மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எஸ்.ஐ.பி முதலீடு... எந்த தேதி சரியானது?

எஸ்.ஐ.பி முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
எஸ்.ஐ.பி முதலீடு

ஒன்றுக்கு மேற்பட்ட பல எஸ்.ஐ.பி இருந்தால்..?

பிபின் ராமச்சந்திரன், ரிசர்ச் அனலிஸ்ட், Primeinvestor.in

சில வாரங்களுக்குமுன் ஃபண்ட் ரிசர்ச் பகுதியில் தினசரி, வாராந்தரம், மாதாந்தரம் இவற்றில் எது எஸ்.ஐ.பி முதலீட்டுக்குச் சிறந்தது என்ற கட்டுரையை (https://www.vikatan.com/business/investment/daily-weekly-monthly-for-best-sip-concept?utm_source=magazine-page) வெளியிட்டிருந்தோம்.

பிபின் ராமச்சந்திரன் 
ரிசர்ச் அனலிஸ்ட், 
Primeinvestor.in
பிபின் ராமச்சந்திரன் ரிசர்ச் அனலிஸ்ட், Primeinvestor.in

அந்தக் கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இது மட்டுமல்லாமல், எஸ்.ஐ.பி முதலீடு சார்ந்து இன்னும் சில கட்டுரைகள் வெளியிட்டோம்.

கடன் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யலாமா, எஸ்.ஐ.பி அல்லாமல் மொத்தமாக முதலீடு செய்யலாமா, ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு மாறும்போது மொத்த முதலீடு சரியா, எஸ்.ஐ.பி முதலீடு சரியா இப்படி பல கேள்விகளுக்கு விரிவாகப் பதில் தந்திருக்கிறோம்.

இந்த வாரம் எஸ்.ஐ.பி முதலீடு சார்ந்து இன்னொரு கேள்விக்கான பதிலை விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு மாதத்தில் எந்த தேதி சிறந்தது?

எஸ்.ஐ.பி தேதிகளை ஒவ்வொரு முதலீட்டாளரும் ஒவ்வொரு விதமாகத் தேர்ந்தெடுப்பதற்கு, பல காரணங்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவர்களுக்கு மாதத்தின் முதல் வார இறுதியில்தான் சம்பளம் வழங்கப்படும். சம்பள தேதிக்கும், எஸ்.ஐ.பி தேதிக்கும் இடையில் உண்டாகும் இடைவெளியைச் சமாளிக்க முதல் வாரம் தாண்டிய தேதியைத் தேர்ந்தெடுப்பார்கள்.

இன்னும் சிலர், எஸ்.ஐ.பி முதலீட்டுக்கான தொகை சரியாகச் செலுத்தப்படுவது தவறாமல் இருக்க மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு தேதியைத் தேர்ந்தெடுப்பார்கள். மேலும், மாத இறுதி வாரத்தில் டெரிவேட்டிவ் எக்ஸ்பைரி காரணத்தால் ஏற்ற இறக்கமான நிலையும் காணப்படும் என்றும் கூறுகிறார்கள். இந்த வாதங்களை எல்லாம் சரியானதா என்பதைப் பார்க்க அதுகுறித்து விரிவான பகுப்பாய்வைச் செய்து பார்த்துவிடலாம்.

டேட்டாக்கள் என்ன சொல்கின்றன?

வெவ்வேறு தேதிகளில் செய்யப்பட்ட எஸ்.ஐ.பி-களின் வருமானத்தைப் பகுப்பாய்வு செய்ய, நாம் 5, 15 மற்றும் 25 ஆகிய மூன்று தேதிகளை எடுத்துக்கொள்ளலாம். முன்பு வெளியிட்ட எஸ்.ஐ.பி முதலீடுகளை என்ன இடைவெளியில் எத்தனை முறை மேற்கொள்ளலாம் என்ற கட்டுரையில் விவாதித்தது போலவே, 15 வருடத்துக்கான தரவுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளலாம். வெவ்வேறு சந்தை சுழற்சிகள் மற்றும் வெவ்வேறு எஸ்.ஐ.பி கால கட்டங்களில் கிடைத்த வருமானத்தைப் பார்க்கலாம்.

மூன்று 5 ஆண்டு காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2009 வரை, ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2014 வரை, ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2019 வரை... இரண்டு 10 ஆண்டு காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2014 வரை மற்றும் ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2019 வரை... ஒரு 15 ஆண்டு காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2019 வரை...

வழக்கமாக பகுப்பாய்வு செய்யும்போது, குறிப்பிட்ட ஃபண்ட் சார்ந்த சார்புகளைத் தவிர்க்கவும், வெவ்வேறு சந்தை மூலதன வரம்புகளைக் கருத்தில் கொண்டும் ஒப்பீட நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 500 வருமான விவரங்களை எடுத்துக் கொள்ளலாம்.

நாம் எடுத்துக்கொண்ட மூன்று தேதிகளில், எடுத்துக்கொண்ட கால இடைவெளிகளில் நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 500 இண்டெக்ஸ்கள் கொடுத்த வருமானத்தை அட்டவணை - 1, அட்டவணை - 2-ல் பார்க்கலாம்.

இந்த அட்டவணைகளில் இருந்து நமக்குக் கிடைக்கும் முடிவு என்னவெனில், 25-ம் தேதிகளில் செய்யப்பட்ட எஸ்.ஐ.பி-களின் வருமானம் மற்ற தேதிகளில் செய்யப்பட்ட முதலீடுகளைவிட சற்று அதிகமாக இருப்பதைக் காணலாம்.

ஆனால், இந்தத் தேதிக்கு எஸ்.ஐ.பியை மாற்றலாம் என்ற முடிவுக்கு வருவதற்குமுன், வருமான வித்தியாசம் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். இந்த ஆய்வின்படி பார்க்கும்போது, 25-ம் தேதி எஸ்.ஐ.பிக்கு சரியான தேதி என்று சொல்லும் அளவுக்கு வருமான வித்தியாசம் இல்லை என்பதுதான் எங்களுடைய கருத்து.

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!

ஒரு முதலீட்டுத் தொகையை உதாரணமாக எடுத்துக் கொண்டு இதைப் பார்த்தால், இன்னும் தெளிவாகப் புரியும். நிஃப்டி 100-ல் ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2020 வரை மாதம் ரூ.10,000 முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.12,00,000-ஆக இருக்கும். அப்படியானால், டிசம்பர் 2020-ல் அதன் இறுதி மதிப்பு என்னவாக இருக்கும் என்று பார்த்தால்,

5-ம் தேதி செய்யப்பட்ட எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.22,06,865

15-ம் தேதி செய்யப்பட்ட எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.22,05,085

25-ம் தேதி செய்யப்பட்ட எஸ்.ஐ.பி முதலீடு: ரூ.22,08,778

5-ம் தேதி எஸ்.ஐ.பிக்கும், 25-ம் தேதி எஸ்.ஐ.பிக்கும் இடையிலான மதிப்பில் உள்ள வித்தியாசம் ரூ.2,000-க்கும் குறைவாகவே உள்ளதைக் காணலாம். இதிலிருந்து குறிப்பிட்ட எஸ்.ஐ.பி தேதிக்கு என்று தனியாக எந்தவித சிறப்பம்சமும் இல்லை என்று தெரிந்துகொள்ள முடிகிறது.

எஸ்.ஐ.பி முதலீட்டில் எந்தத் தேதியும் வேலை செய்யும். எனவே, அவரவர் வசதிக்கேற்ப தேதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

மேற்கண்ட காலகட்டங்களில் கிடைத்த வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்ததில் வருமான வித்தியாசம் மிகச் சிறியதாகவே இருக்கிறது. ஆனாலும், தேர்ந்தெடுக்கப் பட்ட எஸ்.ஐ.பி தேதிகளுக்கு அப்பாற்பட்டு முதலீட்டின் மீதான இறுதி கார்பஸ் மதிப்புகள்தான் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்பதே இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.

நம்முடைய ஆய்வுக்கு மூன்று தேதிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இது தவிர, பல்வேறு தேதிகளில், பல்வேறு காலகட்டங்களில் எஸ்.ஐ.பி முதலீடு கொடுத்த வருமானத்தை ஆய்வு செய்தாலும் இதே முடிவுகளைத்தான் பார்க்க முடியும். வருமான வித்தியாசம் பெரிதாக இருக்காது.

ஒன்றுக்கு மேற்பட்ட பல எஸ்.ஐ.பி இருந்தால்..?

இந்த இடத்தில் பலருக்கு இன்னொரு கேள்வி எழும். அது என்னவெனில், ஒரு எஸ்.ஐ.பி தொகையை சிறு சிறு தொகைகளாகப் பிரித்து பல எஸ்.ஐ.பிகளாக முதலீடு செய்வதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க முடியுமா என்பதுதான் அந்தக் கேள்வி.

பல எஸ்.ஐ.பி-கள் வருமானத்தில் ஏதேனும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறதா என்பதைப் பார்க்க இரண்டு வெவ்வேறு எஸ்.ஐ.பி முதலீடுகளைப் பகுப்பாய்வுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

எஸ்.ஐ.பி 1: நிஃப்டி 100 மற்றும் நிஃப்டி 500 இரண்டிலும் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி தலா ரூ.5,000 எஸ்.ஐ.பி முத லீடாக மேற்கொள்வோம்.

எஸ்.ஐ.பி 2: நிஃப்டி 100-ல் மாதத்தின் 5-ம் தேதி 5,000 ரூபாயும் மற்றும் 25-ம் தேதி நிஃப்டி 500-ல் 5,000 ரூபாயும் எஸ்.ஐ.பி முதலீடாக மேற் கொள்வோம்.

முன்புபோல, காலகட்ட சுழற்சிகளையும் எடுத்துக் கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!

மூன்று 5 ஆண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2009 வரை, ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2014 வரை, ஜனவரி 2015 முதல் டிசம்பர் 2019 வரை.

இரண்டு 10 ஆண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2014 வரை மற்றும் ஜனவரி 2010 முதல் டிசம்பர் 2019 வரை.

ஒரு 15 ஆண்டுக் காலம்: ஜனவரி 2005 முதல் டிசம்பர் 2019 வரையிலான அட்டவணையில் மேற்குறிப்பிட்ட இரண்டு எஸ்.ஐ.பி முதலீடுகளும் கொடுத்த வருமான விகிதத்தைப் பார்க்கலாம்.

மதிப்பு அடிப்படையில் பார்க்கும்போது, ஜனவரி 2011 முதல் டிசம்பர் 2020 வரையிலான காலகட்டத்தில், இரண்டு விதமான எஸ்.ஐ.பி-களிலும் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ.12,00,000 ஆகும்.

டிசம்பர் 2020 இறுதியில் இவற்றின் மதிப்பு:

எஸ்.ஐ.பி 1: ரூ.22,10,122

எஸ்.ஐ.பி 2: ரூ.22,12,128

இரண்டு விதமான எஸ்.ஐ.பி-களின் இறுதி மதிப்பைப் பார்க்கும்போது, எஸ்.ஐ.பி-யைப் பிரித்து இரண்டு தேதிகளில் செய்தாலும் வருமான வித்தியாசம் பெரிதாக இல்லை என்பது தெரிகிறது.

இதிலிருந்து எந்தவொரு எஸ்.ஐ.பி தேதியும் பிரத்யேகப் பலன் தருவதாக இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். தினசரி எஸ்.ஐ.பி போலவே, பல எஸ்.ஐ.பி-கள் சராசரி செய்வதற்கு எதிராகத் திரும்ப வாய்ப்புள்ளது.

இருப்பினும், நீங்கள் எஸ்.ஐ.பி-யின் பலனை மாதம் முழுவதும் பெற விரும்பினால் எங்கள் பரிந்துரை இதுதான் - முதலில், மாதம் முழுவதும் எவ்வளவு பணம் டெபிட் செய்யப்பட வேண்டும் என்பதைக் கண்காணித்து, வங்கிக் கணக்கில் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது, உங்கள் மாதாந்தர எஸ்.ஐ.பி தொகை அதிகமாக இருக்கும்பட்சத்தில் இது போன்ற பல எஸ்.ஐ.பி-களாக மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

மூன்றாவது, ஒரே தேதியில் அனைத்து ஃபண்டுகளிலும் எஸ்.ஐ.பி-களை மேற்கொள்ள வேண்டாம். மாறாக, ஒவ்வொரு ஃபண்டுக்கு வெவ்வேறு எஸ்.ஐ.பி தேதியை வைத்துக்கொள்ளலாம்.

உதாரணமாக, ரூ.20,000 எஸ்.ஐ.பி முதலீடு மேற்கொள்ள இருக்கிறீர்கள் எனில், அவற்றை 4 ஃபண்டுகளுக்குச் சமமாகப் பிரித்து, 5-ம் தேதி இரண்டு ஃபண்டுகளிலும், 25-ம் தேதி பிற ஃபண்டுகளிலும் முதலீடு செய்யும் வகையில் அமைத்துக்கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!
மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்..!

ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு 25-ம் தேதியைப் பயன்படுத்த பரிசீலிக்கலாம்.

எப்போதுமே கூறுவதுபோல, எஸ்.ஐ.பி முதலீட்டின் சாதகமான அம்சமே அதன் எளிமைதான். எனவே, உங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டுக்கு மாதத்தில் ஒரே தேதியைக் கொண்டிருப்பது உங்களுக்கான தொந்தரவுகளை வெகுவாகக் குறைக்கிறது.

மேலும், எஸ்.ஐ.பி தேதி உங்கள் சம்பளத்தேதிக்கு அருகில் இருந்தால் செலவுகளை மேற்கொள்வதற்குமுன் முதலீடு செய்யப்படுவதை உறுதி செய்ய முடியும்.

நீங்கள் எஸ்.ஐ.பியை ஒரே தேதியில் செய்தாலும் சரி, பல தேதிகளில் செய்தாலும் சரி, எஸ்.ஐ.பி முதலீடு தடையில்லாமல் தொடர்வதை உறுதிசெய்வதை மட்டும் மறக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் எஸ்.ஐ.பி-யின் பலனை இழந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை தேதிகளில், எத்தனை முறை எஸ்.ஐ.பி முதலீடு செய்கிறோம் என்பதை விடவும் முக்கியம், எஸ்.ஐ.பி முதலீட்டை எந்தத் தடங்கலும் இல்லாமல் தொடர்வது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்