Published:Updated:

தங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா? #DoubtOfCommonMan

தங்கம் ( vikatan )

தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது யார், தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கு கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டுமா?

Published:Updated:

தங்க நகை வாங்கும்போது சேதாரமாகும் தங்கத் துகள்களை நம்மிடம் தருவார்களா? #DoubtOfCommonMan

தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது யார், தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்கு கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டுமா?

தங்கம் ( vikatan )

சேமிப்புகளிலேயே மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுவது தங்கத்தின்மீதான முதலீடுதான். பாரம்பர்யமாக தங்கத்தின் மீது நமக்கு ஈர்ப்பு அதிகமிருப்பதால்தான் இங்கு அது மிகவும் மதிப்புவாய்ந்த பொருளாக இருக்கிறது. கச்சா எண்ணெய் போல தங்கத்தின் விலையும் தினமும் மாறிக்கொண்டேயிருக்கிறது.

தங்கம்
தங்கம்
vikatan

``தங்கத்தின் விலையைத் தீர்மானிப்பது யார், அதை நிர்ணயம் செய்ய ஏதாவது அமைப்பு இருக்கிறதா, தங்கம் வாங்கும்போது சேதாரத்துக்குப் பணம் வாங்குகிறார்களே, அதற்குக் கண்டிப்பாக பணம் செலுத்த வேண்டுமா, சேதாரத்துக்குப் பணம் வாங்கும்போது, சேதாரமாகும் தங்கத்துகள்களை நகை வாங்குபவர்களுக்குத் திருப்பி தரவேண்டுமல்லவா, ஏன் தருவதில்லை..." என்ற கேள்வியை விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் கிருஷ்ணகுமார் என்ற வாசகர் எழுப்பியிருந்தார்.

ஜெம் & ஜூவல்லரி டெக்னாலஜி டிரெயினிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதனிடம் இதுகுறித்து கேட்டோம்.

கே.சுவாமிநாதன்
கே.சுவாமிநாதன்
vikatan

``உலக அளவில் தங்கத்துக்கு விலை நிர்ணயம் செய்வது லண்டனில்தான். இந்தியாவைப் பொறுத்தவரை மும்பையிலுள்ள, `இந்தியா புல்லியன் அண்ட் ஜூவல்லர்ஸ் அசோசியேஷனில் தங்கத்தின் அன்றாட விலையை நிர்ணயம் செய்கிறார்கள். சென்னையில், தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் சம்மேளனம்தான் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கிறது. தினமும் காலையில் லண்டனில் நிர்ணயிக்கப்படும் தங்கத்தின் விலை, அடுத்த சில நிமிடங்களில் மும்பைக்குத் தெரியவரும். அங்கே அவர்கள் விலை நிர்ணயம் செய்தவுடன், சென்னையில் விலை நிர்ணயிக்கப்படும். இதற்குள் காலை 11 மணியாகிவிடும். பிறகு, மாலையில் தங்கத்தின் சந்தை நிறைவடைந்தவுடன் மீண்டும் இரவு 7 மணிக்கு தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படும். இந்த விலை, மறுநாள் காலை 11 மணி வரை கணக்கில் கொள்ளப்படும்.

தங்கத்தில் நகை செய்யும்போது ஒவ்வொரு கட்டத்திலும் தங்கம் சேதாரம் ஆகக்கூடும். அப்படி சேதாரமாகும் அளவைவிட மூன்று மடங்கு தொகையை பொதுவாக சேதாரமாக நிர்ணயிப்பார்கள். இப்படி கூடுதலாக நிர்ணயிக்கப்படும் விலையிலிருந்துதான் வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவைகளும் தரப்படுகின்றன. நகைக்கடைக்குள் நுழையும்போது வாடிக்கையாளர்களுக்குத் தரப்படும் வரவேற்பு, உள்கட்டமைப்பு அலங்காரங்கள், விலையுயர்ந்த இருக்கைகள், உபசரிப்பு, அன்பளிப்பு என அனைத்துச் செலவுகளும் இதில்தான் அடங்குகின்றன. முக்கியமாக, விளம்பரத்துக்கான செலவுகளும்கூட இதில்தான் சேர்க்கப்படுகின்றன. முன்பெல்லாம் சிலர், நகையின் தரத்தைக் குறைத்து சேதாரத்துக்கான கட்டணத்தைக் குறைப்பதுண்டு. ஆனால், தற்போது ஹால்மார்க் உள்ளிட்ட தரக்குறியீடுகள் வந்திருப்பதால் தரத்தைக் குறைக்க இயலாது.

தங்கம்
தங்கம்
vikatan

சேதாரமான தங்கத்தை வாடிக்கையாளர்களுக்குத் தருவதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. 'வெளிநாடுகளில் சேதாரமான தங்கத்தை கட்டியாக உருக்கித் தருகிறார்கள்' என்றெல்லாம் இணையத்தில் வெளியாகும் செய்திகள் தவறானவை. அங்கெல்லாம் 'வொர்க்மேன்ஷிப் சார்ஜ்' என்ற பெயரில் சேதாரத்தையெல்லாம் சேர்த்து வசூலித்துவிடுவார்கள்" என்றார்.