நம் முதலீடு இரு மடங்காக அதிகரித்தால் நமக்கு எப்போதும் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஒரு காலத்தில் பல முதலீடுகள், இத்தனை ஆண்டுகளில் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் என சொல்லிதான் விற்கப்பட்டன. நவீன முதலீடுகளான பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வந்த பிறகுதான் இந்த முதலீடு இரட்டிப்பாக மாறும் கருத்து சற்று மாறியிருக்கிறது.
ஆனால், இப்போதும் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் திட்டங்களின் மீது நம்மவர்களுக்கு ஓர் கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது.

பத்தாண்டுகளில் பணம் இரு மடங்கு..!
அது போன்ற ஒரு திட்டம் தபால் அலுவலகத்தில் உள்ளது. அதன் பெயர் கிஷான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra - KVP) ஆகும். இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 7.2% வட்டி வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். அதன் பிறகு ரூ.100-ன் மடங்கில் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
கிஷான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ஆண்டுக்கு ஒரு முறை வட்டி, கூட்டு வட்டி முறையில் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த முதலீட்டில் முதலீட்டுத் தொகை 120 மாதங்களுக்கு பிறகு அதாவது 10 ஆண்டுகளுக்கு பிறகு இரு மடங்காக அதிகரிக்கும்.

பார்முலா..!
நாம் அனைவருக்கும் முதலீடு செய்யும்போது, எப்போது முதலீட்டுத் தொகை இரு மடங்காக அதிகரிக்கும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம். அதனை விதிமுறை 72 (Rule 72) மூலம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். பணம் எத்தனை ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என்பதற்கான பார்முலாதான் இது..!
முதலீடு இரு மடங்காகும் ஆண்டுகள் = 72/வட்டி விகிதம்
இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். ஒருவர் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்கிறார். அதற்கு ஆண்டுக்கு 8% வட்டி வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.
முதலீடு இரு மடங்காகும் ஆண்டுகள் = 72/8 = 9
அதாவது 72 -ஐ 8% ஆல் வகுத்தால் கிடைப்பது 9. அதாவது, இந்த ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு 9 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும்.
முதலீட்டுக்கு 12 சதவிகித வருமானம் கிடைத்தால் அது (72/12) 6 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும். எந்த வட்டி விகிதத்துக்கு எத்தனை ஆண்டுகளில் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் என்பதை கீழே அட்டவணையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அட்டவணை: வட்டி விகிதமும் முதலீடு இரு மடங்காக அதிகரிக்கும் காலமும்..!

உங்களின் முதலீடு இரு மடங்காக எத்தனை சதவிகிதம் வட்டி / வருமானம் கிடைக்க வேண்டும் என தெரிந்து கொண்டால், அதற்கு ஏற்ப திட்டமிட முடியும்தானே?
இந்த 72 விதிமுறையை உங்களின் முதலீடு இரு மடங்காக உயர, உங்கள் முதலீட்டுக்கு எத்தனை சதவிகிதம் வட்டி / வருமானம் கிடைக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள், அதற்கேற்ப பயன்படுத்தலாம். இப்படி செய்வதன் மூலம் ஒருவரின் நிதி இலக்கை சரியான காலத்தில் நிறைவேற்ற முடியும்.
முதலீடு இரு மடங்காக எவ்வளவு வட்டி கிடைக்க வேண்டும் என்பதை 72 / முதலீட்டுக் காலம் என்ற அடிப்படையில் பார்ப்போம்.
இதனை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் சுலபமாக புரியும். உங்களிடம் இப்போது 5 லட்ச ரூபாய் இருக்கிறது. அது இன்னும் 6 ஆண்டுகளில் இரு மடங்காக 10 லட்ச ரூபாயாக அதிகரிக்க வேண்டும். இதற்கு எத்தனை சதவிகிதம் வட்டி / வருமானம் தரும் திட்டத்தில் பணத்தை போட வேண்டும்?
முதலீடு இரு மடங்காக எவ்வளவு வட்டி கிடைக்க வேண்டும் = 72 / 6
அதாவது, 72-ஐ 6 ஆக வகுக்க 12 கிடைக்கும். அதாவது, ஆறு ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு 12 சதவிகிதம் வட்டி / வருமானம் கிடைத்தால் முதலீட்டுத் தொகையான 5 லட்ச ரூபாய், 6 ஆண்டுகளில் 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.
முதலீடு எப்போது மூன்று மடங்காகும்?
முதலீடு செய்த தொகை மூன்று மடங்கு பெருகுவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை விதிமுறை 114 -ன் உதவியுடன் கண்டறியலாம்.
முதலீடு செய்த பணம் எத்தனை ஆண்டுகளில் மூன்று மடங்காக உயரும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள முதலீட்டுக்கு கிடைக்கும் வட்டி சதவிகிதத்தை 114-ஐ வகுக்க வேண்டும்.
பார்முலா, முதலீடு மூன்று மடங்காகும் ஆண்டுகள் = 114 / வட்டி விகிதம். உதாரணத்துக்கு, முதலீட்டுக்கு ஆண்டுக்கு 8 சதவிகித வட்டி கிடைக்கிறது என வைத்து கொள்வோம்.

முதலீடு மூன்று மடங்காகும் ஆண்டுகள் = 114 / 8 =14.5
அதாவது, 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் பணம் மூன்று மடங்காக உயரும். ஒரு முதலீட்டுக்கு 12 சதவிகித வட்டி கிடைத்தால், (114/12) 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்களில் பணம் மூன்று மடங்காக உயரும். இனி உங்கள் முதலீடு எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு உயரும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்வீர்கள்தானே?