பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பிரிவு 80C முதல் 80U வரை... தெரிந்த வரிச் சலுகையும் தெரியாத நிபந்தனைகளும்!

வரிச் சலுகை
பிரீமியம் ஸ்டோரி
News
வரிச் சலுகை

வரிச் சலுகை

நடப்பு (2022-23) நிதியாண்டின் பெரும் பகுதி கடந்து சென்றுவிட்டது. மிஞ்சியுள்ள ஐந்து மாதங்களுக்குள் வரிச் சலுகைகளைப் பரிசீலனை செய்து வரிக்கணக்கைத் தயார் செய்வது அவசியத்திலும் அவசியம்.

வரிதாரர்களுக்கு (Assessee) வருமான வரித் துறை அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரை வரிச் சலுகைகளை வழங்கி வருகிறது. யார் யாருக்கு எந்தெந்த சலுகை பொருந்துமோ, அந்தந்த வரிச் சலுகைகளைப் பெற்று வரியைச் சேமிக்கலாம். ஆனால், வரிச் சலுகை பெறு வதற்கான நிபந்தனைகளை அனைவரும் அவசியம் அறிய வேண்டும். அந்த நிபந்தனைகள் பற்றிப் பார்ப்போம்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

வருமான வரிபிரிவு 80C-ன் வரிச் சலுகை

தற்போதைய நிலையில், வரிதாரராக உள்ள சுமார் எட்டு கோடிக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலோருக்கு வரிச் சலுகை தரும் இந்தப் பிரிவில் அதிகபட்ச மாக ரூ.1.5 லட்சம் வரிச் சலுகை தரும் இந்தப் பிரிவில் முதன்மை சலுகையாக நிற்கிறது ஆயுள் காப்பீடு. வரிதாரர், வரிதாரரின் மனைவி / கணவர், பிள்ளைகள் பெயரில் எடுக்கப்படும் பாலிசிக்கு மட்டுமே வரிச் சலுகை. நிபந்தனை என்னவெனில், 31.03.2012-க்கு முன் எடுக்கப்பட்ட பாலிசிக்கு, பாலிசித் தொகையில் அதிகபட்சம் 20 சதவிகிதமும், 01.04.2012-க்குப் பிறகு எடுக்கப்பட்ட பாலிசியின் மொத்தத் தொகையில் 10% மட்டுமே வரிச் சலுகை பெறும். பிரிவு 80DDB-யின் கீழ் சலுகை பெறும் மாற்றுத் திறனாளிகள், பிரிவு 80U-யின் கீழ் சலுகை பெறும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்கு 01.04.2013-க்குப் பிறகு, எடுக்கப்பட்ட பாலிசியில் 15% பாலிசித் தொகை மட்டுமே சலுகை பெறும். பாலிசியை இரண்டு ஆண்டு களுக்குக் குறையாமல் வைத்திருந்தால் மட்டுமே இந்தச் சலுகை.

இதே போல், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மற்றும் அஞ்சலக 5 ஆண்டு டெபாசிட் திட்டங்களில் செலுத்தப்பட்ட தொகையை 5 ஆண்டுகளுக்கு முன்பே திரும்பப் பெற்றிருந்தால், எந்த ஆண்டில் திரும்பப் பெறப்பட்டதோ, அந்த ஆண்டில் சலுகைத் தொகை வருமானமாகக் கருதப்பட்டு வரி விதிக்கப்படும்.

பிரிவு 80CCC மற்றும் 80CC D(1)

எந்த ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திலும், அன்யூட்டி பெறு வதற்காகச் செலுத்தப்படும் ரூ.1.5 லட்சத்துக்கு உட்பட்ட தொகையும் 80CCC பிரிவில் வரிச் சலுகை பெறும். 80CC D(1)-யின் கீழ் புதிய பென்ஷன் திட்டத்துக்கு சம்பளதாரர் செலுத்தும் 10% தொகை, சம்பளதாரர் அல்லாதோர் தனது மொத்த வருமானத்தில் 20 சதவிகிதத்துக்கு உட்பட்டு செலுத்தும் தொகையும் ரூ.1.5 லட்சம் வரை சலுகை பெறும். ஆனால், 80C, 80CCC மற்றும் 80CC D(1) ஆகியவற்றின்கீழ் பெறப்படும் சலுகையின் கூட்டுத் தொகை ரூ.1.5 லட்சத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பிரிவு 80C முதல் 80U வரை... தெரிந்த வரிச் சலுகையும் தெரியாத நிபந்தனைகளும்!

பிரிவு 80CC D(2)

சம்பளதாரர்களுக்கு மட்டுமான இச்சலுகையில் அரசு அல்லது ஊழியர் பணிபுரியும் நிறுவனம், தனது பங்களிப்பாகச் செலுத்தும் தொகைக்கு அதிகபட்சம் ரூ.7.5 லட்சம் வரை வரிச் சலுகை உண்டு. என்றாலும், இப்பிரிவின் கீழ் அரசு மற்றும் ஊழியர் பணிபுரியும் நிறுவனம், ஊழியர்களது கணக்கில் செலுத்தும் தொகையை, ஊழியர்கள் தனது வருமானமாகச் சேர்த்துக்கொண்டு, பிறகுதான் இதே தொகை யைக் கழிக்க வேண்டும். இச்சலுகைக்கான முக்கிய நிபந்தனை இதுதான்.

பிரிவு 80CC D(1B)

மேற்கண்டவை அல்லாத சிறப்புச் சலுகை தருவது இப்பிரிவு. அதாவது, சம்பளதாரர்களும் சம்பளதாரர் அல்லாதவர்களும் 80CC D(1)-ல் செலுத்தும் தொகை ரூ.1.5 லட்சத்தைத் தாண்டும் பட்சத்தில் மேலும் 50,000 ரூபாயை புதிய பென்ஷன் திட்ட சந்தாவாகச் செலுத்தி வரிச் சலுகை பெறலாம்.

இதில் சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டியது என்னவெனில், தனது E.P.F, P.P.F, C.P.F, C.P.S, G.P.F மற்றும் வீட்டுக் கடன் அசல், சுகன்யா சம்ருதிக் கணக்கு, ஆயுள் காப்பீடு போன்றவற்றில் செலுத்தப்பட்ட தொகை ரூ.1.5 லட்சத்தைத் தாண்டி இருக்கும் பட்சத்தில் உபரியான தொகைக்கு இப்பிரிவின் கீழ் சலுகை கிடைக்கும்.

பிரிவு 80D

மருத்துவக் காப்பீடு, நோய்த் தடுப்பு உடல் பரி சோதனை (Preventive Health Check up) முதலானவற்றுக்கு வரிச் சலுகை தரும் இந்தப் பிரிவில் தனிநபர் (Individual) ஒருவர் தனக்கு, தன் மனைவி/கணவர் மற்றும் குழந்தை களுக்கு ரூ.25,000 வரை வரிச் சலுகை பெறலாம். இதை அல்லாமல் தன் பெற்றோருக்கு மருத்துவக் காப்பீடு, உடல் பரிசோதனை இரண்டுக்கும் மேலும், ரூ.25,000 வரை செய்யும் செலவுக்கும் வரிச் சலுகை உண்டு.

வரிதாரரின் பெற்றோரில் ஒருவர் 60 வயது தாண்டிய மூத்த குடியினர் எனில் சலுகை வரம்பு ரூ.50,000. காப்பீடு, மருத்துவப் பரிசோ தனையுடன் மருத்துவச் செலவும் செய்துகொள்ளலாம்.

வரிதாரரே மூத்த குடி எனில், தனக்கும் ரூ.50,000 வரை சலுகை பெறலாம். காப்பீடு, உடல் பரிசோதனை யுடன், மருத்துவச் செலவுக் கும் சலுகை கிடைக்கும். நிபந்தனை என்னவென்றால், இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் களைப் (HUF) பொறுத்தவரை, கூட்டுக் குடும்ப உறுப்பினர் யாராக இருப்பினும் இந்தப் பிரிவின்கீழ் சலுகை உண்டு.

ஆனால், மற்றவர்களைப் பொறுத்தவரை, தனக்கு, தன் வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகளுக்கு ஒரு பிரிவாக வும், தன் பெற்றோருக்கு மற்றொரு பிரிவாகவும் சலுகை பெறலாம். இதர குடும்ப உறவு முறைகளுக்கு சலுகை கிடைக்காது.

மேலும், மருத்துவப் பரிசோதனைக்கு மட்டுமே ரூ.5000-க்கு உட்பட்டு ரொக்கமாகப் பணம் செலுத்தலாம். காப்பீடு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கு ரொக்கம் தவிர்த்து, மாற்று முறையில் பணம் செலுத்த வேண்டும். வரிதாரர் மற்றும் வரிதாரரின் பெற்றோர் மூத்த குடியினராக இருந்தால் மட்டுமே மருத்துவச் செலவுக்கு வரிச் சலுகை கிடைக்கும். அது மட்டுமன்றி, மருத்துவச் செலவு கோருபவர் மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் செலுத்தியவராக இருக்கக் கூடாது. சம்பள தாரர்களுக்கு அலுவலக ரீதியாகப் பிடித்தம் செய்யப் படும் காப்பீட்டுப் பிரீமிய மும் சேர்ந்த தொகைதான் மேற்கண்ட பணவரம்பு. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டு களுக்கு காப்பீட்டுப் பிரீமியம் செலுத்தப்பட்டிருந்தால், அந்தந்த ஆண்டுக்கு உரிய தொகைக்கு மட்டுமே வரிச் சலுகை, காப்பீடு, இந்திய பொதுக் காப்பீட்டுக் கழகத்தின் (General Insurance Corporation of India) வரை யறைக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

பிரிவு 80DD

இந்துக் கூட்டுக் குடும்பத்தினர் உள்ளிட்ட இந்தியக் குடியினர் அனைவருக்கும் சலுகை தரும் இப்பிரிவின்கீழ், தனிநபரின் மனைவி/கணவர், பிள்ளைகள், பெற்றோர் சகோதரர்கள், சகோதரிகள் உள்ளிட்டு தனியரைச் சார்ந்து வாழும் மாற்றுத் திறனாளி அனைவரும் சலுகை பெறலாம். மருத்துவச் செலவு, பயிற்சி, மறுவாழ்வு, மற்றும் மாற்றுத் திறனாளி பராமரிப்புக்காக காப்பீட்டு நிறுவனங்கள், யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் செலுத்தப்பட்ட தொகை முதலியன சலுகை பெறும். பார்வைக் குறைபாடு, பார்வை இழப்பு, குணப்படுத்தப்பட்ட தொழுநோய், காதுகேளாமை, உடல் இயக்கம் முடக்கம், மூளை வளர்ச்சியின்மை, ஆட்டிசம், பாரிசவாயு முதலானவை உள்ளோர் மாற்றுத்திறனாளியாகக் கருதப்படுவர். இதற்கான அதிகபட்ச வரிச் சலுகை 75,000. குறைபாடு 80 சதவிகிதத்துக்கும் அதிகம் எனில், சலுகை ரூ.1,25,000.

இதற்கான நிபந்தனை என்னவெனில், வரிதாரரைச் சார்ந்து வாழும் மாற்றுத் திறனாளி, பிரிவு 80U-யின் கீழ் தீவிர நோய் சிகிச்சை செலவுக்கான சலுகை பெற்றிருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளி என்பதற் கான இயலாமைக்கு தேதி குறிப்பிட்டு சான்று பெற்றிருந்தால், அந்தத் தேதிக்குப் பிறகு மீண்டும் புதிய சான்று பெறுவது கட்டாயம். படிவம் 10-IA-ல் மருத்துவச் சான்று பெறுவது அவசியம்.

பிரிவு80DDB

தீவிர நோய்களான புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, குருதி உறையாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்றவற்றுக்கு, அந்தந்த மருத்துவ நிபுணர் மருத்துவச் சீட்டின் பேரில் வரிதாரர், வரிதாரரின் மனைவி-கணவர், பிள்ளைகள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் ரூ.40,000 வரை வரிச் சலுகை பெறலாம். இவர்களுள் எவரேனும் மூத்தகுடி எனில் சலுகை வரம்பு ஒரு லட்சம் முக்கிய நிபந்தனை என்னவெனில், காப்பீடு மூலம் மேற்கண்ட நோய் சிகிச்சைக்கு தொகை பெற்றிருந்தால் அதைத் தெரிவித்து, காப்பீட்டுத் தொகை போக நிகர தொகைக்கே வரிச் சலுகை.

நிபந்தனைகளை எடுத்துச் சொல்லிவிட்டோம். இந்த நிபந்தனைகளைப் பொறுத்து, நீங்கள் வரிச் சலுகை பெற முடியுமா, முடியாதா என்பதைப் பார்ப்பது உங்கள் கடமை!

பணவரம்பு இல்லாத சலுகைகள்!

பிரிவு 16(iii)-ன்படியான தொழில்வரி செலுத்துதல், 80E-ன்படியான கல்விக் கடன் வட்டி, பிரிவு 80G-ன்படி, ஊழியர்கள், பிரதமர்/முதல்வர் நிவாரண நிதி போன்றவற்றுக்குச் செலுத்தும் நன்கொடை, பிரிவு 80GGA-யின் கீழான நன்கொடைக்கு பண வரம்பு கிடையாது. நன்கொடைக்கு சம்பளம் தருபவர் சான்று அவசியம். தனது மொத்த வருமானத்தில் லாபம் (Profit & Gain) உள்ளவர்களுக்கு 80GGA சலுகை கிடையாது. 2,000 ரூபாய்க்கு மேற்பட்ட நன்கொடை ரொக்கம் அல்லாத முறையில் தரப்பட வேண்டும்!