நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

வரி சேமிப்பு, நிலையான வருமானம் தரும் சூப்பர் திட்டங்கள்..!

வரி சேமிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
வரி சேமிப்பு

ரிஸ்க்கே எடுக்க விரும்பதாவர்களுக்கு இந்த வரி சேமிப்பு முதலீடாக இருக்கும்..!

வருமான வரி கட்டுவதிலிருந்து தப்பிக்க நினைப்பவர்கள் ரிஸ்க் இல்லாத, நிலையான வருமானத்தைத் தரும் திட்டங்களில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம். அது போன்ற வரி சேமிப்பு முதலீட்டுத் திட்டங்களைப் பார்ப்போம்.

ஒரு காலத்தில் நிலையான வருமானத் திட்டங்களில் எப்போது முதலீடு செய்தாலும் நிலையான வட்டி வருமானம் கிடைத்துவந்தது. இப்போது மத்திய அரசின் தபால் அலுவலகத் திட்டங்கள்கூட மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால், வருமானத்தில் சிறிது ஏற்ற இறக்கம் இருக்கும். ஆனால், பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது என்பதை நாம் கவனிக்கத் தவறக் கூடாது.

டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

வரி பிரிவு 80C...

வருமான வரி சேமிப்புக்கான முதலீடு என்கிறபோது நம் அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது 80C பிரிவுதான் இந்தப் பிரிவின்கீழ் பணியாளர் பிராவிடன்ட் ஃபண்ட் (Employees’ Provident Fund - EPF), விரும்ப பி.ஃப், பொது மக்களுக்கான பிராவிடன்ட் ஃபண்ட் (Public Provident Fund – PPF), செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana Scheme - SSYS), தேசிய சேமிப்புப் பத்திரம் (National Savings Certificate -NSC), தபால் அலுவலக ஐந்தாண்டு டைம் டெபாசிட் (Time Deposit), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizens’ Saving Scheme - SCSS), ஐந்தாண்டு வங்கி சேமிப்பு ஃபிக்ஸட் டெபாசிட் (Tax-saving Bank Fixed Deposits) ஆகிய முதலீட்டுத் திட்டங்கள் வரும்.

இதில், இ.பி.எஃப், பி.பி.எஃப் மற்றும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கும் வரி எதுவும் இல்லை. இதனால், இவற்றை மிகச் சிறந்த வரி சேமிப்பு திட்டங்கள் எனக் குறிப்பிடலாம்.

பி.பி.எஃப்: (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 7.1%)

வருமான வரியை மிச்சப்படுத்த அனைவரும் முதலீடு செய்யக் கூடிய முக்கியமான திட்டம் இதுவாகும். நிதி ஆண்டில் செய்யப்படும் முதலீட்டுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரையிலான தொகைக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. இந்தத் தொகையை ஒரே நேரத்தில் அல்லது பிரித்து முதலீடு செய்யலாம்.

குறைந்தபட்ச முதலீடு ரூ.500 ஆகும். இந்தத் திட்டத்தில் சேர வயது வரம்பு எதுவும் கிடையாது. பான் மற்றும் ஆதார் இருந்தால்போதும், தபால் அலுவலகம் அல்லது பொதுத்துறை, தனியார் வங்கிகளில் இந்த பி.பி.எஃப் கணக்கை ஆரம்பித்துவிடலாம். வங்கி களில் ஆன்லைன் மூலமும் இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும். இது 15 ஆண்டுக்கால திட்டமாகும்.

நாம் ஏற்கெனவே சொன்னது போல, முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை ஆகிய மூன்றுக்கும் வரி விலக்கு இருக்கிறது. இது மத்திய அரசு திட்டம் என்பதால், மூலதனம் மற்றும் வட்டிக்கு முழுமையான உத்தரவாதம் இருக்கிறது. காலாண்டுக்கு ஒரு முறை வட்டி மாற்றத்துக்கு உள்ளாகும்.

வரி சேமிப்பு
வரி சேமிப்பு

செல்வமகள் சேமிப்புத் திட்டம் (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 7.6%)

பெண் குழந்தையின் உயர்கல்வி மற்றும் கல்யாணச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த வருமான வரி சேமிப்பு திட்டம் இதுவாகும். ஒருவர் அவரின் 10 வயதுக்கு உட்பட்ட இரு பெண் குழந்தைகளுக்கு இந்தத் திட்டத்தில் முதலீட்டை ஆரம்பிக்க முடியும். ஒருவர் நிதி ஆண்டில் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரைக்குமான முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற முடியும். இந்தத் தொகையை மொத்தமாக முதலீடு செய்யலாம் அல்லது பிரித்து முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.250 ஆகும்.

இதில் செய்யப்படும் முதலீடு அதிகபட்சம் 21 ஆண்டுகள் லாக்இன் கொண்டவையாகும். பெண் குழந்தையின் வயதுக்கான ஆதாரம் அவசியம் கொடுக்க வேண்டும். முதலீடு, வட்டி வருமானம், முதிர்வுத் தொகை மூன்றுக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இது மத்திய அரசு திட்டம் என்பதால், மூலதனம் மற்றும் வட்டிக்கு முழுமையான உத்தரவாதம் உள்ளது.

விருப்ப பி.எஃப் (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 8.1%)

சம்பளத்தில் இ.பி.எஃப் பிடிக்கப்படுபவர்கள் கூடுதலாக வரியைச் சேமிக்க மற்றும் ஓய்வுக் காலத்தில் அதிக தொகை பெற பி.எஃப் தொகையை விருப்ப பி.எஃப் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். இந்தத் தொகைக் கும் வரிச் சலுகை இருக்கிறது. நிதி ஆண்டில் இ.பி.எஃப் மற்றும் விருப்ப பி.எஃப் தொகை சேர்ந்து ரூ.1.5 லட்சம் வரைக்கும் 80சி பிரிவின்கீழ் வரிச் சலுகை பெற முடியும். ஒருவர் சம்பளத் தொகையை முழுமையாகக்கூட வி.பி.எஃப்பாகப் பிடிக்க சொல்லலாம்.

இதற்கான வட்டியானது பி.பி.எஃப்பைவிட அதிகம் என்பதால், முடியும்பட்சத்தில், வி.பி.எஃப் முதலீட்டை அதிகரித்துக்கொள்வது லாபகர மாக இருக்கும். நிபந்தனைக்கு உட்பட்டு முதலீடு, வட்டி, முதிர்வுத் தொகைக்கு வரிச் சலுகை இருக் கிறது. தனியார் நிறுவன ஊழியர் களுக்கு நிதி ஆண்டில் ரூ.2.5 லட்சத்தை இ.பி.எஃப், வி.பி.எஃப் முதலீடு அதிகரிக்கும்போது, அந்தக் கூடுதல் முதலீட்டின் மூலம் கிடைக்கும் வட்டிக்கு, அடிப்படை வரி வரம்புக்கேற்ப வரி கட்ட வேண்டும். இது மத்திய அரசின் உத்தரவாதத் திட்டமாகும்.

என்.எஸ்.சி (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 6.8%)

தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில் எவ்வளவு வேண்டு மானாலும் முதலீடு செய்யலாம்.செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின்கீழ் நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இதுவும் மத்திய அரசின் திட்டம்தான். மூன்று மாதத்துக்கு ஒரு முறை வட்டி மாற்றத்துக்கு உள்ளாகும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ரூ.100-ன் மடங்குகளில் முதலீடு செய்யலாம். இது ஐந்தாண்டுகள் லாக்இன் கொண்ட திட்டமாகும்.

இந்த முதலீட்டின்மூலம் கிடைக்கும் வட்டிக்கு வரி உண்டு. அந்த வட்டி மறுமுதலீடு செய்யப் படுகிறது. அந்த மறு முதலீட்டுத் தொகைக்கு 80சி-யில் வரிச் சலுகை இருக்கிறது. முதிர்வின்போது முதலீட்டுத் தொகை மற்றும் அதுவரைக்கும் சேர்ந்திருக்கும் வட்டி சேர்ந்து மொத்தமாகக் கிடைக்கும். அப்போது வட்டிக்கு எந்த வருமான வரி வரம்பில் (பழைய வரி வரம்பில் 5%, 20% மற்றும் 30%) வருகிறாரோ, அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். முதிர்வுக்கு முன் வெளியேற முடியாது. ஆனால், இதன் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்க முடியும்.

தபால் அலுவலக டைம் டெபாசிட் (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 6.7%)

தபால் அலுவலக டைம் டெபாசிட் திட்டங்களில் ஐந்தாண்டு முதிர்வு கொண்டதில் செய்யப்படும் முதலீட்டுக்கு 80சி பிரிவின் கீழ் நிதி ஆண்டில் நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதிக பட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.முதலீடு மற்றும் வட்டி வருமானத்துக்கு முழுக்க பாதுகாப்பு இருப்பதால், ரிஸ்க்கே எடுக்க விரும்பதாவர்களுக்கு வரி சேமிப்பு முதலீடாக இருக்கும். இந்த வட்டி வருமானத்துக்கு வரி இருக்கிறது. இந்த வட்டி வருமானத்தை இதர வருமானமாகக் காட்டி, அடிப்படை வரி வரம்புக்கு வரி கட்ட வேண்டும்.

வரி சேமிப்பு
வரி சேமிப்பு

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (வட்டி வருமானம் ஆண்டுக்கு: 7.40%)

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (Senior Citizens’ Saving Scheme - SCSS) செய்யப்படும் முதலீட்டுக்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிதி ஆண்டில் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வரிச் சலுகை பெற முடியும். விரும்ப ஓய்வு பெறுகிறவர்கள் 58 வயதில் முதலீட்டை ஆரம்பிக்க முடியும். ராணுவத்திலிருந்து ஓய்வு பெறு பவர்கள் 50 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.

இது ஐந்தாண்டுகள் லாக்இன் கொண்ட திட்டமாகும். தேவைப்பட்டால் முதலீட்டை மேலும் மூன்று ஆண்டு களுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். தபால் அலுவலகத் திட்டங்களிலேயே அதிக வருமானம் கிடைக்கும் திட்டம் இதுவாகும். இதில் முதலீடு செய்யும் பணத்தை ஐந்தாண்டு களுக்குமுன் இடையில் பணத்தை எடுக்க முடியாது. அவசரம் எனில் மட்டுமே, அபராதத்துடன் முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ள முடியும்.

இந்தத் திட்டத்தில் தபால் அலுவலகம் மற்றும் வங்கி மூலம் முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். இந்தத் திட்டத்தில் மூலமான வட்டி வருமானத்துக்கு வரி இருக்கிறது. அதே நேரத்தில், ரூ.50,000 வரைக்கும் நிபந்தனைக்கு உட்பட்டு வட்டியில் வரிச் சலுகை இருக்கிறது. இந்தத் திட்டத்தில் நிதி ஆண்டில் ரூ.50,000 மேல் வட்டி வருமானம் வந்தால் டி.டி.எஸ் பிடிக்கப்படும். அடிப்படை வருமான வரம்புக்குள் வரவில்லை எனில், முதலீட்டை ஆரம்பிக்கும்போதே 15G / 15H படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். கணவன், மனைவி இணைந்து கூட்டாக இந்தக் கணக்கை ஆரம்பிக்க முடியும். அப்படிச் செய்யும்போது அதிகபட்சம் ரூ.15 லட்சம் முதலீடு செய்யலாம்.