நம்மில் பெரும்பாலானோரின் வாழ்நாள் லட்சியம் கோடீஸ்வரர் ஆவதாக உள்ளது. குறைந்தபட்சம் ரூ.1 கோடியாவது சேர்த்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அதுவும் ஒரு முறை முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக பலரும் நினைக்கிறார்கள்.
அந்த வகையில்தான் பலரும் வீட்டு மனைகளை, நிலங்களை வாங்கிப் போட்டுவிட்டு நீண்ட காலம் காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு முறை மொத்தமாக (Lump- sum) முதலீடு செய்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என திட்டமிடுகிறார்கள். அப்படி மொத்த முதலீடு மூலம் ஒருவர் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் முக்கியம்..!
பணத்தின் மதிப்பைப் பணவீக்க விகிதம் என்கிற விலைவாசி உயர்வு விழுங்கிவிடுகிறது. இந்தியாவின் நீண்ட கால சராசரி பணவீக்க விகிதம் சுமார் 5 சதவிகிதமாக இருக்கிறது. அந்த வகையில் நாம் செய்யும் முதலீட்டுக்கு ஐந்து சதவிகிதத்துக்கு மேல் அதிகமாக வருமானம் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை தேவைகளுக்குக் கடன் வாங்காமல் நிலைமையைச் சமாளிக்க முடியும்.
உதாரணத்துக்கு ரூ.100-ஐ வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைக்கிறோம். ஓராண்டு முடிவில் அது ரூ.103 ஆக அதிகரித் திருக்கும். விலைவாசி 5 சதவிகிதம் உயர்ந்தால் 100 ரூபாய் பொருள் அடுத்த ஆண்டு ரூ.105-க்கு விற்கும். அந்தப் பொருளை வாங்க வேண்டும் என்றால் 2 ரூபாய் கடன் வாங்கி வாங்க வேண்டும்.
பெரிய நகரத்தில் உள்ள ஒரு பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ பட்டப்படிப்பு படிக்க நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் இன்றைக்கு சுமார் ரூ.15 லட்சம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொகையில் மாணவர் விடுதிக் கட்டணம், விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் போக்குவரத்து செலவு எல்லாம் சேர்ந்தது என வைத்துக் கொள்வோம். இந்தியாவைப் பொறுத்தவரையில் உயர்கல்விக்கான பணவீக்க விகிதம் ஆண்டுக்கு சுமார் 10 சதவிகிதமாக உள்ளது. அந்த வகையில் இன்றைய ரூ.15 லட்சம் என்பது 20 ஆண்டுகள் கழித்து ரூ.1 கோடியாக இருக்கும்.

எனவே, உங்களின் முதலீடு லாபகரமாக இருக்க, பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும். குறிப்பாக, உங்கள் முதலீட்டுக்கு குறைந்தபட்சம் ஆண்டுக்கு 8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைக்க வேண்டும். ஆண்டுக்கு 12 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கிடைத்தால் விரைவிலேயே கோடீஸ்வரர் ஆக முடியும். அது போன்ற முதலீடுகள்தான் பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஆகும்.
மூன்று முக்கிய விஷயங்கள்..!
மொத்த முதலீடு மூலம் கோடீஸ்வரர் ஆவதில் மூன்று விஷயங்கள் முக்கியமாக உள்ளன. ஒன்று மொத்தமாக முதலீடு செய்யும் தொகை, மற்றது முதலீட்டுக் காலம் ஆகும். அடுத்து முதலீட்டுக்குக் கிடைக்கும் வருமானம் ஆகும். அதிக தொகையை முதலீடு செய்தாலும் சீக்கிரம் கோடீஸ்வரர் ஆகலாம்; முதலீட்டுக்கு அதிகமாக வருமானம் கிடைத்தாலும் விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம்.
ஒருவர் ரூ.10 லட்சத்தைப் பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் அவர் 20 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். இதுவே, இந்த ரூ.10 லட்சத்துக்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் அவர் 16 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம்.

ஒருவர் ரூ.25 லட்சம் மொத்தமாக முதலீடு செய்து, அதற்கு ஆண்டுக்கு 15% வருமானம் கிடைத்தால் 10 ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆகலாம். எவ்வளவு தொகை முதலீடு செய்தால், அதற்கு எவ்வளவு வருமானம் கிடைத்தால், எத்தனை ஆண்டுகளில் கோடீஸ்வரர் ஆக முடியும் என்பதை அட்டவணையில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
கோடீஸ்வரர் ஆக ஒரு முறை எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

அட்டவணையை எப்படி பயன்படுத்துவது?
ஒருவர் ரூ.5 லட்சம் மொத்தமாக முதலீடு செய்துள்ளார். அந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால், அவரின் முதலீடு 26 ஆண்டுகளில் ரூ.1 கோடியாக உயரும்.