நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மத்திய அரசின் உத்தரவாதம் உள்ள அஞ்சலக ஆர்.டி யாருக்கு ஏற்றது..?

அஞ்சலக ஆர்.டி
பிரீமியம் ஸ்டோரி
News
அஞ்சலக ஆர்.டி

சேமிப்பும் முதலீடும் - 5

வங்கிகளின் தொடர் வைப்புத் திட்டத்துடன் (ஆர்.டி) ஒப்பிடும்போது தபால் அலுவலக ஆர்.டி அதிக பாதுகாப்பானது. இந்த முதலீட்டில் செய்யப்படும் முழுத் தொகைக்கும் மத்திய அரசின் உத்தரவாதம் இருப்ப தால், இது முழுமையான பாதுகாப்பான திட்டம் ஆகும். வங்கி ஆர்.டி-யைப் பொறுத்தவரை, முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி சேர்ந்து அதிகபட்சம் ரூ.5 லட்சத்துக்குத்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்தின்கீழ் பாதுகாப்பு இருக்கிறது.

சிவகாசி மணிகண்டன் 
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

தபால் அலுவலக ஆர்.டி திட்டத்தின் முதிர்வுக் காலம் 60 மாதங்கள். அதாவது, ஐந்து ஆண்டுகளாகும். இது மிக மிக நீண்ட காலம் ஆகும். அதே சமயம், இந்த ஐந்தாண்டுக் காலத்தில் முதலீடானது, கூட்டு வளர்ச்சி அடிப்படையில் (வட்டிக்கு வட்டி) அதிகரிப்பதால், அதிக வருமானம் கிடைக்கும். என்றாலும், பணவீக்கத்தைவிட 0.5 அல்லது 1% மட்டுமே இதன்மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

யாருக்கு ஏற்றது?

ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறு முதலீட்டாளர்களுக்குக் குறிப்பாக, குறைந்த வருமானப் பிரிவினர் மற்றும் பெண் களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கிறது. இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் மற்றும் லாக்இன் பீரியட் ஐந்து ஆண்டுகள் என்பதால், இந்தக் கால அளவுக்கு நிதி இலக்குகளை வைத் திருப்பவர்கள் இதைத் தேர்வு செய்யலாம். நீண்ட காலத்தில் நிதி இலக்குகளை நிறைவேற்றும் வகையில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் பெற இந்தத் திட்டம் உதவாது.

வட்டி வருமானம்...

தற்போதைய நிலையில், தபால் அலுவலக ஆர்.டி-க்கு ஆண்டுக்கு 5.8% வட்டி வருமானம் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு, கணக்கில் சேர்க்கப்படும். ஆண்டுக்குக் கிடைக்கும் மொத்த வட்டி 5.92 சதவிகிதமாக உள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி விகிதம் மாற்றத்துக்கு உட்படக்கூடும். 2020 மார்ச் மாதம் தபால் அலுவலக ஆர்.டி-க்கு ஆண்டுக்கு 7.2% வட்டி வழங்கப்பட்டது. இது 2020 செப்டம்பர் முதல் 5.8 சதவிகிதமாக இருந்துவருகிறது. தற்போதைய நிலையில், நீண்ட காலமாக இதன் வட்டி விகிதம் மாற்றப்படாமல் இருக்கிறது. கூடியவிரைவில் வட்டி விகிதம் மாற்றத்துக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது.

இந்தத் திட்டத்தில் சேரும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயிக்கப்படுகிறதோ, அந்த வட்டி விகிதமே ஐந்து ஆண்டு களுக்கும் தொடரும்.

இதில் ஐந்தாண்டுக் கால முதலீடு நிறைவு பெற்ற பிறகு, மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வசதி இருக்கிறது. அப்போது விரும்பினால் கூடுதலான தொகையையும் முதலீடு செய்யலாம். நீட்டிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் பணம் தேவைப்பட்டால், ஆர்.டி-யை ரத்து செய்து எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.

மத்திய அரசின் உத்தரவாதம் உள்ள அஞ்சலக ஆர்.டி யாருக்கு ஏற்றது..?

கணக்கை ஆரம்பிக்க...

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு இருந்தால், அதைக் கொண்டு ஆர்.டி கணக்கை எளிதில் தொடங்கிவிடலாம். இல்லையெனில், தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கை முதலில் தொடங்க வேண்டும். அதன்பிறகு, ஆர்.டி கணக்கு தொடங்க வேண்டும். இதற்கு மார்பளவு புகைப்படங்கள் 2, ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு நகல்கள் தேவைப்படும். கணக்கு ஆரம்பிக்கும்போது இந்த ஆவணங்களில் ஒரிஜினலைக் கொண்டு செல்வது நல்லது. இந்தக் கணக்கை ஆரம்பிக்க இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது. 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்கள் பெயரிலேயே இந்தக் கணக்கை நிர்வகித்துக் கொள்ளலாம். தனி ஒருவராகவோ, கூட்டாகவோ இந்தக் கணக்கை ஆரம்பிக்கலாம். ரொக்கப் பணம் அல்லது காசோலை மூலம் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

ஆர்.டி-யை மாதத்தின் 15-ம் தேதிக்குள் ஆரம்பித்தால், அடுத்தடுத்த மாத முதலீட்டை மாதத்தின் 15-ம் தேதி வரைக்கும் மேற்கொள்ள முடியும். அதைத் தாண்டிவிட்டால் அடுத்த மாதம்தான் பணம் போட முடியும். இதுவே ஆர்.டி-யை 16-ம் தேதிக்கு மேல் ஆரம்பித்திருந்தால், அடுத்தடுத்த மாதங்களில் 16-ம் தேதி மற்றும் மாத இறுதிக்குள் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

தவணை தவறினால்...

மாதத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் ஆர்.டி பணத்தைக் கட்டவில்லை எனில், ரூ. 100-க்கு ரூ. 1 அபராதத்துடன் கட்ட வேண்டும். இந்தக் கணக்கு மாதம் ஒன்றுக்கானதாகும். தவணை தவறும்பட்சத்தில் முதலில் தவணை தவறிய மாதத்துக்கான தொகை மற்றும் அபராதத்தைக் கட்டிவிட்டு, பிறகு நடப்பு மாதத்துக்கான தொகையைக் கட்ட வேண்டும். தொடர்ந்து நான்கு மாதங்களாகப் பணம் கட்டவில்லை எனில், அந்தக் கணக்கு நிறுத்தி வைக்கப்படும். நான்கு மாதங் களுக்குப் பிறகு, இரண்டு மாதக் காலத்துக்குள் கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும். ஆறு மாதம் பணம் எதுவும் செலுத்தவில்லை எனில், கணக்கு செயல் இழந்துவிடும். நான்கு மாதங்களுக்குக் குறைவாகத் தவணை கட்டாமல் இருக்கும் பட்சத்தில், ஆர்.டி போட்டிருப்பவர் அதன் முதிர்வுக் காலத்தைத் தவணை மாதங்களுக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளும் வசதி உள்ளது.

முன்கூட்டியே பணம் கட்டலாம்...

ஆர்.டி தவணையைத் தவற விடாமல் இருக்க முன்கூட்டியே தவணைகளைச் செலுத்தும் வசதி இருக்கிறது. இப்படி முன் கூட்டியே செலுத்துவதாக இருந்தால், குறைந்தபட்சம் ஆறு தவணைகளைச் சேர்த்துக் கட்ட வேண்டும். அப்படிக் கட்டும் போது, ரூ.100-க்கு ரூ.10 தள்ளுபடி அளிக்கப்படும்.

குறைந்தபட்ச முதலீடு...

தபால் அலுவலகத் தொடர் வைப்புத் திட்டத்தில் சாதாரண மானவர்களும் சேர்ந்து பயன் பெற வேண்டும் என்பதற்காகக் குறைந்தபட்ச முதலீடு 100 ரூபாய் என மிகக் குறைவாக வைக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு, ரூ.10-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். அதிகபட்ச உச்ச வரம்பு எதுவும் கிடையாது. முதிர்வுக் காலத்துக்கு முன் கணக்கை முடிக்கும்போது அவதாரம் கட்ட வேண்டிவரும். ஒரு தபால் அலுவலகத்திலிருந்து இன்னொரு தபால் அலுவலகத்துக்குக் கணக்கை மாற்றிக்கொள்ளும் வசதி இருக்கிறது.

கடன் வசதி...

கணக்கைத் தொடங்கி ஓராண்டுக்குப் பிறகு, கணக்கில் இருக்கும் தொகையில் 50% வரை கடனாக எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கடனை எந்த தபால் அலுவலகத்தில் பணம் கட்டி வருகிறோமோ, அதில் அதற்குரிய விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பாஸ்புக்கை இணைத்துக் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். இந்தக் கடனை மொத்தமாகவோ, மாதத் தவணையாகவோ ஆர்.டி முடியும்முன் கட்ட வேண்டும். இதற்கான வட்டி ஆர்.டி-யைவிட 2% கூடுதலாக இருக்கும். கடனை அடைக்கவில்லை எனில், முதிர்வுத் தொகையில் கடன் மற்றும் அதற்கான வட்டி கழிக்கப்பட்டு மீதித் தொகை வழங்கப்படும்.

ஆர்.டி கணக்கைத் தொடங்கிய நாளில் இருந்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முடித்துக் கொள்ளும் வசதி இருக்கிறது. இதற்கும் அதற்கென இருக்கும் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு தபால் அலுவலக சேமிப்புக் கணக்குக்கு தரப்படும் வட்டியே வழங்கப்படும். அதாவது, 4% வட்டிதான் கிடைக்கும். ஐந்தாண்டு முதிர்வுக் காலத்துக்கு ஒரு நாள் முன் கணக்கை முடித்தால்கூட சேமிப்புக் கணக்குக்கான வட்டியே தரப்படும்.

வருமான வரி...

அஞ்சல் அலுவலக ஆர்.டி மூலம் கிடைக்கும் வட்டிக்கு வருமான வரி உண்டு. இதை இதர வருமானம் எனக் குறிப்பிட்டு, ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் (பழைய வரி முறைப்படி, 5%, 20% மற்றும் 30%, புதிய வரி முறைப்படி 5%, 10%, 15%, 20%, 25% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். ஆர்.டி மூலமான வட்டி வருமானம் நிதி ஆண்டில் ரூ.10,000-ஐ தாண்டும்போது 10% மூலத்தில் வரிப் பிடித்தம் (டி.டி.எஸ்) செய்யப்படும். பான் எண் தரவில்லை எனில், 20% டி.டி.எஸ் பிடிக்கப்படும். வரி வரம்புக்குள் வராதவர்கள் 15ஜி (60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர்), 15ஹெச் (மூத்தக் குடிமக்கள்) படிவத்தைப் பூர்த்தி செய்து தந்தால், டி.டி.எஸ் பிடிக்க மாட்டார்கள். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 80TTB பிரிவின்கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு ஆர்.டி வட்டி வருமானம் ரூ.50,000 வரைக்கும் வருமான வரி இல்லை.

ஆர்.டி கணக்குதாரர் இறந்துவிட்டால்...

தபால் அலுவலக ஆர்.டி போட்டிருப்பவர், முதிர்வுக் காலத்துக்கு முன்பே இறந்துவிட்டார் எனில், நாமினி அல்லது வாரிசுதாரர்கள் அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எந்தத் தபால் அலுவலகத்தில் பணம் கட்டப்பட்டதோ, அந்தத் தபால் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்.டி கணக்கில் என்ன பணம் இருந்ததோ, அந்தப் பணம் தரப்படும். நாமினி அல்லது வாரிசுதாரர், முதிர்வுத் தொகையை அவர்கள் பெயருக்கு மாற்றிய பிறகு, விரும்பினால் முதிர்வுக் காலமான ஐந்தாண்டுகள் வரை ஆர்.டியைத் தொடர முடியும்.

ரிஸ்க் எடுக்க விரும்பாத, தொடர்ச்சி யான வருமானம் கொண்ட நடுத்தரக் குடும்பத்தினர் மற்றும் குடும்பத் தலைவிகள் அஞ்சல் அலுவலக ஆர்.டி-யைத் தேர்வு செய்யலாம்!

(தெரிந்துகொள்வோம்)