தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சாமானிய மக்களை முதலீட்டாளர்களாக மாற்றப்போகும் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட்!

சுபஶ்ரீ ஶ்ரீராம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுபஶ்ரீ ஶ்ரீராம்

சிறப்புப் பேட்டி

தனிநபர் கடன், வாகனக் கடன், இன்ஷூரன்ஸ் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டுவரும் ஶ்ரீராம் குழுமம், இப்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை சாமானிய மக்களுக்கும் எடுத்துக்கொண்டு செல்லத் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. இதுபற்றி நம்மிடம் விளக்கமாக எடுத்துச் சொன்னார் ஶ்ரீராம் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியின் இயக்குநர் சுபஶ்ரீ ஶ்ரீ ராம்.

‘‘1994-ம் ஆண்டிலேயே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களை நடத்தும் அஸெட் மேனேஜ்மென்ட் கம்பெனியைத் தொடங்கி விட்டோம். ஆனால், பிற்பாடு மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸுக்கு அதிக முக்கியத்துவம் தருவதைக் குறைத்துக்கொண்டோம். ஆனால், ஏ.எம்.சி நிறுவனத்தின் லைசென்ஸை திரும்பப் பெறவில்லை. இதற்கென நாங்கள் கட்டிய முன்பணம் ரூ.50 கோடி அப்படியே செபியிடம் இருந்தது. இந்த நிலையில், 2012-க்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு வேகமாக வளரத் தொடங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை நம்பியிருந்த நம் பங்குச் சந்தை, 2015-க்குப் பிறகு, நம் முதலீட்டாளர்களின் ஆதரவில் நடப்பதாக மாறியது. இதைத் தொடர்ந்து, மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை மீண்டும் தொடங்கும் முடிவை எடுத்தோம்.

சுபஶ்ரீ ஶ்ரீராம்
சுபஶ்ரீ ஶ்ரீராம்

2015-ல் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை மீண்டும் ஆரம்பித்தோம். கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளில் பங்குச் சந்தை சார்ந்த நான்கு திட்டங்களை அறிமுகப்படுத்தி, பங்குச் சந்தை பற்றி நன்கு விஷயம் தெரிந்த முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டைப் பெற்றோம். ஐந்து மாதங்களுக்கு முன்பு நாங்கள் அறிமுகம் செய்த ஒரு ‘ஓவர்நைட் ஃபண்டு’ம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை இனி இன்னும் பெரிய அளவில் கொண்டு செல்லத் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கிறோம்.

ஶ்ரீராம் நிறுவனத்தைப் பொறுத்தவரை, மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் மிகப் பெரிய ஏ.எம்.சி நிறுவனமாகவோ, அதிக அளவில் சொத்தை நிர்வகிக்கும் நிறுவனமாக (AUM) வர வேண்டும் என்று நினைக்கவில்லை. ஶ்ரீராம் குழுமம் மற்ற தொழில்கள் மூலம் நிறையவே சம்பாதிக்கிறது. மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் குறைந்த மார்ஜின் எங்களுக்குக் கிடைத்தாலும், எங்கள் பார்ட்னர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் ஓரளவு நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். எங்களுக்கு ஏற்கெனவே பல்லாயிரம் ஏஜென்டுகள் இருக்கின்றனர். பல நகரங்களில் அலுவலகங்களும் உள்ளன. எனவே, பெரியளவில் செலவு எதுவும் செய்யாமல் எங்களால் அதிக மக்களைச் சென்றடைய முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைப் பொறுத்தவரை, அதிக ரிஸ்க் உள்ள திட்டங்களைத் தந்து, அதிகமான லாபத்தை ஈட்டித் தர வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. பணவீக்கத்தைத் தாண்டி கூடுதலாக வருமானம் தரும் திட்டங்களை மட்டும் முதலீட்டாளர்களுக்குத் தரப் போகிறோம்.

ஆனால், எந்த மாதிரியான மக்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதில்தான் நாங்கள் வித்தியாசப்படுகிறோம். இன்றைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது நன்கு சம்பாதிக்கும் நடுத்தர மற்றும் உயர் வர்க்கத்தினரை நோக்கியே சென்றுகொண்டிருக்கிறது. சமூகத்தில் சாமானிய மக்களை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குக் கொண்டு வர நினைப்பதில்லை. காரணம், எளிய மக்களால் மாதம்தோறும் ரூ.5,000, ரூ.10,000 என்று முதலீடு செய்ய முடியாது. அதிகபட்சம் ரூ.1,000 அல்லது ரூ.2,000தான் எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்ய முடியும். இந்தக் குறைந்த முதலீட்டுத் தொகையால் நிறுவனங்களுக்குப் பெரிய லாபம் எதுவும் கிடைக்காது என்பதால், எளிய மனிதர்களைத் தேடிச் செல்வதில்லை. ஆனால், இதுவரை யாரும் சென்றடையாத தரப்பினரை மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

உதாரணமாக, பெண்கள். தங்கத்தில் முதலீடு செய்ய அவர்கள் அதிகம் விரும்பு கிறார்கள். காரணம், அந்த முதலீடு பற்றி அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். பங்குச் சந்தை முதலீட்டை நாடி அவர்கள் அதிகம் வருவ தில்லை. காரணம், அந்த முதலீட்டைப் பற்றியும், அந்த முதலீட்டில் உள்ள பாசிட்டிவ் அம்சங்கள் பற்றியும், கவனத் தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றியும் தெளி வாக எடுத்துச் சொன்னால், பெண்களும் பங்குச் சந்தை முதலீட்டை நிச்சயம் தேர்வு செய்வார்கள்.

எடுத்த எடுப்பிலேயே பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் அவர்களை இழுத்து விடாமல், முதலில் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வைத்து, பிறகு இ.டி.எஃப் மற்றும் இண்டெக்ஸ் திட்டங்களை அறிமுகம் செய்து, புரிய வைத்து, படிப் படியாக பங்குச் சந்தை முதலீட்டுக்கு அழைத்துச் செல்வதே சரியாக இருக்கும் என்பது எண்ணம்.

அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார ரீதியில் மிகப் பெரிய அளவில் முன்னேற்றம் காணவிருக் கிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சியில் பங்குச் சந்தை யும் மிகப் பெரிய அளவில் வளரும். அந்த வளர்ச்சியில் சாமானிய மக்களையும் பங்கு கொள்ளச் செய்ய வைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கான வேலைகளை வேகமாகத் தொடங்கி விட்டோம்'' என்று உற்சாக மாகப் பேசி முடித்தார் சுபஶ்ரீ ஶ்ரீராம்.

எளிய மனிதர்களைச் சென்றடைய வாழ்த்துகள்.

வித்தியாசமான பார்ட்னர்..!

ஒவ்வொரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் ஏதோ ஒரு வெளிநாட்டு நிறுவனத்தினரை பார்ட்னராக்கிக் கொண்டு மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும். ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் ‘மிஷன்1 இன்வெஸ்ட்மென்ட் எல்.எல்.சி’ என்கிற நிறுவனத்தை பார்ட்னராக ஏற்றுக்கொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆறு முதலீட்டு நிபுணர்கள் இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருக்கின்றனர். வித்தியாசமான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சாதாரண மனிதர்களையும் முதலீட்டாளர்களாக மாற்றுவதுதான் இந்த ‘மிஷன்1’ நிறுவனத்தின் நோக்கமாக இருப்பதால், இந்த நிறுவனத்தின் ஆலோசனைகள் ஶ்ரீராம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!