நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

டாக்ஸ் பிளானிங்
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்ஸ் பிளானிங்

ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் புதிய நிதி ஆண்டு தொடங்கிய உடனேயே அந்த ஆண்டுக்கான வரித் திட்டமிடலை நாம் செய்தாக வேண்டும்...

புதிய நிதி ஆண்டு தொடங்கிவிட்டது. சம்பளதாரர்கள் அனைவருக்கும் முடிந்த நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வதுதான் முதலில் ஞாபகத்துக்கு வரும். கூடுதலாக வரி கட்டியவர்கள், வருமான வரித் துறையிடம் கூடுதலாகக் கட்டிய பணத்தைத் திரும்பப் பெறவேண்டும் எனில், வருகிற ஜூலை 31-ம் தேதிக்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கான வேலையை இதுவரை செய்ய வில்லை எனில், உடனடியாக அதில் இறங்குவது நல்லது.

வரித் திட்டமிடல் செய்யத் தொடங்குங்கள்...

அதே சமயம், புதிய நிதி ஆண்டுக்கான வருமான வரித் திட்டமிடலை இந்த நாள் தொடங்கி யோசிக்க ஆரம்பிப்பதும் அவசியம். ஏனெனில், வருமான வரித் திட்டமிடலை நம்மில் பலரும் செய்வதே இல்லை. அடுத்த மார்ச் மாதம்தானே நிதி ஆண்டு முடிகிறது. இப்போதே அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்றே நினைக்கிறார்கள். இது பெரிய தவறு. இதனால் பல ஆயிரங்களை நாம் இழக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.

ஒவ்வொரு ஏப்ரல் மாதமும் புதிய நிதி ஆண்டு தொடங்கிய உடனேயே அந்த ஆண்டுக்கான வரித் திட்டமிடலை நாம் செய்தாக வேண்டும். இந்தத் திட்டமிடல் 100% சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஏனெனில், அடுத்துவரும் 11 மாதங்களில் நமது முதலீடுகளில் சிலசில மாற்றங்கள் வரலாம். நம் சம்பளம் கணிசமாக உயரலாம் அல்லது உயராமல் போகலாம். சில செலவுகளை நாம் திடீரென செய்ய வேண்டியிருக்கலாம். இவற்றின் காரணமாக, நமது வரித் திட்டமிடலில் சில மாற்றங்கள் வரலாம்.

இப்படி வரும் மாற்றங்கள் 20% என்கிற அளவில்தான் இருக்கும். எனவே, இந்த 20% மாற்றங்களுக்கான வாய்ப்பை மட்டும் தந்து விட்டு, மீதமுள்ள 80% முதலீடுகளுக்கும் செலவுகளுக்கும் எவ்வளவு வரி கட்ட வேண்டி இருக்கும் என்பதை இப்போதே கணக்கிட்டு, தோராயமாக எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்பதை இப்போதே முடிவு செய்து, அதன்படி கட்டத் தொடங்கிவிட்டால், கடைசி நான்கு மாதங்களில் நாம் தவறான திட்டங்களில் சேர்ந்து, நம் பணத்தை இழக்க வேண்டிய அவசியம் இருக்காது.

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

2023-24-ம் நிதி ஆண்டு முதல் வருமான வரி தொடர்பாக சில புதிய மாற்றங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய வருமான வரி முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களால் அனைவருக்குமே பல சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. பழைய வருமான வரி முறையில் வருமான வரிக் கணக்கீட்டை திட்டமிடலாமா அல்லது புதிய வருமான வரி முறைக்கு மாறலாமா என்பது போன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றன. இந்த நிலையில், யாருக்கு எந்த வருமான வரி முறை சரியாக இருக்கும், வருமான வரித் திட்டமிடலில் முடிந்த வரை அதிக சலுகைகளையும், அதிக லாபத்தையும் பெறுவது எப்படி என்பதையும் விளக்க மாகத் தெரிந்துகொண்டால், வருமான வரித் திட்டமிட பயனுள்ளதாக இருக்கும்.எனவே, புதிய நிதி ஆண்டில் வருமான வரித் திட்டமிடல் தொடர்பாக ஆடிட்டர் கோபாலகிருஷ்ண ராஜு விடம் கேட்டோம். அவர் கூறியதாவது...

கோபாலகிருஷ்ண ராஜு
கோபாலகிருஷ்ண ராஜு

பணத்தை மிச்சப்படுத்தும் வழி...

‘‘எப்போதுமே நிதி ஆண்டு தொடங்கும்போதே நம்முடைய வரி சேமிப்பு தொடர்பான முதலீடுகள், சேமிப்புகளைத் திட்டமிட வேண்டும். அதுவும் சமீபத்திய பட்ஜெட்டில் வருமான வரிக் கணக்கீடு முறையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

இதனால், பழைய வரி நடைமுறை சரியானதா அல்லது புதிய வரி நடைமுறை சரியானதா என்பதைப் புரிந்துகொண்டு தங்களுடைய வரிக் கணக்கீட்டு முறைகளை மேற்கொண்டால், கடைசி நேரப் பரபரப்பைத் தவிர்ப் பதுடன், சிலபல ஆயிரம் ரூபாய் பணத்தை நிச்சயம் மிச்சப்படுத்தலாம்.

புதிய வருமான வரிக் கணக்கீட்டு முறை ஏற்கெனவே கடந்த இரண்டு நிதி ஆண்டு களாக இருந்தாலும் இந்த நிதி ஆண்டிலிருந்து புதிய வருமான வரி நடைமுறை பொது நடைமுறையாக (Default) எடுத்துக் கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வரி நடைமுறையில் நாம் வரிக் கணக்கீடு செய்யப்போகிறோம் எனில், அதைப் பற்றி வேலை பார்க்கும் நிறுவனத்திடம் நாம்தான் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்காத பட்சத்தில் நாம் புதிய வருமான வரிமுறையைத் தேர்வு செய்திருப்பதாக நாம் வேலை பார்க்கும் நிறுவனம் முடிவு செய்து, அந்த நடைமுறையின்படியே வரிக் கணக்கீடுகளை மேற்கொள்ள ஆரம்பித்துவிடும் என்பதை வரிதாரர்கள் மறக்கக் கூடாது’’ என்றவர், புதிய வருமான வரி முறைக்கும், பழைய வருமான வரி முறைக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் பற்றியும் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

வருமான வரிக் கணக்கீடு: புதிய முறை Vs பழைய முறை...

“பழைய வருமான வரிக் கணக்கீட்டு நடைமுறையில் 80C, 80D, 80CDD எனப் பல பிரிவுகளில் வரி விலக்கு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், புதிய வரி நடைமுறையில் நிரந்தரக் கழிவு உட்பட சில சலுகைகள் மட்டுமே இருக்கின்றன. வீட்டு வாடகைக்கான கழிவு (HRA), தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (PPF), காப்பீட்டு பிரீமியம் போன்ற சேமிப்பு, முதலீடுகள் தொடர்பான கழிவுகள், வீட்டுக் கடன் வட்டிக் கழிவு போன்ற எதுவுமே புதிய வருமான வரி நடைமுறையில் இல்லை. ஆனால், புதிய வருமான வரி நடைமுறையில் வரி வரம்புகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வரி வரம்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன. புதிய வருமான வரிக் கணக்கீட்டு முறைக்கு மக்கள் அனைவரையும் கொண்டுவரும் முயற்சியாக இது இருக்கிறது.

இதுவரை எந்தவிதமான வரி சேமிப்பு முதலீடுகள், சேமிப்புகள் எதுவும் இல்லாதவர்கள் குறிப்பாக, வீட்டுக் கடன் இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு புதிய வரி நடைமுறைக்குச் சென்றுவிடலாம். அதே சமயம், வரி சேமிப்பு முதலீடுகள், வீட்டுக் கடன் ஆகியவை இருப்பவர்கள் புதிய வருமான வரி நடைமுறையைத் தேர்ந்தெடுத்தால் வரி விலக்குச் சலுகைகளை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, தற்போது புதிய முறை மற்றும் பழைய முறை இரண்டுமே நடைமுறையில் இருப்பதால், இவற்றில் யாருக்கு எது சரியாக இருக்கும் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரின் வருமானம், அவர்களுடைய முதலீடுகள், சேமிப்புகள் ஆகிய வற்றைப் பொறுத்தே எந்த வருமான வரிக் கணக்கீட்டு முறை யாருக்குப் பொருந்தும் என்பதைச் சொல்ல முடியும். இதற்கு, ஒவ்வொருவரும் தங்களுடைய வருமான வரி சார்ந்து அடிப்படையான விஷயங்களைப் புரிந்துகொண் டிருப்பது அவசியம்.

புதிய வரி நடைமுறையில் 80C, 80D, வீட்டு வாடகைக்கான கழிவு போன்ற வருமான வரிச் சலுகைகள் எதுவும் இல்லை. இந்தப் பிரிவுகளின்கீழ் சலுகை களை அனுபவிக்க விரும்பினால், பழைய வரி நடைமுறையைத் தேர்வு செய்வது சரியாகும். அதே சமயம், வரிச் சலுகைகள், விலக்குகளை எல்லாம் தவிர்த்து விட்டுப் பார்த்தால், வருமான வரி வரம்புகள் அடிப்படையில் பழைய வருமான வரி நடை முறையைக் காட்டிலும் புதிய வருமான வரி முறையில் அதிகப் பலனை வரிதாரர்கள் பெற முடியும்.

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

அட்வான்ஸ் டாக்ஸ்...

மேலும், அனைவரும் அட்வான்ஸ் டாக்ஸ் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். மொத்த வருமானத்தில் நிறுவனத் தின் தரப்பிலிருந்து மூலத்தில் வரி பிடித்த பிறகு (TDS) இருக்கும் நிகர வரி ரூ.10,000-க்கு அதிகமாக இருந்தால், நான்கு தவணை களாக மாதச் சம்பளத்திலிருந்து நிறுவனத்தினரே அட்வான்ஸ் டாக்ஸ் பிடித்துவிடுவார்கள். இந்தத் தொகை செலுத்துவதில் தாமதமானால், 243C பிரிவின் கீழ் வட்டி வசூலிக்கப்படும். அட்வான்ஸ் டாக்ஸ் செலுத்து வது தாமதம் செய்யப்படும் ஒவ்வொரு மாதத்துக்கும் 1% வட்டி வசூலிக்கப்படும்” என்றார்.

லலிதா ஜெயபாலன்
லலிதா ஜெயபாலன்

வரிக் கணக்கீடு செய்யுங்கள்...

வருமான வரிக் கணக் கீட்டிலும், அது தொடர்பான முதலீடுகள் மற்றும் சேமிப்பு களிலும் அதிகபட்ச சலுகை மற்றும் லாபத்தை அடைவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து நிதி நிபுணர் லலிதா ஜெயபாலனிடம் கேட்டோம். அவர் சொன்னதாவது...

“முதலில் ஒவ்வொருவரும் தங்களுடைய வருமான ஆதாரங் களையும், முதலீடு, சேமிப்பு, கடன்கள் ஆகியவற்றையும் முழுமையாகப் பட்டியல் போட்டுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, வருமான வரித் துறையின் இணையதளத்தில் வரிக் கணக்கீடு செய்யும் கால்குலேட்டரில் உங்களுடைய தகவல்களைப் பதிவிட்டு, நீங்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பதை மதிப்பிட்டுப் பார்த்து, அதன்பின் எந்த வரி நடைமுறையில் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம் என்பதை முடிவு செய்தால் அதிகமான பலனை அடையலாம்.

வருமான வரிக் கணக்கீட்டு நடைமுறையில் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டியவை, நீங்கள் என்னென்ன வருமான வரிச் சேமிப்பு சலுகைகளை அனுபவிக்கத் தகுதி உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்க வேண்டும். வீட்டு வாடகைக்கான கழிவு சலுகை, வீட்டுக் கடன் வட்டி சலுகை, 80C, 80D ஆகிய பிரிவுகளில் கிடைக்கும் சலுகைகள் அனைத்தையும் அனுபவிக்கத் தகுதியானவர் எனில், எவ்வளவு வருமானம் இருப்பவராக இருந்தாலும் சரி, அவர்கள் பழைய வரி நடை முறையைத் தேர்வு செய்யலாம்.

பழைய வரி நடைமுறையில் கிடைக்கக்கூடிய அனைத்துவிதமான வரிச் சலுகைகளையும் பயன் படுத்தும் அளவுக்கு வருமானமும், சரியான திட்டமிடலும் இருந்தால் ரூ.10 லட்சம் வரை வருமானம் இருந்தாலும் ஒரு ரூபாய்கூட வரி செலுத்தாமல் சேமிக்க முடியும். இப்படித் திட்டமிட்டு செய்யும் சேமிப்புகள், முதலீடுகள் மூலம் கணிசமான செல்வத்தையும், சொத்து களையும் பெருக்கிக்கொள்ள முடியும்.

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

பழைய / புதிய வரிமுறையில் சலுகைகள்...

பழைய வருமான வரிக் கணக்கீட்டு முறையில் எந்தெந்த பிரிவுகளில் என்னென்ன சலுகைகளைப் பெறலாம் என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும். (பார்க்க பெட்டிச் செய்திகளில்)

இதில் வீட்டு வாடகைக்கான கழிவு சலுகை யைப் பொறுத்தவரை, ஒருவர் அவருடைய அடிப்படை ஊதியம், வசிக்கும் நகரம், செலுத்திய வாடகை, ஹெச்.ஆர்.ஏ ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வரிச் சலுகை பெறலாம். ஆனால், வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் பலரும் வீட்டு வாடகைப் பெறுவதற்கு பான் கார்டு எண்ணைத் தரத் தயங்கு கிறார்கள். எனவே, அதிகமான வாடகையைக் கொடுப்பவர்கள் முடிந்தவரை ஓனர்களிடம் ‘பான் கார்டு’ எண்ணை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் வீட்டு வாடகைக்கான கழிவு சலுகையில் அதிகபட்ச பலனைப் பெற முடியும்.

புதிய வரி நடைமுறையைப் பொறுத்தவரை, நிரந்தரக் கழிவு தவிர, மிகச் சில வரிச் சலுகைகள் மட்டுமே உள்ளன. புதிய வரி நடைமுறையில் வீட்டுக் கடன் மூலம் வாங்கிய வீட்டில் வசிக்கும் வரிதாரர் அந்தக் கடனுக்கான வட்டிக்குச் சலுகை பெற முடியாது. அதே போல, எந்த விதமான இன்ஷூரன்ஸ் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இல்லை. வீட்டு வாடகைக்கான கழிவு சலுகையும் இல்லை. ஆனால், புதிய வருமான வரி நடைமுறையில் கழிவுகளுக்குப் பிறகான வரிக்கு உட்பட்ட வருமானம் ரூ.7 லட்சம் வரை இருப்பின் வருமான வரிச் சட்டம் பிரிவு 87A-யின்படி வரி எதுவும் செலுத்த வேண்டி இருக்காது. இது 2023-24-ம் நிதி ஆண்டிலிருந்து பொருந்தும். எனவே வீட்டுக் கடன், வீட்டு வாடகைக்கான கழிவு போன்றவை இல்லாதவர்கள் தாராளமாக புதிய வருமான வரி நடைமுறையைப் பயன்படுத்தி குறைவான வரியைக் கட்டி அதிக பயன்பெறலாம்.

சம்பளதாரர்கள் மாறலாம்...

சம்பளதாரர்கள் பழைய வரி முறை மற்றும் புதிய வரி முறைகளை ஒவ்வோர் ஆண்டும் தங்களுக்கு ஏற்ற முறையைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு பழைய வரி முறையில் வரிக் கணக்குத் தாக்கல் செய்தால், அடுத்த ஆண்டு புதிய வரி முறையில் தாக்கல் செய்யலாம். அதற்கு அடுத்த ஆண்டில் பழைய வரி முறையில் தாக்கல் செய்ய விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், தொழில் முறையில் வருமானம் ஈட்டும் வரிதாரர்கள் ஒரு முறை புதிய வரி நடைமுறைக்கு மாறி விட்டால் மீண்டும் பழைய வரி நடைமுறைக்கு வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டுமே மாற முடியும்.

புதிய வருமான வரி நடை முறையைக் கொண்டுவந்திருப்பதில் கவனிக்க விஷயம் என்ன வெனில், வரிச் சேமிப்புக்காக ஏதோ ஒரு முதலீட்டை, காப்பீட்டுத் திட்டத்தை நீங்கள் தேடிச் செல்ல வேண்டாம். மாறாக, அவரவருக்குத் தேவை யான நிதி இலக்குகளுக்கேற்ப சரியான முதலீடுகளையும், சேமிப்புகளையும் மேற்கொள்ளலாம்.

நிதி ஆண்டு 2023-24... அதிக சலுகை, அதிக லாபம்... ஸ்மார்ட் டாக்ஸ் பிளானிங்..!

நீண்ட கால நோக்கில் முதலீடு செய்ய வேண்டாம்...

மேலும், இன்றுள்ள நிலையில், பழைய வருமான வரி நடைமுறை எவ்வளவு காலம் இருக்கும் என்று தெரியாது. அதை அரசாங்கமானது கூடிய விரைவில் திரும்பப் பெற்று விடவும் வாய்ப்புள்ளது. எனவே, பழைய வரி நடைமுறை யின்கீழ் சலுகைகளைப் பெறும் நோக்கில் நீண்டகால அடிப்படையிலான முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம். அதாவது, அதிக ‘லாக்இன் பீரியட்’ இருக்கும் முதலீட்டுத் திட்டங்களில், காப்பீட்டுத் திட்டங்களில் அதிகமான பணத்தைப் போட வேண்டாம். மாறாக, வரிச் சலுகை அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS) போன்ற குறைவான ‘லாக்இன் பீரியட்’ உள்ளவற்றில் முதலீடு செய்யலாம்.

ஒருவருடைய வருமான ஆதாரம் மற்றும் அதிகபட்ச வரிச் சலுகைகள் ஆகியவற்றின் அடிப்படையில் யார் எந்த வரி நடைமுறையைத் தேர்வு செய்யலாம் என்பதை அட்ட வணையாகத் தந்திருக்கிறோம். அதன்படி வருமான வரித் திட்டமிடலை நீங்கள் மேற்கொள்ளலாம். மேலும், மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படுவதைத் தவிர்க்க அனைவரும் 15H மற்றும் 15G டிக்ளரேஷன் படிவத்தை வேலை பார்க்கும் நிறுவனத்திடம் உரிய காலத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதத்துக்குள் சேமிப்பு, முதலீடு தொடர்பான ஆவணங்களை வேலை பார்க்கும் அலுவலகத்தில் தவறாமல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் வருமான வரிக் கணக்கீடுகளை மேற்கொண்டு நீங்கள் செலுத்த வேண்டிய வரி எவ்வளவு என்பதை மதிப்பீடு செய்துகொடுப்பார்கள்” என்று முடித்தார்.

இந்த நிதி ஆண்டுக்கான வரித் திட்டமிடலை நீங்கள் செய்யத் தயாராகிவிட்டீர்களா?

பழைய வரி முறையில் வழங்கப்படும் வரிச் சலுகைகள்!

 நிரந்தரக் கழிவு: ரூ.50,000

 ஹெச்.ஆர்.ஏ - (அடிப்படை ஊதியம், வசிக்கும் நகரம், செலுத்திய வாடகை, ஹெச்.ஆர்.ஏ சலுகை ஆகியவற்றின் அடிப்படையில்)

 80C - பி.பி.எஃப், இ.பி.எஃப், வி.பி.எஃப், இ.எல்.எஸ்.எஸ், 5 ஆண்டு எஃப்.டி, சுகன்ய சம்ரிதி கணக்கு, தேசிய சேமிப்புப் பத்திரம், கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல் - ரூ.1,50,000 வரை.

 80CCD (1B) - ரூ.50,000 - என்.பி.எஸ் பணியாளரின் பங்களிப்பு.

 80D - ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம். வரிதாரர் - ரூ.25,000,

பெற்றோர் - ரூ.25,000 (60 வயதுக்குள்), ரூ.50,000 (60 வயதுக்கு மேல்).

 24B - வீட்டுக் கடன் வட்டி ரூ.2 லட்சம் வரையில் (வசிக்கும் அல்லது காலியாக இருக்கும் வீட்டுக்கு மட்டும்).

 80DDB - வரிதாரர் மற்றும் வரிதாரரை நம்பியுள்ள குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவு.

 80E - மேல்படிப்பு கடனுக்கான வட்டியில் சலுகை. வரிதாரர் அல்லது வரிதாரர் குடும்ப உறுப்பினர்கள் - இதில் வரம்பு எதுவும் இல்லை.

 80 EEA - வீட்டுக் கடன் கூடுதல் வட்டி - ரூ.1,50,000 வரை.

 80 EEB - மின்சார வாகனக் கடன் வட்டி - ரூ.1,50,000 வரை.

 80G - அரசியல்/அறக்கட்டளை நன்கொடை.

 சொடெக்ஸோ (Sodexo) உள்ளிட்ட உணவுச் சலுகைகள் - ரூ.24,000 வரை.

 புரொஃபஷனல் டாக்ஸ் - ரூ.2,400 வரை.

 LTA மற்றும் இதர அலுவலக சலுகைகள் உள்ளிட்டவை.

புதிய வருமான வரி முறையில் உள்ள சலுகைகள் (2023-24)

நிரந்தரக் கழிவு: ரூ.50,000

பிரிவு 57 IIA - குடும்ப பென்ஷன் வருமானக் கழிவு ரூ.15,000 வரை.

80 CCD (2) என்.பி.எஸ்ஸில் வேலை பார்க்கும் நிறுவனத்தின் பங்களிப்பு.

அலுவலகச் சுற்றுலா, போக்குவரத்து, பணிமாற்றம், தினசரி அலவன்ஸ், கன்வேயன்ஸ் ஆகியவற்றுக்குச் சலுகை.

மாற்றுத் திறனாளிகளின் போக்குவரத்து அலவன்ஸ்.

10 (10C) பிரிவின் படி விருப்ப ஓய்வு பணம்.

10 (10) பிரிவின்படி கிராஜுவிட்டி.

10 (10AA) பிரிவின்படி, லீவ் என்கேஷ்மென்ட்.

கடனில் வீடு வாங்கி வாடகைக்கு விடப்பட்டுள்ள வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை.

புதிய வருமான வரி நடைமுறையில் இல்லாத முக்கியச் சலுகைகள்

ஹெச்.ஆர்.ஏ சலுகை.

வசிக்கும் வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை.

80C பிரிவின்கீழ் வரும் அனைத்துச் சலுகைகளும்.

2022-23-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குத் தாக்கல்..!

பள்ளி, கல்லூரி கல்விக் கட்டணச் சலுகைகள்.ரூ.2.5 லட்சத்துக்குமேல் வருமானம் இருக்கும் அனைவருமே வருமான வரி செலுத்தினாலும், செலுத்தாவிட்டாலும் கட்டாயம் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வரம்பு 60 முதல் 80 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.3 லட்சமாகவும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சமாகவும் இருக்கிறது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு (மதிப்பீட்டு ஆண்டு 2023-24) தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2023 ஆகும். சம்பளதாரர்கள் தங்களுடைய வருமான வரிக் கணக்கீட்டை எந்த வரி நடைமுறையில் செய்திருந்தாலும், வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது வேறு வருமான வரி நடைமுறைக்கு மாற விரும்பினால் மாறலாம். அதற்கேற்ப மாறும் வரி நடைமுறைக்கேற்ப கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கலாம், அல்லது வரி ரீஃபண்ட் பெறவும் வாய்ப்பிருக்கிறது. வரிக் கணக்குத் தாக்கல் செய்யும்போது இரு வரி நடைமுறைகளிலும் உள்ள வேறுபாடுகளைப் பார்ப்பது அவசியம். 2023-24 நிதி ஆண்டுக்கான வரிக் கணக்கீட்டில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் 2022-23 நிதி ஆண்டு வரிக் கணக்குக்குப் பொருந்தாது என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.