
ஷேர்லக்
வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு ஷேர்லக்கிடமிருந்து வீடியோகால்... “நேரில் வர முடியாத சூழல். வீடியோ காலில் பேசிவிடுவோம். அடுத்த 20 நிமிடத்தில் இன்னொரு மீட்டிங் இருக்கு” என்றார். நாம் தயாராக குறித்து வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.
இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துக்குக் காரணமான ஐந்து பங்குகள் பற்றிச் சொல்லுங்களேன்..!
“இந்தியப் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொட்டிருக் கிறது. சென்செக்ஸ் இதுவரைக்கும் இல்லாத உச்சமாக வியாழன் அன்று 63050 புள்ளிகளைக் கடந்திருக்கிறது. நிஃப்டி புள்ளிகள் 18830-யைக் கடந்திருக்கிறது. ரிலையன்ஸ் மற்றும் டி.சி.எஸ் உள்ளிட்ட ஐந்து பங்குகள் கடந்த இரண்டு மாதங்களில் நிஃப்டி 50 இண்டெக்ஸின் சந்தை மூலதனத்தில் 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரித்துள்ளன. அதாவது, ரிலையன்ஸ், டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி பேங்க், இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஆகிய முதல் ஐந்து பங்குகளின் சந்தை மூலதனம் ரூ.7.05 லட்சம் கோடி யாக அதிகரித்தது. இதில் ரிலையன்ஸ் மட்டும் ஏறக்குறைய 20% அதிகரிப்புக்கு பங்களித்துள்ளது.
கடந்த நவம்பரில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் தலா 12% ஏற்றம் கண்டுள்ளன. கடந்த இரு மாதங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தையில் அதிக அளவில் முதலீடு செய்தது, கச்சா எண்ணெய் விலை போக்கு சந்தைக்கு சாதகமாக இருந்தது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்களின் சந்தை சென்டிமென்ட் நன்றாகவே இருந்தது.
பணவீக்கம் குறைவதால், பொருளாதார வளர்ச்சி குறையும். இந்த நிலையில், உலக அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய பெஞ்ச்மார்க் குறியீடுகளின் லாபம் தொடரும் என்பது நிபுணர்களின் கருத்து. அதே போல, வெளிநாட்டு மற்றும் உள்ளூர் தரகு நிறுவனங்கள், சர்வதேச நாணய நிதியம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் எஸ் அண்டு பி குளோபல், மூடிஸ் மற்றும் ஃபிட்ச் உள்ளிட்ட மதிப்பீட்டு நிறுவனங்களால் ஜி.டி.பி குறைக்கப் பட்டாலும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் ஏற்றம் அதிகரிக்கவே செய்யும் எனக் கருதுகின்றன’’.

இந்தியப் பங்குச் சந்தை உச்சத்தைத் தொட்டிருப்பது தொடருமா?
‘‘பங்குச் சந்தையின் ஏற்றம் ஒருபக்கம் மகிழ்ச்சியைத் தந்தாலும் இன்னொரு பக்கம் எச்சரிக்கை உணர்வையும் தருகிறது. அதாவது, பங்குச் சந்தையின் பேரியல் (Macro)காரணிகள் நன்றாக இருந்தாலும், டெக்னிக்கல் அம்சங்கள் கலவையாகவே இருக்கின்றன. நிஃப்டி தனது சப்போர்ட் நிலையான 18000 புள்ளிகளில் நிலையாக இருந்தால், பங்குச் சந்தையின் போக்கு அடுத்துவரும் சில மாதங்களில் நன்றாக இருக்கும் என்கிறார்கள் என் மும்பை நண்பர்கள்.’’
இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் குறித்து ஆர்.பி.ஐ என்ன சொல்லி இருக்கிறது?
“நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) வளர்ச்சி விகிதமானது 6.3% இருப்பதாகவும் இது எதிர் பார்த்த ஒன்றுதான் என்றும் ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் 8.4 சதவிகித மாக இருந்தது. அதாவது, கடந்த ஜூலை - செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.38.17 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலாண்டில் இது ரூ.35.89 லட்சம் கோடியாக இருந்தது.
செப்டம்பர் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்ட ஆர்.பி.ஐ நிதிக்கொள்கை அறிவிப்பில், 2022-23-ம் ஆண்டுக்கான உண்மையான ஜி.டி.பி வளர்ச்சி 7 சத விகிதமாகவும், ஜூலை - செப்டம்பர் 6.3 சதவிகிதமாகவும், அக்டோபர் - டிசம்பரில் 4.6 சதவிகிதமாகவும், ஜனவரி-மார்ச் 4.6 சதவிகிதமாகவும் இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.’’
அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதம் உயர்த்துவதை தொடரப்போவதில்லையாமே... அப்படியா?
‘‘அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் பேசியதற்குப் பிறகு, சந்தை மீதான நம்பிக்கை முதலீட்டாளர்களுக்கு அதிகரித்துள்ளது. அதாவது, அவர் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வருகிற டிசம்பர் மாதத்திற்குப் பிறகு, வட்டி விகித உயர்வுகளின் வேகத்தைக் குறைக்கும் எனச் சொல்லி இருக்கிறார். இதனால் நடப்பு மாதத்தில் வட்டி உயர்வு இருக்கும் என்றாலும், அது அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக, அமெரிக்க சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் உயர்வைப் பதிவு செய்துள்ளது. ஆசிய சந்தைகளும் உயர்ந்தன. நாஸ்டாக் 4.58%, டவ் 2.18% ஏற்றத்தைப் பதிவு செய் துள்ளன. ஃபேஸ்புக் மெட்டா பிளாட்ஃபார்ம் பங்கு விலை 7 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்தது. கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பங்கு விலை முறையே 6% மற்றும் 5% ஏற்றத் தையும், நெட்ஃப்ளிக்ஸ் இங்க் நிறுவனத்தின் பங்கு விலை 8.75%, ஆல்பபெட் 6.09% விலை ஏற்றத்தை யும் சந்தித்துள்ளன.’’
அலிபாபா நிறுவனம் ஸொமேட்டோ பங்குகளை விற்பனை செய்வது குறித்து...
“சீனாவின் மிகப் பெரிய இ- காமர்ஸ் நிறுவனமான அலிபாபா குரூப் ஹோல்டிங் லிமிடெட், இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை தளமான ஸொமேட்டோ நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை ஒரு பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டிருந் தது. திட்டமிட்டதைப் போலவே, கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் பங்கு ஒன்றுக்கு ரூ.64 என்கிற விலையில் 27.36 கோடி பங்குகள் கைமாறி யிருக்கின்றன.
இந்தப் பிளாக் டீல் வாயிலாக அலிபாபா சுமார் 3% அளவிலான ஸொமேட்டோ பங்குகளை விற் பனை செய்துள்ளது. செப்டம்பர் 30 நிலவரப்படி, சீனாவின் அலிபாபா குழுமம் ஸொமேட்டோ நிறுவனத்தில் சுமார் 12.98% பங்குளை வைத்திருந்தது. தற்போது 3% பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் மொத்த பங்கு இருப்பு 9.98 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.
சமீபத்திய காலாண்டுகளில் நிறுவனம் நல்ல வருவாய் வளர்ச்சி யைக் கண்டபோதும், இந்த ஆண்டு ஸொமேட்டோ பங்கு விலை 55 சதவிகிதத்துக்கும் மேலாக குறைந் துள்ளது. ஜெஃப்ரிஸ் பங்குத் தரகு நிறுவனம் ஸொமேட்டோ நிறுவனப் பங்கு இலக்கு விலையை ரூ.100-ஆக நிர்ணயம் செய்துள்ளது. மார்கன் ஸ்டான்லி ரூ.80 இலக் குடன் ஓவர் வெயிட்டேஜ் மதிப்பீட்டை வழங்கி இருக்கிறது. ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் இந்தப் பங்குகளை வைத்திருக்கச் சொல்லி ரூ.65 என இலக்கு விலையை நிர்ண யித்திருக்கிறது. ரிஸ்க் எடுத்து மிக மிக நீண்ட காலம் வைத்திருக்க நினைப்பவர்கள் மட்டும் இந்தப் பங்கை வைத்திருக்கலாம்.”
ஜே.கே.லக்சுமி சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?
“கடந்த வாரம் புதன்கிழமை அன்று ஜே.கே.லக்சுமி சிமென்ட் நிறுவனத்தின் பங்கு விலை பி.எஸ்.இ சந்தையில் 3% வரை அதிகரித்து, புதிய உச்சத்தைத் தொட்டு ரூ.706.55-க்கு வர்த்தகமானது. இந்நிறுவனத் தயாரிப்புக் கான தேவை அதிக அளவில் இருப்பதால், கடந்த மூன்று வர்த்தக தினங்களில் இதன் பங்கு விலை 6% வரை அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் பி.எஸ்.இ சென் செக்ஸ் 5% ஏற்றம் கண்டிருக்கும் நிலையில், இந்தப் பங்கு விலை 25% வரை அதிகரித்துள்ளது.”

ஜே.சி ஃப்ளவர்ஸ் ஏ.ஆர்.சி நிறுவனத்தின் பங்குகளை யெஸ் பேங்க் வாங்குகிறதாமே..?
“யெஸ் பேங்க், ஜே.சி ஃப்ளவர்ஸ் ஏ.ஆர்.சி நிறுவனத்தின் 9.9% பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ.11.43 என்கிற விலையில் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 10% கூடுதல் பங்குகளை அடுத்தடுத்து வாங்குவது தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்று யெஸ் பேங்க் தெரிவித்துள்ளது.”
ஹோட்டல் நிறுவனப் பங்குகளுக்கு மவுசு கூடி யிருப்பதாகச் சொல்லப்படுவது உண்மையா?
“கடந்த வாரம் புதன்கிழமை வர்த்தகத்தில் பி.எஸ்.இ சந்தையில் ஹோட்டல் பங்குகளின் தேவை அதிகமாக இருந்தது. தாஜ் ஜி.வி.கே ஹோட்டல்ஸ் அண்டு ரெசார்ட்ஸ், லெமன் ட்ரீ ஹோட்டல்ஸ் மற்றும் ஓரியன்டல் ஹோட் டல்ஸ் பங்கு விலை 7-9% வரை அதிகரித்து வர்த்தகமாகின. இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, இ.ஐ.ஹெச் ஹோட்டல், மஹிந்த்ரா ஹாலிடேஸ் அண்டு ரிசார்ட்ஸ் இந்தியா நிறுவனங்களின் பங்குகள் 2-3% வரை ஏற்றத்தை சந்தித்தன.
திருமண சீஸன், ஜி20 உச்சி மாநாடுக் கூட்டங் கள், வெளிநாட்டு சுற்றுலா செல்வது அதிகரிப்பு போன்ற பல்வேறு காரணங்கள் ஹோட்டல் நிறுவனப் பங்குகளின் விலையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பருவ மழை காரணமாக ஜூலை-செப்டம்பர் காலாண்டு சுற்றுலாத் துறைக்கு பலவீனமாக இருந்தாலும், இத்துறையின் வருவாய் வளர்ச்சி ஏதிர் பார்க்கப்பட்ட 17% வளர்ச்சியை விட 23 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. வரும் சில மாதங்களில் நன்றாக இருக்கும்.”
தர்மாஜ் கார்ப் கார்ட் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வெற்றி அடைந்ததா?
“தர்மாஜ் கார்ப் கார்ட் (Dharmaj Crop Guard) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டுக்கு (ஐ.பி.ஓ) முதலீட்டாளர்கள் அமோக வரவேற்பு வழங்கியிருக் கிறார்கள். வெளியிடப்பட்ட பங்கு அளவைவிட இறுதி நாளில் 35.33 மடங்கு அதிக பங்கு வேண்டி விண்ணப்பிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பங்கு வருகிற 8-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியல் ஆகவிருக் கிறது. சிறு முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு இருப்பதால், சந்தையில் பட்டியலாகும் நாளன்று விலை உயர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கலாம்’’ என்று சொன்ன ஷேர்லக், வீடியோகாலை கட் செய்யும்முன் சொன்னதாவது...
‘‘அடல் பென்ஷன் யோஜனா திட்டம் சாதாரண மனிதர்களுக் கான பென்ஷன் திட்டமாகும். இத்திட்டத்தில் உள்ள சிறப்பம் சங்களைக் குறித்தும், இந்தத் திட்டத்தில் எவ்வளவு பணம் முதலீடு செய்தால், பென்ஷனாக எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து நீர் வெளியிட்டிருக்கும் கால்குலேட்டர் (https://www.vikatan.com/calculators/atal-pension-yojana-calculator) மிக நன்றாக இருப்பதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். தொடரட்டும் உமது பணி’’ என்று சொன்னார்.
