
ஒளிமயமான ஓய்வுக்காலம்! - சூப்பர் பிளானிங் 9
ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டை முதல் சம்பளத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அதற்கான சரியான உதாரணம், பணியாளர் சேமநல நிதி (Employees’ Provident Fund - EPF) ஆகும்.

கட்டாய பி.எஃப் ரூ.1,800...
தனியார் நிறுவனங்களில், ஒருவரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் பஞ்சப்படியில் (Dearness Allowance - DA) 12% அல்லது கட்டாய பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்தின் மூலம் மாதம்தோறும் ரூ.1,800 பி.எஃப்-ஆக சம்பளத்தில் பிடிக்கப்படும். இதே தொகையைத் தொழில் நிறுவனமும் செலுத்தும்.
கட்டாய பி.எஃப் என்பது அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்ந்த பணி யாளரின் சம்பள உச்சவரம்பு ரூ.15,000 என எடுத்துக்கொண்டு அதாவது, ரூ.15,000-ல் 12% ரூ.1,800 ஆகப் பிடிக்கப்படும். இதில் 8.33% அதாவது ரூ.1,250 குடும்ப ஒய்வூதியக் கணக்கிலும், 3.67% அதாவது ரூ.550 உறுப்பினர் பி.எஃப் கணக்கிலும் சேரும்.
வரம்பு எதுவும் இல்லாமல் பி.எஃப் பிடிக்கும் நிறுவனமும் இருக் கின்றன. அதாவது, ஒருவரின் அடிப்படை சம்பளம் மற்றும் டி.ஏ சேர்ந்து ரூ.40,000. இந்தத் தொகைக்கு 12% ரூ.4,800 சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. இதே அளவு தொகையை நிறுவனமும் பணியாளர் கணக்கில் செலுத்தும். இது போன்ற நிறுவனங்களில் சம்பளம் அதிகரிக்கும்போது பி.எஃப் பிடிக்கப்படும் தொகையும் அதிகரிக்கும்.
குடும்ப பென்ஷன் கணக்கில் சேரும் தொகையைப் பொறுத்த வரையில், சம்பளத்தில் பி.எஃப் எவ்வளவு பிடித்தாலும் மாதம் ரூ.1,250-தான் செலுத்தப்படும். அந்த வகையில், பென்ஷன் என்பது ஒரே சேவை ஆண்டுகள் மற்றும் ஒரே அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி கொண்டுள்ள கட்டாய பி.எஃப் பிடிக்கப் படுபவருக்கும், அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% பி.எஃப் பிடிக்கப்படுபவருக்கும் 58 வயதில் ஓய்வு பெறும்போது ஒரே பென்ஷன் தொகைதான் கிடைக்கும்.

முக்கிய நிபந்தனை...
2014, செப்டம்பர் 1-ம் தேதிக்குப் பிறகு, முதன்முதலாகப் பணியில் சேர்ந்தவருக்கு அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்கு மேல் இருந்தால், அவர் குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதி பெற மாட்டார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800, நிறுவனம் அதன் பங்காகத் தரும் ரூ.1,800 இரண்டும் உறுப்பினரின் பி.எஃப் கணக்கில் சேர்ந்துவிடும். இவருக்குப் பணி ஓய்வின்போது பி.எஃப் குடும்ப பென்ஷன் கிடைக்காது.
இதுவே அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி சேர்த்து ரூ.15,000-க்குக் கீழ் இருந்தால் அவர் குடும்ப ஒய்வூதியம் பெறத் தகுதி பெறுவார். இவருக்குக் கட்டாய பி.எஃப் ரூ.1,800 சம்பளத் தில் பிடிக்கப்படும். நிறுவனம் அதன் பங்களிப்பாக ரூ.1,800 செலுத்தும். நிறுவனம் செலுத்தும் தொகையில் ரூ.1,250 குடும்ப ஓய்வூதியக் கணக்குக்கும், ரூ.550 உறுப்பினரின் பி.எஃப் கணக்குக்கும் செல்லும். இந்தக் குடும்ப ஓய்வூதியம், பணி ஓய்வுக்குப் பிறகு, பணியாளரின் மரணம் வரைக்கும் அவருக்கு வழங்கப்படும். அதன் பிறகு, அவரின் துணைவருக்கு (கணவர்/மனைவி) வழங்கப்படும்.
பி.எஃப் ஃபேமிலி பென்ஷன் பெற, ஒருவர், தான் பணிபுரிந்த அனைத்து நிறுவனங்களிலும் சேர்த்து 58 வயது வரை மொத்தம் 10 வருடங்களுக்கு பி.எஃப் மற்றும் பென்ஷனுக்கான பங்களிப்பை செலுத்தியிருக்க வேண்டும். அந்த பென்ஷனுக்கான பங்களிப்பு அவரின் பி.எஃப் கணக்கில் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியம் பெற முடியும்.
பணியாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ல் 23 வயதில் சேர்ந்து பணியாற்றும் ஓர் உறுப்பினர் 58 வயதில் பணி ஓய்வில் சேவை 35 ஆண்டுகள் எனில், (தற்போது) ஊதிய உச்சவரம்புக்கு ரூ.15,000 பங்களிப்பு செய்தால் சுமார் ரூ.7,500 ஓய்வூதியம் கிடைக்கும்.(ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் X ஓய்வூதிய சேவை) / 70 = (15,000X35) / 70 = 7,500. ஒருவர் பணிபுரிந்த ஆண்டுகளைப் பொறுத்து இந்தக் கணக்கீடு மாறும்.
ஓய்வூதியத்தை 58 வயதுக்குப் பிறகு, பெற உறுப்பினருக்கு உரிமை உள்ளது. ஓய்வூதியத் தொகை 58 வயதுக்குப் பிறகு, ஆண்டுக்கு 4% அதிகரிக்கும். உறுப்பினர் 59 அல்லது 60 வயதை அடைந்த பின் ஓய்வூதியத்தைப் பெற்றால், கூடுதல் பென்ஷன் கிடைக்கும். கட்டாய பி.எஃப் மட்டும் பிடித்தல், குடும்ப ஊதியம் இல்லாத நிலையில் பல பணியாளர்கள் ஓய்வு பெறும்போது 12% பி.எஃப் பிடிக்கப்பட்டவர்களைவிட குறைவான பி.எஃப் தொகையையே பெறுவார்கள்.
விருப்ப பி.எஃப்...
பணியாளர் விரும்பினால் அதிகபட்சம் அவரின் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் அவரின் நிதி வசதி மற்றும் தேவையைப் பொறுத்து, 88% வரைக்கும் கூடுதலாக பி.எஃப் பிடிக்கச் செய்யலாம். அதாவது, 100% மொத்த சம்பளத்தையும் பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். இதை ‘பணியாளர் விருப்ப பி.எஃப்’ (VPF - Voluntary Provident Fund) என்பார்கள். இந்த வி.பி.எஃப் தொகையும் பி.எஃப் கணக்கில் சேர்க்கப்பட்டு மொத்தத் தொகையாகப் பராமரிக்கப்படும்.
சம்பளத்தில் குறைவாக பி.எஃப் பிடிக்கப்படுபவர்கள், வி.பி.எஃப் மூலம் தன் பி.எஃப் கணக்கில் அதிக தொகையைச் சேர்க்க முடியும். இதன் மூலம் அவர் பணி ஓய்வு பெறும் போது, பெரும் தொகுப்பு நிதியைப் பெறலாம்.
வி.பி.எஃப் மூலம் சிறிய தொகையைக்கூட பி.எஃப் கணக்கில் சேர்க்க முடியும். வி.பி.எஃப் ஆக மாதம் ரூ.500, ரூ.1,000 என்பது போல் சிறு தொகையைகூட பிடிக்கச் சொல்லலாம். வி.பி.எஃப் கணக்கில் பிடிக்கும் தொகையை ஆண்டுக்கு ஒரு முறை கூட்டவோ, குறைக்கவோ அனுமதிக்கப் படும். வி.பி.எஃப் பிடிக்க நிறுவனத்தின் காசாளருக்கு மெயில் அனுப்ப வேண்டும். அல்லது கடிதம் எழுதித் தர வேண்டும்.
முதலீடு, வட்டிக்கு வரிச் சலுகை...
பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்த முதலீட்டுக்கு மத்திய அரசின் உத்தரவாதம் உள்ளதால், அது 100% பாதுகாப்பாக இருக்கிறது.
தற்போது பி.எஃப் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8.10% வட்டி வழங்கப்படுகிறது. இது, வங்கி எஃப்.டி-யான 6 சதவிகித்தைவிட அதிகம். மேலும், பி.எஃப் வட்டி வருமானத்துக்கு வரி கிடை யாது. மேலும், வட்டிக்கு வட்டி வழங்கப்படுவதால், பணம் வேகமாகப் பெருகு கிறது.
வி.பி.எஃப் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு என்ப தால், பலரும் இதைப் பயன்படுத்தி கூடுதல் வரிச் சலுகை பெறுவதுடன், லாபமும் அடைந்து வருகிறார் கள். மேலும், பி.எஃப்-க்கான வட்டி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டியைவிட அதிகமாக இருப்பதால், இதில் பலரும் அதிக தொகையைச் சேர்க் கிறார்கள். சமீபத்தில் பி.எஃப் வட்டி 8.5 சதவிகிதத்திலிருந்து 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், இதர நிலை யான வருமானம் தரும் திட்டங்களுடன் ஒப்பிடும் போது, பி.எஃப் வட்டிதான் அதிகம்.
புதிய நிபந்தனை...
ஒரு நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் மூலம் தனியார் நிறுவன ஊழியர்களின் பி.எஃப் கணக்கில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்படும்பட்சத்தில் வரி எதுவும் இல்லை. ரூ.2.5 லட்சத்தைத் தாண்டும் தொகைக்கு தனி பி.எஃப் கணக்கு பராமரிக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு ரூ.5 லட்சம் வரைக்கும் வரி இல்லை. இந்த வருமான வரியானது ஒருவர் எந்த வருமான வரி வரம்புக்குள் வருகிறாரோ, அதற்கேற்ப (பழைய வரி முறையில் 5%, 20% மற்றும் 30%) வரி கட்ட வேண்டும்.
2021-22-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்க்குமுன் பி.எஃபில் எவ்வளவு போட்டாலும் அதற்கு எவ்வளவு வட்டி வருமானம் வந்தாலும், வருமான வரி எதுவும் கிடையாது. எனவே, பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீடு நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினாலும் லாபமாகவே இருக்கிறது. ஓய்வுக்காலத்துக்கு நீண்ட காலம் இருக்கிறது என்றால், ரிஸ்க் எடுக்க கூடியவர் என்றால் வரிச் சலுகை அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்து வரலாம்.
(திட்டமிடல் தொடரும்)
நிதி இலக்குகளை நிறைவேற்ற..!
பி.எஃப் தொகையை வீட்டுமனை, வீடு வாங்க, பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணச் செலவுகள், அவசரச் செலவு, மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்களை அடைக்க பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் தொகையை உபயோகித்துக் கொள்ளலாம். இந்தக் கடனைத் திரும்பிக் கட்ட வேண்டும் என்கிற அவசிமியல்லை. அதே நேரத்தில், இடையில் பி.எஃப் தொகையை எடுத்திருக்கும்பட்சத்தில், வி.பி.எஃப் மூலம் கூடுதலாகப் பணம் போட்டு அதை ஈடுகட்டுவது நல்லது. அப்போதுதான் பணி ஓய்வு பெறும் போது பெரும் தொகை கிடைக்கும். இது அடுத்து மிக முக்கியமாக இந்தத் தொகையை எந்தக் கடனுக்கும் இணையாக யாரும் இணைக்க (Attachment) முடியாது என்பது கூடுதல் பாதுகாப்பாக இருக்கிறது.
திட்டச் சான்றிதழ்..!
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவை மற்றும் 58 வயதை எட்டாதவருக்கு திட்டச் சான்றிதழ் (Scheme Certificate) வழங்கப்படும். 10 வருடங்களுக்கும் குறைவான சேவை இருந்தாலும் உறுப்பினர் ஒருவர் தனது ஓய்வூதிய சேவையைத் தொடர திட்டச் சான்றிதழைப் பெறலாம். வேலை மாறும்போது ஓய்வூதியக் கணக்குகளை மாற்றுவதற்கு இது உதவுகிறது. திட்டச் சான்றிதழ் வைத்திருப்பவர் இறந்தால், குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.