
முதலீடு
ஒருவர் நிதி வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை எட்ட வேண்டும் எனில், அவர் செல்வம் சேர்ப்பது (Wealth creation) மிக முக்கிய மாகும். நம்மில் பலர் நாம் முதலீடு செய்யும் திட்டங்களில் அதிக ரிஸ்க் எடுத்து அதிக வருமானம் பெறுவது மூலம் செல்வம் சேர்த்து விடலாம் என நினைக்கிறார்கள். அதிக ரிஸ்க் என்பது பல நேரங்களில் மூலதனத்தையே காலி செய்துவிடும். செல்வம் சேர்ப்பது தொடர்பான நம்மவர்கள் இடையே நிலவும் முக்கியமான தவறான நம்பிக்கைகளுக்கு சரியான விளக்கங்களைப் பார்ப்போம்.

தவறான நம்பிக்கை 1: அதிக லாபம் தரும் திட்டங்களில் பணத்தை முதலீடு செய்தால், செல்வம் தானாக சேர்ந்துவிடும்..!
சரியான விளக்கம்: செல்வம் சேர்க்க முதலீட்டில் அஸெட் அலோகேஷன் (Asset Allocation) தேவை என்பதுதான் உண்மை. முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்வது அஸெட் அலொகேஷன் ஆகும். நிதி இலக்கு, முதலீட்டின் மதிப்பு ஏற்ற இறக்கம், அதிலுள்ள ரிஸ்க் மற்றும் முதலீட்டாளர்களின் வயது, முதலீட்டுக் காலம் ஆகியவற்றைப் பொறுத்துதான் செல்வம் சேரும். சொத்து ஒதுக்கீடு என்பது நீண்ட காலத் திட்டமிடலில் முக்கியமான அம்சமாகும். ஒருவர் 2030-ம் ஆண்டு ஒரு வீடு வாங்கத் திட்டமிடுகிறார். இதற்கான முதலீட்டை முழுவதும் பங்குச் சந்தையில் செய்துவரும்பட்சத்தில் இலக்கு நெருங்கும் நேரத்தில் பங்குச் சந்தை அதிகமாக இறங்கி விட்டால், வீடு வாங்க முடியாது. இதற்குப் பதில், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், கடன் சந்தை சார்ந்த திட்டங்கள், தங்கத் திட்டங்கள் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்துவரும்பட்சத்தில், பங்குச் சந்தை அதிகமாக இறங்கினாலும் மூலதனத்துக்குப் பெரிய இழப்பு இருக்காது. சரியான சொத்து ஒதுக்கீட்டை மேற்கொள்ளும் போது நீண்ட காலத்தில் செல்வமும் சேரும்; சொத்தும் சேரும்.
அதே நேரத்தில், குறுகிய காலத் தேவைகளுக்கான தொகையை கடன் சந்தை சார்ந்த திட்டங்களான ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்து வரும்பட்சத்தில் நீண்ட கால முதலீடுகளை அவசரத் தேவைக்கு எடுக்க வேண்டியிருக்காது.
மாரத்தான் போட்டியில் வேகமாக ஓடுபவர் சிறிது நேரத்திலேயே களைத்துப் போய் பின்தங்கிவிடுவார். நிலையான வேகத்தில், நிதானமாக களைப்பில்லாமல் ஓடி வந்தவர்தான் ஜெயித்திருப்பார். அதேபோல்தான், பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலும் இடையே அதிக வருமானம் தந்த திட்டங்களைவிட, நிலையாக வருமானம் தரும் திட்டங்கள்தான் நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க உதவும்.
தவறான நம்பிக்கை 2: நிறைய பணத்தை சேமிப்பதன் மூலம் செல்வந்தர் ஆகலாம்..!
சரியான விளக்கம்: வருமானத்தை செலவு செய்வதை விட சேமிப்பது நல்ல விஷயமாகும். அதே நேரத்தில், சேமிப்பு ஒருவரை செல்வந்தர் ஆக்காது. இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் சராசரியாகப் பணவீக்க விகிதம் சுமார் 7 சதவிகிதமாக உள்ளது. ஆனால், வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி 3 - 4% மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் வருமானம் சுமார் 6 சதவிகிதமாக இருக்கிறது. எனவே, ஒருவர் சேமிப்பின் மூலம் நிச்சயம் செல்வந்தராக முடியாது. மேலும், இந்த வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி முறை 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும். அந்த வகையில், பணவீக்க விகிதம் மற்றும் வரிக்குப் பிந்தைய நிலையில் இந்த வருமானம் என்பது லாபகரமாக இருக்காது.
நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சுமார் 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தரும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்வது மூலம்தான் செல்வம் சேரும். இதே போல, ரியல் எஸ்டேட்டில் செய்யப்படும் முதலீடும் நீண்ட காலத்தில் செல்வமாக மாறும். இந்த இரு முதலீட்டிலும் வருமானத்துக்கு வரி அனுகூலம் இருக்கிறது. அதாவது, பங்கு மற்றும் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட கால மூலதன ஆதாயதுக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வரியில்லை. அதற்கு மேற்படும் ஆதாயத்துக்கு 10% வரி கட்டினால் போதும். ரியல் எஸ்டேட்டில் இரண்டு ஆண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்குப் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20% வருமான வரி கட்டினால் போதும். அதாவது, பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் மற்றும் வருமானத்துக்கு வரி அனுகூலம் கொண்ட முதலீடுகள் மூலம்தான் செல்வம் உருவாக்க முடியும்.
தவறான நம்பிக்கை 3: பிராவிடன்ட் ஃபண்ட் செல்வத்தை உருவாக்கும்..!
விளக்கம்: ஒரு காலத்தில் இது உண்மையாக இருந்தது. ஆனால், இன்றைக்கு அப்படி அல்ல. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, பிராவிடன்ட் ஃபண்ட் (பி.எஃப்.) முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி 8.1 சதவிகிதமாக குறைந்திருப்பதாகும். இரண்டாவது காரணம், பலருக்கு பி.எஃப்-ஆக நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் மாதம் 1,800 ரூபாய்தான் பிடிக்கப்படுகிறது. இதே அளவு தொகையை நிறுவனம் செலுத்தினாலும், மாதச் சேமிப்பு அதிகபட்சம் 3,600 ரூபாய்தான். முதலீடு மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை என்றாலும், வருமானம் பணவீக்க விகிதத்தைவிட 1% அளவுக்குதான் அதிகமாக இருப்பது பாதகமான அம்சமாக இருக்கிறது. அந்த வகையில், மாதம் ரூ.3,600 சேமிப்பு என்பது பெரிய அளவில் செல்வத்தை உருவாக்கும் எனச் சொல்ல முடியாது. பி.எஃப் தொகையுடன் விருப்ப பி.எஃப்-ஆக (VPF) கூடுதல் தொகையைச் சேர்த்து வருவது மூலம் நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க வாய்ப்புள்ளது.
ஒருவர் ஓய்வுக்காலத்தில் செல்வ வளத்துடன் இருக்க அவரின் பணி ஓய்வுக்கு முந்தைய ஆண்டு செலவைப்போல் 25 மடங்கு தொகை தொகுப்பு நிதியாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒருவருக்கு அவரின் 59-வது வயதில் மாதச் செலவு ரூ.30,000-ஆக இருக்கிறது எனில், ஆண்டுச் செலவு ரூ.3.60 லட்சம் ஆகும். இதன் 25 மடங்கு அதாவது, ரூ.90 லட்சம் தொகுப்பு நிதி தேவைப்படும்.
தவறான நம்பிக்கை 4: பங்குச் சந்தையில் நேரம் பார்த்து முதலீடு செய்தால் செல்வம் சேரும்..!
சரியான விளக்கம்: இப்படித் தான் பலரும் நினைத்து செயல்படு கிறார்கள். ஆனால், பெரும்பாலும் இது சரியாக நடப்பதில்லை. உதாரணமாக, சென்செக்ஸ் 50000 புள்ளிகளைத் தாண்டியதும், இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கிறது; இனி இறங்கிவிடும் எனப் பலரும் நினைத்தார்கள். இதனால், பலரும் லாபத்தை வெளியே எடுக்க பங்குகளை விற்றார்கள்; புதிய முதலீட்டை தள்ளிப் போட்டார்கள். ஆனால், பங்குச் சந்தை இந்தக் கணிப்புகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு மேலே சென்றது.
பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத் துக்குப் பல்வேறு காரணிகள் இருப்பதால் யாராலும் சந்தையின் போக்கை சரியாகக் கணிப்பது கஷ்டமே. பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வருவது மூலமே நீண்ட காலத்தில் செல்வம் சேர்க்க முடியும். அதற்கு சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறை கைகொடுக்கும்.
தவறான நம்பிக்கை 5: முதலீட்டை தாமதமாக ஆரம்பித்து, அதிக தொகை முதலீடு செய்தால் செல்வம் சேரும்..!
விளக்கம்: பலரும் அப்படித்தான் நினைக்கிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃப் காம்பவுண்ட் முறையில் முதலீட்டுத் தொகை குறைவு என்றாலும் எவ்வளவு சீக்கிரமாக முதலீட்டை ஆரம்பிக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாகத் தொகுப்பு நிதி சேரும்.
இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம். கமலாவும் ராணியும் தோழிகள். இருவரும் தங்களின் 25-வது வயதில் முதல் வேலையில் சேர்கிறார்கள். கமலா முதல் சம்பளத்தில் இருந்தே மாதம் ரூ.5.000 முதலீடு செய்ய ஆரம்பிப்பதுடன் ஒவ்வோர் ஆண்டும் தன் முதலீட்டை ஆண்டுக்கு 5% அதிகரித்து வருகிறார்.
இதுவே ராணி வேலைக்குச் சேர்ந்து ஐந்தாண்டுகள் கழித்து தன் 30-வது வயதில் மாதம் ரூ.10,000 முதலீடு செய்ய ஆரம்பிக்கிறார். இவரும் ஆண்டுதோறும் முதலீட்டுத் தொகையை 5% அதிகரிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இந்த இரு தோழிகளின் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளுக்கும் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைப்பதாக வைத்துக்கொள்வோம். இப்போது 60 வயதில் யாருக்கு அதிக தொகுப்பு நிதி சேர்ந்திருக்கும்?
35 ஆண்டுகள் மாதம்தோறும் ரூ.5,000 (ஆண்டுக்கு 5% அதிகரிப்பு) முதலீடு செய்துவந்த கமலாவுக்கு ரூ.7.58 கோடி சேர்ந்திருக்கும். 30 ஆண்டுகள் மாதம்தோறும் ரூ.10,000 (ஆண்டுக்கு 5% அதிகரிப்பு) முதலீடு செய்துவந்த ராணிக்கு ரூ. 7.40 கோடிதான் சேர்ந்திருக்கும். முதலீட்டுத் தொகையில் பாதிதான். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்குமுன்பே முதலீட்டை ஆரம்பித்ததால் அதிக தொகுப்பு நிதி சேர்ந்திருக்கிறது.
செல்வம் சேர்ப்பது என்பது ஒருவரின் வயது, ரிஸ்க் எடுக்கும் திறன், முதலீட்டுக் காலம் மற்றும் அஸெட் அலொ கேஷனை சார்ந்ததாகும். அதை ஒரே நாளில் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொண்டு இளமையிலேயே செல்வம் சேர்க்கத் தொடங்குங்கள்!

செல்வம் Vs நிதி ரீதியாக சரியாக இருப்பது!
செல்வம் என்பது மதிப்புமிக்க வளங்கள் பொருள்கள், உடைமைகள், தேவையான பணம் ஆகியவற்றை வைத்திருப்பதாகும். அதே நேரத்தில், நிதி ரீதியாக சரியாக இருப்பது என்பது தேவையான செலவுகளுக்குப் பணம் வைத்திருப்பது மற்றும் உயிர், உடமைகள், மருத்துவச் செலவுகளை ஈடுகட்ட காப்பீடுகள் போன்றவற்றை எடுத்திருப்பதாகும்.
ஒரு நபருக்கு மிக அதிகமான செல்வம் மற்றும் சொத்து இருக்கலாம். ஆனால், அது அவசரத்துக்குப் பயன்படுமா என்பது கேள்விக்குறிதான். உதாரணமாக, ஒருவருக்கு ஏக்கர் கணக்கில் இடம் இருக்கிறது. ஆனால், அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், வேறு நிதி வசதி இல்லை என்கிறபட்சத்தில், இந்த நிலத்தை விற்க வேண்டி வரும். அப்போது அது உடனடியாகக் கைகொடுக்குமா என்பது கேள்விக்குறிதான். அதே நேரத்தில், நிதி ரீதியாக சரியாக இருக்கும்பட்சத்தில் மருத்துவச் செலவுக்குக் காப்பீடு கைகொடுக்கும். எனவே, ஒருவர் செல்வம் சேர்த்திருந்தாலும் அவர் நிதி ரீதியாக சரியாக இருப்பது மிக முக்கியமாகும்.