பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழக்கிழமை காலையிலேயே ஷேர்லக் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பியிருந்தார். “கனமழை பெய்து கொண்டிருப்பதால் நேரில் சந்திக்க வேண்டாம். கேள்விகளை மெயில் அனுப்பி வையுங்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். நாம் அனுப்பிவிட்டுக் காத்திருக்க, மாலை 4 மணிக்கு பதில்களை அனுப்பி வைத்தார்.

கே.எஃப்.சி ஐ.பி.ஓ வெளியீடு வெற்றியடைந்ததா?

“பிரபல ஃபாஸ்ட்புட் நிறுவனமான கே.எஃப்.சி அவுட்லெட்டை நிர்வகிக்கும் சாப்பியர் ஃபுட்ஸ் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு நவம்பர் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடந்தது. அதன் முதல் வெளியீட்டு தினத்தில் சிறு முதலீட்டாளர்களின் பிரிவில், 2.56 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டார்கள் விண்ணப்பித்திருந்தார்கள். அதே நேரத்தில் நிறுவனமல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 5% பேர் மட்டுமே பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். அதே போல தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் பிரிவில் 2% பேர் மட்டுமே பங்குகள் வேண்டி விண்ணப்பித்திருந்தார்கள். இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் வெளியிடப்படும் பங்குகளின் எண்ணிக்கையை 1.75 கோடியிலிருந்து 96.63 லட்சங்களாக நிறுவனம் குறைத்திருந்தாலும், இரண்டாவது நாளான நவம்பர் 9-ம் தேதி நிலவரப்படி, மொத்தம் 47.11 லட்சம் பங்குகளுக்கான விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருந்தன.

இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் ரூ.2,073 கோடி நிதியை முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்ட முடிவு செய்திருந்தது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் பங்கு விலைப்பட்டை ரூ.1,120 - 1,180 ஆகும்.”

ஷேர்லக்: முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள்..!

நடப்பு நவம்பர் மாதத்தில் முதலீட்டுக்கு கவனிக்க வேண்டிய பங்குகள் ஏதாவது?

“தரகு நிறுவனங்களில் ஒன்றான கே.ஆர்.சோக்‌ஷி, இன்ஃபோசிஸ், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ், ரோசரி பையோடெக், ஹிந்துஸ்தான் யூனிலீவர், சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் மற்றும் ஃபைனான்ஸ் கம்பெனி மற்றும் ராம்கோ சிமென்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை நவம்பர் மாதத்தில் 8% - 22% ஏறக்கூடும் எனச் சொல்லி யிருக்கிறது. சந்தை இறக்கத்தில் இருந்து தீபாவளிக்குப் பிறகு மீண்டு வந்துள்ளது. இதனால் சந்தையின் போக்கு வலுவாக இருப்பதை இந்தத் தரகு நிறுவனம் காரணமாகக் காட்டியுள்ளது.

இந்தத் தரகு நிறுவனத்தின் கணிப்புபடி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலை 22% வரை ஏற்றம் காணக்கூடும். தற்போதைய வர்த்தக விலையான ரூ.1,709.40-லிருந்து ரூ.2,094-க்கு செல்ல வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதே போல, ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் பங்கு விலை 17% ஏறக்கூடும் எனச் சொல்லியிருக்கிறது. இதன் இலக்கு விலை ரூ.1,391. ரோசரி பயோடெக் பங்கு விலை 18% (இலக்கு விலை ரூ.1,612), ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்கு விலை 17% (இலக்கு விலை ரூ.2,834), சோழமண்டலம் இன்வெஸ்ட் மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் பங்கு விலை 17% (இலக்கு விலை ரூ.692) மற்றும் ராம்கோ சிமென்ட்ஸ் பங்கு விலை 8% (இலக்கு விலை ரூ.1,176) ஏற்றம் காணக்கூடும் என கே.ஆர்.சோக்‌ஷி தெரிவித்துள்ளது.”

ஜியோஜித் தரகு நிறுவனம் சில லார்ஜ்கேப் பங்குகளை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குகளாகக் சொல்லி யிருக்கிறதே?

“கெயில் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, வேதாந்தா, யு.பி.எல், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ்இண்ட் பேங்க் மற்றும் கோட்டக் மஹிந்திரா பேங்க் ஆகிய லார்ஜ்கேப் பங்குகளின் விலை 12% - 35% வரை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக ஜியோஜித் தெரிவித்திருக்கிறது. கோட்டக் மஹிந்திரா பேங்க் பங்கு விலை 12% வரை அதிகரிக்கும் என்றும், இதன் இலக்கு விலையை ரூ.2,353-ஆகவும் ஜியோஜித் குறிப்பிட்டுள்ளது.

அதே போல இண்டஸ்இண்ட் பேங்க் பங்கு விலை 26% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.1,352) என்றும், ஆக்ஸிஸ் பேங்க் பங்கு விலை 19% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.889) என்றும், ஹெச்.டி.எஃப்.சி பங்கு விலை 14% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.3,355) என்றும், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை 17% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.374) என்றும், யு.பி.எல் நிறுவனத்தின் பங்கு விலை 17% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.875) என்றும், கெயில் இந்தியா நிறுவனத்தின் பங்கு விலை 38% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.208) என்றும் மற்றும் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் பங்கு விலை 13% வரை அதிகரிக்கும் (இலக்கு விலை ரூ.5,437) என்றும் தெரிவித்துள்ளது.”

டார்சன்ஸ் புராடெக்ட்ஸ் ஐ.பி.ஓ வெளியிடுவது பற்றி...

“முன்னணி லைஃப் சயின்ஸ் நிறுவனமான டார்சன்ஸ் புராடெக்ட்ஸ் நவம்பர் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடும் பங்குகளின் விலைபட்டை ரூ.635 - 662 ஆகும். முதலீட்டாளர் களிடமிருந்து ரூ.1,024 கோடி திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் புதிய பங்குகளை வெளியிட்டு ரூ.150 கோடியை இந்த நிறுவனம் திரட்டுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் 1.32 கோடி பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிறுவனம் தனது நிறுவனத்தின் புரொமோட்டர்களான சஞ்சீவ் செங்காலுக்கு சொந்தமான 3.9 லட்சம் பங்குகளையும், ரோஷன் செங்காலுக்கு சொந்தமான 3.1 லட்சம் பங்கு களையும், கிளியர் விஷன் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 1.25 கோடி பங்குகளையும் ஓ.எஃப்.எஸ் முறையில் விற்பனை செய்கிறது. மேலும், இந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்காக 60,000 பங்குகள் ஒதுக்கப்பட்டிருக் கின்றன.”

பெட்ரோல் உடன் எத்தனால் 20% சேர்ப்பு அறிவிப்பால் யாருக்கு லாபம்?

“பெட்ரோல் உடன் தற்போது 8.5% வரை கரும்பு ஆலைகளி லிருந்து கழிவாகக் கிடைக்கும் எத்தனால் 8.5% சேர்க்கப்பட்டு வருகிறது. இதை 2025-ம் ஆண்டுக்குள் படிப்படியாக 20%-ஆக அதிகரித்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. மேலும், இப்படி கலக்கப்படும் எத்தனால் விலையை லிட்டருக்கு 2021-22-ம் ஆண்டுக்கு ரூ.1.47 அதிகரித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. பெட்ரோல் உடன் இப்படி அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதால் மத்திய அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும். இது கரும்பு விவசாயி கள் மற்றும் சர்க்கரை ஆலை களுக்கு லாபகரமாக இருக்கும்.

இந்த அதிகரிப்பு என்பது சர்க்கரை ஆலை நிறுவனங் களுக்கு நீண்ட காலத்தில் லாபம் சேர்க்கும். அந்த வகையில், சர்க்கரைப் பங்குகளை நீண்ட கால நோக்கில் முதலீட்டுக்குக் கவனிக்கலாம்.”

அரபிந்தோ பார்மா நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“உலகளாவிய பங்கு தரகு நிறுவனங்களில் ஒன்றான சி.எல்.எஸ்.ஏ, அரபிந்தோ பார்மா நிறுவனப் பங்கை முதலீட்டாளர் கள் வாங்கலாம் என பரீசிலனை செய்துள்ளது. இதன் காரணமாக, நவம்பர் 10-ம் தேதி வர்த்தகத்தில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 3% வரை அதிகரித்து, ரூ.698-க்கு வர்த்தகமானது. தற்போதைய வர்த்தக விலையிலிருந்து 19% வரை விலை உயர வாய்ப்பிருப்பதாகவும் சி.எல்.எஸ்.ஏ தெரிவித்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.830-ஆக நிர்ணயித்துள்ளது. அதே நேரத்தில் கோல்டுமேன் சாக்ஸ் தரகு நிறுவனம் இந்த நிறுவனத்தின் இலக்கு விலையை ரூ.930-லிருந்து ரூ.860-ஆக குறைத்துள்ளது.”

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை குறைய என்ன காரணம்?

“இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டிருக் கிறது. அதில் நிறுவனத்தின் நிகர லாபம் 69.2% குறைந்து, ரூ.21.97 கோடியாக இருப்பதை இந்த நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதன் காரணமாகப் பங்கு விலை வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. நவம்பர் 10-ல் பங்கு வர்த்தகத்தில் 6% விலை வீழ்ச்சியைச் சந்தித்து ரூ.209.10-க்கு வர்த்தகமானது.”

எஸ்.ஐ.பி முறையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே?

“கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் எஸ்.ஐ.பி முறையில் ரூ.10,518 கோடி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது. இதற்கு முந்தைய செப்டம்பர் மாதத்தில் ரூ.10,351 கோடி நிதி ஒரே மாதத்தில் முதலீடு செய்யப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது. எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகளின் எண்ணிக்கையும் 4.48 கோடியிலிருந்து 4.64 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.5214 கோடியை முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள். செப்டம்பர் மாதத்தில் ரூ.8,677 கோடியை முதலீடு செய்திருந்தனர். ஹைபிரிட் ஃபண்டில் 10,437 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். இது செப்டம்பர் மாதத்தில் ரூ.3,587 கோடியாக இருந்தது. முதலீட்டாளர்கள் அதிக அளவில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து வருவதால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பு 37.33 டிரில்லியன் ரூபாயிலிருந்து ரூ.36.73 டிரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.

மற்ற ஃபண்ட் வகைகளைவிட பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்ட் ரூ.11,219 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. இதில் என்.ஜே பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் மட்டும் முதலீட்டாளர்கள் ரூ.5,216 கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அதே போல கடன் மியூச்சுவல் ஃபண்ட் பிரிவில் ரூ.12,984 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் இந்த ஃபண்ட் வகையில் இருந்து ரூ.63,910 கோடியை முதலீட்டாளர்கள் வெளியில் எடுத்திருந்தார்கள்.”

நைகா நிறுவனத்தின் ஃபல்குனி நாயர் சொத்து மதிப்பு அதிகரித்திருப்பது குறித்து...

“அழகு, ஆரோக்கியம், ஃபேஷன் சம்பந்தபட்ட பொருள்களை, ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்துவரும் ‘நைகா’ நிறுவனத்தின் பங்குகள் விலை அதிகரித்ததை அடுத்து, அதன் நிறுவனரான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு 48,405.50 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நைகா பிராண்டின் தாய் நிறுவனமான ‘எஃப்.எஸ்.என். இ காமர்ஸ் வெஞ்சர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்து, அதன் பங்கு புதன்கிழமை பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டது. ஐ.பி.ஓ விலை ரூ.1,125-ஆக இருந்த நிலையில், புதன் கிழமை பங்கு பட்டியலானபோது வெளியீட்டு விலையை விட 79% அதிக பிரீமியம் விலையில் பட்டியலிடப்பட்டது. அதாவது, ரூ.2,001-க்கு பட்டியலிடப்பட்டது. வர்த்தகம் முடியும்போது 89%-க்கு மேல் விலை அதிகரித்து, ரூ.2,207-க்கு வர்த்தகமானது.

இதன் காரணமாக, பாதிக்கும் மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் இந்த நிறுவனத்தின் நிறுவனரான ஃபல்குனி நாயரின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் குறியீட்டின்படி, ஃபல்குனி நாயர், இந்தியாவில் சுயமாக முன்னுக்கு வந்த பணக்கார பெண்களில் முதலிடத்தைப் பெற்றிருக்கிறார். பங்கு விலை புதன்கிழமை அதிகரித்ததை அடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1.03 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.”

பார்ம் ஈஸி நிறுவனம் ஐ.பி.ஓ வெளியிடுவது பற்றி...

“ஹெல்த்டெக் யுனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமான பார்ம் ஈஸி ஐ.பி.ஓ மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.6,250 கோடி நிதியைத் திரட்ட திட்டமிட்டிருக்கிறது. இதற்கு அனுமதி கேட்டு டி.ஆர்.ஹெச்.பி ஆவணங்களை செபியிடம் பதிவு செய்திருக்கிறது. இந்த ஐ.பி.ஓ மூலம் புதிய பங்குகளை மட்டுமே வெளியிட இந்த நிறுவனம் திட்டமிடப்பட்டிருப் பதாகத் தெரிகிறது.”

கே.பி.ஐ.டி டெக்னாலஜிஸ் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“2021-2022-ம் நிதி ஆண்டில் வருமானம் மற்றும் லாபம் 18% -20% வரை அதிகரித்திருப் பதாகவும், எபிட்டா மார்ஜின் 17.5%-க்கும் மேலாக அதிகரித் திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்ததை அடுத்து, கடந்த வாரம் புதன்கிழமை அன்று 9% வரை விலை அதிகரித்து, ரூ.409.80-க்கு வர்த்தகமானது. கடந்த ஆறு வர்த்தக தினத்தில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 32% வரை அதிகரித்திருக்கிறது.”“பெட்ரோல் உடன் அதிகமாக எத்தனால் கலக்கப்படுவதால் மத்திய அரசின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும். இது கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலைகளுக்கு லாபகரமாக இருக்கும்!”

பே டிஎம் மெகா ஐ.பி.ஓ வெற்றியடைந்ததா?

இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நிதிச் சேவை நிறுவனமான பே டிஎம், நவம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கியது. இந்தப் புதிய பங்கு வெளியீட்டில், வெளியிடப்படும் பங்கு அளவைவிட 1.89 மடங்கு பங்குகள் வேண்டி முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். இந்தப் புதிய பங்கு வெளியீட்டில் மொத்தம் 4.83 கோடி பங்குகள் வெளியிடுகிறது. ஆனால் 9.14 கோடி பங்குகள் வேண்டி முதலீட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. சிறு முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்கு பிரிவில், 1.66 மடங்கு பங்குகள் வேண்டியும், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்கள் பிரிவில் 24 சதவிகிதமும், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் பிரிவில் 2.79 மடங்குகள் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. 2010-ம் ஆண்டு ‘கோல் இந்தியா’ நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ரூ.15,000 கோடி திரட்டியது. இதுவரை இந்தியாவில் அதிக தொகை திரட்டப்பட்ட ஐ.பி.ஓ இதுதான். தற்போது பே டிஎம் சுமார் ரூ.18,300 கோடி நிதி திரட்டும் நோக்கில் ஐ.பி.ஓ வெளியிட்டதால், இது இந்தியாவின் மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாகப் பார்க்கப்படுகிறது.

சிவராமகிருஷ்ணன்
சிவராமகிருஷ்ணன்

சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!

நாணயம் விகடன், ‘சென்செக்ஸ் 60000-லிருந்து 120000 வரையான பயணம்... முதலீட்டுக்கான வாய்ப்புகள்..!’ என்கிற தலைப்பில் கட்டண வகுப்பை நடத்துகிறது. 2021, நவம்பர் 20, சனிக்கிழமை காலை 10.30 - 12.00 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் சிவராமகிருஷ்ணன் (நிறுவனர், www.sinceresyndication.com) இந்த நிகழ்வில் பேசுகிறார். கட்டணம் ரூ.300. பதிவு செய்ய https://bit.ly/NV-Sensex60k-120k