பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்! - ‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்..!
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்..!

நிதிக் கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இளம் வயதிலிருந்தே இத்தகைய விவரங்களைப் பிள்ளைகள் தெரிந்துகொள்வது எதிர் காலத்தில் பணம், சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட விஷயங் களில் சிறப்பாகச் செயல்பட உதவும்...

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்! - ‘Money’ துளிகள்..!

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்!

நான் சில வருடங்களுக்குமுன், சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐஸ்க்ரீம் பிராண்டின் ஃபிரான்சைஸ் எடுத்தேன். ஃபிரான்சைஸ் எடுப்பதற்கான கட்டணம், மெஷின், உள் அலங்கார வடிவமைப்பு எல்லாம் சேர்த்து ரூ.12 லட்சம் ஆனது. மாதம் ரூ.2.5 லட்சம் வரை விற்பனை இருக்கும் என்றும், ரூ.60,000-க்கு மேல் லாபமாகக் கையில் நிற்கும் என்றும் சொன்னார்கள். ஒரு வருடம் ஆகியும் அவர்கள் சொன்ன விற்பனையில் பாதிகூட ஆகவில்லை. ஃபிரான்சைஸ் தரப்பில் இருந்து எந்தவித சப்போர்ட்டும் கொடுக்கவில்லை. பல லட்சங்களை இழந்த பிறகே இது சரிப்பட்டு வராது என என்னால் புரிந்து கொண்டேன். ஃபிரான்சைஸை மூடிவிட்டு வெளியேறி விட்டேன். புதிதாக ஃபிரான்சைஸ் எடுப்பவர்கள், நீங்கள் விற்கும் பொருளுக்கு உங்கள் ஏரியாவில் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும், லாபம் எவ்வளவு கிடைக்கும் என்பதை நன்கு ஆராய்ந்து எடுப்பது நல்லது!

- @ சண்முகம்

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்! - ‘Money’ துளிகள்..!

பணத்தை மிச்சப்படுத்தும் வாரச் சந்தை!

இன்றைக்கு பெருநகரங்களைப் போலவே, சிறு நகரங்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பர்ச்சேஸ் செய்வதைத்தான் பலரும் பெருமையாக நினைக்கிறார்கள். சிறு நகரங்களுக்கு மிக அருகில் நடக்கும் வாரச் சந்தைகளை அவர்கள் அலட்சியப்படுத்துவதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. சுற்றுவட்டாரக் கிராமங்களில் இருந்து, கொண்டு வரப்படும் காய்கறிகளும் கனிகளுமே வாரச் சந்தைகளில் விற்பனை செய்யப்படுகின்றன. தரமான, ஃப்ரெஷ்ஷான காய்கறிகளைக் குறைந்த விலையில் இங்கே வாங்கலாம். ஒவ்வொரு வியாபாரியும் போட்டி போட்டுக்கொண்டு வாடிக்கையாளர்களுக்குத் தங்கள் பொருள்களை விற்பனை செய்வார்கள். வாடிக்கை யாளர்களும் தங்களிடம் இருக்கும் பணத்துக்கேற்ப பொருள்களை வாங்கும் வாய்ப்பும் சந்தைகளில் உண்டு. ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை சந்தைகளில் வாங்கினால் பெரிய கடைகளைக்காட்டிலும் 30% - 40% பணம் மிச்சமாகும் என்பது என் அனுபவம். வரவுக்கு தகுந்ததுபோல் செலவு செய்ய நினைப்பவர்களுக்கு வாரச் சந்தை என்பது வரம். பயன்படுத்திப் பார்த்தவர் களுக்குத்தான் வாரச் சந்தையின் அருமை புரியும்!

- நா.ஆமினத்து ஜாக்ரினா, கீழக்கரை.

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்! - ‘Money’ துளிகள்..!

கொஞ்சம்தான் வேலை... கொடுத்த பணம் அதிகம்!

அண்மையில் என்னுடைய வீட்டைப் பழுது பார்க்க ஒரு கார்பென்டரை ஏற்பாடு செய்தேன். ஆரம்பத்தில் அவரும் நல்லபடியாகத்தான் வேலைகளைச் செய்தார். அவ்வப்போது பணம் கேட்பார். நானும் கொடுத்துவிட்டு கணக்கு எழுதி வைத்தேன். முக்கால்வாசி வேலைகள் முடிந்த பிறகு, கணக்கு பார்த்தேன். அப்போதுதான் அவர் செய்த வேலைகளைவிட அதிகமாக அவருக்குப் பணம் தந்திருக்கிறேன் என்பது தெரியவந்தது. அதன்பிறகு நான் பணம் தரவில்லை; ஏற்கெனவே வாங்கிய பணத்துக் கான வேலைகளை செய்யச் சொன்னேன்.

ஆனால், அவரோ இரண்டு, மூன்று நாள்கள் மட்டும் வேலை செய்துவிட்டு, அதன்பிறகு வேலைக்கே வரவில்லை. நான் திரும்பத் திரும்ப அவருக்கு போன் செய்தும், அவர் என் போனை எடுக்கவே இல்லை. பிறகு வேறொரு நபரை வைத்துதான் வேலைகளை முடித்தேன். இதனால் எனக்கு நிறைய பணம் நஷ்டம். எனவே, இதுபோன்ற வேலைகளைச் செய்யும்போது முன்பணம் தரும் வகையில் கவனமாக இருப்பது அவசியம்.

- இரா.வசந்தராசன், கிருஷ்ணகிரி.

ஃபிரான்சைஸ் பிசினஸ்... விற்பனைக் கணக்கு முக்கியம்! - ‘Money’ துளிகள்..!

குடும்பத்துக்கு சொல்லித்தர வேண்டிய பணப்பாடங்கள்..!

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள், காப்பீட்டுத் திட்டங்கள் என நிதி சார்ந்த தகவல்கள் பற்றி அவ்வப்போது நிபுணர்கள் மூலம் பல்வேறு அமைப்புகளால் பயிலரங்கங்கள் அடிக்கடி எல்லா நகரங்களிலும் நடத்தப்படுகின்றன. ஆண்கள்தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்குப் பெரும்பான்மையாகச் செல்கிறார்கள். இது போன்ற நிதிசார்ந்த நிகழ்ச்சிகளில் இல்லத்தரசி மற்றும் பள்ளி, கல்லூரி பயிலும் பிள்ளை களையும் அழைத்து வந்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமே! நிதிக் கல்வி என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்று. இளம் வயதிலிருந்தே இத்தகைய விவரங்களைப் பிள்ளைகள் தெரிந்துகொள்வது எதிர் காலத்தில் பணம், சேமிப்பு, முதலீடு உள்ளிட்ட விஷயங் களில் சிறப்பாகச் செயல்பட உதவும். இல்லத்தரசி களாலும் சரியான முதலீட்டு, காப்பீட்டு முடிவுகளை எடுக்க முடியும். இப்படிப்பட்ட கூட்டங்கள் பெரியோர்களுக்கானது என நினைக்காமல், குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு நிதிசார்ந்த விஷயங்களை அறிமுகப் படுத்துவது நம் பொறுப்பு என்பதை ஒவ்வோர் ஆணும் உணர வேண்டும். உங்கள் குடும்பத்தினர் பணம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொள்ள உதவுங்கள் நண்பர்களே!

- வி.பிச்சை, சென்னை.

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com