ரியல் எஸ்டேட்டில் 50%... மியூச்சுவல் ஃபண்டில் 4.5%... முதலீட்டில் வருமானத்தை அதிகரிக்க என்ன வழி..?

‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தென் இந்தியாவில் கர்நாடகாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது...’’
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு இந்தியாவில் இப்போது ரூ.40 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. சில ஆண்டுகளில் இது இரண்டு, மூன்று மடங்காக உயரும் என்கிறார்கள் மியூச்சுவல் ஃபண்ட் துறை நிபுணர்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள நன்மை களை எடுத்துச் சொல்லி, இன்னும் அதிகமான முதலீட்டாளர்களை இந்த முதலீட்டைத் தேடி வரவைக்க என்ன செய்யலாம் என்பதை மியூச்சுவல் ஃபண்ட் விநியோ கஸ்தர்களுக்கு எடுத்துச் சொல்லும் இரண்டு நாள் கருத்தரங்கம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
ஐ.எஃப்.ஏ கேலக்ஸி (IFA Galaxy) என்கிற அமைப்பு நடத்திய இந்தக் கருத்தரங் கத்தில் முதலில் பேசினார் சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அதிகாரி (பங்குச் சந்தை) ரவி கோபால கிருஷ்ணன். ‘‘ஒருவர் தன்னிடம் இருக்கும் முதலீட் டுத் தொகையை சரியான முறையில் பிரித்து முதலீடு செய்தால், பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தை நிச்சயம் பெற முடியும்’’ என்றார்.
ஹெச்.டி.எஃப்.சி மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நவ்னீத் முனோத், ‘‘இந்தியர்கள் இன்னும் ரியல் எஸ்டேட்டில் சுமார் 50% அளவுக்கு பணத்தை முதலீடு செய்து வருகிறார்கள். பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் சுமார் 4.5% தொகையைத்தான் முதலீடு செய்திருக்கிறார்கள். பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யும்போது நீண்ட காலத்தில் நல்ல வருமானத்தை பெற முடியும்” என்றார்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் செயல் இயக்குநர் சங்கரன் நரேன், ‘‘எந்த சொத்துப் பிரிவு எப்போது நல்ல வருமானம் தரும் என்பதை யாராலும் 100% சரியாகக் கணிக்க முடி யாது. எனவே, முதலீட்டைப் பல்வேறு சொத்துப் பிரிவு களில் போடச் சொல்கிறோம். அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளில் இடை விடாமல் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வந்தால் முதலீடு சிறப்பான வளர்ச்சி அடையும்’’ என்றார்.
நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் தின் துணை முதன்மை வணிக அதிகாரி சௌகட்டா சாட்டர்ஜியும் முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் நன்மை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார்.
நிதி ஆலோசகர் எஸ்.சரவணன், பாண்ட் முதலீடு மூலம் லாபம் ஈட்டுவது பற்றி விரிவாகப் பேசினார். பங்குச் சந்தை முதலீட்டில் கவனிக்க வேண்டிய விவரங்கள் குறித்து ஐ.ஐ.எஃப்.எல் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சஞ்சீவ் பாசின் விளக்கினார்.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபி சேர்மனும் ஆதித்ய பிர்லா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரு மான ஏ.பாலசுப்பிரமணியன், ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதி செபி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சொன்னார்.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் மற்றும் மண்டல தலைவர் பி.வெங்கடேஷ், ‘‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தென் இந்தியாவில் கர்நாடகாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. நம்முடைய விநியோகஸ்தர்கள் சிறப்பாகச் செயல்பட்டால் முதல் இடத்துக்கு வரமுடியும்” என்றார்.
மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் தங்கள் வணிகத்தைப் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிலேஷ் ஷா, ஒயிட்ஓக் கேப்பிடல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஆஷிஷ் பி சோமையா, ஐ.டி.ஐ மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ராஜேஷ் பாட்டியா, மோதிலால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ரித்தேஷ் பதக், ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ராகவ் ஐயங்கார் ஆகியோர் விளக்கிப் பேசினார்கள்.
இந்த இரண்டு நாள் கருத்தரங்கில் இந்தியா முழுக்க உள்ள மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர்கள் சுமார் 500-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விநியோகஸ்தர்கள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது!