தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சம்பளத்தைத் தாண்டி இன்னொரு வருமானம் வேண்டுமா..? உங்களுக்குக் கைகொடுக்கும் எளிய வழிமுறைகள்!

இன்னொரு வருமானம்...
பிரீமியம் ஸ்டோரி
News
இன்னொரு வருமானம்...

பணவீக்கத்தைத் தாண்டி அதிக அளவில் இரண்டாவது வருமானம் பெற பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்...

பலன் தரும் மரத்தை உருவாக்க வேண்டும் எனில், விதைதான் (Seed) மூலம். பணத்தை உருவாக்க வேண்டும், பெருக்க வேண்டும் எனில், பணம்தான் விதை என்று சொல்லலாம். பணம் என்கிற விதையை உழைப்பு என்கிற உன்னத சக்தி மூலம் பெற முடியும். பண விதையை சரியாக விதைத்து வளர்த்தெடுத்து, பயன்படுத்துவதன்மூலம் ஒருவர் தனது வாழ்க்கையில் விரைவில் பெரும் பணக்காரராக மாறி, சிறப்பான செல்வ நிலையை அடைய முடியும்.

சிவகாசி மணிகண்டன் 
நிறுவனர், 
Aismoney.com
சிவகாசி மணிகண்டன் நிறுவனர், Aismoney.com

இரண்டாவது வருமானம்...

ஒருவர் தனது வாழ்வில் சிறப்பான செல்வ நிலையை அடைய இரண்டாவது வருமானம் (Second Income) என்பது கட்டாயம் தேவை. இந்த வருமானம் பாஸிவ் இன்கம் அதாவது, செயலற்ற வருமானமாக (Passive Income) இருப்பது அவசியம். அது என்ன பாஸிவ் இன்கம் என்கிறீர்களா?

நமது தினசரி வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பது செயல்மிகுந்த வருமானம் (Active Income) எனப்படும். உதாரணமாக, தொடர்ந்து வேலைக்குச் சென்றால்தான் அல்லது தினமும் கடையைத் திறந்து நடத்தினால்தான், சம்பளம் அல்லது வருமானம் கிடைக்கும்; நாம் வேலைக்கு போகாமல், தினமும் கடையைத் திறந்து நடத்தாமல் இருந்தால், நம் செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் ஆக்டிவ் இன்கம் கிடைக் காமல் போகும்.

சம்பளத்தைத் தாண்டி இன்னொரு வருமானம் வேண்டுமா..?
உங்களுக்குக் கைகொடுக்கும் எளிய வழிமுறைகள்!

இதுவே நாம் ஒரு செயலை முதலில் செய்துவிட்டு, மேற்கொண்டு எதுவும் செய்ய வில்லை என்றாலும் தொடர்ந்து வருமானம் கிடைத்துகொண்டிருப்பது பாஸிவ் வருமானம் ஆகும். உதாரணமாக, நீங்கள் ஒரு புத்தகம் எழுதி வெளியிடுகிறீர்கள்; புத்தகம் எழுதுவது என்பது ஒரு முறை நடக்கும் செயல்தான். அந்தப் புத்தகம் தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு விற்பனையாவதன்மூலம் உங்களுக்குப் பணம் கிடைப்பது பாஸிவ் இன்கம் ஆகும். இது ஒருவருக்குக் கிடைக்கும் இரண்டாவது வருமானம் என்று சொல்லலாம்.

ஒருவருக்கு ஆக்டிவ் இன்கம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு முக்கியம் பாஸிவ் இன்கம். இந்த இரண்டும் இருந்தால்தான் ஒருவர் தன் வாழ்க்கையில் எல்லா வளங்களையும் விரைவாகப் பெற முடியும்.

மாதச் சம்பளக்காரர்கள்...

நம்மில் பலரும் மாதச் சம்பளத்தின் மூலம் கிடைக்கும்ஆக்டிவ் வருமானத்தை மட்டுமே பெற்று, கஷ்டப்பட்டு குடும்பச் செலவுகளைச் செய்து, சமாளிக்கிறார்கள். இதில், ஏதாவது பிரச்னை எனில், சமாளிக்க முடியால் தவிக்கிறார்கள். ஆனால், இரண்டாவது வருமானம் என்று ஒன்று இருந்தால் பெரிதாகக் கஷ்டப்படத் தேவை இருக்காது.

இரண்டாவது வருமானத்தைப் பெற ஒருவர் என்ன செய்ய வேண்டும்? அதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான சில வழிகளைப் பார்ப்போம்.

பாரம்பர்ய வழிகள்...

1. வீடு கட்டி வாடகைக்கு விடுவது

2. ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் வட்டி வருமானம் பெறுவது

3. புத்தகம் எழுதி, அச்சிட்டு வெளியிடுவது

நவீன வழிகள்...

1. வணிகத்தில் முதலீடு செய்வது

2. பங்குச் சந்தையில் முதலீடு செய்வது

3. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது

4. வணிக ரீதியில் செயல்படும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்வது

5. இ-புத்தகம் வெளியிடுவது

6. பிளாக் எழுதுவது / ஆன்லைன் படிப்பு

7. யூடியூப் வீடியோ வெளியிடுவது

8. சோஷியல் மீடியா

9. ஆன்லைன் விற்பனை

இரண்டாவது வருமானம் தரும் பாரம்பர்ய, நவீன வழிமுறைகள் பற்றிய வழிகள் பற்றி இனி கொஞ்சம் விளக்க மாகப் பார்ப்போம்.

வீட்டு வாடகை வருமானம்...

இன்றைய தேதியில் பெரும்பாலானோர் வீட்டு வாடகை வருமானம் மூலம் இரண்டாவது வருமானம் பெற்று வருகிறார்கள். மனை யின் விலை, கட்டுமானப் பொருள்கள் விலை, கட்டு மானச் செலவு குறைவாக இருந்த காலத்தில் வீட்டு வாடகை வருமானம் லாப கரமாக இருந்தது.

ஆனால், வீடு மற்றும் மனைகளின் விலை இப்போது மிகவும் உயர்ந்துவிட்ட நிலையில் அந்த அளவுக்கு வீட்டு வாடகை ஏறவில்லை என்பதால், வீடு கட்டி அல்லது வாங்கி வாடகைக்கு விடுவது என்பது லாபகரமாக இல்லை. சென்னை, கோவை போன்ற பெரிய நகரங்களில் ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை வாடகைக்கு விடுவ தன் மூலம் மாதம்தோறும் சுமார் ரூ.22,000- ரூ.25,000-தான் வருமானம் கிடைக்கிறது. அதாவது, ஆண்டுக்கு ரூ.2.65 லட்சம் முதல் ரூ.3 லட்சம் கிடைக்கிறது. இது வீட்டின் மதிப்பில் 2.65% - 3% ஆகும்.

நீண்ட காலத்தில் சொத்தின் மதிப்பு ஆண்டுக்கு 5 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கும் ஏரியா எனில், வீட்டு வாடகை வருமானத்துக் காக சொத்தில் முதலீடு செய் வது லாபகரமாக இருக்கும். இல்லை எனில், இதற்கு பதிலாக, வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் அந்தப் பணத்தை வைத்திருந்தாலே ஆண்டுக்கு 7.5% வட்டி வருமானம் கிடைக்கும்.

ரியல் எஸ்டேட் முதலீடு என்கிறபோது மொத்தத் தொகை தேவை அல்லது வீட்டுக் கடன் மூலம் வாங்க வேண்டும். புதிய வருமான வரி முறையில் திரும்பக் கட்டும் வீட்டுக் கடன் அசலுக்கு வருமான வரிச் சலுகை கிடையாது. வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும்பட்சத்தில் வட்டிக்கு நிதி ஆண்டில் ரூ.2 லட்சத்துக்கு மட்டுமே வரிச் சலுகை பெற முடியும். மேலும், தொடர்ந்து வீட்டுக்கு வாடகைக்கு ஆள்கள் வருவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தவிர, சொத்து வரி, பராமரிப்புச் செலவுகள் இருக்கின்றன.

நீங்கள் ஏற்கெனவே குடியிருக்கும் சொந்த வீட்டின் மாடியில் கூடுதலாக வீடு கட்டி வாடகைக்கு விடுவது என்பது அதிக செலவு பிடிக்காது. இப்படி செய்வது மூலம் சுலபமாக இரண்டாவது வருமானம் பெற முடியும்.

வர்த்தகக் கட்டடங்களை வாடகைக்கு விடுவது மூலம் அதன் மதிப்பில் சுமார் 8-10% வருமானம் பெற முடியும். ஆனால், இதற்கு மிகவும் அதிக முதலீடு தேவைப்படும்.

வீடு அல்லது மனையை இப்போது வாங்கி, பிற்பாடு விற்றால் நல்ல லாபம் கிடைக்குமே என்று நீங்கள் கேட்கலாம். அப்படி செய்வது முதலீடாகும். அது இரண்டாவது வருமானத்தைப் பெறும் வழி அல்ல. எனவே, இரண்டாவது வருமானத்துக்காக வீடு அல்லது மனையை வாங்க நினைக்கும்போது, இந்த விஷயங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து, அதன்பிறகே வாடகை வருமானத்துக்காக சொத்தில் முதலீடு செய்யும் முடிவெடுப்பது நல்லது.

சம்பளத்தைத் தாண்டி இன்னொரு வருமானம் வேண்டுமா..?
உங்களுக்குக் கைகொடுக்கும் எளிய வழிமுறைகள்!

ஃபிக்ஸட் டெபாசிட்...

முதலீட்டில் கொஞ்சம்கூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் பெரும்பாலும் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை முதலீடு செய்து இரண்டாவது வருமானத்தைப் பெற்று வருகிறார்கள். வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டைப் பொறுத்தவரை, பணவீக்க விகிதம் அளவுக்கு அல்லது அதைவிட சிறிது கூடுதலாகதான் வட்டி வருமானம் கிடைக்கும். உதாரணமாக, பணவீக்கம் 6% எனில், இதன்மூலம் சுமார் 7% அளவுக்கே வருமானம் கிடைக்கும். கூடுதலாகக் கிடைக்கும் இந்த 1% பணம் நமக்கு பெரிய அளவில் இரண்டாவது வருமானத்தைத் தந்துவிடாது.

மேலும், இதில் கிடைக்கும் வட்டி வருமானம், வருமான வரிக்கு உட்பட்டது. முதலீட்டுக் காலம் எவ்வளவாக இருந் தாலும் முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வரு கிறாரோ, அதற்கேற்ப வரி கட்டவேண்டும். மேலும், ரூ.5 லட்சம் வரைக்கும்தான் டெபாசிட் இன்ஷூரன்ஸ் மூலம் முதலீடு மற்றும் வட்டிக்கு பாதுகாப்பு இருக்கிறது என்பதால், முதலீட்டைப் பல்வேறு வங்கிகளில் பிரித்து முதலீடு செய்வது நல்லது.

புத்தகம் எழுதி வெளியிடுவது...

ஒருவருக்கு இலக்கிய ஆர்வம் அல்லது துறை சார்ந்த திறன் இருக்கும்பட்சத்தில் புத்தகம் எழுதி அச்சிட்டு வெளியிடலாம். நீங்கள் எழுதும் புத்தகத்துக்கான வரவேற்பைப் பொறுத்தும், விற்பனையைப் பொறுத்தும் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். புத்தகம் எழுதி வெளியிடும்போது அதை நீங்களே வெளியிடாமல் ஏதாவது ஒரு புகழ்பெற்ற பிரசுரம் வெளியிட்டால் விற்பனை அதிகமாக இருக்கும்.

தற்போது இ-புத்தகங்கள் என்பது வெளியிடுவதற்கு எளிதான விஷயமாக இருக்கின்றன. இதற்கு பெரிய அளவில் செலவு செய்யவேண்டியது இல்லை. இ-புத்தகங்களை அமேசான் மூலமே வெளியிட்டு வருமானம் ஈட்ட முடியும்.

புத்தகம் எழுதி வெளியிடுவது என்பது எல்லோராலும் முடியக்கூடிய செயல் அல்ல. ஆனால், அந்தத் திறமை உள்ள வர்கள் புத்தகம் எழுதி வெளியிட்டு, இரண்டாவது வருமானத்துக்கான வழியை நிச்சயம் உருவாக்கலாம்.

இதுவரை பாரம்பர்யமான வழிகள் (பாஸிவ் இன்கம்) மூலம் இரண்டாவது வருமானம் பெறும் வழிகளைப் பார்த்தோம். இனி, நவீன வழிகளில் (ஆக்டிவ் இன்கம்) இரண்டாவது வருமானம் பெறும் வழிகளைப் பார்ப்போம்.

ஆன்லைன் விற்பனை...

இந்த டிஜிட்டல் யுகத்தில் உங்கள் திறமைகளை வைத்து இரண்டாவது வருமானம் சேர்ப்பது மிகவும் எளிது.

நீங்கள் சொந்தமாகத் தயாரிக்கும் பொருள்களை இணையதளம், ஆப் மூலம் விற்பனை செய்யலாம். அல்லது பல பொருள்களைக் குறைந்த விலையில் மொத்தமாக வாங்கி, சில்லறை அடிப்படையில் விற்று லாபம் ஈட்டலாம்.

ஒருவர் வேறு ஒரு வேலையை செய்துகொண்டிருந்தாலும், பகுதி நேரமாக கவனம் செலுத்தி, ஆன்லைனில் பொருள்களை விற்பனை செய்ய முடியும். இதற்கு சொந்த இணையதளம் இருப்பது அவசியம். அமேசான், ஃப்ளிப் கார்ட் போன்ற இணைய தளங்கள் மூலமும் பொருள் களை விற்கலாம். இதன் மூலம் கணிசமான தொகையை இரண்டாவது வருமானமாகப் பெற முடியும்.

யூடியூப் சேனல்...

உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஆழமான அறிவும், திறமையும், ஆர்வமும் இருந் தால் யூடியூப் சேனல் மூலம் ஓய்வு நேரங்களில் வீடியோ பதிவுகளை இடுவதன் மூலம் டாலரில் பணத்தை சம்பாதிக்க லாம். இந்த வீடியோக்களில் கூகுள் கொடுக்கும் விளம்பரங் களை மக்கள் பார்ப்பதன் மூலம் நமக்கு வருமானம் கிடைக்கும்.

தொடர்ந்து சிறப்பான வீடியோக்கள் வெளியிடுவதன் மூலம் உங்கள் வீடியோவை நிறைய பேரைப் பார்க்க வைக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகம் பேர் உங்கள் வீடியோவைப் பார்க் கிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமாக சம்பாதிக்க முடியும். உங்கள் வீடியோவை அதிகம் பேர் தொடர்ந்து பார்க்கும் நிலையில், நீங்கள் இன்ஃபுளுயன்ஸராக மாறுவீர்கள். இதனால் பல நிறுவனங்களின் விளம்பரம் உங்களைத் தேடி வர வாய்ப்பு உண்டு. இதன்மூலமும் நீங்கள் நிறைய சம்பாதிக்க முடியும்.

சோஷியல் மீடியா பக்கங்கள்...

நீங்கள் யுடியூப்-ல் வீடியோ வெளியிடுவது போல, ஃபேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டா கிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களிலும் (Social Media) உங்கள் வீடியோ களை வெளியிடலாம். இதற்கு உங்களின் சோஷியல் மீடியா பக்கங்களைப் பின்பற்று பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்க வேண்டும்.

ஆன்லைன் விற்பனை, யூடியூப் சேனலில் வீடியோ வெளியீடு, சோஷியல் மீடியா பக்கங்கள் மூலம் இரண்டா வது வருமானம் பெற நீங்கள் புதிய கோணத்தில் சிந்திக்கும் திறமை கொண்டவராகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றி நன்கு தெரிந்தவராகவும் இருப்பது நல்லது. குறைந்த பட்சம் இவை நன்கு தெரிந்த ஒருவர் உங்களுக்கு உதவியாக இருப்பது நல்லது.

இனி முதலீட்டில் மூலம் இரண்டாவது வருமானம் பெறும் வழிகளைப் பார்ப்போம்.

ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்

இந்தியாவில், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் (Real Estate Investment Trust - REIT) என்கிற ‘ரெய்ட்’ திட்டமானது புதிய ரியல் எஸ்டேட் முதலீட்டுத் திட்டமாகும். வணிக வளாகங்கள், திரையரங்கங்கள், அலுவலக வளாகங்கள் போன்ற வாடகை வருமானம் ஈட்டித் தரும் சொத்துகளை நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த வகைச் சொத்துகளை ஒரு டிரஸ்ட்டாக அமைக்கின்றன. இதன் யூனிட்டுகளை விற்பதன்மூலம் முதலீட்டாளர் களிடமிருந்து பணம் திரட்டப்படுகிறது. இந்த யூனிட்டுகள், பங்குகள் போல் பங்குச் சந்தையில் பட்டியலிடுகின்றன. இதில் ஒருவர் குறைந்தபட்சம் 10,000 ரூபாய்கூட முதலீடு செய்யலாம்.

‘ரெய்ட்’ திட்டமானது, நீண்ட காலத்தில் சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை அளிக்கும் இரண்டாவது வருமான வாய்ப்பாக உள்ளது. ‘ரெய்ட்’ திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமான மானது, மூன்று மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளர் களுக்குப் பிரித்து அளிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வாடகை வருமானத்தில் சுமார் 90 சதவிகிதத்தை டிவிடெண்டாக முதலீட்டாளர்களுக்குப் பிரித்துத் தரவேண்டும் என்பது செபியின் முக்கிய மான நிபந்தனை. தற்போதைய நிலையில், இந்த நவீன ரியல் எஸ்டேட் முதலீடு மூலம் ஆண்டுக்கு சுமார் 8% டிவிடெண்ட் வருமானம் கிடைத்து வரு கிறது. இது போக யூனிட் விலை உயர்வின் மூலமும் மூலதன மதிப்பு கூடி வருகிறது.

சம்பளத்தைத் தாண்டி இன்னொரு வருமானம் வேண்டுமா..?
உங்களுக்குக் கைகொடுக்கும் எளிய வழிமுறைகள்!

பங்குச் சந்தை முதலீடு...

பணவீக்கத்தைத் தாண்டி அதிக அளவில் இரண்டாவது வருமானம் பெற பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். இதற்கு பங்குச் சந்தை முதலீடு குறித்த அடிப்படை அறிவு அவசியம் தேவை. இதற்காக நீங்கள் பெரிய அளவில் மெனக்கெட வேண்டியதில்லை. பங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்பதற்கான அடிப்படை அம்சங்களைக் கற்றுக்கொண்டாலே போதும்.

பங்குச் சந்தை முதலீட்டைப் பொறுத்தவரை, அடிப் படையில் வலுவான மற்றும் அதிகப் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட மிகப் பெரிய நிறுவனங்களின் பங்குகளில் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்துவருவதன்மூலம் கணிசமான இரண்டாவது வருமானத்தைப் பெற்று வரலாம்.

பங்குச் சந்தை முதலீட்டின் மூலம் டிவிடெண்ட் வருமானம் மற்றும் பங்கு விலை ஏற்றம் என இரட்டை லாபம் கிடைக்கும். பங்கு டிவிடெண்ட் வருமானத்தை அந்த நிறுவனப் பங்குகளிலேயே மீண்டும் முதலீடு செய்வதன் மூலம் பங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும். பிற்காலத்தில் அதிக அளவில் இரண்டாவது வருமானம் பெற உதவியாக இருக்கும்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு...

பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்யத் தெரியாத வர்கள், நிறுவனப் பங்குகளைத் தொடர்ந்து கவனிக்க நேரம் இல்லாதவர்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

முதலீட்டில் ஓரளவு ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் 5 - 10 ஆண்டுகளுக்குள் இருந் தால், ஓரளவுக்கு ரிஸ்க் குறை வான லார்ஜ்கேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட், ஃபிளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

முதலீட்டுக் காலம் பத்து ஆண்டுகளுக்குமேல் 15 ஆண்டு வரையில் இருந்தால், ரிஸ்க் எடுக்கக் கூடியவர் எனில், மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகளுக்குமேல் எனில், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பி.எஸ்.இ பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு, என்.எஸ்.இ பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு அடிப்படை யிலான எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் (ETF) முதலீடு செய்து வரலாம். இவற்றின் மூலமும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானம் கிடைக்கும்.

நிறுவனப் பங்குகள் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டு களில் கிடைக்கும் வருமானத்துக்குக் குறைவான வருமான வரியைக் கட்டினால் போதும் என்பது சிறப்பு அம்சம் ஆகும். அதாவது, முதலீடு செய்து ஓராண்டு கழித்து பங்குகள் / யூனிட்டுகளை விற்கும்பட்சத்தில் நீண்ட கால ஆதாயத்துக்கு நிதி ஆண்டில் ரூ.1 லட்சம் வரைக்கும் வருமான வரி கிடையாது. அதற்கு மேற்படும் லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும், 10% வரி கட்டினால் போதும்.

முதலீட்டின் மூலம் கிடைக் கும் இரண்டாவது வருமானத் தைப் பெரும்பாலும் பணி ஓய்வுக்குப் பிறகு பயன்படுத்து வது நல்லது. இளமைக் காலத்தில் ஏதாவது ஒரு வழியில் இரண்டாவது வருமானம் வரும்பட்சத்தில் அதை சரி யாக முதலீடு செய்வதன் மூலம் கூடுதல் தொகையைப் பெற முடியும்.

எந்த வயதில் எவ்வளவு வருமானம்?

இரண்டாவது வருமான த்தைப் பெறும் வழிகளை ஒருவர் தனது 30 வயதுக்குள் தொடங்கிவிடுவது அவசியம். திருமணமாகி பிள்ளைகள் பிறந்து பள்ளிக் கூடம் செல்லும்போது குடும்பச் செலவு அதிகரிக்கத் தொடங்கி இருக்கும். அப்போது இந்த இரண்டாவது வருமானம் நிச்சயம் கைகொடுக்கும்.

(ஒருவர் எந்த வயதில், அவரின் முதல் வருமானத்தில் எத்தனை சதவிகிதம் இரண்டாவது வருமானம் பெற வேண்டும் என்பதை அட்டவணையாகத் தந்திருக்கிறோம்.)

சம்பளத்தைத் தாண்டி இன்னொரு வருமானம் வேண்டுமா..?
உங்களுக்குக் கைகொடுக்கும் எளிய வழிமுறைகள்!

ஒருவர் தனது 30-35 வயதில் முதல் வருமானத்தில் 10% இரண்டாவது வருமானமாக இருக்க வேண்டும். உதாரண மாக, ஒருவரின் 35-வது வயதில் வேலை மூலமான முதல் வருமானம் ரூ.50,000 எனில், இதில் 10% அதாவது, ரூ.5,000 இரண்டாவது வருமானமாகப் பெற வேண்டும். இதுவே இவரின் 55-வது வயதில் முதல் சம்பளம் ரூ. 1 லட்சம் எனில், இரண்டாவது வருமானம் 40% அதாவது, ரூ.40,000 வர வேண்டும்.

இரண்டாவது வருமானத்துக்கு நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும்பட்சத்தில், பார்க்கும் வேலையில் ஏதாவது திடீர் சிக்கல் ஏற்பட்டாலும் இரண்டாவது வருமானம் கைகொடுக்கும். மேலும், 45 வயதுக்குப்பின் ஒருவர் நிதிச் சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும். இதனால் அவரது நிதி தொடர்பான நெருக்கடி வெகுவாகக் குறையும்; தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் ஒருவர் நிம்மதியாக வாழமுடியும்.

உலகின் மிகப்பெரும் கோடீஸ்வர முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட், ‘‘ஒரு வருமானம் மட்டும் ஒருவருக்குப் போதாது. இரண்டாவது வருமானம் வரும் விதமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்’’ என்று சொல்லி இருக்கிறார். சம்பளம், வருமானத்தில் ஒரு பகுதியை மிச்சப்படுத்தி முதலீடு செய்து, அதன்மூலம் இரண்டாவது வருமானத்தை சுலபமாகப் பெற முடியும் என்கிறார் வாரன் பஃபெட் குறிப்பிடுகிறார்.

அவர் சொன்ன இன்னொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். ‘‘நீங்கள் தூங்கும்போதும் பணம் சம்பாதிக்கும் வழியைக் கண்டுபிடிக்கவில்லை எனில், சாகும் வரை நீங்கள் சம்பாதிக்க வேண்டும்’’ என்று சொல்லியிருப்பது அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் ஆகும். இதைப் புரிந்துகொண்டவர்கள் இரண்டாவது வருமானம் பெறும் ஏற்பாடுகளை நிச்சயம் செய்வார்கள்.

உங்கள் வாழ்க்கையில் இரண்டாவது வருமானம் பெறும் வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளைக் கடைப் பிடித்து, இரண்டாவது வருமானம் பெறத் தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இரண்டாவது வருமானம் பெற்று இனிதாக வாழ வாழ்த்துகள்!

மற்றவர்களின் தொழிலில் முதலீடு!

தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் நடத்தும் லாபகரமான தொழிலில் நீங்கள் பண முதலீடு செய்வது மூலம் அதிக இரண்டாவது வருமானம் ஈட்ட முடியும். ஆனால், இதில் ரிஸ்க் அதிகமாக இருக்கிறது. யாராக இருந்தாலும் ரத்த உறவாக இருந்தாலும் ஒப்பந்தம் போட்டு, அதை முறையாகப் பதிவு செய்யாமல் பணம் கொடுக்கக்கூடாது. லாபத்தில் உங்களுக்குப் பணம் தருவார்களா அல்லது இத்தனை சதவிகிதம் வட்டி தருவார்களா என்பதை எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும்.

இரண்டாவது வருமானம்... கட்டாயம் கவனத்தில்கொள்ள வேண்டியவை..!

தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் முதலீடு செய்து அதன் மூலம் இரண்டாவது வருமானம் பெறுவதற்கு எந்த ஒரு தடையும் கிடையாது. அதேநேரத்தில், வேறு வகையில் இரண்டாவது வருமானம் ஈட்டும்பட்சத்தில் குறிப்பாக புத்தகம் எழுதுவது, யூடியூப் வீடியோ போடுவது போன்றவற்றை மேற்கொள்ளும்போது தொடர்புடைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக்கொள்வது நல்லது. மேலும், இந்த வேலைகளை அலுவலக பணி நேரத்தில் மேற்கொள்ளக்கூடாது. பார்க்கும் வேலை தொடர்பான கொள்கைகளை விமர்சனம் செய்வது போலவும் இருக்கக்கூடாது. உங்களின் இரண்டாவது வருமானம் ஈட்டும் செயல்கள் உங்கள் அலுவகத்தின் பெயரை கெடுப்பதாக எக்காரணம் கொண்டும் இருக்கக்கூடாது. எனவே, இந்த விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலுவலகத்தின் மூலமே இரண்டாவது வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருந்தால் நல்லது.