2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்தார். பல எதிர்பார்ப்புகளோடு காத்திருந்த இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி மற்றும் வரி வரம்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு, புதிய வரிமுறையில் ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சம்பளம் பெறும் வகுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிலைக் கழிவு புதிய வரி முறைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய வரிமுறையில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அறிவிப்பு வந்தவுடன், 'இனி நாம் பழைய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? இல்லை புதிய வரிமுறையைப் பின்பற்ற வேண்டுமா? எது நமக்குச் சரியானது? எது லாபகரமானது?' என்பதுதான் முக்கிய பேசுபொருளானது. புதிய வரிமுறையில் இதற்கு முன்னர் நிலைக்கழிவு வழங்கப்படவில்லை. தற்போதைய பட்ஜெட்டில் சம்பளம் பெறும் வகுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.50,000 நிலைக் கழிவு சேர்க்கப்பட்டுள்ளது. புதிய வரிமுறையில் வரிக்குட்பட்ட வருமானத்தைக் கணக்கிட, மொத்த வருவாயில் இருந்து இந்த நிலைக்கழிவு மட்டுமே விலக்காக கழித்துக்கொள்ளப்படும்.
`அட என்னங்க... இதெல்லாம் சொல்லிகிட்டு... எனக்கு எந்தமுறை சரிவரும்னு மட்டும் சொல்லுங்க!' என உங்களுக்குத் தோன்றினால், உங்களுக்காகவே தான் விகடனின் இந்த வருமான வரி கால்குலேட்டர். இதில் பழைய வருமான வரி முறை, புதிய வருமான வரி முறை என இரண்டிற்கும் வருமான வரியைக் கணக்கிட்டு, உங்களுக்கு ஏற்றது எதுவென நீங்களே தெரிந்துகொள்ளலாம்.
முதலில் சில சந்தேகங்களைத் தீர்த்துவிடுவோம். புதிய வரிமுறையில் ரூ.50,000 நிலைக்கழிவு சேர்க்கப்பட்டது, ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டது மற்றும் வருமான வரம்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை 2023-24 நிதியாண்டில் இருந்தே (ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை) செல்லுபடியாகும். எனவே, விகடன் வருமான வரி கால்குலேட்டரில், நீங்கள் கணக்கிட விரும்பும் நிதியாண்டை முதலில் தேர்வுசெய்து கொள்ளவும்.
ஒருவர், இந்த கால்குலேட்டரில் அவரின் மொத்த வருமானம், வரிச் சலுகைக்காக செய்திருக்கும் முதலீடுகள், வரிச் சலுகை அளிக்கும் செலவுகள் போன்ற விவரங்களை அளித்தால் அவர் பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறையில் கட்ட வேண்டிய வரி எவ்வளவு என்கிற விவரம் வரும். இதன் அடிப்படையில், அந்த வரிதாரர் எந்த முறையைத் தேர்வு செய்தால் லாபகரமாக இருக்கும் என்கிற முடிவுக்கு வர முடியும். எளிமையான இந்த கால்குலேட்டர் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திவிட்டு உங்கள் கருத்துகளை எங்களோடு கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

பயன்படுத்துவது எப்படி?
விகடன் வருமான வரி கால்குலேட்டரில், முதலில் நீங்கள் கணக்கிட விரும்பும் நிதியாண்டைத் தேர்வுசெய்து கொள்ளவும்.
அடுத்தபடியாக, உங்கள் வயதுவரம்பைத் தேர்ந்தெடுக்கவும்.
பின்னர், நீங்கள் சம்பளதாரரா இல்லையா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் மொத்த வருமானத்தை (Gross Income) உள்ளீடு செய்யவும்.
வீட்டு வாடகைப்படி விலக்கை (HRA Exemption) உள்ளீடு செய்யவும்.
80-சி பிரிவின் கீழ் வரி விலக்குகள் (நிதி ஆண்டில் ஆயுள் காப்பீடுக்காக செலுத்திய பிரீமியம், பி.எஃப் பங்களிப்பு, வீட்டுக் கடனில் அசலுக்காகத் திருப்பிச் செலுத்தியவை, ELSS எனப்படும் வரிசேமிப்பு திட்டம், குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் போன்றவை); இப்பிரிவின் கீழ் அதிகபட்ச வரிச் சலுகை ₹1.5 லட்சம் மட்டுமே கணக்கீட்டுக்காக எடுத்துக் கொள்ளப்படும். இதைவிட அதிக மதிப்பினை நீங்கள் உள்ளீடு செய்தாலும், இந்த கால்குலேட்டர் ரூ.1.5 லட்சமாகத் திருத்திக்கொள்ளும்.
NPS எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில், நிதியாண்டில் நீங்கள் செய்த பங்களிப்பை பிரிவு 80 சிசிடி (1 பி) - NPS-ல் தரவும். (அதிகபட்ச வரம்பு ரூ.50,000)
மருத்துவக் காப்பீடு செலுத்தியிருந்தால், `பிரிவு 80 டி இன் கீழ் கழித்தல்' என்ற பாக்ஸில் என்டர் செய்யவும். (அதிகபட்ச விலக்கு ₹ 25,000, மூத்த குடிமகன் ₹ 30,000)
நிதியாண்டில் கல்விக்கடனுக்காக செலுத்திய வட்டியை 'பிரிவு 80E இன் கீழ் கழித்தல்' என்ற பாக்ஸில் என்டர் செய்யவும்.
வீட்டுக் கடன் வட்டி செலுத்தியிருந்தால், அதை 'வீட்டுக் கடன் வட்டி' என்ற பாக்ஸில் என்டர் செய்யவும்.
மதிப்புகளை என்டர் செய்தபின், 'Calculate' பட்டனை அழுத்தினால், பழைய வரிமுறை மற்றும் புதிய வரிமுறையில் எது உங்களுக்கு லாபமானது என்ற விவரம் தரப்படும்.
புதிய வரிமுறையில் நிலைக்கழிவு மட்டுமே விலக்காக எடுத்துக்கொள்ளப்படும் (2023 பட்ஜெட்டிற்குப் பின், அதாவது 2023-24 நிதியாண்டில் இருந்து...) என்பதால், மேலே தரப்பட்டுள்ள விலக்குகான கணக்கீடுகளில் 'N/A' என குறிப்பிடப்பட்டிருக்கிறது.