ஏப்ரல் 1 முதல் புதிய நிதியாண்டு 2023-24 தொடங்கி இருக்கிறது. மத்தியஅரசு பல புதிய மாற்றங்களை பெரும்பாலும் நிதியாண்டு தொடக்கத்திலிருந்து தான் அமல்படுத்தும்.
இந்த மாற்றத்திற்கான அறிவிப்புகள் பொதுவாக பட்ஜெட் தினமான பிப்ரவரி 1 அன்று அறிவிக்கப்பட்டாலும் பெரும்பாலும் அது அமல்படுத்தப்படுவது ஏப்ரல் 1 முதல் தான். அவ்வாறு இந்த புதிய நிதி ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு முக்கிய மாற்றங்களின் தொகுப்பை இங்கு காணலாம்.

1) வருமான வரி கணக்கீடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்து பழைய வருமான வரி கணக்கிடும் முறையிலோ அல்லது அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய புதிய வருமான வரி கணக்கிடும் முறையிலோ வருமான வரி தாக்கல் செய்யலாம். சென்ற ஆண்டு வரை வருமான வரி செலுத்துபவர்கள் எந்த விருப்பத்தையும் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் வருமான வரி பழைய முறையிலேயே கணக்கீடு செய்யப்பட்டது. தற்போது இந்த புதிய நிதியாண்டில் இருந்து வருமான வரி செலுத்துபவர்கள் எந்த விருப்பமும் தெரிவிக்காமல் இருந்தால் அவருடைய வருமான வரி புதிய முறையிலேயே கணக்கீடு செய்யப்படும் என்ற முக்கிய மாற்றம் அமலாகிறது.
மேலும் பல புதிய சலுகைகளை புதிய முறையில் வருமான வரி கணக்கீடு முறையை தேர்ந்தெடுப்பவர்களுக்கு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 5 லட்சம் ரூபாயாக இருந்த வருமான உச்சவரம்பை 7 லட்சமாக மாற்றி அமைத்துள்ளது. மேலும் புதிய வருமான வரி கணக்கிட்டு முறையில் வருமானத்தை கணக்கீடு செய்யும் படிநிலைகளிலும் பல மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்களை நன்கு தெரிந்து கொண்டு தனிநபர் தமக்குத் தோதான இரண்டு வகை வருமான வரி கணக்கீடு செய்யும் முறைகளில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது வருமான வரியில் கூடுதல் பணத்தை மிச்சம் செய்ய முடியும்.
2) கடன் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வருமான வரி கணக்கிடும் முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்:
கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் பொழுது அதில் கிடைக்கும் வருமானத்திற்கு பண வீக்க அதிகரிப்பால் ஏற்படும் இழப்பை கழித்துக் கொண்டு மீதியுள்ள லாபத்திற்கு மட்டும் இதுவரை 20% வருமான வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் ஒன்று முதல் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் கிடைக்கும் லாபம் முழுவதும் ஒருவரின் வருமானமாக சேர்க்கப்பட்டு அந்த நபரின் வருமான படிநிலைகளின் படி வருமான வரி கணக்கீடு செய்யப்படும்.

இதன் மூலம் இந்தத் திட்டங்களில் இதுவரை கிடைத்து வந்த வருமான வரி தள்ளுபடி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் காரணமாக இது போன்ற கடன் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்திருப்பவர்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு மாறுவார்கள் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
3) பயண விடுப்பு கொடுப்பனவு விதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் (Leave Travel Allowance )
ஏப்ரல் 1 முதல் பயண விடுப்பு கொடுப்பனவு (Leave Travel Allowance) விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை ரூ. 3 லட்சமாக இருந்த உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக மாற்றி அமைத்துள்ளது.

4) ஆயுள் காப்பீடு முதலீடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்:
எண்டோமென்ட் பாலிசிகளில் செய்யப்படும் முதலீடுகளில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு இதுவரை வருமான வரி எதுவும் விதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது ஆண்டிற்கு ரூ. 5 லட்சம் ரூபாய்க்கு மேல் காப்பீட்டு பிரீமியம் செலுத்தினால், ரூ. 5 லட்சத்துக்கு மேற்படும் முதலீட்டில் இருந்து கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி தள்ளுபடி கிடையாது என்ற புதிய அறிவிப்பு ஏப்ரல் ஒன்று முதல் அமலாகியுள்ளது.
அதனால் ஆண்டிற்கு ஐந்து லட்சத்திற்கும் மேல் காப்பீடு பிரிமியம் செலுத்துபவர்கள் தமக்கு கிடைக்கும் லாபத்திற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும்.
5) தங்கத்திற்கு ஹால்மார்க் கட்டாயம்
ஏப்ரல் ஒன்று முதல் நமது நாட்டில் விற்கப்படும் அனைத்து தங்க நகைகள் மற்றும் கலைப் பொருட்களுக்கும் பிரத்தியோக ஹால்மார்க் குறியீட்டு அடையாள எண் (Hallmark Unique Identification Number - சுருக்கமாக HUID) இருக்க வேண்டும் என்று இந்திய தர நிர்ணய அமைப்பு (Bureau of Indian Standards - சுருக்கமாக BIS) தெரிவித்துள்ளது. கட்டாய ஹால்மார்க் கொண்டுவரப்படும் போது சரியான தரத்துடன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு தங்க நகைகளை கடைகள் விற்பனை செய்ய முடியும். ஏற்கனவே, ஹால்மார்க் கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும் தற்போது வரை நகை கடைகள் போலியான முத்திரைகளை பதித்து தரக்குறைவான நகைகளை விற்பனை செய்வது சில இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

தற்போது அரசு அறிவித்துள்ள இந்த மாற்றம் தங்க நகை வாங்கும் நுகர்வோர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் ஒருவர் தமது கையிருப்பில் உள்ள தங்கத்தை டிஜிட்டல் தங்கமாகவோ அல்லது டிஜிட்டல் தங்கத்திலிருந்து தங்கமாகவோ மாற்றும்போது கிடைக்கும் லாபத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்று புதிய அறிவிப்பையும் அரசு வெளியிட்டுள்ளது.
6) என்பிஎஸ்: பணத்தை திரும்ப எடுக்கும் நடைமுறையில் மாற்றங்கள்...
பென்ஷன் பெறும் நபர் என்பிஎஸ் திட்டத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் முதலீடு செய்து வரும் நிலையில் அவர் முதலீட்டிலிருந்து 25% பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ள முடியும். திருமணம், மருத்துவ செலவு போன்ற பிரத்தியேக காரணங்களுக்காக என்பிஎஸ் திட்ட காலத்தில் அதிகபட்சமாக மூன்று முறை இவ்வாறு பணத்தை திரும்ப பெறலாம்.
தற்போது அவ்வாறு பணத்தை எடுக்க வேண்டும் என்றால் பிரத்தியேக படிவம், அடையாளச் சான்று, இருப்பிடச் சான்று, வங்கி ஸ்டேட்மென்ட் மற்றும் நிரந்தர ஓய்வூதிய கணக்கு நம்பர் பற்றிய விவரங்களையும் டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே என்பிஎஸ் திட்டத்திலிருந்து பணத்தை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ பெற்றுக் கொள்ள முடியும் என்று புதிய மாற்றத்தை அரசு அறிவித்துள்ளது. அதனால் என்பிஎஸ் திட்டத்தில் கணக்கு வைத்துள்ள பயனாளர்கள் இந்த புதிய மாற்றத்தை அறிந்து வைத்துக் கொள்வது நல்லது.

7) சீனியர் சிட்டிசன்களின் முதலீட்டு உச்சவரம்பு உயர்வு
தற்போது சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் திட்டத்தில் (Senior Citizen Savings Scheme) அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இந்த உச்ச வரம்பு தற்போது 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலகங்களில் உள்ள மாதாந்திர வருமானம் வழங்கும் சேமிப்பு திட்டங்களில் (Post Office Monthly Income Scheme) செய்யப்படும் முதலீட்டு உச்சவரம்பையும் ரூ. 4.50 லட்சம் என்ற அளவில் இருந்து ரூ 9 லட்சம் என்ற அளவிற்கு உயர்த்தி உள்ளது. மேலும் ஜாயிண்ட் அக்கவுண்ட்களின் உச்சவரம்பு ஒன்பது லட்சம் ரூபாயில் இருந்து 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.