மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்!

திறமை
பிரீமியம் ஸ்டோரி
News
திறமை

ரீஸ்கில்லிங் பற்றிய புதிய தொடர் - 4

புதுத் திறன் மேம்பாட்டை வெறும் வகுப்பறை பாடங்களை மட்டும் கொண்டு செய்துவிட முடியாது. இது ஒரு கலாசாரத் திருப்புமுனை. எப்போதோ கற்ற ஒரு திறனை வைத்து வாழ்க்கை முழுவதும் வேலை பார்த்துவிட முடியாது. தொழில்நுட்பத்தால் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க‌, நம்மைச் சுற்றி நடப்பதைக் கவனித்து, மேன்மேலும் கற்று, திறனை வளர்ப்பது அவசியம் என்பதே இன்றைய யதார்த்தம்.

புதுத் திறன் மேம்பாட்டுப் பயணத்தை ஐந்து படிக்கற்களாகப் பார்க்கலாம். 1) விழிப்பு உணர்வுடன் எந்தத் திறன் முக்கியம் என்று அடையாளம் காண்பது 2) அந்தத் திறனைக் கற்றுக்கொள்ளத் திட்டம் தீட்டுவது 3) இந்த முயற்சிக்கு ஆகும் செலவு 4) கற்றுக் கொள்ளவேண்டும் என்ற தீராத ஆர்வம் 5) கற்றுக்கொண்ட பிறகு, அதைச் செய்துகாட்டுவது.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்!

திறன் விழிப்பு உணர்வு

‘நல்ல ஆரம்பமே பாதிவேலை முடிந்ததுபோல’ என்பது ஒரு பிரபலமான பழமொழி. அது திறன் மேம்பாட்டிற்கும் பொருந்தும். நான் எழுதிய ‘Neoskilling’ புத்தகத்திற்காக ஓர் ‌ஆய்வு நடத்தினோம். மேற்சொன்ன இந்த ஐந்து மைல் கற்களில் எது மிகவும் பெரிய‌ சவால் என்று முந்நூற்றுக்கும் மேற்பட்ட தொழில் தலைவர்களிடம் கேட்டோம். திறன் வளர்ப்பில் மிகப் பெரிய சவால், எந்தத் திறன் மிக முக்கியம் என்று அடையாளம் கண்டு அதில் பயிற்சி தந்து வளர்ப்பதுதான் என ஆய்வில் பங்கேற்ற 40% பேர் சொன்னார்கள்.

தலை சுற்றும் அளவிற்கு இன்று தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டன. அவற்றில் ஒரு நிறுவனத்திற்கு எந்தத் திறன் முக்கியம் என்று தெரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. நிறுவனத்துடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், தொழில் சங்கங்கள், ஊடகங்கள் வாயிலாக அறியலாம்.

சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute
சு.ராமச்சந்திரன், தொழில்நுட்ப ஆலோசகர், Infosys Knowledge Institute

புது யோசனைகளும் போட்டியும் இன்று எங்கிருந்து வேண்டு மானாலும் வரலாம். என் ஊழியர், என் வாடிக்கையாளர், என் துறை எனக் குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. சுற்றியிருக்கும் நடப்புகளைக் கவனிக்க வேண்டும். உலக அளவில் வாகனத் துறையின் தலைநகரமாக இருந்த டெட்ராய்டிற்குத் தொழில்நுட்ப ஜாம்பவான்க‌ளான ஆப்பிள், கூகுள் தானியங்கி வண்டிகள் இன்று பல‌த்த போட்டியாக இருக்கின்றன.

வாகனத் துறையில் புரட்சி ஏற்படுத்திய ஹென்றி ஃபோர்ட் ஒரு முறை இதுபற்றி அழகாகச் சொன்னார். ‘‘என் வாடிக்கையாளர்களிடம், ‘‘உங்களுக்கு என்ன வேண்டும்’’ என்று கேட்டிருந்தால், ‘‘இன்னும் வேகமாக ஓடும் குதிரை வண்டி’’ என்று சொல்லியிருப்பார்கள்.’’ ஆனால், அவர் உருவாக்கியதோ இன்ஜின் கொண்டு ஓடும் நான்கு சக்கர வாகனம். சில ஆண்டுகளில் குதிரை வண்டி என்பதே உலகம் முழுவதும் காணாமல்போனது. இன்று தொழில்நுட்பம் வளர்ந்துவரும் வேகத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என அவர்களுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொருள் தயாரிப்பாளர்கள்தான் ஆராய்ச்சி செய்து, யோசித்து, புதுப்புது வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்!

எந்தத் திறன் முக்கியம் என்று முடிவு செய்தபின், அதற்கான பயிற்சியாளர்கள், பயிற்சி வழங்கும் முறை (வகுப்பறை, கணினி, ஆன்லைன், ஸ்மார்ட் போன்), அதற்குத் தகுந்த முக்கியத்துவம், ஊக்கம், நேரம், நிதி ஒதுக்கப்பட வேண்டும். பயிற்சி பெற்றவர்கள் அந்தத் திறனில் வல்லவர்களாக நிர்வாகம் வாய்ப்பளிக்க வேண்டும்.

திறன் வளர்ப்பிற்குப் பொறுப்பு

திறன் வளர்ப்பது முக்கியம் என்று பார்த்தோம். இந்த வேலையைச் செய்வது யாருடைய பொறுப்பு? ஒரு சமுதாயத்தில் திறன் வளர்ப்ப தற்கான வேலையைச் செய்யவேண்டிய பொறுப்பு, அரசு, தொழில் தலைவர்கள் மற்றும் தனிப்பட்ட ஒவ்வொரு குடிமகனையும் சேரும். தன்னலமற்ற கல்வி நிறுவனங்களையும் அரசுடன் சேர்த்துக்கொள்ள லாம். கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை அளிப்பது அரசின் முக்கியப் பொறுப்பு. மின்னல் வேகத்தில் வளரும் தொழில்நுட்பத்தால் திறன் வளர்த்து வேலை வாய்ப்பிற்கு வழிசெய்வதும் அரசின் பெரிய பொறுப்புதான்.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்!

நாட்டின் பொருளாதாரம் வளர‌ எந்தத் திறன்கள் தேவை என்பதைத் தொழில் நிறுவனங்கள்தான் கூறமுடியும். அதற்குத் தேவையான‌ நிபுணர்களையும் பயிற்சிப் பொருள்களையும் நிறுவனங்கள் சமூகப் பொறுப்புடன் முன்வந்து வழங்கி உதவ வேண்டும். ஒரு நிறுவனத்திற்குள் அறிவுத்திறன் மேம்பாடு, தொடர் கற்றல் எனத் திறன் வளர்ப்புக்காகவே தனியாகப் பதவிகள் வந்து விட்டன. (Chief Knowledge Officer, Learning Officer).

கல்வியை ஊக்குவிக்கும் கொள்கைகளை வகுத்து, நிதியை ஒதுக்கி, இந்தப் பயிற்சியை மூலைமுடுக் கெல்லாம் எடுத்துச்செல்வது அரசின் பொறுப்பு. பல நாடுகள் தங்கள் நிலைமைக்கேற்ப உன்னதமான‌ மற்றும் புதுப் புது திட்டங்களை வகுத்து அமல்படுத்தியும் உள்ளன‌. இதற்காகத் தனி அமைச்ச கங்களும் வந்துவிட்டன.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் தனிப் பட்ட மனிதர்களே தங்கள் திறமை மேம்பாட்டிற்குப் பொறுப்பேற்றுக்கொள் கின்றனர். வளர்ந்துவரும் நாடுகளில் இதை எதிர்பார்க்க முடியாது என்பதால், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை அனைவரும் வீணடிக்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திறன் வளர்த்த முன்னோடிகள்

பெரிய அளவில் வெற்றிகரமாகத் திறமை மேம்பாடு செய்த நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவில் தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் காலத்தில் உருவான எடி&டி (AT&T). தொலைபேசித் துறையில் அசைக்க முடியாத இடத்திலிருந்த எடி&டி-யில் 2012-க்குப் பிறகு அதன் 75 சதவிகித வன்பொருள்கள் (hardware, infrastructure) டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் மாற்றப்படும் நிலைமை உண்டானது.

திறன் பழகு; திறமை மேம்படுத்து! - புதுத் திறன் மேம்பாட்டின் ஐந்து படிகள்!

அதைவிடப் பெரிய தலைவலி, 2,80,000 ஊழிய‌ர் களுக்குப் பயிற்சி கொடுத்து, அவர்களை வேலையைவிட்டு அனுப்பாமல் டிஜிட்டல் யுகத்திற்குத் தயார்படுத்துவது. 250-க்கும் மேற்பட்ட‌ வேலைகள் 80-ஆகக் குறைக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் தேவையான திறன்க‌ள் வகுக்கப்பட்டன. ஒவ்வோர் ஊழியரின் திற‌மைக்கும் நிறுவனத்தின் தேவைக்கும் உள்ள இடைவெளி கணிக்கப்பட்டு, அதைக் குறைக்கத் தேவையான பயிற்சியளிக்கப்பட்டது. வெளியிலிருந்து ஆள்களை எடுக்காமல், அனுபவ‌த்தை மட்டும் பார்க்காமல், திறமைக்கு மதிப்பு கொடுத்து புதிய வேலையிடங்களை நிரப்பியது எடி&டி. இதனால், வேலை செய்ய ஏற்ற மிகச் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் 2016-ம் ஆண்டில் முதல்முறையாகப் பரிசு வென்றது.

எடி&டி போலவே, இந்தியாவில் ஓர் உதாரணம் ஹிந்துஸ்தான் டெலிபிரின்டர்ஸ் (HTL). அந்தக் காலத்தில் தந்திகளை அனுப்பப் பயன்பட்ட டெலி பிரின்டர்களைத் தாண்டி, டிஜிட்டல் இயந்திரங்களில் இறங்கிய சென்னையில் உள்ள நிறுவனம் இது. தொலை தொடர்புத் துறையில் முன்னோடியாகக் கருதப்பட்ட ஹெச்.டி.எல் தாராளமயமாக்கலைச் சமாளிக்க ஒரே பொருளை நம்பியிருக்காமல், டிஜிட்டல் யுகத்திற்கான பொருள்களையும் தயாரித்து, தேவையான சேவையையும் அளித்து, தனியார்மயமாக்கல் போன்ற முடிவுகளைச் சரியான நேரத்தில் எடுத்து தன் நிலையைத் தக்கவைத்தது.

ஆனால், பி.எஸ்.என்.எல் நிறுவனம்..? தனியார் துறையின் கடும் போட்டியைச் சமாளிக்க முடியாமல், ஊழியர்களுக்குச் சம்பளம்கூட தரப் பணமில்லாமல் தவிக்கிறது. சரியான தொழில் நுட்பங்களில் முதலீடு செய்து, திறன் வ‌ளர்த்து, அரசையே நம்பியிருக்காமல், சொந்தக் காலில் நிற்க பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் முடியுமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

(திறன் வளரும்)