
சூப்பர் இன்வெஸ்டார் - முதலீட்டாளர்களின் அனுபவம்
மாதச் சம்பளக்காரர்கள்தான் முதலீடு செய்ய வேண்டும். பிசினஸ் செய் பவர்கள் எதிர்காலத் தேவைக்கு முதலீடு செய்வதில்லை. ஆனால், இன்றைக்கு நான் என் பிசினஸைத் தெம்பாகச் செய்யக் காரணம், நான் செய்துள்ள முதலீடுதான்’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த செந்தில்குமார். ஒரு பக்கம் பிசினஸ், இன்னொரு பக்கம் முதலீடு எனக் கலக்கிவரும் அவர் எப்படி சூப்பர் இன்வெஸ்ட்டராக மாறினார் என்பதை நம்மிடம் சொன்னார்.
சொந்தத் தொழில் தொடங்க ஆசை
‘‘நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் கோவையில்தான். என் அப்பா, நெடுஞ்சாலைத் துறை இன்ஜினீயராக இருந்தார். என்னையும், என் தம்பியையும் இன்ஜினீயரிங் படிக்க வைத்தார். நான் பெங்களூருவில் உள்ள எம்.எஸ்.ராமய்யா இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் படித்தேன். பிறகு, கோவையில் உள்ள பி.எஸ்.ஜி-யில் உள்ள இன்டஸ்ட்டிரியல் இன்ஸ்ட்டிடியூட்டில் இரண்டு ஆண்டு வேலை பார்த்தேன். என் குடும்பத்தில் எல்லோருமே அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில்தான் வேலை பார்த்தார்கள். சொந்தமாக ஏன் தொழில் செய்யக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு வந்ததால், வேலையை விட்டுவிட்டு, 1993-ல் என்னுடைய 26-வது வயதில் சொந்தத் தொழில் தொடங்கினேன்.

எனக்கு 2004-ல் திருமணம் ஆனது. என் மனைவி அகன்யா எம்.பி.ஏ படித்தவர். சாய் பாபா காலனியில் உள்ள ஜி.கே.எம் மேனேஜ் மென்ட் சர்வீஸஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அவர் பி.காம் படித்திருந்ததால், முதலீடு பற்றி ஓரளவுக்குத் தெரிந்திருந்தது. தவிர, அவரின் அப்பாவும் சிறுமுதலீட்டாளர்தான். ஆனால், எனக்கு முதலீடு பற்றி அப்போது ஒன்றும் தெரியாது.
ஆரம்பத்தில் ஐ.பி.ஓ...
2004-05 வாக்கில் ஃபண்ட் நிறுவனங்கள் புதிய ஃபண்டுகளை வெளியிடும்போது (NFO) கோவையில் உள்ள இன்டக்ரேட்டட் நிறுவனத்தில் இருந்து வந்து அதில் முதலீடு செய்யும்படி கேட்பார்கள். அவர்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல் வேண்டாம் என்று சொல்லிவிடுவேன். அவர்கள் என்னைத் தொடர்ந்து அணுகியதன் காரணமாக, முதலில் ஃப்ராங்க்ளின் நிறுவனம் வெளியிட்ட ஒரு என்.எஃப்.ஓ.வி-யில் ரூ.5,000 முதலீடு செய்தேன். பிறகு, யு.டி.ஐ, எல்&டி ஃபண்ட் நிறுவனங்கள் வெளியிட்ட என்.எஃப்.ஓ-களில் முதலீடு செய்தேன். கையில் பணம் இருந்து கேட்டுவந்தால், முதலீடு செய்வது, இல்லாவிட்டால் சும்மா இருப்பது என்கிற நிலை 2013 வரை தொடர்ந்தது.
அப்போது, வங்கி எஃப்.டி-க்கு 10 சதவிகிதத்துக்குமேல் வட்டி கிடைத்தது. ஆனால், நான் ஃபண்டில் செய்திருந்த முதலீடு வங்கி எஃப்.டி-யைவிட அதிகமான லாபம் தந்ததைப் பார்த்து, அந்த முதலீட்டைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நானும் என் மனைவியும் முடிவெடுத்தோம்.
சரிசெய்து தந்த கோவை கண்ணன்
அந்தச் சமயத்தில்தான், நான் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கோவை கண்ணனை சந்தித்தேன். அதுவரை எந்த ஒழுங்கும் இல்லாமல் நான் செய்து வந்த முதலீட்டை அவர் ஒழுங்குபடுத்தினார். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றி சரியாக எடுத்துச் சொல்லி, புரிய வைத்தார். எஸ்.ஐ.பி முறையில் இருக்கும் பல்வேறு சிறப்புகளை எடுத்துச் சொல்லி, அதன்மூலம் தொடர்ந்து முதலீடு செய்யும்படி சொன்னார். எனக்கு சொந்த வீடு இருந்தாலும், என் மகளின் படிப்புக்கு, திருமணத்துக்கு, என்னுடைய ஓய்வுக் காலத்துக்கு என எங்கள் எதிர்காலத் தேவைக்கு எவ்வளவு பணம் தேவைப்படும், இந்தப் பணத்தை எஸ்.ஐ.பி மூலம் எப்படி சேர்க்கலாம் என்பது பற்றி விளக்கமாக எடுத்துச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக, என்னுடைய போர்ட் ஃபோலியோவை சீரமைத்துத் தந்தார். சரியாகச் செயல்படாத ஃபண்டுகளிலிருந்து வெளியேறி, நன்கு செயல்படும் ஃபண்டுகளில் முதலீடு செய்யச் சொன்னார். அவர் ஆலோசனைப்படி நடக்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே என் முதலீடு வேகமாக வளர்வதை என் கண்ணாலேயே பார்க்க முடிந்தது.
பர்சன்டேஜ்ல புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன்...
பொதுவா, எந்த முதலீடா இருந்தாலும், அதன்மூலம் கிடைக்கிற லாபத்தை மொத்தமாத்தான் கணக்கிட்டுப் பார்க்கிறோம். இதனால, ஒரு முதலீட்டை இன்னொரு முதலீட்டுடன் நாம் ஒப்பிட்டு, வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. ஆனால், அதையே பர்சன்ட்டேஜ் மூலம் பார்க்கத் தொடங்கினால், ஒரு முதலீட்டை இன்னொரு முதலீட்டுடன் ஒப்பிட்டு, வருமானம் எந்த அளவுக்கு வேறுபடுகிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள முடியும். நான் இப்படிப் பார்க்கத் தொடங்கிய பிறகுதான், மியூச் சுவல் ஃபண்ட் மூலம் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்று சரியாகப் புரிந்துகொண்டு, தொடர்ந்து அதில் முதலீடு செய்யத் தொடங்கினேன்.
பிசினஸ்மேன்கள் அவசியம் முதலீடு செய்ய வேண்டும்
பிசினஸ் செய்பவர்கள் தாங்கள் சம்பாதிக்கும் லாபம் அனைத்தையும் பிசினஸிலேயே முதலீடு செய்கிறார்கள். பிசினஸ் நன்றாக வளர்ந்தால், அதன் மூலம் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக அவர்கள் இப்படிச் செய்கிறார்கள். ஆனால், கொரோனா போன்ற திடீர் பாதிப்பு வந்தால், பிசினஸ் முடங்கி, பெரிய நஷ்டம் வந்து, தினப்படி செலவுகளுக்கே பணம் இல்லாமல் போய்விடும். பிசினஸ் வருமானம் நிலையாக இருக்கும் என்று சொல்ல முடி யாது. எனவே, பிசினஸ் செய் பவர்கள் தங்கள் சம்பாத்தியத்தில் ஒருபகுதியை தங்கள் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அவசியம் முதலீடு செய்ய வேண்டும்’’ என்று சொன்ன செந்தில் குமார் தற்போது பல்வேறு ஃபண்டுகளில் மாதம்தோறும் ரூ.35,000 முதலீடு செய்து வருகிறார். ‘‘என் மகள் சமிக்க்ஷாவின் படிப்பு, திருமணம், எங்கள் ஓய்வுக்காலம் என எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறேன்’’ என மனநிறைவுடன் பேசி முடித்தார்!