டார்கெட் குரோர்பதி @ 40 - 2: இளைஞர்கள் மனதில் வைக்க வேண்டிய நிதித் திட்டமிடலின் அடித்தளம் இதுதான்..!

டார்கெட் குரோர்பதி @ 40 - 2
வேலைக்குச் சேர்ந்தவுடன் இளைஞர்கள் சம்பளப் பணத்தை எப்படித் திட்டமிடல் ஏதும் இல்லாமல் செலவு செய்கிறார்கள் என்பது குறித்தும், சம்பளத்தை எதற்கு எவ்வளவு என எப்படி பிரித்து செலவு செய்ய வேண்டும் என்பது குறித்தும் கடந்த வாரம் பார்த்தோம். எப்படி பண நிர்வாகத்தை பழகிக்கொள்வது என விரிவாகப் பார்ப்போம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். சிறு வயதில் நாம் ஏதாவது விஷயத்தைக் கற்றுக்கொண்டால் அது வாழ்க்கை முழுக்க பயன் தருவதாக இருக்கும். உதாராணத்துக்கு, ஐந்து வயதில் ஒருவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டார் என்றால் அவர் வாழ்நாளில் எப்போதாவது தேவைப் படும்பட்சத்தில் சைக்கிள் ஓட்டுவார். அதாவது, இந்த விஷயமும் செயலும் நம்மில் பதிந்து விட்டதால் அது சாத்தியமாகிறது.
நிதித் திட்டமிடல்...
அதேநேரத்தில், நிதித் திட்டமிடல் (Financial Plan) என்பது நமக்கு பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை; கல்லூரி யில் கற்றுத் தரப்படுவதில்லை. ஏன் வீட்டில் நம் பெற்றோர்கூட சொல்லிக் கொடுப்பதில்லை. இதனால்தான் வேலைக்குச் சேர்ந்து கைநிறைய சம்பளம் வாங்கியதும், அதை எப்படி முறை யாகச் செலவிட வேண்டும் என்பது தெரிவ தில்லை. பெரும் தொகை கிடைத்ததும் அதைக் கண்டபடி செலவு செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.
பண நிர்வாகம்...
பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் சிக்கலில் மாட்டிக்கொள்கிறோம். நிறைய பணம் அதாவது, கோடிக்கணக்கில் சம்பாதிக்கத் தெரிந்த பலரால் அதைச் சரியாக நிர்வகிக்கத் தெரியாததால், அந்தப் பணத்தை குறுகிய காலத்திலேயே இழந்து நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள்.
‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ போன்ற பரிசுப் போட்டிகள், லாட்டரி சீட்டு போன்ற வற்றில் பெரும்பணம் பெற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று வருடங்களில் அந்தப் பணத்தை தொலைத்து விடுகிறார்கள்.
இதேபோல் சினிமா நடிகர்-நடிகைகள், கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் போன்றவர்களுக்கும் அளவுக்கு அதிகமாகப் பணம் வருகிறது. ஆனாலும், பணத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாததால் அதைக் குறுகிய காலத்தில் இழந்துவிடும் நிலை காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கு நிதித் திட்டமிடலும் பண நிர்வாகமும் தெரியாதது தான்.
குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.5 கோடி வென்ற பால்காரர் ஒருவர் பணத்தை சரியாக நிர்வாகம் செய்யாததால், சுமார் மூன்றே ஆண்டுகளில் அந்த முழுப் பணத்தையும் இழந்துவிட்டு, பழையபடி பால் பாக்கெட் போட போய்விட்ட கதை நம்மில் பலருக்கும் தெரியும். பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர் களாக நீடிக்க அவர்கள் நிதித் திட்டமிலை சரியாக மேற்கொண்டு வருவதுதான் காரணம்.

அவசரகால நிதி...
இந்த நிதித் திட்டமிடலின் அடிப்படை என்பது அவசர கால நிதியாக இருக்கிறது. ஒரு கட்டடத்தின் வலிமை அதன் அடித்தளத்தில் இருக்கிறது. இதேபோல்தான் ஒரு நிதித் திட்டமிடல் வெற்றி பெறுவது, அவசர கால தொகுப்பு நிதியில் இருக்கிறது. இதை ஒரு தங்க விதிமுறை என்றுகூட குறிப்பிடலாம்.
2020 மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு தொடங்கி ஊரடங்கு, தொழில் முடக்கம் நடந்ததால் பலருக்கும் சம்பளம் குறைந்தது; வேலை பறிபோனது. அப்போது குடும்பச் செலவுகளைச் சமாளிப்பது மிகக் கடினமாக இருந்தது. போதிய அளவுக்கு அவசரகால நிதியைச் சேர்ந்து வைத்திருந்தவர்கள், நிலைமையை சுலபமாகச் சமாளித்து மீண்டு வந்தார்கள்.
அண்மையில் ட்விட்டர், ஃபேஸ்புக், அமேசான், கூகுள் எனப் பல நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும்போது அடுத்த நல்ல வேலை தேடும் வரைக்கும் இந்த அவசரகால நிதிதான் கைகொடுக்கும். குடும்பத்தின் அவசிய தேவைகளை நிறைவேற்ற இந்தத் தொகைதான் உதவியாக இருக்கிறது.
அவசரகால நிதியை எப்படி உருவாக்குவது?
ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடனே அவசரகால நிதியை உருவாக்கிக்கொள்வது அவசியமாகும். சராசரி இந்தியர்களை எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு வீட்டுக் கடன் தவணை என்பது மாதம் சுமாராக ரூ.35,000 இருக்கும். இதே அளவு தொகை மாதத்துக்கு குடும்பச் செலவாக இருக்கும். அதாவது, மாதம் தேவைப்படும் தொகை ரூ.70,000-ஆக இருக்கும். இந்தத் தொகையைப் போல் கிட்டத்தட்ட 6 மடங்கு தொகை அதாவது 4,20,000 ரூபாயை அவசரகால நிதியாகச் சேர்த்து வைக்க வேண்டும். இந்தப் பணத்தை அவசரத் தேவைக்கு உடனடியாக எடுத்துச் செலவு செய்யும் விதமாக வங்கி சேமிப்புக் கணக்கு, குறுகிய கால ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்டில் லோ டூரேஷன் ஃபண்ட், லிக்விட் ஃபண்ட் ஆகியவற்றில் கலந்து முதலீடு செய்து வைத்திருக்க வேண்டும்.
இந்தப் பணத்தை வேறு எந்தத் தேவைக்கும் வெளியே எடுக்கக் கூடாது. இதை அவசரகால நிதியாகவே வைத்திருக்க வேண்டும். மிகவும் நிதி நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில்தான் இந்தப் பணத்தை எடுத்து செலவு செய்ய வேண்டும். வேலைக்கு புதிதாகச் சேர்ந் திருக்கும் இளைஞர்கள் இதுவரைக்கும் அவசரகால நிதியைச் சேர்க்கவில்லை என்றால் உடனடியாகச் சேர்க்கத் தொடங்குங்கள்.
யாருக்கு எவ்வளவு தொகை?
இந்த அவசரகாலத் தொகையை யார் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். பொதுவாக, குடும்பத்தில் வேலை பார்க் கும் நபர்களின் எண்ணிக்கை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, மாத சேமிப்பு, முதலீடு மற்றும் செலவுக்கு ஏற்ப அவசரகால நிதியை உருவாக்க வேண்டும்.
மாதச் சம்பளம் வாங்கு பவரை சார்ந்திருக்கும் நபர் யாரும் இல்லை என்கிற பட்சத்தில் மூன்று மாதத் தொகை இருந்தாலும் போதும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வேலை பார்க்கும் பட்சத்தில், குடும்பத்தில் சார்ந்திருக்கும் நபர் இரண்டு பேருக்கு மேல் இருக்கும் பட்சத்தில் குறைந்தது ஆறு மாத முதலீடுகள் மற்றும் செலவுகளுக்குத் தேவையான தொகையை அவசரகால நிதியாக உருவாக்க வேண்டும்.
இதுவே, குடும்பத்தில் ஒருவர் மட்டும் வேலை பார்க் கும் நிலையில் குடும்பத்தில் சார்ந்திருக்கும் நபர் ஒருவர் என்றால் குறைந்தது நான்கு மாதங்களுக்குத் தேவையான தொகையை உருவாக்க வேண்டும். கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில் குறைந்தது மூன்று மாதத் தொகை இருந்தால் போதும். இதுவே இருவரும் ஒரே துறையில் வேலை பார்க்கும்பட்சத்தில் குறைந் தது 6 மாதத் தொகையை அவசரகால நிதியாக வைத்து இருக்க வேண்டும்.
குடும்பத்தின் 50, 60 வயதுக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கும்பட்சத்தில் அவசர கால நிதி என்பது 8 மாத செலவுத் தொகையாக இருப்பது சரியாக இருக்கும். கொரோனா பாதிப்புக்குப் பிறகு 12 முதல் 18 மாதங் களுக்குத் தேவையான தொகையை அவசர கால நிதியாக வைத்திருப்பது நல்லது என்கிற மனப்பான்மை அனைவருக்கும் வந்துள்ளது. பலர் அந்த அளவு தொகையைச் சேர்த்து வைத்திருப் பதையும் பார்க்க முடிகிறது.

எவ்வளவு தொகையை, எதில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும்?
அவசரகாலச் செலவுகளுக்கு எனச் சேர்த்து வைத்திருக்கும் தொகையை முழுமையாக வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கும்பட்சத்தில் அதற்கு ஆண்டுக்கு சுமார் 3 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கும்.
எனவே, இந்தத் தொகையை முழுமையாக வங்கிச் சேமிப்புக் கணக்கில் வைத்திருப்பதைவிட சிறிது தொகையை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் லிக்விட் ஃபண்டுகளில் பிரித்து போட்டு வைக்கலாம். இவற்றின் மூலம் சுமார் 5 - 6% வருமானம் கிடைக்கக் கூடும். மேலும், மொத்தத் தொகையும் செலவுக்கு ஒரே நேரத்தில் தேவைப்படாது என்பதால் இப்படி பிரித்து, போட்டு வைப்பதால் பிரச்னை ஒன்றும் வர வாய்ப்பில்லை.
பொதுவாக, வங்கி சேமிப்புக் கணக்கில் சுமார் 40 - 50 சதவிகிதத் தொகை, மீதியை ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் போட்டு வைக்கலாம். இந்தப் பணத்தை கணவன், மனைவி இருவரும் எடுத்துச் செலவு செய்யும் விதமாக இணைக் கணக்காக வைத்திருப்பது அவசர காலத்தில் உதவும்.
இந்த அவசரகால நிதியை, வேறு நிதித் தேவைகள் உடனடியாக இல்லாத பட்சத்தில், மாதச் சம்பளத்தைக் கொண்டு மூன்று முதல் ஆறு மாதங்களில் உருவாக்கிக் கொள்ள முடியும். அப்படி இல்லாத பட்சத் தில் ஓரிரு ஆண்டுகளில் சிறிது சிறிதாகச் சேர்த்து உருவாக்கிக் கொள்ள முடியும். அடுத்த இதழில் முதலீட்டை ஆரம் பிக்கும் முன் செய்ய வேண்டிய முக்கியமான இரு பாதுகாப்பு அம்சங்கள் பற்றிப் பார்ப்போம்.
(குரோர்பதி ஆவோம்)