
சாதனையாளர்
தமிழக அரசின் நிதித் துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார் எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இதுவரை நிதித் துறைச் செயலாளராக இருந்த கே.சண்முகம், தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டபின், புதிய நிதித் துறை செயலாளராக ஆகியிருக் கிறார் கிருஷ்ணன்.
திருச்சியில் பிறந்தவர்...
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 1967-ம் ஆண்டு திருச்சியில் பிறந்தார். இவரின் தந்தை சரண்யன் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி. ஆந்திராவில் போலீஸ் அதிகாரியாகவும் மத்திய அரசு செயலாளராகவும் பணியாற்றியவர்.
பள்ளிப்படிப்பினை சென்னை பத்ம சேஷாத்ரி பாலபவனில் முடித்த கிருஷ்ணன், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் 1984-87-ம் ஆண்டு வரை பி.ஏ வரலாறு (ஹானர்ஸ்) படித்தார். வரலாறு படிக்கும்போதே பொருளாதாரமும் ஒரு பாடமாக இருந்ததால், அது தொடர்பான அடிப்படைகளைத் தெளிவாகக் கற்றுக்கொண்டார்.

கிருஷ்ணனின் தந்தை ஐ.பி.எஸ் அதிகாரி என்பதால், ஐ.ஏ.எஸ் ஆகவேண்டும் என்கிற ஆர்வம் கிருஷ்ணனிடம் இயல்பாகவே இருந்தது. கல்லூரிப் படிப்பினை முடித்த கையோடு, ஐ.ஏ.எஸ் தேர்வுக்காகப் படிக்கத் தொடங்கியவர், 1989-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஏ.எஸ்-க்கான பயிற்சி பெற்றவருக்கு, முதல் ஆட்சிப்பணியே தமிழகத்தில்தான் கிடைத்தது.
கடலூர் கலெக்டர்...
1991-92-ம் ஆண்டில் கடலூர் மாவட்டத்தில் துணை கலெக்டர் பதவியை வகித்தார். 1992 முதல் 96-ம் ஆண்டு வரை தமிழக அரசின் நிதித் துறையில் துணைச் செயலாளராக இருந்தவர், அந்த ஐந்து ஆண்டுகளில் பட்ஜெட் தயாரிப்பதில் முக்கியமாகப் பங்காற்றினார். 1996-97-ம் ஆண்டுகளில் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், பிற்பாடு 1997 முதல் 2000 வரை விருதுநகர் மாவட்டத்தின் கலெக்ட ராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கையைத் திருப்பிய நிதித் துறை
1992 முதல் 96-ம் ஆண்டு வரை தமிழக அரசின் நிதித் துறை துணைச் செயலாள ராக இருந்ததுதான் அவரது வாழ்க்கையில் திருப்புமுனை யாக அமைந்தது. இந்தப் பதவியை இவர் சிறப்பாகப் பணியாற்றியதன் விளைவு, 2000-ம் ஆண்டுக்குப்பிறகு தொடர்ந்து நிதித் துறை தொடர்பான பதவிகளே இவரைத் தேடிவரத் தொடங்கியது.
சென்னை டு வாஷிங்டன்
2004 முதல் 2007 வரையிலான மூன்று ஆண்டுகளில் மத்திய அரசில் நிதி அமைச்சரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றினார். தமிழக அளவிலும் இந்திய அளவிலும் பணியாற்றியவர், பிற்பாடு சர்வதேச அமைப்பு களிலும் பணியாற்றத் தொடங்கினார். 2007 முதல் 2010 வரையிலான மூன்று ஆண்டுகளில் வாஷிங்டன் டிசி-யில் சர்வதேச நிதி மையத்தில் இந்தியாவுக்கான செயல் இயக்குநரகத்தில் மூத்த ஆலோசகராக இருந்தார்.
இந்தக் காலத்தில்தான் அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை காரணமாகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. லேமென் பிரதர்ஸ் வங்கி உள்பட பல வங்கிகள் திவாலானது. இந்தச் சமயத்தில் அவர் அமெரிக்காவில் இருந்ததால், அப்போது ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பற்றி ஆழமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.
பொருளாதாரத்தில் எப்படியெல்லாம் பிரச்னை வர வாய்ப்பிருக்கிறது, பிரச்னை வராமல் தடுக்க என்ன மாதிரி பொருளாதாரக் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தெல்லாம் விரிவாகப் புரிந்துகொள்ள அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி அவருக்கு மிகவும் உதவியது.
இதன்பிறகு, தாய்நாட்டுக்குத் திரும்பியவர், சர்வதேச நிதிப் பாதுகாப்பு தொடர்பாக ஜி20 நாடுகள் அமைத்த குழுவில் இந்தியாவின் பிரதிநிதியாகப் பணியாற்றினார். அமெரிக்கப் பொருளாதார நெருக்கடியின்போது நேரடியாகக் கற்றுக்கொண்ட விஷயங் களை நடைமுறைப்படுத்தச் சரியானதொரு வாய்ப்பாக இந்தப் பணி கிருஷ்ணனுக்கு அமைந்தது.
மீண்டும் தாய்நாட்டுக்கு...
சர்வதேசப் பணிகளைச் செய்துமுடித்தபின் மீண்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய கிருஷ்ணன், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக அரசுப் பணியிலேயே இருக்கிறார். 2011-ம் ஆண்டு, தொழில் வரித் துறைச் செயலாளராக இருந்தார்.
2011-13-ம் ஆண்டுக் காலத்தில் செலவினத் துறை (Expenditure) செயலாளராகவும் இருந்தார். இது தவிர, திருப்பூர் வளர்ச்சி ஆணையத்தின் சி.இ.ஓ-வாக இருந்துள்ளார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சி வாரியத்தில் சிறப்புப் பணியும் செய்திருக்கிறார். 14-வது நிதி கமிஷனில் முக்கியப் பங்கெடுத்த கிருஷ்ணன், மாநிலத்தின் ஐந்தாவது நிதி கமிஷனின் தலைவராகவும் பணியாற்றி யிருக்கிறார்.
பல மொழி அறிந்தவர்...
இவருக்குத் தமிழ், ஆங்கிலம் தவிர, ஆந்திராவில் வளர்ந்ததால், தெலுங்கிலும் நன்றாகப் பேசுவார். டெல்லியில் பணியாற்றிய காலத்தில் இந்தியையும் கற்றுக்கொண்டார். இது தவிர, மலையாளமும் இவருக்கு அத்துப்படி. இவரின் மாமனார் கீதகிருஷ்ணனும் இந்திய ஆட்சிப் பணியில் இருந்தவர்தான். இவரும் மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணியாற்றியிருக்கிறார்.
நிலையான வளர்ச்சி தேவை...
பொருளாதார வளர்ச்சி என்று வரும்போது வேகமாக வளரவேண்டும் என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஜி.டி.பி வளர்ச்சி என்றால், அது இரட்டை இலக்கத்தில் இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட அதிவேக வளர்ச்சி குறித்து கிருஷ்ணனுக்கு மாற்றுக் கருத்து உண்டு. பொருளாதார வளர்ச்சியானது நிதான மாக இருந்தாலும், எப்போதும் நிலைத்திருக்கும்படி இருக்க வேண்டும் என்று நினைப்பவர் அவர்.
வேகமாக வளரவேண்டும் என்று நினைக்கும்போது, பொருளாதாரத்தில் பல தவறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விடுகின்றன. ரியல் எஸ்டேட் செயற்கையாக வளர்ந்து அதிக மதிப்பினைப் பெற்றுவிடுகிறது. பிற்பாடு விலை இறங்கும்போது அதனால் பலரும் பாதிப்படைகிறார்கள். இந்த மாதிரியான வளர்ச்சிக்குப் பதில் நிலையான, நிதானமான வளர்ச்சியே வேண்டும் என்பது அவரின் வாதம்.
கிரிக்கெட்டும் வாசிப்பும்
உடல் ஆரோக்கியம்மீது கிருஷ்ணனுக்கு எப்போதும் தனிக்கவனம் உண்டு. தினமும் உடற்பயிற்சி செய்வார். உடலை நன்றாக வைத்திருந்தால்தான் நன்கு செயல்பட முடியும் என்பது அவரது அப்பாவிடமிருந்து கற்ற பாடம்.
விளையாட்டுகளிலும் கிருஷ்ணனுக்குத் தனி ஆர்வமுண்டு. பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதே கிரிக்கெட் உள்படப் பல விளையாட்டுகளை விளையாடுவாராம். தற்போதுகூட ஐ.சி.சி வேர்ல்டு கப் போட்டிகளை ஃபாலோ செய்து வருகிறார்.
படிப்பதிலும் மிகுந்த ஆர்வம்கொண்ட கிருஷ்ணன், நாவல்கள், துறை சார்ந்த புத்தகங்கள் என நல்ல புத்தகங்களை தேடி படிக்காமல் விடமாட்டார்.
இவரின் தலைமையில் தமிழக நிதித் துறை நன்றாகச் செயல்படும் என்று எதிர்பார்ப்போம்!