தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

25 ஆண்டுகள் கடந்த ரிடையர்மென்ட், சில்ட்ரன்ஸ் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்

இந்தியாவில் இரு ரிடையர்மென்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 25 ஆண்டுகளைக் கடந்துள்ளன. யு.டி.ஐ ரிடையர்மென்ட் பெனிஃபிட் பிளான் (UTI Retirement Benefit Plan), ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான் (Franklin India Pension Plan) ஆகியவையே அந்த இரு ஃபண்டுகள். அந்த ஃபண்டுகள் தந்துள்ள வருமானம் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா..?

ஆர்.வெங்கடேஷ் 
நிறுவனர், 
www.gururamfinancialservices.com
ஆர்.வெங்கடேஷ்  நிறுவனர்,  www.gururamfinancialservices.com

இந்த இரு ஃபண்டுகளும் ஆரம்பம் முதல் ஆண்டுக்கு முறையே சராசரியாக 10.12% மற்றும் 11.48% வருமானம் தந்துள்ளன. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முக்கியமான பிரிவான ஹைபிரிட் ஃபண்டுகள் மூலம் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் எதிர்பார்க்கலாம். அந்த வகையில், இந்த ஃபண்டுகள் கொடுத்திருக்கும் வருமானம் அதை ஒட்டியே இருக்கின்றன. (பார்க்க அட்டவணை 1). இந்த ஃபண்டுகளின் முதலீட்டைத் திரும்ப எடுக்க முடியாத காலம் (Lock-in) குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது ஓய்வுக்கால வயது, இந்த இரண்டில் எது முதலில் வருகிறதோ, அது எடுத்துக் கொள்ளப்படும். இனி இந்த இரு ஃபண்ட் திட்டங்கள் பற்றிப் பார்ப்போம்.

யு.டி.ஐ ரிடையர்மென்ட் பெனிஃபிட் பிளான்...

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ஆகும். அந்த நிறுவனம்தான் ஓய்வுக்கால செலவுகளுக்குத் தேவைப்படும் தொகையைச் சேர்க்கும் விதமாக 28 ஆண்டுகளுக்குமுன் யு.டி.ஐ ரிடையர்மென்ட் பெனிஃபிட் பிளான் என்கிற பெயரில் ஆரம்பித்தது.

இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படுகிறது. அந்த வகையில், இது ஒரு ஹைபிரிட் ஃபண்டாக உள்ளது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.15% வருமானம் கொடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.3,634 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட பல முறை அதிக வருமானம் தந்திருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 12% வருமானம் தந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 6.6% மற்றும் 9.15% வருமானம் தந்துள்ளது.

25 ஆண்டுகள் கடந்த ரிடையர்மென்ட், சில்ட்ரன்ஸ் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

ஃப்ராங்க்ளின் இந்தியா பென்ஷன் பிளான்...

இந்த ஃபண்ட் ஓய்வுக்காலச் செலவுகளுக்குப் பணம் சேர்க்கும் நோக்கத்தோடு 1997-ம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 11.5% வருமானம் தந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.446 கோடி நிர்வகிக்கப்படுகிறது. செலவு விகிதம் 2.28 சதவிகிதமாக உள்ளது. இதன் பெஞ்ச் மார்க்கான நிஃப்டி 500 குறியீட்டைவிட அதிக வருமானத்தைப் பல முறை தந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 7.50% வருமானம் தந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 6.30% மற்றும் 9.40% வருமானம் கொடுத்திருக்கிறது.

25 ஆண்டுகள் கடந்த ரிடையர்மென்ட், சில்ட்ரன்ஸ் ஃபண்டுகள்... முதலீடு செய்யலாமா?

முதலீடு செய்யலாமா?

ரிடையர்மென்ட் என்பது இந்த ஃபண்டுகளில் பெயரில் இருக்கிறது என்பதற்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தேவையில்லை. அதே நேரத்தில், முதலீட்டில் ரிஸ்க்கே எடுக்க வேன்டாம் என நினைப்பவர்கள் இந்த ரிடையர்மென்ட் ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம். இந்த இரு ஃபண்டுகளின் சிறப்பு அம்சம், இவற்றில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை யிலான முதலீட்டுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப் படுகிறது. வருமான வரியை மிச்சப்படுத்தத் திட்ட மிடுபவர்கள் மற்றும் குறைவான ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டுகளில் 40% நிறுவனப் பங்குகளிலும், மீதி கடன் சந்தை சார்ந்த திட்டங்களிலும் முதலீடு செய்யப் படுவதால், வரி விதிப்பு என்கிறபோது கடன் ஃபண்டுகளின் கீழ் வருகிறது. அதனால், ஆதாயத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரியாக பணவீக்க சரிக்கட்டலுக்கு 20% கட்டினால் போதும்.

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட்...

அதே நேரத்தில், முதலீட்டுக் காலம் சுமார் 10 - 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில், முதலீட்டில் ரிஸ்க் எடுக்க முடியும். ஆனால், குறைவான லாக்இன் பீரியட் காலமும் முதலீட்டில் வரிச் சலுகையும் வேண்டும் என்பவர்கள் பங்குச் சந்தை சேமிப்புத் திட்ட மான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டு களின் வருமானம் கடந்த மூன்று மற்றும் ஐந்தாண்டுகளில் முறையே 22%-42% மற்றும் 14%-24 சதவிகிதமாக உள்ளன. மூன்று ஆண்டுகள் மட்டுமே லாக்இன் கொண்ட இந்த ஃபண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80 பிரிவின்கீழ் வரிச் சலுகை இருக்கிறது.

வெள்ளி விழா கண்ட சில்ட்ரன்ஸ் மியூச்சுவல் ஃபண்டுகள்...

ஓய்வுக்காலத்துக்கான இரண்டு ஃபண்ட் திட்டங்கள் 25 ஆண்டைத் தொட்டிருப்பது போல, குழந்தை களுக்கான இரண்டு ஃபண்ட் திட்டங்களும் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட் (UTI Children’s Career Fund), டாடா யங் சிட்டிசன்ஸ் ஃபண்ட் (Tata Young Citizens Fund) ஆகியவையே அந்த இரு திட்டங்கள் ஆகும்.

இந்த இரு ஃபண்டுகளும் ஆரம்பம் முதல் தலா ஆண்டுக்கு சராசரியாக 10.11% மற்றும் 12.53% வருமானம் தந்துள்ளன. (பார்க்க அட்டவணை 2). இந்த ஃபண்டு களின் ‘லாக்இன்’ காலம் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் அல்லது பிள்ளைகள் மேஜர் வயதை அடையும் வயது, இதில் எது முதலில் வருகிறதோ, அது எடுத்துக் கொள்ளப்படும்.

யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட்...

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான யு.டி.ஐ, பிள்ளை களின் எதிர்காலச் செலவுகளுக் குத் தேவைப்படும் தொகையை ஈடுகட்டும் விதமாக 29 ஆண்டு களுக்கு முன் சிறுவர்களுக்கான முதல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை ‘யு.டி.ஐ சில்ட்ரன்ஸ் கேரியர் ஃபண்ட்’ என்கிற பெயரில் ஆரம்பித்தது. இந்த ஃபண்டில் திரட்டப்படும் நிதி, நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங் களில் கலந்து முதலீடு செய்யப் படுகிறது. அந்த வகையில் இது ஒரு ஹைபிரிட் ஃபண்ட். ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 10.11% வருமானம் கொடுத்துள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் ரூ. 4,144 கோடி நிர்வகிக்கப்படுகிறது. இந்த ஃபண்ட் அதன் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட பலமுறை அதிக வருமானம் தந்திருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 11% வருமானம் தந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டுகளில் முறையே 6.7% மற்றும் 9.98% வருமானம் தந்திருக்கிறது.

டாடா யங்க் சிட்டிசன்ஸ் ஃபண்ட்...

இந்த ஃபண்ட் பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவுகளைச் சமாளிக்கும் நோக்கத்துடன், 1995-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஃபண்ட் கிட்டத் தட்ட ஃபிளெக்ஸிகேப் போல் முதலீடு செயல்படு கிறது. அதாவது, அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகளில் கலந்து கட்டி முதலீடு செய்யப்படுகிறது. ஆரம்பம் முதல் ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் தந்து வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் ரூ.269 கோடி நிர்வகிக்கப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 17.70% வருமானம் தந்துள்ளது. அதே நேரத்தில் கடந்த 5 மற்றும் 10 ஆண்டு களில் முறையே 9% மற்றும் 10.80% வருமானம் தந்திருக்கிறது.இந்தத் திட்டங்களின் பெயரில் பிள்ளைகள் என்கிற ஒரே காரணத்துக்காக இந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தேவையில்லை. அதே நேரத்தில், பிள்ளைகளின் கல்விச் செலவு, கல்யாணச் செலவுகளில் ரிஸ்க் எடுக்க விரும்ப வில்லை என நினைப்பவர்கள் இந்த ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.

முதலீட்டுக் காலம் சுமார் 10 - 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் நிலையில் இந்த ஃபண்ட் திட்டங்களுக்குப் பதிலாக ஓரளவு அதிக ரிஸ்க் கொண்ட அதே நேரத்தில், இந்த ஃபண்ட் திட்டங்களைவிட ஆண்டுக்கு சராசரியாக 2% - 3% அதிக வருமானம் அளிக்கும் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்டுகள், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள், மல்ட்டி கேப் ஃபண்டுகள், லார்ஜ்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

செபி அமைப்பின் வரையறை..!

ஓய்வுக்காலம் மற்றும் சிறுவர் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும், 2017-ம் ஆண்டுதான் வரையறை செய்யப்பட்டது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையை நெறிப்படுத்தும் செபி அமைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை மறுவரையறை செய்யும்போது தீர்வுகள் அடிப்படையிலான ஃபண்டுகளின்கீழ் ரிடையர்மென்ட் மற்றும் சில்ட்ரன்ஸ் ஃபண்டுகளைக் கொண்டுவந்தது.