அரசு சாரா துறைகளில் பணிபுரியும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டம் (என்.பி.எஸ்) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இவற்றின் மூலம் ஒட்டு மொத்தமாக 2023 மார்ச் மாத நிலவரப்படி கிட்டத்தட்ட 9 லட்சம் ரூபாய் கோடி நிர்வகிக்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டைவிட 22% அதிகரித்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய தரவுகள் தெரிவித்துள்ளன.

10 லட்சம் புதிய முதலீட்டாளர்கள்..!
2022-23-ம் நிதியாண்டில் கார்ப்பரேட் மற்றும் ஆல் சிட்டிசன் மாடல் வகைகளில் பத்து லட்சம் புதிய முதலீட்டாளர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இதை அடுத்து, 2023 மார்ச் மாத நிலவரப்படி நிர்வகிக்கப்படும் ஒட்டு மொத்த தொகை ரூபாய் 8.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ஒரு நிதியாண்டில் அரசு அல்லாத பிரிவுகளில் 10 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தேசிய ஓய்வூதிய அமைப்பில் சேர்வது இதுவே முதல் முறை ஆகும்.
தேசிய ஓய்வூதிய அமைப்பின் கீழ் செயல்படும் புதிய பென்ஷன் திட்டத்தின் மற்றும் அடல் பென்ஷன் யோஜனா திட்டங்கள் கீழ் நிர்வகிக்கப்படும் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிரித்துள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் 2.11 கோடியாக இருந்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை தற்போது 6.33 கோடியாக அதிகரித்துள்ளது.
கோவிட் - 19 பரவலுக்குப் பிறகு, சிறு வணிகர்களுக்கு இடையே ஏற்பட்ட ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வுதான் இந்த அதிக வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். கொரோனா தொற்றுக்குப் பிறகு, பல நடுத்தர இந்திய குடும்பங்களில் நிதி பாதுகாப்பு ஒரு முக்கிய வாழ்க்கை இலக்காக மாறியுள்ளது.

இளைஞர்கள் ஆர்வம்..!
என்.பி.எஸ் திட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. ஓய்வூதிய அமைப்பு தற்போது 6.33 கோடி சந்தாதாரர்களுடன் சுமார் ரூ.9 லட்சம் கோடியை நிர்வகிக்கிறது.
என்.பி.எஸ் திட்டத்தில் முதலீட்டாளரின் வயதுக்கு ஏற்ப, முதலீட்டுத் தொகையின் ஒரு பகுதி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், அதன் மூலம் பிராவிடெண்ட் ஃபண்டைவிட அதிக வருமானம் கிடைத்து வருகிறது. இதனால், இளம் முதலீட்டார்கள் பலர் ஆர்வமாக என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
பிராவிடெண்ட் ஃபண்ட்
இந்தியாவில் 26 கோடி சந்தாதாரர்கள், பணியாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் (Employees Provident Fund -EPF) திட்டத்தின் கீழ் இருக்கிறார்கள். இ.பி.எஃப் மூலம் ரூ. 11 லட்சம் கோடி ஓய்வூதிய நிதி நிர்வகிக்கப்பட்டு வருகிறது.