நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்! - ‘Money’ துளிகள்..!

‘Money’ துளிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
‘Money’ துளிகள்

வேலை இல்லை என மனம் சோர்ந்து போகாமல் முயற்சி செய்தால் வேலையை உருவாக்கிக்கொள்ள முடியும்...

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்! - ‘Money’ துளிகள்..!

ஆச்சர்யப்படுத்திய பிறந்தநாள் விழா!

குழந்தைகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பல ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை ஆடம்பரச் செலவுகளைச் செய்து பெருமைப்பட்டுக் கொள்கிறவர்கள் ஏராளம். மிதமிஞ்சிய பணம் உள்ளவர்கள் கொண்டாடுவதில் பாதகம் இல்லை. இவர்களைப் பார்த்து பலரும் கடன் வாங்கிச் செலவு செய்வதையும் பார்க்கிறோம். ஆனால், நண்பர் ஒருவர் தன் குழந்தையின் பிறந்த நாளைக் கொண்டாடிய விதம் ஆச்சர்யப்படுத்துவதாக இருந்தது. ‘பரிசுப் பொருள்களைத் தவிர்க்கவும்’ என்று கண்டிப்பாகச் சொல்லியிருந்தார் அவர். எல்லோருக்கும் சுவையான தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘தன் அழைப்பை ஏற்று வந்து, குழந்தையை வாழ்த்திய அனைவரும் தனக்காகவும் குழந்தைக்காகவும் செலவழித்த நேரமே மிகப் பெரிய பரிசு’ என்று சொன்னதுடன், குழந்தையின் ஆரோக்கியம், குழந்தைக்கான சேமிப்புத் திட்டங்கள் அடங்கிய சிறிய புத்தகத்தையும் அளித்தார். எளிமையாகவும் இனிமையாகவும் நடந்து முடிந்தது பிறந்த நாள் கொண்டாட்டம். ஆடம்பரச் செலவுகள் இல்லை. உணர்ச்சி மிகுதியால் ஏற்படுகின்ற பண விரயம் இல்லை. அதே சமயம் விழாவின் நோக்கம் மிகச் சிறப்பாக நிறைவேறியது.

- எஸ்.காசிவிஸ்வநாதன், திருநெல்வேலி.

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்! - ‘Money’ துளிகள்..!

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்!

என் மாமா பணி ஓய்வு பெற்றபிறகு, மனைவியுடன் பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். அவரின் பிள்ளைகள் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகிறார்கள். சமீபத்தில் அவர் மாடிப் படியில் இடறி விழுந்து, தலையில் காயம் ஏற்பட்டு சுயநினைவிழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள். மருத்துவச் செலவுகளுக்கு பணம் அவர் மனைவி கையில் இல்லை. என் மாமா நல்ல வசதியுள்ளவர். ஏழெட்டு டெபிட் கார்டு இருக்கிறது. எந்த கார்டுக்கும் பின் நம்பர் தெரியாததால் பணம் இருந்தும் மிகவும் தடுமாறிப்போனார் அவர் மனைவி. ஒருவழியாக அருகில் இருந்த உறவினர்கள் பணம் கட்டினார்கள். தயவுசெய்து டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகளின் ரகசிய பின் நம்பர்களை மனைவியிடம் சொல்லி வையுங்களேன்..!

- எஸ்.ராமதாஸ், புதுச்சேரி - 605001

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்! - ‘Money’ துளிகள்..!

ஜாமீன் கையொப்பம்... ஜாக்கிரதை..!

என் அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர் நேர்மையாக நடந்துகொள்பவர். ரூ.100, 200, 500 என கடன் வாங்கினாலும் குறித்த காலங்களில் திரும்ப தந்துவிடுவார். ஒரு முறை என்னிடம் சீட்டு நிறுவனம் ஒன்றில் 5 லட்சம் சீட்டு பணம் போட்டுள்ளதாகவும், அந்தப் பணத்தை எடுப்பதற்கு ஜாமீன் கேட்பதாகவும் தெரிவித்தார். சக ஊழியர் என்பதாலும், பண விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதத்தாலும் எவ்வித யோசனையும் செய்யாமல் கையொப்பமிட்டேன். என்னுடைய ஆதார் நகலும், மாத சம்பளச் சான்றும் இணைத்துக் கொடுத்தேன். அவர் பணம் எடுத்த ஆறு மாதங்களில், மாதத் தவணை கட்டவில்லை என வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப் பட்டது.

அவரிடம் நான் கேட்கும்போதெல்லாம் இதோ கட்டுகிறேன், அதோ கட்டுகிறேன் என்று காலம் கடத்தினார். ஆறு மாதங்களுக்கான தவணை கட்டாததால் சீட்டு நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுத்தது. ஜாமீன்தாரர் என்ற வகையில் நான் ஒரு பகுதி தொகையைக் கட்ட வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் வேதனையும் அளித்தது. ஜாமீன் தரும் முன் சிந்தித்துச் செயல்படவும்.

- ஹேமா, திருச்சி.

மனைவியிடம் சொல்ல வேண்டிய ரகசியம்! - ‘Money’ துளிகள்..!

வேலை நம் கையில்..!

தோழி ஒருத்தி படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தாள். ஆனாலும், அவள் மனம் தளர வில்லை. ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை தற்காலிக மாக எதையாவது செய்யலாமே என யோசித்தவள், தாலுகா ஆபீஸ் அருகே மரத்தடியில் அமர்ந்து விண்ணப் பங்கள் விற்பது, எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது எனச் சில சேவை களைச் செய்ய ஆரம்பித்தாள்.

‘தினசரி 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது; மக்களுக்கு சேவை செய்த திருப்தியும் கிடைக்கிறது’ என்கிறாள் அவள். படித்த நாம் மரத்தடியில் அமர்ந்து இப்படியெல்லாம் வேலை செய்யலாமா என கெளரவம் பார்க்காமல் செய்து வந்தாள். தன் கனிவான செயல் மூலமாகவே மக்கள் மனதில் இடம் பிடித்துவிட்டாள். சமூக சேவகர்கள் சிலர் மூலமாக இப்போது கட்டட வசதியோடு ஜெராக்ஸ் மெஷின், டேபிள், சேர் என அலுவலக உபகரணங்கள் எல்லாம் இலவசமாக அவளுக்குக் கிடைத் திருக்கிறது. வருமானமும் பெருகியிருக்கிறது. வேலை இல்லை என மனம் சோர்ந்து போகாமல் முயற்சி செய்தால் வேலையை உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதற்கு என் தோழி நல்ல உதாரணம்!

- பா.சுபானு, காரைக்குடி.

பிரசுரிக்கப்பட்ட ஒவ்வொரு துணுக்குக்கும் பரிசு ரூ.250

பண அனுபவங்களைப் பகிருங்கள்..!

சேமிப்பு, முதலீடு, ஏமாற்றம், இழப்பு, ஷாப்பிங், லாபம், நஷ்டம் என எல்லாவிதமான பண அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்ட அனுபவங்களுக்கு தகுந்த சன்மானம் உண்டு. அனுப்ப வேண்டிய மெயில் முகவரி: navdesk@vikatan.com