
ஒட்டுமொத்த டிஜிட்டல் பணமோசடி விவகாரங்களில் சுமார் 55% யு.பி.ஐ மூலம் நடைபெறுகிறது...
‘ஒரு ரூபாய்கூட அனுப்ப முடியும்’ என்பதால் எல்லோரும் யு.பி.ஐ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் எந்தளவுக்கு செளகரியம் இருக்கிறதோ, அந்த அளவுக்கு சிக்கலும் இருக்கிறது என்கிறது சமீபத்தில் டிஜிட்டல் சேவைகளுக்கான தளங் களின் ஆணையமும், ‘பிராக்சிஸ்’ என்கிற ஆலோசனை நிறுவனமும் இணைந்து வெளி யிட்டுள்ள அறிக்கை.

இந்த அறிக்கையின்படி, ஒட்டுமொத்த டிஜிட்டல் பணமோசடி விவகாரங்களில் சுமார் 55% யு.பி.ஐ மூலமாக நடைபெறுவதாகத் தெரியவந்துள்ளது. டிஜிட்டல் பண மோசடி களைச் செய்பவர்கள் யு.பி.ஐ வசதி, கிரெடிட், டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், தொலைபேசி அழைப்புகள் மூலமான ஏமாற்று, இ-வாலட்டுகள் மற்றும் பிற டிஜிட்டல் நடைமுறைகள் மூலம் செய்கிறார்கள்.
இவற்றில் யு.பி.ஐ மூலமாக மட்டுமே 55% மோசடிகள் நடக்கின்றன. இதுபோக, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாக 18%, இன்டர்நெட் பேங்கிங் மூலமாக 12%, தொலைபேசி அழைப்புகள் மூலமாக 9%, இ-வாலட்டுகள் மூலமாக 5 சதவிகிதமும், பிற டிஜிட்டல் முறைகள் மூலமாக 1 சதவிகிதமும் பண மோசடிகள் நடப்பதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.பி.ஐ மூலமாக 55 % மோசடிகள் நடந்தாலும், பணமதிப்பில் பார்த்தால் கிரெடிட், டெபிட் கார்டுகள், இன்டர்நெட் பேங்கிங், தொலைபேசி அழைப்புகள் மூலமான ஏமாற்று, இ-வாலட்டுகள் மற்றும் பிற டிஜிட்டல் நடைமுறைகள் மூலமாக நடக்கும் பண மோசடிகளின் மதிப்பை விட குறைவாகவே இருக்கிறது. அதாவது, மொத்த யு.பி.ஐ மூலமான பண மோசடிகளில் 2% மட்டுமே ரூ.1 லட்சத்துக்கு அதிகமான மதிப்பில் நடப்பதாகக் கூறப்படுகிறது.
யு.பி.ஐ பயனாளர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது மிகச் சாதாரண மக்கள்கூட யு.பி.ஐ வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, மக்கள் உஷாராக இருக்கவேண்டியது அவசியம்.