தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

இன்வெஸ்ட்மென்ட் பிளான் - 2023 லாபத்துக்குக் கைகொடுக்கும் ‘அஸெட் அலொகேஷன்’ டெக்னிக்!

இன்வெஸ்ட்மென்ட் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்வெஸ்ட்மென்ட் பிளான்

தங்கம், ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் எப்படி இருக்கும்?

ஜி.மாறன், செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital)

நாணயம் விகடனில் 2013 தொடங்கி 2023-ம் ஆண்டு வரையில் கடந்த 10 வருடங்களாக வாசகர்களுக்கு ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் அந்த ஆண்டில் முதலீடுகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதற்கான அஸெட் அலோகேஷன் உத்தி களை நான் வழங்கி வருகிறேன். இதுவரை பரிந்துரைத்த அஸெட் அலொகேஷன் உத்திகள் பெரும்பாலும் பலன் தந்திருக்கின்றன என்பதால், முதலீட்டாளர்களும் பலன் அடைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

ஜி.மாறன் 
செயல் இயக்குநர், 
யுனிஃபை கேப்பிட்டல் 
(Unifi Capital)
ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital)

கடந்த ஆண்டில் செய்த பரிந்துரைகள்...

2023 புத்தாண்டில் அஸெட் அலொகேஷனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பார்க்கும்முன், எப்போதும் போல முந்தைய 2022-ம் ஆண்டில் குறிப்பிட்டிருந்த அஸெட் அலொகேஷன் பரிந்துரைகளையும், அவற்றின் செயல்பாடுகளையும் பார்த்துவிடலாம்.

1. தங்கம்: தங்கத்தின் விலையில் எந்தவொரு நிலையான உயர்வையும் காண வாய்ப்பில்லை என்பதால், அதற்கான முதலீட்டு ஒதுக்கீட்டில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே தொடரலாம் என்றோம்.

2. கடன் ஃபண்டுகள்: உலக அளவில் வட்டி விகிதங்கள் உயரக்கூடும் என்ற கவலை பரவ லாக இருக்கிறது. அதற்கேற்ப வட்டி உயர்வு இந்தியாவிலும் இருக்கும் என்று பலர் நம்பு கிறார்கள். உலகளாவிய வட்டிவிகித உயர்வுகள் நம் நாட்டின் வட்டி விகித உயர்வுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை என்று கூறினோம்.

3. ரியல் எஸ்டேட்: 2015 முதல் 2020 வரை ரியல் எஸ்டேட்டில் முதலீடு மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறினோம். ஆனால், 2021 முதல் ரியல் எஸ்டேட் ஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை செய்தோம். மேலும், குடியிருப்பு சார்ந்த சொத்துகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தேடலாம் என்றும், மிதமான முறையில் முதலீடுகளைக் கவனமாக மேற் கொள்ளலாம் என்றும் கூறினோம்.

4. பங்குச் சந்தை: முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை முதலீட்டைத் தீவிரமாக மேற்கொள்ளலாம் என்று கூறினோம். அதே சமயம், அதிக பிஇ (PE) மதிப்பீட்டைக் கொண்ட நிறுவனப் பங்குகளைத் தவிர்க்குமாறும் எச்சரித்தோம். மேலும், லார்ஜ்கேப் பங்குகளில் ஒதுக்கீட்டை அதிகரிக்கவும், ஸ்மால்கேப் பிரிவில் ஒதுக்கீட்டைக் குறைக்கவும் பரிந்துரைத் தோம். இந்தப் பரிந்துரைகள் அனைத்துமே சொன்னபடியே கடந்த ஒரு வருடத்தில் தன்னுடைய செயல்பாடுகளை சரியாகவே நிரூபித்தன. மேலும், முன்னர் பரிந்துரைக்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கான அஸெட் அலொகேஷன் 2022-ம் ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், நாம் எதிர்பார்த்தை விட அதிகமாகவே லாபத்தைக் கொடுத்திருப்பதைப் பார்க்க முடிகிறது.

இன்வெஸ்ட்மென்ட் பிளான் - 2023
லாபத்துக்குக் கைகொடுக்கும்
‘அஸெட் அலொகேஷன்’ டெக்னிக்!

2023... சில குழப்பங்கள், சில கேள்விகள்...

அதே போல, 2023-ம் ஆண்டுக்கான உங்களுக்கான அஸெட் அலொகேஷன் உத்திகளைப் பார்க்கும்முன், ஒவ்வொரு சொத்து வகைகள் பற்றி விவாதிக்கத் தொடங்கும்முன், பெரும்பான்மையான முதலீட்டாளர்களுக்கு உள்ள குழப்பங் களையும் கேள்விகளையும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.அதாவது, எந்தச் சொத்து வகையை முதலீடு செய்யத் தேர்வு செய்வது, எந்த சொத்து வகையைப் புறக்கணிப்பது என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களைப் பார்த்துவிடலாம்.

1. வழக்கமாக, தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும். குறிப்பாக, முதலீட்டுச் சந்தையில் ஏற்ற, இறக்கம் கடுமையாக இருக்கும்போது மிக நன்றாகவே உயரும். ஆனால், முடிந்த ஆண்டில் அதிக அளவு ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தோம். ஆனாலும், தங்கம் அதற்கேற்ப விலை உயரவே இல்லை. ஏன்?

2. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு, ரியல் எஸ்டேட் துறையில் டிமாண்ட் அதிகரித்திருக்கிறது. ஆனால், குறிப்பிடத்தக்க வகையில் ரியல் எஸ்டேட் சொத்துகளின் விலையில் உயர்வைப் பார்க்க முடியவில்லை. சில வருடங்களுக்கு முன் காணப்பட்டதைப்போல விலை உயர வாய்ப்புள்ளதா?

3. பல பத்தாண்டுகளாக இருந்து வந்த குறைவான வட்டி விகிதம் கடந்த ஆண்டு முடிவுக்கு வந்திருக்கிறது. உலக அளவில் வட்டி விகிதங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. அதே போல், இந்தியாவிலும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில், தொடர்ந்து வட்டி விகிதம் உயருமா? உயரும் எனில், இந்த வட்டி விகித உயர்வு அதனுடன் நேர் மாறாகத் தொடர்புகொண்ட இன்கம் ஃபண்டுகளின் வருமானத்தில் பாதிப்பை உண்டாக்குமா?

4. உலக அளவில் பங்குச் சந்தையின் மதிப்பீடுகள் கடுமையாகச் சரிந்துள்ளன. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை வருவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. அப்படியானால், உலகப் பொருளாதாரத்திலும் மந்தநிலை வரலாம். சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அத்துடன் ரஷ்ய - உக்ரைன் போர் உள்ளிட்ட காரணிகளும் சந்தையில் புதிய கவலைகளை உருவாக்கியிருக்கிறது. சர்வதேச அளவில் இப்படி பல கவலை கள் இருந்தாலும், இந்தியப் பங்குச் சந்தைகள் வலுவாக உள்ளன. அதற்குக் காரணம், உள்நாட்டு முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்தியப் பங்குச் சந்தைகள் தற்போதைய மதிப்பைத் தக்கவைத்துக் கொள்ளுமா அல்லது சந்தைக் குள் முதலீடு குறைந்தால் விரைவிலேயே சரிவைச் சந்திக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கும் முன், இந்தக் கேள்விகள் குறித்து பெரும்பாலான நிபுணர் களின் கருத்துகள் ஒன்றுக் கொன்று முரணாகவும் குழப்பமாகவும் இருக்கின்றன. பங்குச் சந்தையின் போக்கு எப்படி இருக்கும் என்பதையோ வட்டி விகிதங்கள் ஏற்ற இறக்கம் குறித்தோ யாராலும் உறுதியாக எதையும் சொல்லி விட முடியாது. சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் சர்வதேசக் காரணிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எல்லாம் கவனமாக ஆய்வு செய்து அதன் அடிப்படை யில் மதிப்பீடு செய்தால்தான் வாய்ப்புகளைக் கண்டறிய முடியும்.

இந்தியப் பொருளாதாரத்தின் விசித்திரமான காட்சிகள்...

சமீபத்திய ஆண்டுகளில் பல விசித்திரமான விஷயங் களைப் பார்க்க முடிகிறது.சர்வதேச சந்தைகள் சரிவைச் சந்திக்கும்போது இந்திய சந்தைகள் ஏற்றத்தில் இருக் கின்றன. சர்வதேச வட்டி விகித உயர்வுக்கு நிகராக இந்திய வட்டி விகிதங்கள் உயரவில்லை. எஃப்.ஐ.ஐ முதலீடுகள் அதிக அளவில் வெளியேறும்போது அந்த இடத்தில் உள்நாட்டு முதலீடு கள் குவிக்கப்பட்டன.

உலக அளவில் மந்தநிலை இருக்கும்போதும், இந்தியப் பொருளாதாரம் தொடர்ந்து வேகமாக வளரும் பொருளா தாரமாகவே நீடிக்கிறது. இந்தியாவில் சமீபத்தில் நிகழும் அடிப்படை மாற்றங்கள் சிலவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம், மேற்கூறியவை எதுவுமே அர்த்தமற்றவை அல்ல என்று சொல்ல நமக்கு உதவியாக இருக்கும்.

1. உலகப் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போதும் இந்தியாவின் வளர்ச்சி எப்படி வேகமாக இருக்கிறது?

2. நிதி சார்ந்த சொத்துகளில் உள்நாட்டு முதலீடுகள் கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிக்க என்ன காரணம், என்ன மாறியிருக் கிறது?

உலகப் பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது இந்தியப் பொருளாதாரம் மட்டும் அதன் தாக்கத்துக்கு உள்ளாகாமல் இருக்க என்ன காரணம்?

இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான காரணங்கள்...

இந்தியப் பொருளாதாரத் தில் 60 சதவிகிதத்துக்கும் மேலான பங்களிப்பை உள்நாட்டு தனிநபர் நுகர்வு தான் வழங்குகிறது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 4.5 நபர்கள் உள்ளனர். அத்தகைய குடும் பங்களின் உணவு, போக்கு வரத்து, வீட்டு பயன்பாட்டுச் சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட பொருள்களின் மொத்த நுகர்வு மட்டுமே இந்திய ஜி.டி.பி-யில் சுமார் மூன்றில் இரண்டு பங்காக இருக்கிறது.

நமது பொருளாதாரத்தில் 20 சதவிகிதத்துக்கும் குறைவாகவே ஐ.டி, ஃபார்மா, ஜவுளி, பொறியியல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி பங்கு இருக்கிறது. கடந்த பல தசாப்தங்களாக உலகப் பொருளாதாரம் உலகமயமாக்கலின் பின்னணியில்தான் அபரிமிதமான வளர்ச்சியை நோக்கிப் பயணித்தது. இந்த உலகமயமாக்கலின் போக்கில் பல நாடுகள் உற்பத்தி மற்றும் சேவைகளை அவுட்சோர்ஸ் செய்தன. இதனால், சீனா, கொரியா, தைவான் போன்ற நாடுகள் பயன் அடைந்ததுடன், வேகமான வளர்ச்சியையும் கண்டன. ஆனால், இந்தியாவில் ஐ.டி, ஃபார்மா உள்ளிட்ட சில துறைகள் மட்டுமே உலக வர்த்தகத்தில் பங்காற்றியது. இதனால் நம்முடைய சர்வதேச வர்த்தகம் 1.5 சதவிகிதத்திலிருந்து 2.5% என்ற அளவில்தான் முன்னேற்றம் கண்டது.

சமீப ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற பல மேற்கத்திய நாடுகள் வணிகங்களை உள்ளூர் மயமாக்கத் தொடங்கின. இதனால் சீனா போன்ற நாடுகளில் செய்து வந்த வணிகங்களை நிறுத்திவிட்டு வெளியேறவும் செய்தனர். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, ஐ.டி, ஃபார்மா துறை களின் வணிகத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் எதுவும் நடக்க வில்லை. காரணம், இந்தத் துறைகளின் ஏற்றுமதி பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. எனவே, சர்வதேச பொருளாதார மந்தநிலை இந்தியாவில் தாக்கத்தைப் பெரிதாக ஏற்படுத்தவில்லை. இன்னொரு பக்கம், உள்நாட்டு நுகர்வு தொடர்ந்து வலுவான போக்கில் இருந்துவருவதும் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்க உதவியாக இருக்கிறது.

இன்வெஸ்ட்மென்ட் பிளான் - 2023
லாபத்துக்குக் கைகொடுக்கும்
‘அஸெட் அலொகேஷன்’ டெக்னிக்!

எங்கிருந்து வருகிறது வளர்ச்சி..?

இத்தகைய உள்நாட்டு நுகர்வு எங்கிருந்து வருகிறது? வேலை வாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, வருமான சமத்துவமின்மையும் பெரிய பிரச்னையாக மாறிவருகிறது, இந்தியாவில் அதிகமாக நுகரும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானமும் பெரிதாக உயராமலேயே இருக்கிறது. இந்த நிலை யிலும் நம் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு உள்நாட்டு நுகர்வு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் தான், நம் நாட்டின் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தின் மந்தநிலையால் பாதிப்புக்கு உள்ளாகாமல் எப்படி தனித்துவமாக இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள முடியும்.

ஏற்கெனவே சொன்னதுபோல, 140 கோடி மக்கள் கொண்ட நாட்டில் சராசரியாக 4.5 பேர் வீதம் 30 கோடி குடும்பங்கள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் குறைந்தபட்ச சராசரியாக ஒரு குடும்பத்தில் 3.5 நபர்கள் மட்டுமே உள்ளனர். அதே சமயம், ஏழ்மை மாநிலங்களாக உள்ள உத்தரப்பிரதேசம், பீகார் போன்றவற்றின் குடும்பங்களில் சராசரியாக 6 பேருக்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்தியாவில் 30 லட்சம் பணக்காரக் குடும்பத்தினர் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவிகிதத்தை வைத்துள்ளனர். அதே போல, 3 கோடி பணக்காரக் குடும்பங்கள் நாட்டின் 65% செல்வத்தை வைத்துள்ளனர். 6 கோடி குடும்பத்தினர் நாட்டின் 86% செல்வத்தை வைத்துள்ளனர். மீதமுள்ள 14% செல்வத்தை 21 கோடி குடும்பங்கள் பகிர்ந்துகொள்கின்றனர். கீழ்நிலையில் உள்ள 3 கோடி குடும்பங்கள் வசம் எந்தவித செல்வமும் இல்லை. ஏன் அவர்களிடம் குறைந்தபட்ச சேமிப்புகூட இல்லை. சம்பாதிக்கிற பணம் சாப்பாட்டுக்கே போதாத நிலையில்தான் இவர்கள் வாழ்கின்றனர். பொருளாதார வளர்ச்சியில் 20% பணக்காரக் குடும்பத்தினர் அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளனர். மீதமுள்ள 80% குடும்பத்தினர் பெரிதாக எந்த வளர்ச்சியையும் சந்திக்கவில்லை.

இதனால்தான் நாட்டில் 6 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்குத் தாக்கல் செய்பவர்களாக இருக்கிறார்கள். 6 கோடி பேர் மட்டுமே கிரெடிட் கார்டு வைத்திருக்கிறார்கள். வங்கி மற்றும் பிற நிதி சார்ந்த சேமிப்பு, முதலீடுகளான வைப்புத் தொகை, மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீடு ஆகியவற்றில் 90 சதவிகிதத்துக்கு மேல் 20% பணக்காரர்களுக்கே சொந்தமானதாக இருக்கிறது. ஆனால், நாம் செல்வத்தையும் நுகர்வையும் குழப்பிக்கொள்ளக் கூடாது. இயல்பாகவே நுகர்வுக்குப் பின்னால் செல்வம் ஒரு காரணியாக இருக்கிறது என்றாலும், அதுமட்டுமே காரணி இல்லை என்பதே உண்மை.

உதாரணமாக, இந்தியக் குடும்பங்களில் கீழ்மட்டத்தில் உள்ள 20% குடும்பங்களில் செல்வம் இல்லை என்றாலும், அவர்கள் ஈட்டும் கணிசமான ஆண்டு வருமானம் என்பது அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், தானியங்கள் போன்ற அத்தியாவசியப் பொருள்களை நுகர்வதற்கே சரியாக இருக் கிறது. இவற்றின் நுகர்வு இந்தியாவின் மொத்த நுகர்வில் சுமார் 9 சதவிகிதமாக இருக்கிறது. அதே சமயம், முதல் நிலை 20% பணக்காரர்கள் நாட்டின் மொத்த நுகர்வில் 35% மட்டுமே பங்களிக்கிறார்கள். இவர் களின் நுகர்வு வங்கி சார்ந்த சேவைகளில் 90 சதவிகிதமும், விலை உயர்ந்த ஆடம்பரப் பொருள்களில் 100 சத விகித மும் இருந்தாலும் அடிப் படைப் பொருள்களின் நுகர்வு 20 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இதற்குக் காரணம், 20% பணக்கார குடும்பங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கிற இரண் டாம் நிலை 20% பணக்காரக் குடும்பங்களின் நுகர்வுதான் கடந்த சில ஆண்டுகளில் முன்பைவிட வேகமாக வளர்ச்சி கண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அவர்களின் குடும்ப வருமானம் உயர்ந்திருக்கிறது. இன் னொன்று, கடன் மீதான அவர்களின் நடவடிக்கை மாறியிருக்கிறது. வருமானம் உயரும்போது எப்படி நுகர்வு உயர்கிறதோ, அதே போல கடன் வாங்கத் தயாராக இருக்கும் சமூகத்திலும் நுகர்வு உயரும். பொதுவாகவே, இந்தியக் குடும்பங்கள் மிகவும் கட்டுக்கோப்பான, செலவு களைக் குறைத்து சேமிக்கும் தன்மையுடன் இருப்பார்கள். ஆனால், இப்போது காலம் மாறியிருக்கிறது. கடன் மீதான பார்வை மாறியிருக்கிறது.

இந்தியக் குடும்பங்களின் ஒட்டுமொத்த கடன்களில் 50% வீட்டுக் கடனாக இருக் கிறது எனில், மீதமுள்ள 50% கடன்கள் வாகனக் கடன், தனிநபர் கடன், கல்விக் கடன்களாக இருக்கின்றன. பல நுகர்வுக் கலாசார நாடுகளில் சமீப ஆண்டுகளில் குடும்பங்களின் கடன் வளர்ச்சி ஆண்டுக்கு 20% என்கிற அளவில் இருக்கிறது. இதன் காரணமாக நிறுவனங் களின் விற்பனை வளர்ச்சியும் கணிசமாக வளர்ச்சி கண்டி ருக்கிறது.

ஆனால், இந்தியக் குடும்பங் களின் கடன் வளர்ச்சி மிகக் குறைவாகவே இருக்கிறது. 20% கடன் வளர்ச்சி என்ற நிலையை இந்தியக் குடும்பங்கள் எட்ட இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம். மேலும், இந்தியாவில் அதிகமாக நுகர்பவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 34 வயதின ருக்குக் கீழ் உள்ளவர்கள் தான். அதிலும் 50 சதவிகி தத்துக்கும் மேலானோர் 28 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் தான்.

இந்திய நுகர்வுச் சந்தையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு இளைஞர்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். அவர் களின் நுகர்வு உலக அளவில் நடக்கும் மாற்றங்களால் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. மேலும், பெண்கள் சமீப காலங்களில் வேலைக்குச் செல்வது அதிகரித்திருப்பதால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும், இப்போதும்கூட வயது வந்த பெண்களில் 17 சதவிகிதத்தினர் மட்டுமே வேலையில் உள்ளனர். கல்லூரி முடித்த பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.

பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இன்னும் நிறையவே இருக்கின்றன. அந்த வகையில், பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியம் என்பதை பிற வளர்ந்த பொருளாதார நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். பெண்கள் வேலை வாய்ப்பில் அதிகம் பங்கெடுத்தால், அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவாக இருக்கும். உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும்பட்சத்தில் ஏற்றுமதி தொடர்பான சில காரணிகள் நமக்கு சவால்களை உண்டாக்கும். ஆனாலும், இந்திய ஜி.டி.பி-யில் 20% மட்டுமே ஏற்றுமதி பங்களிப்பதால், சர்வதேச பொருளாதார காரணிகள் நம் நாட்டில் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தாது என்று நம்பலாம்.

இந்தியக் குடும்பங்களின் சொத்துகள் மொத்தமாக சுமார் 15 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாதிக்கும்மேல் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நிதி சார்ந்த முதலீடுகளில் வங்கி வைப்புத் தொகையில்தான் மிகப் பெரிய பகுதி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பங்கு முதலீட்டில் பல பத்தாண்டுகளாகவே இந்தியர்களின் முதலீடு சுமார் 2.5% என்ற அளவில்தான் நீடிக்கிறது. பத்து ஆண்டுகளுக்குமுன் இந்தியாவில் 2 கோடி டீமேட் கணக்குகளே இருந்தன. இது இந்தியர்களில் 2 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே நேரடியாகப் பங்குகளில் முதலீடு செய்கின்ற னர் என்பதைக் காட்டுகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்ற ஜன்தன் கணக்குத் திட்டம், ஆதார் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மக்களின் நிதி சார்ந்த சேமிப்பு அதிகரிக்க உதவியாக இருக்கின்றன.

கடந்த 5 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தியர்கள் செய்த முதலீடானது, முந்தைய 25 ஆண்டுகளில் செய்யப் பட்டதைவிடவும் அதிகம். அதே போல, 2010-ல் 2 கோடியாக இருந்த டீமேட் கணக்குகள், 2018-ல் 3 கோடியாகவும், 2020-ல் 4 கோடியாகவும் உயர்ந்து, 2022-ல் 10 கோடி கணக்குகளைத் தாண்டியிருக்கின்றன. எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் சமீபத்தில் புதிய ஃபண்ட் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த ஒரு திட்டத்தில் மட்டும் ரூ.14,000 கோடி முதலீடு செய்யப்பட்டது. இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் வரலாற்றில் முதல் முறை நடந்த சாதனை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்த என்.எஃப்.ஓ-வில் முதலீடு செய்தவர்களில் 93% இந்திய முதலீட்டாளர்கள் ஆவர்.

சில ஆண்டுகளுக்குமுன் வரை, நிதி சார்ந்த முதலீடுகளில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மும்பை, டெல்லியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். மேலும், 75% முதலீடுகள் முதல் 10 மெட்ரோ பெருநகரங்களில் இருந்து செய்யப்படும். ஆனால், சமீபத்திய ஆண்டுகளில், நிதிச் சொத்துகளில் செய்யப்படும் முதலீடுகளில் பாதிக்கும் மேலானவை மெட்ரோ அல்லாத நகரங்களின் இளம் முதலீட்டாளர்களிடமிருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் நகர்ப்புறங்களில் உள்ள இளம்பெண்கள் தங்கத்துக்குப் பதிலாக நிதி சார்ந்த முதலீடுகளில் சேமிக்க விரும்புகின்றனர்.

சமீப காலங்களில் இந்திய தங்க ஆபரணங்களின் சந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் கணிசமாகக் குறைந்திருக்கிறது. மாறாக, நிதி சார்ந்த சந்தை பல மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளது. இளைஞர்களிடம் அதிகரித்து வரும் சேமிப்புப் பழக்கம், அதிகரித்துள்ள கல்வியறிவு, வெளிப்படையான மற்றும் எளிமையான ஒழுங்கு முறை கட்டமைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற பல்வேறு காரணிகளின் உதவியால் நிதி சார் சந்தைகளில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்கள் முதலீடு செய்வது இனிவரும் காலத்தில் மிகச் சிறப்பாக வளரும்.

இன்வெஸ்ட்மென்ட் பிளான் - 2023
லாபத்துக்குக் கைகொடுக்கும்
‘அஸெட் அலொகேஷன்’ டெக்னிக்!

அஸெட் அலொகேஷன் 2023-25

ஒவ்வோர் ஆண்டும் அஸெட் அலொகேஷன் பற்றி நாம் விவாதிக்கிறோம். அதற்காக ஒவ்வோர் ஆண்டும் அஸெட் அலொகேஷனில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அர்த்தமில்லை. வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ஒவ்வொரு வருமே கற்றுத்தரும் பாடம் என்னவெனில், செல்வத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் எப்போதும் நீண்டகால அடிப்படையிலான அணுகுமுறை அவசியம் என்பதுதான். அது ரியல் எஸ்டேட்டாக இருந்தாலும் சரி, பங்குச் சந்தையாக இருந்தாலும் சரி. ஆனாலும் ஒவ்வோர் ஆண்டும் சொத்து வகைகளின் மதிப்பீடுகளுக்கேற்ப நம்முடைய அஸெட் அலொகேஷனில் சிறு மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்.

சில நேரங்களில் திடீரென்று சில சொத்து வகைகள் அவற்றின் ஃபண்ட மென்டல் அம்சங்களுக்குப் பொருந்தாத வகையில் கடுமையான வளர்ச்சியை அடையும். உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் ரியல் எஸ்டேட் வளர்ச்சியும், அதற்கு முன் பங்குச் சந்தைகள் அடைந்த வளர்ச்சியையும் சொல்லலாம்.

புத்திசாலி முதலீட்டாளர் கள் அது போன்ற சமயங் களில் குறிப்பிட்ட சொத்து வகைகளில் தங்களின் முதலீட்டு ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொள்வார்கள். அதே சமயம், மீதமுள்ள நேரங்களில் தங்களுடைய போர்ட்ஃபோலியோவை சமநிலையில் வைத்துக்கொள்வார்கள். எனவே, எப்போதுமே அஸெட் அலொகேஷன் என்று வரும் போது குறைந்தபட்சம் 3 ஆண்டுகளுக்கான பார்வை யுடன் திட்டமிடுவது பாதுகாப்பானது.

கடந்த 10 ஆண்டுகளில் நம் அஸெட் அலோகேஷனைப் பின்பற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாத கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 15% வருமானமும் அதே சமயம், அக்ரஸிவ் முதலீட்டாளர்களுக்கு 18% வருமானமும் கிடைத்திருக்கும். நாம் நம்முடைய 3 ஆண்டுக்கால எதிர்பார்ப்பு களை மிதமான முதலீட்டாளர் களுக்கு 12 சதவிகிதமாகவும் தீவிர முதலீட்டாளர்களுக்கு 16 சதவிகிதமாகவும் குறைத்திருந்தோம். இந்தக் கணக்கீடு பங்குகளில் அதிகமான முதலீடும், தங்கம், ரியல் எஸ்டேட்டில் குறைவான முதலீடும் செய்யப்படுகிறது எனும் அடிப்படையில் தரப்பட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளிலும் இதே போன்ற வருமானம் பார்க்கலாம். அதற்கு நிதி சார் சொத்து களில் கவனமாகப் பிரித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் முதலீட்டைக் குறைவாக வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்வெஸ்ட்மென்ட் பிளான் - 2023
லாபத்துக்குக் கைகொடுக்கும்
‘அஸெட் அலொகேஷன்’ டெக்னிக்!

தங்கம்

கடந்த காலங்களில் பங்கு கள் அதிக ஏற்ற, இறக்கமான நிலையில் இருக்கும்போதும், பொருளாதார நிச்சயமற்ற நிலையின்போதும் தங்கம் அதிக வருமானத்தை அளித்தது. இந்திய ரூபாயின் வீழ்ச்சி தங்கத்தின் மதிப்பை மேலும் உயர்த்துவதாக இருந்தது. காரணம், தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக நாம் இருக்கிறோம்.

சமீப காலங்களில் தங்க ஆபரணங்கள் மீதான விருப்பம் கணிசமாக நகர்ப்புற பெண்களிடம் குறைந்துள்ளது. கிராமப் புறங்களில் உள்ள பெண்களும் படிப்பறிவு பெற்று வேலை வாய்ப்பு என முன்னேற்றம் கண்டுவருவதால், தங்கத்தின் மீதான ஆர்வம் பெண்களிடையே அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும், தங்கம் எப்போதுமே நல்ல அடமான மதிப்பும், அவசரகாலத்தில் எளிதில் பணமாக்கும் தன்மையும் கொண்ட சொத்து வகை என்பதால், போர்ட் ஃபோலியோ சமநிலைக்கு உதவியாக இருக்கும். எனவே, அஸெட் அலொகேஷனில் தங்கத்துக்கான ஒதுக்கீட்டை 10% - 15% வரையில் வைத்துக்கொள்வது நல்லது.

ரியல் எஸ்டேட்

எல்லா சொத்து வகைக்கும் இருப்பதுபோல ரியல் எஸ்டேட்டுக்கும் சுழற்சி நிலைகள் உண்டு. 2002 - 2013 வரையிலான காலகட்டத்தில் ரியல் எஸ்டேட் சுழற்சி மிகச் சிறப்பாக இருந்தது. பல்வேறு சந்தைகளில் 3 முதல் 10 மடங்கு வரை ரியல் எஸ்டேட் மதிப்புகள் உயர்ந்தன. ஆனால், 2014 முதல் 2020 வரை பெரிதாக ரியல் எஸ்டேட் மதிப்பு உயரவில்லை. இந்தக் காலத்தில், ரியல் எஸ்டேட் விற்பனை, பரிவர்த்தனை வகையில் செயல்பாடு சிறப்பாக இருந்தபோதிலும், மதிப்பு உயர்வு பெரிதாக இல்லை. இத்தகைய போக்கே சில காலம் தொடரும் என்றே தோன்றுகிறது. அதே சமயம், சில நகர்ப்புற சந்தைகளில் ஓரளவு முன்னேற்றம் காணவும் வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான போர்ட்ஃபோலியோவில் ரியல் எஸ்டேட்டுக்கான ஒதுக்கீடு கடினமாக இருக்காது என்று கருதும் முதலீட்டாளர்கள், அஸெட் அலொகேஷன் பரவலாக்கத்துக்காகத் தரமான ‘ரெய்ட்’ திட்டங்களில் (REIT) முதலீடு செய்யலாம்.

வட்டி விகிதம்

பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் 2008 முதல் 2021 வரையிலான காலத்தில் மிகக் குறைவான வட்டி விகிதத்தையே கொண்டிருந்தன. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் இதன் தலைகீழ் மாற்றத்தைக் கண்டோம். தொடர்ச்சியாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் ரிசர்வ் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தியது. இருந்தபோதிலும் உள்நாட்டு முதலீடுகள் அதிகமாக நிதிச் சந்தைக்குள் வந்ததன் காரணத் தால் வட்டி விகித உயர்வானது மிதமான நிலையில் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சர்வதேச சந்தைகளில் எதிர்பார்க்கப்படுவதைப் போல வட்டி விகித உயர்வுகள் இல்லை யென்றாலும், இந்தியாவில் தொடர்ந்து மிதமான நிலையில் வட்டி விகிதங்கள் உயரத்தப்பட வாய்ப் பிருக்கிறது.

பங்குகள்

சென்செக்ஸில் உள்ள 30 நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தையின் பாதிக்கும் மேலான நிறுவனப் பங்குகளைவிடவும் அதிக மதிப்பு வாய்ந்தவையாக உள்ளன. அதே போல, நிஃப்டியில் உள்ள 50 நிறுவனப் பங்குகள் இந்தியப் பங்குச் சந்தை களின் மொத்த மதிப்பில் மூன்றில் இரண்டு பங்கை கொண்டிருக்கின்றன. எனவே தான், பெரும்பாலான முதலீட் டாளர்கள் சந்தையின் செயல் பாடு இண்டெக்ஸ்களின் நகர்வைப் பொறுத்தே இருக்கும் என்று நம்புகிறார்கள்.

நம் பொருளாதாரத்தில் பல்வேறு வணிகப் பிரிவுகள் சிறப்பாகச் செயல்பட்டு வரு கின்றன. ஆனால், அவை பெரும் பாலும் ஸ்மால்கேப், மிட்கேப் நிறுவனங்களாகவே இருக் கின்றன. இத்தகைய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய பன்முகப்படுத்தப்பட்ட போர்ட் ஃபோலியோ சென்செக்ஸ், நிஃப்டி தரும் வருமானத்தை விடவும் அதிக வருமானத்தை அடுத்த 3 ஆண்டுகளில் தரக்கூடும்.

தமிழில்: ஜெ.சரவணன்