
ஓவியங்கள்: பிள்ளை
பெருமைக்காக நிம்மதியை இழக்காதீர்கள்!
நான் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி யாற்றி வருகிறேன். கம்பெனி பஸ்ஸில் வேலைக்குச் சென்றுவருவதால், வீட்டில் ஸ்கூட்டர் மட்டும் வைத்திருந்தேன். சமீபத்தில் என் மனைவி யின் அக்கா கார் வாங்கியிருந்தார். குடும்பத்துடன் சொந்த காரில் எங்கள் வீட்டுக்கு வந்துபோனார். அவ்வளவுதான், அன்றுமுதல் கார் வாங்க வேண்டும் என நச்சரிக்கத் தொடங்கிவிட்டாள் என் மனைவி. அவர்கள் பிசினஸ் பயன்பாட்டுக்காக கார் வாங்கியிருக்கிறார்கள், நமக்கு கார் அவசியமில்லை என எவ்வளவோ சொல்லியும் என் மனைவி கேட்பதாக இல்லை. வேறு வழி யில்லாமல் லோன் போட்டு கார் வாங்கினேன். ஏற்கெனவே இருந்த வீட்டுக் கடனுடன் கார் கடனும் சேர, இப்போது மாத பட்ஜெட்டில் துண்டுவிழு ஆரம்பித்திருக்கிறது. வெற்று பந்தாவுக்காக இன்றைக்குக் கடன் சுமையில் தவிக்க வேண்டிய நிலை. எந்தவொரு பொருளை யும் வாங்கும்முன், அது நமக்கு அவசியமா என ஒன்றுக்குப் பலமுறை யோசித்து வாங்குங்கள்!

-சுந்தர மூர்த்தி, சென்னை
மானத்தை இழக்கவைத்த திருட்டு செல்போன்!

நான் அரசு அலுவலகம் ஒன்றில் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் டிப்டாப் ஆசாமி ஒருவன், விலை உயர்ந்த செல்போன் ஒன்றை வைத்துக்கொண்டு பணம் தரும்படி கேட்டான். சென்னையிலிருந்து வேலை விஷயமாக வந்தபோது தனது பர்ஸ் திருடுபோய்விட்டதாகவும், செல்போனை வைத்துக் கொண்டு பணம் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் சொன்னான். அந்த செல்போன், ரூ.25,000-க்கும் மேல் இருக்கும் என்றார்கள் என் நண்பர்கள். அவன் ரூ.3,000 சொன்னான். நான் பேரம் பேசி ரூ.2,000 கொடுத்து வாங்கினேன். சில நாள்களில் என்னைத் தேடி போலீஸ் வந்தது. திருட்டு செல்போனை வாங்கிய விவரம் அப்போதுதான் தெரிந்தது. போனை நான் திருடிவிட்டதாகச் சொல்லி என்னை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் போலீஸ் என்னை நம்பவில்லை. பிறகு என்னுடைய மேலதிகாரி தலையிட்டு என்னை விடுவித்தார். பணம் நஷ்டமானதுடன் என் மானமும் போனது. விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக அறிமுகம் இல்லாத நபர்களிடம் பொருள்களை வாங்காதீர்கள். அப்படியே வாங்கினாலும், அவரிடமிருந்து அதை வாங்கியதற்கான டாக்குமென்ட் ஒன்றைப் பெறுவது அவசியம்!
- குரு பிரசாத், திருச்சி
ஒப்பந்தம் போடாததால் வந்த நஷ்டம்!

நான் மளிகைக் கடை நடத்தி வருகிறேன். இரண்டு ஆண்டு களுக்குமுன், எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்தக் கட்டடத்தின் உரிமையாளர் எனக்கு ஏற்கெனவே பழக்கமானவர். அதனால் அட்வான்ஸ் தொகை ரூ.50,000-க்கு ஒப்பந்தம் போட்டுக்கொள்ளவில்லை. சமீபத்தில் கட்டட உரிமையாளர் இறந்துபோனார். சில மாதங்களில் கடை தங்களுக்குத் தேவைப்படுவதாகச் சொல்லி, கட்டட உரிமையாளரின் மகன் காலி செய்யச் சொன்னார். அட்வான்ஸ் தொகை ரூ.20,000 கொடுத்தார். நான் எவ்வளவோ சொல்லியும், தன் தந்தை ரூ.20,000 மட்டுமே வாங்கியதாகச் சொல்லிச் சாதித்தார். வாடகை ஒப்பந்தம் போடாததன் விளைவு, எனக்கு ரூ.30,000 இழப்பு. ஒப்பந்தம் போடாமல் வீடோ, கடையோ வாடகைக்கு எடுக்காதீர்கள்.
-சண்முகம், விழுப்புரம்
கொஞ்சம் உழைப்பு... கூடுதல் லாபம்!

நான் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. காய்கறிகள், கீரைகள் விளைவிக்கிறேன். வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து பொருள்களை வாங்கிச் செல்வார்கள். ஒருசமயம் வியாபாரி ஒருவர் முருங்கைக் காய்களை வாங்க வந்திருந்தார். அப்போது அங்கு வந்த என் மைத்துனர், இடைத் தரகர்களைத் தவிர்த்து நேரடியாக மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்தால், 15% -20% வரை கூடுதல் லாபம் கிடைக்கும் என்றார். உடனே சில மொத்த வியாபாரிகளிடம் பேசினேன். வாரம் ஒருமுறை வாடகை வண்டியில் ஏற்றி, நானே கடை களில் இறக்கிவிட்டு வந்தேன். கொஞ்சம் கூடுதல் உழைப்பைக் கொடுத்ததால் எனக்கு லாபமும் கூடுதலாகக் கிடைத்தது.
-ராமசாமி, வேடசந்தூர்
ஆடம்பரத்தால் பறிபோன நிம்மதி!

ஒரு வருடத்துக்குமுன் எனக்குத் திருமணம் நடந்தது. திருமணச் செலவுகளை எங்கள் வழக்கத்தில் மாப்பிள்ளை வீட்டார்தான் ஏற்பது வழக்கம். ஆடம்பரமாகத் திருமணம் செய்ய எனக்கு விருப்பமில்லை. குலதெய்வம் கோயிலில் திருமணத்தை முடித்துவிட நினைத்தேன். ஆனால், அப்பாவுக்குக் கெளரவப் பிரச்னை. தன் அண்ணன் மகன் திருமணத்தைவிட பிரமாண்டமாக நடத்த ஆசைப்பட்டார். வங்கியில் பர்சனல் லோன் ரூ.5 லட்சம் வாங்கினேன். மண்டபம் பார்த்து தடபுடலாகத் திருமணத்தை முடித்தேன். ஊரே மெச்சியது. ஆனால், நான் வாங்கும் சொற்ப சம்பளத்தில் கடனைச் செலுத்திவிட்டு, செலவுகளை அடக்க முடியாமல் தடுமாறி வருகிறேன். ஆடம்பரத் திருமணத்தைத் தவிர்த்திருந்தால், நான் நிம்மதியாக இருந்திருப்பேன்!
-ரவிக்குமார், முசிறி
நிதி தொடர்பான உங்கள் அனுபவங்களை finplan@vikatan.com என்ற மெயில் முகவரிக்கு அனுப்பலாம்.