
நீங்களும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள்! - நான் இப்போது என்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துள்ளதாக உணர்கிறேன்...

கடன் உத்தரவாதம், உஷார்!
என் நண்பர் ஒருவர், அவரின் சொந்த சகோதரருக்கு வியாபார விஸ்தரிப்புக்காக தனியார் நிதி நிறுவனத்தில் பெரிய கடன் தொகைக்கு உத்தரவாதக் கையெழுத்து இட்டிருந்தார். கொரோனா காலத்தில் பிசினஸ் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நண்பரின் சகோதரர் கடன் தவணைகளை சரிவரச் செலுத்தாமல் இருந்திருக்கிறார். கடன் கொடுத்த நிறுவனத்திடமிருந்து இவருக்கு நோட்டீஸ் வர ஆரம்பித்தது. தன் சகோதரரிடம் சொல்லி தவணை களைச் சரியாகக் கட்டுமாறு வலியுறுத்தியுள்ளார். அண்மையில் நண்பர் ஹோம்லோன் கேட்டு வங்கியில் விண்ணப்பித்தால், சிபில் ஸ்கோர் குறைவு என்று சொல்லி கடன் மறுக்கப்பட்டிருக்கிறது. தன் சகோதரருக்கு உதவப் போய், அதுவே வினையாகிவிட்டது என என்னிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார். உத்தரவாத கையெழுத்துப் போடும்முன் யாருக்காக இருந்தாலும், அவர் குறித்த பல முறை யோசித்து, முடிவெடுப்பதே நல்லது என்கிற பாடத்தை நண்பரின் அனுபவத்தால் கற்றுக்கொண்டேன்.
- மனோகர், மைசூர்.

சேமிப்பின் அவசியம் உணர்ந்த தருணம்!
என் மகனுக்கு 12 வயது. ஒருநாள் அவனைக் கடைக்கு அழைத்துச் சென்றேன். 100 ரூபாயைக் கொடுத்து 20 ரூபாய்க்குப் பொருள் வாங்கினேன். கடைக்காரர் மீதித் தொகையைப் புதிய 20 ரூபாய் தாள்களாகக் கொடுத்தார். புதிய தாள்களைப் பார்த்ததும் என் மகனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. “அப்பா, இந்தப் பணத்தை நான் சேமித்து வைக்கிறேன். இனிமேல் இது மாதிரி புது 20 ரூபாய் கிடைத்தால் என்னிடம் தாருங்கள்” என்றான். அன்று முதல் புது ரூபாய் நோட்டுகள் கிடைக்கும்போதெல்லாம் அவனிடம் கொடுத்துவந்தேன்.
அண்மையில் மிக முக்கியமான செலவுக்குப் பணம் இல்லாமல் திண்டாடிப் போனேன். என்ன செய்வது எனக் குழம்பி நின்றபோது, தான் சேமித்து வைத்திருந்த பணத்தை என் மகன் என்னிடம் கொடுத்தான். அது 8,000 ரூபாய்க்குமேல் இருந்தது. சேமிப்பு எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன். அடுத்த மாதமே மகனிடம் வாங்கிய பணத்தைத் திருப்பக் கொடுத்துவிட்டு, “இனிமேல் புதிய நூறு ரூபாயும் தருகிறேன். தொடர்ந்து சேமித்து வா’’ என்று சொன்னதுடன், நானும் சேமிப்பு, முதலீட்டுக்கான வழிகளைக் குறித்துச் சிந்திக்க ஆரம்பித்தேன்.
- துஷ்யந்த் சரவணராஜ், தேவகோட்டை.

ஏ.டி.எம் திருடர்கள், எச்சரிக்கை மக்களே!
என்னுடைய மாமாவுக்கு ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கத் தெரியாது. நான்தான் அவருக்கு உதவுவேன். நான் அலுவலகத்துக்கு வந்துவிட்ட நேரத்தில் அவசரமாகப் பணம் தேவைப்படவே, அவரின் மகளைக் கூட்டிக்கொண்டு பணம் எடுக்கச் சென்றுள்ளார். பின்னால், இருந்து நோட்ட மிட்ட ஒருவர், ‘நான் உங்களுக்கு உதவுகிறேன்’ எனச் சொல்லி, ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். பிறகு, `பணம் வரவில்லை’ என்று சொல்லி ஏ.டி.எம் கார்டை கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அடுத்த 10 நிமிடத்தில் என் மாமாவின் கணக்கில் இருந்து ரூ.20,000 எடுத்ததாகக் குறுந்தகவல் வந்தது. பிறகு ஏ.டி.எம் கார்டை உன்னிப்பாகப் பார்த்தபோதுதான், உதவி செய்த நபர் வேறொரு ஏ.டி.எம் கார்டைக் கொடுத்து விட்டு, வேறு எங்கோ சென்று என் மாமாவின் ஏ.டி.எம் கார்டைப் பயன்படுத்தி கணக்கில் இருந்த 20,000 ரூபாயை எடுத்துச் சென்றது தெரியவந்தது. காவல் துறையில் புகார் அளித்து அந்த நபர் கொடுத்த அந்த ஏ.டி.எம் கார்டை வைத்து முகவரியைத் தேடியபோது, அந்த கார்டு ஏற்கெனவே பிளாக் செய்யப்பட்டுள்ளது என்பதும், அது போலியான முகவரி என்பதும் தெரிய வந்தது. ஏ.டி.எம்மில் பணம் எடுக்கத் தெரியாதவர்கள் அறிமுகம் இல்லாதவர்களைப் பணம் எடுக்க அனுமதிக் காமல், நம்பிக்கையானவர்களை உதவிக்கு அழைத்துச் செல்லுங்கள்.
- @ எம்.பார்த்திபன்.

நீங்களும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுங்கள்!
நான் 12 வயது இருக்கும்போதே என் தந்தை உடல் நலக் குறைவால் தவறிவிட்டார். அந்தத் தருணத்தில் குடும்பத்தில் சேமிப்பு, சொத்து என எதுவும் இல்லை. என்னுடைய அண்ணனும் நானும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை. நாங்கள் வாடகைக்கு குடி இருக்கும் வீட்டு உரிமையாளர்தான் எங்கள் கல்விக்கு உதவினார்.
என் தாயாரின் சொற்ப வருமானத்தில் கஷ்டத்திலேயே வளர்ந்தோம். நான் வேலைக்குச் சேர்ந்தவுடன் என்னுடைய 23-வது வயதில் ரூ.50 லட்சத்துக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துவிட்டேன். இந்தக் குறைந்த வயதிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்ததால், பிரீமியம் மிகவும் குறைவாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.5,200 மட்டுமே செலுத்துகிறேன். தற்போது என் வயது 29. பிரீமியம் கட்டுவதற்காக ரூ.1 லட்சம் சேமித்து, ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்துவிட்டேன். அதிலிருந்து வரும் வட்டியில் மட்டுமே வருடந்தோறும் பிரீமியம் செலுத்துகிறேன். இதனால் பிரீமியம் கட்டும் கஷ்டம் எனக்கு இல்லை. தவிர, நான் என்னுடைய குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துள்ளதாக உணர்கிறேன்!
- பி.நவீன்ராஜ், மதுரை.
பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250
பண அனுபவங்களைப் பகிருங்கள்..!
சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com