
சந்தைக்குப் புதுசு
சசி ரேகா
அண்மையில் சந்தைக் குப் புதிதாக வந்த முதலீடு, காப்பீடு உள்ளிட்ட நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
பரோடா பி.என்.பி பரிபாஸ் மல்ட்டி அஸெட் ஃபண்ட் (Baroda BNP Paribas Multi Asset Fund)
பரோடா பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தைகள், கடன் பத்திரங்கள், கோல்டு இ.டி.எஃப் திட்டங்கள் போன்ற பல திட்டங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் டிசம்பர் 12-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். எல்லா மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் போல, இந்தத் திட்டத்திலும் குறைந்த பட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.
ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைக்கக் கூடாது என்பதே மல்ட்டி அஸெட் ஃபண்டின் நோக்கம் ஆகும். பலவகையான திட்டங்களில் முதலீடு செய்யும்போது ஒருவகை திட்டம் குறைந்த அளவு வருமானத்தைத் தந்தாலும் மற்றத் திட்டங்கள் கை கொடுக்கும். அதனால் மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் தேவைப் படுபவர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.

யூனியன் மல்ட்டி கேப் ஃபண்ட் (Union Multicap Fund)
யூனியன் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், புதிதாக யூனியன் மல்ட்டி கேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் டிசம்பர் 12 வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்த பட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.
சிறு, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களில் கலந்து முதலீடு செய்யும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுகிறது.
எனவே, அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஆக்ஸிஸ் பேங்க் சூப்பர் எலைட் கிரெடிட் கார்டு (Flipkart Axisbank Super Elite Credit Card)
ஆக்ஸிஸ் வங்கி மற்றும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம் இணைந்து புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தில் பொருள்களை வாங்கும் போது கூடுதல் சூப்பர் காயின்கள் வாடிக்கையாளர் களுக்கு வழங்கப்படும்.
இந்த சூப்பர் காயின்களை 10 கோடி ஃப்ளிப்கார்ட் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூப்பர் காயின்களைப் பயன்படுத்தி ஃப்ளிப் கார்ட் இணையதளத்தில் பல சலுகைகளைப் பெற முடியும் என அந்த நிறுவனம் சொல்கிறது.
ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில் இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி பொருள்கள் வாங்குபவர் களுக்குப் பயனுடையதாக இருக்கும்.

எல்.ஐ.சி: இரண்டு புதிய பாலிசிகள்...
எல்.ஐ.சி நிறுவனம், எல்.ஐ.சி நியூ ஜீவன் அமர் (LIC New Jeevan Amar) என்கிற புதிய பாலிசியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் 18 முதல் 65 வயது நிரம்பியவர்கள் முதலீடு செய்ய முடியும்.
பாலிசி காலமாக 10 முதல் 40 ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச முதிர்வுத் தொகை யாக ரூ.25 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி நியூ டெக் டேர்ம் பிளான் (LIC’s New Tech Term Plan) என்கிற இன்னொரு புதிய திட்டத்தையும் எல்.ஐ.சி அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதிர்வுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.
பிரீமியம் தொகையை ஒரு முறையோ குறிப்பிட்ட காலம் வரையிலோ, முதிர்வுக் காலம் வரையோ செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.
குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீடு தேவைப்படுவர்கள் இந்த டேர்ம் பிளான்களை பரிசீலிக்கலாம்.