
பென்ஷன்
‘பேசாம ‘வி.ஆர்.எஸ்’ வாங்கிட்டு ரிடையர்டு ஆயிடலாம்னு நினைக்கிறேன்’ என்று அங்கலாய்க்கும் மத்திய அரசு ஊழி யர்கள் பலர். ஆனால், ‘வி.ஆர்.எஸ்’ வாங்கு வதால் ஏற்படும் சாதக, பாதமான விஷயங்கள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

1972-ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வரும் மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகளில் கடந்த 50 ஆண்டுகளாகச் செய்யப் பட்ட சேர்க்கைகள், நீக்கங்கள், மாற்றங்கள் முதலானவற்றை சீரமைத்து நடைமுறைக்கு வந்துள்ளது புதிய ‘மத்திய குடிமைப் பணிகள் (பென்ஷன்) விதிகள் 2021. முழுக்க முழுக்க ஊழியர் தரப்புக்கே சாதகமாக அமைந்துள்ள பென்ஷன் விதிகளில் கவனிக்கத்தக்கது பென்ஷன் கணக்கீட்டுக்கான திருந்திய (Revised) நடைமுறை. அதிலும் முக்கியமானது, விருப்ப ஓய்வுக்கான பென்ஷன் கணக்கீட்டு முறை. இதைத் தெரிந்துகொள்ளும் முன், பழைய பென்ஷன் கணக்கீட்டின் முந்தைய நடைமுறையைப் புரிந்துகொள்வது அவசியம்.
சராசரி சம்பளம்...
பொதுவாக, பென்ஷன் கணக்கிட அடிப் படைக் காரணிகள் இரண்டு. முதலாவது, பணிக்காலம், அடுத்தது, ஊழியரின் சம்பளம்.முன்னதாக, ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுவதற்கு முந்தைய 36 மாதங்கள் வரையான சம்பளத்தின் சராசரி பென்ஷன் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர், இது 12 மாத சராசரி சம்பளமானது. அதன்பின், 10 மாத சராசரி சம்பளம் பென்ஷனுக்குக் கணக்கிடப் படுகிறது. 50 ஆண்டுகளுக்குமுன் 30 வருடம் பணி நிறைவு செய்தவருக்கு சராசரி சம்பளத்தில் 37.5% பென்ஷனாகத் தரப்பட்டது. பின்னர், சராசரி சம்பளத்தில் 41.25% பென்ஷனாக அமைந்தது. பணிக்காலம் (Service Period) 30 வருடத்தைவிடக் குறைவாக இருந்தால் அதற்கேற்ப பென்ஷனும் குறையும்.

கடைசி சம்பளத்துக்கே பென்ஷன்...
ஓர் ஊழியரின் 36, 12 மற்றும் 10 மாத சம்பளத்துக்கு பென்ஷன் கணக்கிடுவதால், கிடைக்கக்கூடிய பென்ஷன் வெகுவாகக் குறையும் என்பதைக் கருத்தில்கொண்டு, ஊழியர் ஓய்வு பெறும் கடைசித் தேதியில் என்ன சம்பளம் பெறு கிறரோ, அந்தச் சம்பளத் துக்கே பென்ஷன் கணக்கீடு என்ற விதியுடன் ‘30 வருடம் பணி நிறைவு செய்துவிட்டால் கடைசி சம்பளத்தில் 50% பென்ஷன்’ என்ற விதியும் நடைமுறைக்கு வந்தது. இந்த விதியின்படி, தனது கடைசி சம்பளமாக ரூ.90,000 பெற்றிருந்த ஒருவரின் பணிக்காலம் 30 ஆண்டு (அல்லது அதற்கும் அதிகம்) எனில், அவரது பென்ஷன் ரூ.45,000-ஆக நிர்ணயம் செய்யப்படும்.
பணிக்காலம் 20 ஆண்டு எனில், இவரது பென்ஷன் 30,000 ஆகவும், 10 ஆண்டு மட்டுமே பணி செய்தவர் எனில், இவரது பென்ஷன் 15,000 ரூபாயாகவும் இருக்கும். அதாவது, பணிக் காலம் குறையக் குறைய பென்ஷனும் அதே விகிதாசாரத்தில் குறையும்.
குறைந்தபட்ச பணிக்காலம்...
10 வருடத்துக்குக் குறையாமல் பணி செய்பவருக்கே பென்ஷன் கிடைக்கும். அதாவது, ஒருவர் தனது 50 வயதில் பணியில் சேருகிறார். 60 வயதில் ஓய்வு பெறுகிறார். இவரது பணிக்காலம் 10 வருடமாகத்தான் இருக்கும். இது போன்ற நிகழ்வுகளில்தான் 10 வருடம் பணி நிறைவு செய்தாலும் பென்ஷன் கிடைக்கும். மற்றபடி 40 வயதில் பணிக்கு வந்தவர், 10 வருடம் பணி நிறைவு செய்துவிட்டால் பென்ஷன் கிடைக்காது. விருப்ப ஓய்வு பெறுவதானாலும் குறைந்தது 20 வருடப் பணி அவசியம்.
விருப்ப ஓய்வுக்கு வெயிட்டேஜ்...
பென்ஷன் கணக்கீட்டில் கடைசி சம்பளத்துடன், பணிக் காலமும் முக்கியமான காரணி யாக இருந்ததால், 20 வருடம் பணி நிறைவு செய்து விருப்ப ஓய்வு கோரும் ஊழியருக்கு அதிகபட்சமாக 5 வருட ‘வெயிட்டேஜ்’ தரப்பட்டது. இந்த 5 வருட வெயிட்டேஜ் மூலம் இவரது பணிக்காலம் 20 வருடம் என்பதற்குப் பதிலாக 25 வருடம் எனக் கணக்கிடப் படும். இதனால் இவரது பென்ஷன் 25% அளவுக்கு உயரும். இதற்கேற்ப பென்ஷன் கம்யூடேசன் தொகையும் அதிக ரிக்கும். இப்படித்தான் இருந்தது பென்ஷன் கணக்கீட்டு முறை.
அதிரடி மாற்றம்...
இவ்வாறு கடைசிச் சம்பளம் மற்றும் பணிக்காலம் ஆகிய இரண்டின் அடிப்படையில் பென்ஷன் கணக்கிடப்படுவதால், கடைசிச் சம்பளம் ஒரே அளவாக இருந்தாலும், பணிக்காலம் குறைவாக உள்ளவர்களுக்கு பென்ஷனும் குறைவாக இருந்தது. இந்த வேறுபாட்டை நீக்க கடைசி சம்பளம் மட்டுமே பென்ஷன் கணக்கீட்டுக்கு அடிப் படை என்ற ஃபார்முலாவை கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. அதாவது, 10 வருடத்துக்கு மேல் பணி செய்த அனைவருக்கும் அவரது கடைசி சம்பளத்தில் 50% பென்ஷனாக இருக்கும்.
உயர்வோ உயர்வு...
10 வருடப் பணியுடன் ரூ.90,000 அடிப்படைச் சம்பளமாகப் பெற் றிருந்த ஒருவர் பழைய நடைமுறைப் படி தனது பென்ஷனாக ரூ15,000 மட்டுமே பெற்றிருப்பார். இவரது பென்சன் கம்யூடேசன் தொகையும் ரூ.5,89,968-ஆகவே இருந்திருக்கும். புதிய ஃபார்முலாவின்படி, இவரது பென்ஷன் ரூ.45,000-ஆக இருக்கும். பென்ஷன் கம்யூடேஷன் தொகை ரூ.17,69,904-ஆக உயர்ந்துவிடும்.
வெயிட்டேஜ் இல்லாமலே...
20 வருடம் பணி நிறைவு செய் தவர் 20 வருடப் பணி நிறைவின் போது அடிப்படைச் சம்பளமாக 90,000 ரூபாயைப் பெற்றிருந்ததாக வைத்துக்கொள்வோம். இவருக்கு 5 வருட வெயிட்டேஜ் தரப்பட்டா லும் இவரது பென்ஷன் ரூ.37,500-ஆக மட்டுமே இருந்திருக்கும். இப்போது கடைசி சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து பென்ஷன் கணக்கிடப்படுவதால், வெயிட்டேஜ் இல்லாமலே இவரது பென்ஷன் ரூ.45,000-ஆக உயர்ந்து நிற்கும். கம்யூடேசன் தொகை ரூ.14,74,920-லிருந்து ரூ.17,69,904-ஆக உயர்ந்துவிடும். அதாவது, வெயிட் டேஜ் மூலம் கிடைத்த பென்ஷன் மற்றும் கம்யூடேசன் தொகையை விட, புதிய பென்ஷன் கணக்கீடு முறை மூலம் கிடைக்கும் பென்ஷ னும், கம்யூடேசனும் மிகவும் அதிகமாகி இருக்கும். எனவேதான், விருப்ப ஓய்வுக்கு ‘வெயிட்டேஜ்’ ரத்து செய்யப் பட்டுவிட்டது.
10 வருடப் பணி...
பென்ஷனுக்கான குறைந்தபட்ச பணிக்காலம் 10 வருடம் என்கிற நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை. ஆனால், 9 வருடம் 9 மாதம் பணி நிறைவு செய்து விட்டாலே பென்ஷன் பெற்றுவிடலாம். எப்படி எனில், பணிக்காலக் கணக்கீடு வருட அடிப்படையில் இல்லை. ஆறு மாத அடிப்படையில் உள்ளது. இதன்படி, 9 வருடப் பணி என்பது 18 ஆறு மாதம். 9 மாதம் என்பதில் 6 மாதம் ஓர் அரையாண்டாகக் கணக்கிடப்படும். 3 மாதமும் அதற்கு மேற்பட்ட காலமும் ஓர் அரையாண்டாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஆகையால் 20 அரையாண்டு நிறைவடைந்து, பென்ஷன் தரப்படும்.
விருப்ப ஓய்வுக்குப் பொருந்தாது...
ஒன்பது மாதம் என்பதை இரண்டு அரையாண்டாகக் கணக்கிடுவது 10 வருடப் பணி நிறைவு செய்தவருக்குப் பொருந்தும். ஆனால் மேற்கண்ட கணக்கீட்டின்படி, 19 வருடம் 9 மாதம் பணி நிறைவு செய்தவரின் பணிக்காலம் 20 ஆண்டாக எடுத்துக்கொள்ளப்படாது. விருப்ப ஓய்வு கிடைக்காது. எனவே, 20 ஆண்டு பணி முழுமையாக நிறைவு பெறும் தேதி எதுவோ, அந்தத் தேதியில்தான் ஊழியர் விருப்ப ஓய்வு பெற அனுமதிக்கப்படும். எனவே, 20 ஆண்டு நிறைவு செய்து ஓய்வு பெறுகிறவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

சலுகை மேல் சலுகை...
இவ்வாறு விருப்ப ஓய்வு பெறுபவர் தனது பணிக் காலத்தைச் சரியாகக் கணக்கிடாமல் விட்டுவிட்டால் விருப்ப ஓய்வில் பென்ஷன் பெறுவது பிரச்னையாகிவிடும் என்பதால், ஒரு நல்ல நடைமுறையையும் வகுத்துள்ளது மத்திய அரசு. அதாவது, விருப்ப ஓய்வு பெறுபவர், விருப்ப ஓய்வு பெற விரும்பும் தேதிக்கு மூன்று மாதம் முன்னதாக தனது விருப்ப ஓய்வு குறித்து தனது பணியமர்வு அதிகாரிக்கு (Appointing Authority) தெரிவிக்க வேண்டும். இதற்கும்முன் தனது மொத்த பணிக்காலம் எவ்வளவு என்பதைக் கேட்டு, நிர்வாக அதிகாரியிடம் சான்று ஒன்றைப் பெற வேண்டும். இந்த நடைமுறையில் பணிக் காலம் குறைவு என்கிற பிரச்னை எழாது. விருப்ப ஓய்வை அனுமதிக்கும் அதிகாரியும், ஊழியருக்கு 20 வருடப் பனிக்காலம் நிறைவு பெற்றுவிட்டதா என்பதை உறுதி செய்துகொண்டுதான் ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும்.
பணிக்கொடை...
10 வருடங்களுக்குமேல் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான பென்ஷன் கணக்கீட்டுக்கு மட்டுமே மேற்கண்ட நடைமுறை. மற்றபடி, பணிக்கொடையைப் பொறுத்தவரை, பணிக்கால நீளத்தின் அடிப்படையிலேயே ஓய்வுக்கால பணிக்கொடை (Retirement Gratuity) வழங்கப் படுகிறது. அதாவது, ஒவ்வொரு ஆறு மாதப் பணிக்கும் கால் மாதச் சம்பளம் (Pay+DA) என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதிகபட்சம் 16.5 மாத சம்பளம் பணிக்கொடை என்பதிலும் மாற்றமில்லை.