பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

வட்டி உயர்வு... ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு லாபமா?

ஃபிக்ஸட் டெபாசிட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபிக்ஸட் டெபாசிட்

முதலீடு

இந்திய ரிசர்வ் வங்கி, விலைவாசி உயர்வைக் (பணவீக்க விகிதம்) கட்டுக்குள் கொண்டுவர ரெப்போ வட்டி விகிதத்தை சமீப காலத்தில் நான்கு முறையாக மொத்தம் 1.9% உயர்த்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, பெரும்பாலான வங்கிகள் எஃப்.டி-க்கான வட்டியை உயர்த்தியுள்ளன. இதனால், டெபாசிட்டுக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும் என எஃப்.டி-யில் முதலீடு செய்யப்போகிறவர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார் கள்.

இந்த நிலையில், எஃப்.டி யில் முதலீடு செய்வது பணவீக்கத்துடன் ஒப்பிடு கையில் உண்மையில் எந்த அளவு லாபகரமாக இருக்கும் எனப் பார்ப்போம்.

சிவகாசி மணிகண்டன்  
நிதி ஆலோசகர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிதி ஆலோசகர், Aismoney.com

உண்மையான வருமானம்...

தற்போதைய நிலையில், வங்கிகளில் மூன்றாண்டுக் கான டெபாசிட்டுக்கு 5.65% - 6% வட்டி வழங்கப்படு கிறது. ஆனால், நம் நாட்டில் நுகர்வோர் சில்லறை பண வீக்க விகிதம் செப்டம்பர் மாதத்தில் 7.41 சதவிகிதமாக உள்ளது; மொத்தப் பணவீக்க விகிதம் 10.7 சதவிகிதமாக உள்ளது. எஃப்.டி வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரம்பில் (பழைய வரி முறையில் 5%, 20%, 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரியைக் கட்ட வேண்டும்.

ஒருவரிடம் ரூ.100 இருக் கிறது. அதை அவர் 6% வட்டி தரும் எஃப்.டி-யில் முதலீடு செய்தால், ஓராண்டு கழித்து அது ரூ.106-ஆக உயர்ந்திருக் கும். நாட்டில் விலைவாசி 7.41% உயர்ந்திருந்தால், ரூ.100-க்கு வாங்கிய பொருளை அடுத்த ஆண்டு ரூ.107.41 கொடுத்து வாங்க வேண்டும். அதாவது, கூடுதலாக ரூ.1.41 தந்து வாங்க வேண்டும் அல்லது கடன் வாங்கி, பொருளை வாங்க வேண்டும்.

இதை இன்னும் கொஞ்சம் ஆழமாகப் பார்ப்போம். எஃப்.டி வட்டி வருமானம் 6% ஆகும்; ஒருவர் 20% வருமான வரி வரம்பில் வருவதாக வைத்துக்கொள்வோம். வருமான வரி போக அவருக் குக் கிடைக்கும் வட்டி வருமானம் 4.8 சதவிகிதமாகக் குறைந்துவிடும். பணவீக்க விகிதம் 7.41% கழித்தால், அவருக்குக் கிடைக்கும் வருமானம் மைனஸ் 2.61% ஆகும். எனவே, தற்போதைய நிலையில், வங்கி எஃப்.டியை விட வேறு முதலீடுகளை நாடுவது லாபகரமாக இருக்கும்.

வட்டி உயர்வு... ஃபிக்ஸட் டெபாசிட் 
முதலீடு லாபமா?

எஃப்.டி முக்கிய நோக்கம்...

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டின் முக்கிய நோக்கம், வழக்கமான சேமிப்புக் கணக்கைவிட சற்றுக் கூடுதல் வட்டி வருமானம் பெறுவ தாகும். இதன் முக்கியமான அம்சம், ரிஸ்க் இல்லாத முதலீடு மற்றும் உத்தரவாத வருமானம் ஆகும். எனவே, மூன்றாண்டுக்கு உட்பட்டு தேவைப்படும் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க எஃப்.டி-யைப் பயன்படுத்தலாம். நீண்ட காலத்தில் பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம், ஓய்வுக்கால தேவைக்கான பணத்தை சேர்க்க எஃப்.டி-யில் முதலீடு செய்வது பணவீக்க விகிதம் மற்றும் வருமான வரியைக் கணக்கில் எடுக்கும்போது இழப்பாக இருக்கும்.

என்னென்ன ரிஸ்க்?

டெபாசிட்டுக்கான வட்டி விகித ஏற்றம் என்பது ஏற்கெனவே ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருப் பவர்களை பாதிக்கும். உதாரணமாக, ஒருவர் ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் போட்டிருக்கிறார். அதற்கான வட்டி 5 சதவிகிதமாக இருக்கிறது. அவர் ஃபிக்ஸட் டெபாசிட் செய்த பிறகு, சில மாதங்களில் அதே வங்கியில் ஓராண்டுக்கான எஃப்.டி-க்கு வட்டி 6 சதவிகிதமாக உயர்கிறது எனில், ஏற்கெனவே டெபாசிட் போட்டிருப்பவருக்கு வட்டி இழப்பு. வட்டி விகிதம் குறைந்தாலும் இதே போல இழப்பு ஏற்படும்.

முக்கியமாக, நீங்கள் டெபாசிட் செய்திருக்கும் வங்கி, டெபாசிட் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு பிரீமியம் கட்டவில்லை எனில், வங்கி திவாலாகும் போது மூலதனம் மற்றும் வட்டியை இழக்கும் ரிஸ்க் இருக்கிறது. டெபாசிட் இன்ஷூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் ரூ.5 லட்சத்துக்கு (அசல் மற்றும் வட்டி) மட்டுமே உத்தரவாதம் இருக்கிறது.

எஃப்.டி யாருக்கு ஏற்றது, ஏற்றதல்ல..?

முதலீடு மற்றும் வருமானத்தில் ரிஸ்க்கே எடுக்க விரும்பாதவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு ஏற்றதாகும். அதுவும் ஒருமுறை மொத்த முதலீடு செய்பவர்களுக்கு ஏற்ற திட்டமாக இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு, 60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினரைவிட 0.5% அதிக வட்டி வழங்கப்படுகிறது என்பதால், அந்தப் பிரிவினர் எஃப்.டியைக் கவனிக்கலாம்.

மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடை வெளியில் முதலீடு செய்பவர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் சரிபட்டு வராது. காரணம், மாதம்தோறும் ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வந்தால், அந்த ஆவணங்களைப் பராமரிப்பதே பெரிய வேலையாக இருக்கும். ஃபிக்ஸட் டெபாசிட்டைப் பொறுத்த வரை, ஓராண்டு, மூன்று ஆண்டு, ஐந்து ஆண்டு என முதலீடு செய்தாலும், வட்டி விகிதத்தில் பெரிய வித்தியாசம் இருக்காது. அதிகபட்சம் 0.5% - 1% மட்டுமே வித்தியாசம் இருக்கக்கூடும்.

வட்டி உயர்வு... ஃபிக்ஸட் டெபாசிட் 
முதலீடு லாபமா?

எஃப்.டிக்கு மாற்று முதலீடுகள்...

மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கு களுக்கு வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வது அவ்வளவு லாபகரமாக இருக்காது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பணம் தேவை எனில், ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்குப் பதிலாக, தபால் அலுவலக ஃபிக்ஸட் டெபா சிட்டுகள் (மாத வருமான திட்டம் 6.7%, ஐந்து ஆண்டு டைம் டெபாசிட் 6.7%, தேசிய சேமிப்புத் திட்டம் 6.8%), ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் (வட்டி 7%), கடன் பத்திரங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகள், கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் ஆகியவற்றில் முதலீடு செய்து வந்தால் சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

தபால் அலுவலக முதலீட்டில் 100% மத்திய அரசு உத்தரவாதம் உள்ளது. கடன் ஃபண்டுகளில் வருமானத் துக்கு உத்தரவாதம் இல்லை. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் அளவுக்குக் கடன் ஃபண்டுகளில் வருமானம் கிடைத்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட முதலீடு என்கிறபட்சத்தில் வருமான வரிக்குப் பிறகு, ஃபிக்ஸட் டெபாசிட்டவிட கடன் ஃபண்டுகள் லாபகரமாக இருக்கும்.

கடன் ஃபண்ட் முதலீடு மூன்றாண்டுக்கு மேற்படும் போது நீண்ட கால மூலதன ஆதாயத்துக்குப் பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு, 20% வரி கட்டினால் போதும். உதாரணமாக, ஒரு கடன் ஃபண்ட் மூலம் சுமார் 6% வருமானம் கிடைக்கிறது எனில், பணவீக்க விகிதம் 6 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில் கடன் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட கால மூலதன ஆதாய வரி எதுவும் கட்ட வேண்டியிருக்காது. அதாவது, வருமானம் பணவீக்க விகித சரிக்கட்டலின்போது 0 ஆகிவிடுகிறது.

தற்போதைய நிலையில், கார்ப் பரேட் ஃபிக்ஸட் டெபாசிட்டு களில் 7.25% - 8% வட்டி வழங்கப் படுகிறது. ஆனால், ரிஸ்க் கொஞ்சம் கூடுதல் ஆகும். கடன் பத்திரங்களுக்கு 7.5% - 8.5% வட்டி கிடைக்கும். இவற்றிலும் சிறிது ரிஸ்க் இருக்கிறது.

முதலீட்டில் ரிஸ்க் எடுக்கத் தயார், அதிக வருமானம் வேண் டும் என்பவர்கள், நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள், ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டு களைக் கவனிக்கலாம். தற்போதைய நிலையில், குறுகிய காலத் தேவைக்கு மட்டுமே வங்கி எஃப்.டி-யில் முதலீடு செய்யலாம்!