நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..! - ‘Money’ துளிகள்..!

Money’ துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
Money’ துளிகள்

காலம் கடந்தால் பண இழப்பு நிச்சயம்... மாற்றி யோசித்தால் லாபம்!

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..! - ‘Money’ துளிகள்..!

காலம் கடந்தால் பண இழப்பு நிச்சயம்!

தேங்காய் துருவும் இயந்திரம் ஒன்றை ஆன்லைனில் வாங்கியிருந்தேன். பார்சல் வந்து சேர்ந்த நேரத்தில், வேலை நிமித்தமாக வெளியே செல்ல கிளம்பிக்கொண்டிருந்ததால், பார்சலை வாங்கி வைத்துவிட்டு சென்றுவிட்டேன். அதற்குப் பிறகு, பல வேலைகளில் மறந்துவிட்டேன்.

ஐந்து நாள்கள் கடந்துவிட்ட பிறகு, ஞாபகம் வரவே பார்சலைப் பிரித்துப் பார்த்தேன். ஏதோ கோளாறு காரணமாக இயந்திரம் சரியாக இயங்கவில்லை. ஆர்டரை பரிசோதித்தபோது, ‘குறைபாடுகளிருந்தால் ஏழு நாள்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்; இல்லையெனில் திரும்பப் பெற இயலாது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே பழுதைக் குறிப்பிட்டு திருப்பி அனுப்பிவிட்டேன். எந்தப் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கினாலும், பொருள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உடனடியாகப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். காலம் கடந்துவிட்டால் பண இழப்பைத் தவிர்க்க முடியாது.

- எஸ்.காசிவிஸ்வநாதன், பாளையங்கோட்டை.

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..! - ‘Money’ துளிகள்..!

சூதாட்டம் என்னும் நஞ்சை விதைக்காதீர்கள்!

நல்ல விஷயங்களைவிட கெட்ட விஷயங்கள் காட்சிப்படுத்தப்படும்போது மிக வேகமாக மக்களிடம் சென்றடைகிறது. குறிப்பாக, இளைஞர்களை நெகட்டிவ் விஷயங்கள் பாதிக்காமல் காக்கும் சமூகப் பொறுப்பு இங்கே எல்லோருக்கும் தேவை. சமீப காலமாக, பல வெப்சைட் மற்றும் சேனல்களில் புதுவித சூதாட்ட விளம்பரம் ஒன்று வருகிறது. அதில் ஒரு பட்டதாரி வாலிபர், “இதுவரை பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறேன். இதன் மூலம்தான் புது பைக் வாங்கப் போகிறேன்” என்று சொல்கிறார். படித்தவர் வேலை செய்து சம்பாதிக்கலாம் அல்லது வங்கிக் கடன் மூலம் பைக் வாங்கலாம். சூதாட்டத்தின் மூலம் பைக் வாங்குவது எப்படி சரி..? இது போன்ற சூதாட்ட விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. இளைஞர்கள் மனதில் சூதாட்டம் என்ற நஞ்சை விதைக்காமல் இருப்பது நம் அனைவரின் பொறுப்பே!

- அமுதா அசோக் ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி .

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..! - ‘Money’ துளிகள்..!

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..!

அண்மையில் நான் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள பிரபல வங்கியிலிருந்து ரூ.10,000 ‘வித்டிராவல்’ செய்தேன். கேஷியரிடம் நூறு ரூபாய் கட்டாக கேட்க, அவர் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக் கட்டைத் தந்தார். சரியாகத் தான் இருக்கும் என்கிற எண்ணத்தில் அதை நான் எண்ணிப் பார்க்கவில்லை.

இரண்டு நாள்கள் கழித்து ஏதோ ஆர்வத்தில் அந்த ரூபாய் நோட்டுக் கட்டை எண்ணிப் பார்க்கும்போது ஒரு நூறு ரூபாய் நோட்டு குறைவாக இருந்தது. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்? வங்கி கவுண்டர் அருகிலேயே ரூபாய் நோட்டுக் கட்டை எண்ணிப் பார்க்காதது என் தவறு. கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்ததால் எனக்கு நூறு ரூபாய் நஷ்டம்! பணம் எடுத்தவுடன் எண்ணிப் பார்ப்பது மிக அவசியம். எச்சரிக்கை மக்களே!

- மூ.மோகன், வேலூர்.

வங்கியிலிருந்து பணம்... கவனம் மக்களே..! - ‘Money’ துளிகள்..!

மாற்றி யோசித்தால் லாபம்!

நான் காய்கறி வியாபாரம் செய்து வருகிறேன். எனது வியாபாரத்தில் கத்திரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய் ஆகியவை தவறாமல் விற்பனைக்கு இடம்பெற்றிருக்கும். சில சமயங்களில் இவை விற்பனையாகாமல் அழுக நேரிடும். பல சமயங்களில், இந்தக் காய்கறிகள் ஆடு, மாடுகளுக்கு இரையாவதும் உண்டு. இதனால் பெரிதும் மன உளைச்சலில் இருந்த எனக்கு, தோழி ஒருவர் நல்ல ஆலோசனை வழங்கினார்.

அவருடைய ஆலோசனையின் அடிப்படையில் விற்காமல் மீதமாகும் கத்திரிக்காய், வெண்டை, பாகல், கொத்தவரை காய்களை நன்கு வேக வைத்து, பாதுகாப்பான முறையில் காய வைத்து வற்றல்களாக மாற்றி, 50 கிராம், 100 கிராம் என சிறு பாக்கெட்டு களில் அடைத்து குறைந்த விலைக்கு விற்று வருகிறேன். இதனால் தற்போது எனக்குக் காய்கறி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுவதில்லை. வியாபாரத்தில் புதுமையாக யோசித்தால் லாபம் நிச்சயம்!

- நெ.மஜிமத்து ஹம்திலா, கீழக்கரை.

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com