கேரள மாநில லாட்டரி துறை சார்பில் சம்மர் பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு என அறிவிக்கப்பட்ட நிலையில் ஒரு டிக்கெட் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சம்மர் லாட்டரி குலுக்கல் நேற்று முன் தினம் நடைபெற்றது.
அதில் பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. குலுக்கலில் SE 222282 என்ற லாட்டரி எண்ணுக்கு பத்து கோடி ரூபாய் பரிசு விழுந்தது.

ஆலுவா பகுதியில் விற்பனை ஆன அந்த லாட்டரிச் சீட்டை அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான ஆல்பர்ட் டிக்கா வாங்கியிருப்பது தெரிய வந்தது. ஆல்பர்ட் டிக்கா கொச்சியில் வசிக்கும் சினிமா நடிகை ராஜினி சாண்டியின் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்துவருகிறார். ஆல்பர்ட் டிக்கா லாட்டரி மூலம் இப்போது கோடீஸ்வரன் ஆகிவிட்டார்.
1995-ம் ஆண்டு முதல் இவர் கேரளாவில் பணி செய்து வருகிறார். இவர் தொடர்ச்சியாக லாட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை ராஜினி சாண்டி கூறும்போது, ``அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் போன்று வசித்து வருகிறார். லாட்டரியில் பரிசு விழுந்ததும் என்னிடம் போனில் தகவல் சொன்னார். என் கணவர் வங்கி தொடர்பான பணி செய்வதால் அவர் மூலம் வங்கியில் தகவல் கூறினோம். ஆல்பர்ட் டிக்காவையும் அழைத்துக்கொண்டு அந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெப்பாசிட் செய்துள்ளோம்" என்றார்.

கேரள மாநில லாட்டரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மற்றொரு அஸ்ஸாம் தொழிலாளிக்கு 70 லட்சம் ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் நடந்துள்ளது. அஸ்ஸாமைச் சேர்ந்த இக்ரம் ஹுசைன் என்பவர் எர்ணாகுளம் மாவட்டம் நெல்லிமற்றம் பகுதியில் உள்ள பிஸ்மி பாஸ்ட் ஃபுட் கடையில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 17-ம் தேதி நடந்த நிர்மல் லாட்டரி குலுக்கலில் இக்ரம் ஹுசைனுக்கு 70 லட்சம் ரூபாய் விழுந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கேரளாவில் புரோட்டா மாஸ்டராக இருக்கும் இவருக்கு லாட்டரியில் அவ்வப்போது சிறு தொகைகள் பரிசாக விழுந்துள்ளன. ஆனால், இப்போதுதான் அவருக்கு பெரிய தொகை பரிசாகக் கிடைத்ததாகத் தெரிவித்தார்.