
முதலீட்டுக் கலவையை (Portfolio) வளர்ச்சி நிலையிலிருந்து வருமான (Income) நிலைக்கு மாற்றுவது, முதலீட்டைப் பாதுகாக்கும் நிலை.
வாழ்க்கையில் அனைவரும் ஒரு நாள் பணி ஓய்வு பெற்றே ஆக வேண்டும். அதற்கு இளமையிலிருந்தே தயார் ஆக வேண்டும். வேலை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, தொழிலதிபர்களும் சுய தொழில் செய்பவர்களும் ஓய்வுக்காலத்திற்காகத் தயாராவது முக்கியம். காரணம், பணி ஓய்வு பெறும் வயதான காலத்தில் ஓடியாடி உழைக்க முடியாது. அப்போதைய செலவுக்கு எனத் தனியே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைத்திருந்தால் மட்டுமே ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க முடியும்.
பணி ஓய்வுக்காலத் திட்டமிடலில் மூன்று முக்கிய நிலைகள் உள்ளன. அவை முதலீடு குவிக்கும் நிலை (Investment Accumulation Stage), முதலீட்டைப் பாதுகாக்கும் நிலை (Investment Transition Stage), செலவிடும் நிலை (Distribution Stage).
முதலீடு குவிக்கும் நிலை (Investment Accumulation Stage)ஓய்வுக்காலத்துக்குத் தேவையான தொகுப்பு நிதிக்கு (Corpus) தொடர்ந்து முதலீடு செய்துவரும் காலம் இது.
முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன், ஓய்வு பெற இன்னும் இருக்கும் காலத்தைப் பொறுத்து முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் ரிஸ்க் இல்லாத கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், வங்கி மற்றும் தபால் அலுவலக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்துவரலாம்.

சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படும் பட்சத்தில் விருப்ப பி.எஃப் என்கிற வி.பி.எஃப் முறையில் பி.எஃப் தொகையை அதிகரித்து வரலாம். இப்படிக் கூடுதலாகச் செய்யும் முதலீட்டுக்கும் வருமான வரி பிரிவு 80சி-யின் கீழ் நிபந்தனைக்கு உட்பட்டு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் வரைக்கும் வருமான வரிச் சலுகை இருக்கிறது. மேலும், இந்தத் தொகையைப் பின்னர் எடுக்கும்போது அதற்கும் வருமான வரி இல்லை. அதே நேரத்தில், நிதி ஆண்டில் பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் சேர்ந்து ரூ.2.5 லட்சத்துக்கு மேல் செலுத்தப்பட்டால் ரூ.2.5 லட்சத்துக்கு மேற்பட்ட தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கு ஏற்ப வரி கட்ட வேண்டும். பி.எஃப் மற்றும் வி.பி.எஃப் முதலீட்டுக்கு தற்போது ஆண்டுக்கு 8.15% வட்டி வழங்கப்படுகிறது.
சம்பளத்தில் பி.எஃப் பிடிக்கப்படவில்லை, முதலீட்டில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை, முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கான பி.எஃப் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீடு செய்துவரலாம். தற்போதைய நிலையில் ஆண்டுக்கு 7.1% வட்டி வழங்கப்படுகிறது. முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறது, முதலீட்டில் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்கள் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம்.

இந்தக் காலகட்டத்தில் முதலீட்டின் மீது மிகத் தேவையானது வளர்ச்சி ஆகும். அப்போதுதான் அதிக தொகை சேரும். எனவே, கூடிய வரையில் வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கியதும் பணி ஓய்வுக் காலத்துக்கான முதலீட்டை ஆரம்பிப்பது நல்லது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டுத் தொகையை அதிகரித்துக்கொள்ளலாம்.
முதலீட்டின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருப்பது அவசியம். அப்போதுதான் முதலீட்டுக்கு பணவீக்க விகிதத்தைவிட அதிகமாக ஆண்டுக்கு சராசரியாக 12%அளவுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
முதலீட்டுப் பெருக்கத்துக்காக அதிக ரிஸ்க் எடுக்கலாம். இளம் வயதினர் அதாவது 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் 100% தொகையை பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்துவரலாம். மற்றவர்கள் இதர சொத்துப் பிரிவுகளான தங்கம், ரியல் எஸ்டேட், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்களில் கலந்து முதலீடு செய்துவரலாம்.

முதலீட்டைப் பாதுகாக்கும் நிலை (Transition Stage)
முதலீட்டுக் கலவையை (Portfolio) வளர்ச்சி நிலையிலிருந்து வருமான (Income) நிலைக்கு மாற்றுவது, முதலீட்டைப் பாதுகாக்கும் நிலை. இதை ஓய்வுக்காலத்துக்கு முந்தைய நிலை (Pre-retirement Stage) என்றும் சொல்லலாம். பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களிலிருந்து கடன் சந்தை சார்ந்த திட்டங்களுக்கு (Debt Related Investments) மாற்ற வேண்டும். அதாவது, ரிஸ்க்கான நிறுவனப் பங்கு முதலீடுகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்கள் ஆகியவற்றில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டை ரிஸ்க் இல்லாத மற்றும் ரிஸ்க் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் சந்தை ஃபண்ட்களுக்கு முதலீட்டை மாற்றுவது. ஓய்வுக்காலத்துக்கு 2 - 3 ஆண்டுகளுக்கு முன் இந்த மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
செலவிடும் நிலை (Distribution Stage)
ஓய்வுக்கால முதலீட்டைப் பயன்படுத்தும் காலம் இது. இந்தக் காலகட்டத்தில் மாதம்தோறும் முதலீடு மூலம் வருமானம் வருவது மிக முக்கியம். அப்போதுதான் ஓய்வுக்காலம் இனிமையாக இருக்கும்.
தொகுப்பு நிதியில் சுமார் 70%-80% நிலையான வருமானம் ஈட்டித்தருவதாக இருக்க வேண்டும். இந்த நிலையில் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடாது.

அதாவது, ஓய்வுக்கால பணம் ரூ. 1 கோடி இருக்கிறது எனில், அதில் ரூ. 75 லட்சத்தை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள் (மாத வருமானத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்), கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகியவற்றில் தலா ரூ. 25 லட்சம் விகிதம் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் தபால் அலுவலகத் திட்டங்களில் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் வங்கிச்சேமிப்புக் கணக்குக்கு மாதந்தோறும் வட்டிவருமானம் வந்து சேர்ந்துவிடும். கடன் சந்தை ஃபண்ட்களிலிருந்து சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் (எஸ்.டபிள்யூ.பி) முறையில் தேவைப்படும் தொகையை மாதந்தோறும் எடுத்துச் செலவு செய்துவரலாம்.
மீதம் இருக்கும் ரூ. 25 லட்சத்தை வருமான வளர்ச்சிக்காகப் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் போட்டு வைக்க வேண்டும். அப்போதுதான் ஓய்வுக்கால பணம் நீண்ட காலத்துக்கு வரும்.
பணி ஓய்வுக்காலம் என்பதால் மிக அதிக ரிஸ்க் இல்லாத லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் ஆகியவற்றில் சமமாகப் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். அதிலிருந்து சுமார் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு எஸ்.டபிள்யூ.பி முறையில் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் எடுத்துச் செலவு செய்துவரலாம்.