கவனிக்கப்படாத நோய் அறிகுறிகள் உடலுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அதிக செலவையும் ஏற்படுத்தி விடும். நம் உயிருக்கேகூட ஆபத்து வர வாய்ப்புண்டு. எனவே, உடல்நலக் குறைவு எனில், பணம் செலவாகுமே என்று நினைக்காமல், சரியான நேரத்தில் சிகிச்சை எடுப்பது அவசியம்.

4. மலிவு விலையில் தரமில்லாத பொருள்களை வாங்குவது...

பணத்தை மிச்சப்படுத்துகிறேன் பேர்வழி என்று தரமில்லாத பொருள்களை வாங்குவதை பலர் வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். உதாரணமாக, ஒரு மிக்ஸி ரூ.5,000 ஆகும் எனில், ரூ.3,000-க்குத் தரம் இல்லாத மிக்ஸியை வாங்குவது. அன்றாடம் பயன்படுத்தும் இது மாதிரியான பொருள்கள் மலிவு விலையில் வாங்கும்போது விரைவில் பழுதடைவதற்கு நிறைய வாய்ப்புண்டு. அப்படிப் பழுதடைந்தால், தேவையில்லாத சச்சரவுகள் வீட்டில் உருவாகும்; இந்தப் பொருள்களை சரி செய்ய நேரம் செலவாகும்; அத்துடன் தரமற்ற பொருட்களால் உடலுக்கும் உடைமைக்கும் ஏன் உயிருக்குமே கூட ஆபத்துகள் வரலாம். எனவே, தரமான பொருள்களை வாங்கி, நீண்ட காலத்துக்குப் பயன்படுத்துவது மூலம் கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

5. அதிகம் தேவைப்படாத பொருளை விலை கொடுத்து வாங்குவது

கார் வாடகை பணத்தை மிச்சப்படுத்த நினைத்து பலரும் சொந்தமாக கார் வாங்கிவிடுகிறார்கள். ‘கார் வாடகைக்கே இவ்வளவு பணம் செலவாகிறதே! அதற்கு நாமே சொந்தமாக கார் வாங்கிவிடலாமே’ என்பது அவர்கள் போடும் கணக்கு. ஆனால், பல சமயங்களில் இந்தக் கணக்கு உண்மையில் நடப்பதில்லை. அடிக்கடி காரில் வெளியே செல்லலாம் என்று கார் வாங்குபவர்கள், பிற்பாடு பெட்ரோல் செலவுக்கு பயந்து, காரை வெளியே எடுத்துச் செல்லத் தயங்குகிறார்கள். பணம் கொடுத்து வாங்கிய கார் இப்படி பல நாள் வீட்டிலேயே நிற்கும்போது, அதன் செயலாற்றலும் குறைகிறது. பலரும் இ.எம்.ஐ-யில் காரை வாங்கிவிடுவதால், கஷ்டப்பட்டு வட்டி கட்டும் அதே நேரத்தில், காரின் தேய்மானமும் அதிகரிக் கிறது. தவிர, கார் பார்க்கிங் செலவு, இன்ஷூரன்ஸ் பிரீமியம், சர்வீஸ் செலவு என ஏகப்பட்ட செலவுகள் ஆவதைப் பார்த்து, கார் விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்று யோசிக்கத் தொடங்குகிறார்கள். வாகனத்தை அடிக்கடி பயன் படுத்த மாட்டீர்கள் எனில், சொந்தமாக வாகனம் வாங்குவ தால், எந்தப் பயனும் இல்லை!

6. காப்பீடுகளைத் தவிர்ப்பது...

காப்பீட்டுத் திட்டங்களுக்குக் கட்டும் பணம் வீண் எனப் பலரும் நினைத்து ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை எடுக் காமல் இருக்கிறார்கள். ‘என் நண்பர் 10 வருஷமா மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கிட்டு வர்றாரு. ஆனா, இதுவரை அவரு ஒருமுறைகூட ஆஸ்பத்தி ரியில அட்மிட் ஆனதில்லை. அதனால அது வேஸ்ட்தான்’ என்று நினைத்து, மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்காமலே இருக் கிறார்கள். ஆனால், நண்பருக்கு வராத அந்தச் செலவு தனக்கு வந்து, கடன் வாங்கி மருத்துவ மனை செலவு செய்யும்போது தான், அடடா, தப்பு செய்துவிட் டோமே, மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுத்திருந்தால், இந்த செலவை எளிதாகத் தவிர்த் திருக்கலாமே என்று நினைக் கிறார்கள். காப்பீட்டுத் தொகை யில் சில ஆயிரங்களை மிச்சப் படுத்த நினைத்து, பல ஆயிரங் களைச் செலவு செய்வதைவிட, பணத்தை மிச்சப்படுத்த நினைக்காமல், மருத்துவக் காப்பீட்டு பாலிசியை எடுப்பதே புத்திசாலித்தனம்.

பணத்தை மிச்சப்படுத்த நினைப்பது சரியான சிந்தனை தான். ஆனால், எந்தச் செலவை நாம் செய்ய வேண்டுமோ, அந்தச் செலவை செய்யவில்லை எனில், நஷ்டமே ஏற்படும்!