கடந்த 2021 - 22 -ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 1-க்குள் தாக்கல் செய்ய வருமான வரி துறை வலியுறுத்தியது.
2021-22 நிதியாண்டுக்கான சம்பளம் பெறும் நபர்கள் ஜூலை 31, 2022-க்குள் வருமான அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 234F பிரிவின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதன் பிறகு அபராதத்துடன் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை நீட்டிப்பு செய்தது.

கடந்த 2020 - 21-ம் நிதியாண்டில் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்தில் சுமார் 5.89 கோடி வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. கடைசி நாளில் மட்டும் 9-லிருந்து 10 சதவிகித வருமான வரி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதாவது, 50 லட்சம் வருமான வரி தாக்கல் பதிவுகள் அந்த ஒரு நாளில் மட்டும் மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வருமான வரி துறை சார்பில், ``திருத்தப்பட்ட மற்றும் தாமதமான வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்தக் காலக்கெடுவுக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட வரிக் கணக்கு தாக்கல் செய்ய அபராதம் இல்லை. புதிதாக வரிக் கணக்கு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஆண்டு மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் இருந்தால் ரூ.5,000 அபராதமும், ஆண்டு மொத்த வருமானம் 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரூ. 1,000 அபராதமும் கட்டினால்தான் வரிக் கணக்குத் தாக்கல் செய்ய முடியும்.
அதன்படி டிசம்பர் 31-ம் தேதிக்குள் அபராதத்துடன் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். அதன் பிறகு தாக்கல் செய்ய முடியாது.