Published:Updated:

வங்கிகள் செய்யும் இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வது?

யெஸ் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ் பேங்க்

மக்கள் வாங்கிய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்வது பற்றி அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், மக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கிய கடனை அந்த வங்கியே தள்ளுபடி செய்து, பணம் தர முடியாது என்று சொல்லும் அநியாயத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

Published:Updated:

வங்கிகள் செய்யும் இந்த அநியாயத்தை எங்கே போய் சொல்வது?

மக்கள் வாங்கிய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்வது பற்றி அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், மக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கிய கடனை அந்த வங்கியே தள்ளுபடி செய்து, பணம் தர முடியாது என்று சொல்லும் அநியாயத்தைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

யெஸ் பேங்க்
பிரீமியம் ஸ்டோரி
யெஸ் பேங்க்

மக்கள் வாங்கிய கடனை வங்கிகள் தள்ளுபடி செய்வது பற்றி அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால், மக்களிடம் இருந்து வங்கிகள் வாங்கிய கடனை அந்த வங்கியே தள்ளுபடி செய்து, பணம் தர முடியாது என்று சொல்லும் அநியாயத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வங்கியிடம் பணம் கொடுத்து வைத்திருந்தவர்களுக்கு வட்டி மட்டுமல்ல, அசலும் கிடையாது என்று தைரியமாக அறிவித்திருக்கிறது ஒரு வங்கி. அந்த வங்கியின் பெயர், யெஸ் பேங்க் (Yes Bank). அட, இப்படியும் நடக்குமா என்று கேட்கிறீர்களா? வாருங்கள், என்ன நடந்ததென்று சொல்கிறேன்.

வங்கிகள்...
வங்கிகள்...

யெஸ் பேங்க் (Yes Bank) நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த வங்கி. பல்வேறு காரணங்களால் இந்த வங்கியின் நிதிநிலை மோசமாகி, பெரும் சிரமத்துக்கு உள்ளானது. அந்த வங்கியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை எடுத்துக்கொண்ட மத்திய ரிசர்வ் வங்கி, அதுவரை நிர்வாகம் செய்து வந்த இயக்குநர் குழுவைக் (Board) கலைத்துவிட்டு, ஒரு புதிய அமைப்பு உருவாக்கி அதன் தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் எஸ்.பி.ஐ வங்கியின் துணை எம்.டி மற்றும் சி.எஃப்.ஓ பிரசாந்த் குமாரை யெஸ் பேங்கின் சி.இ.ஓ-வாக நியமித்தது.

வங்கியின் நிதிநிலையை ஆராய்ந்து, உரிய  நடவடிக்கைகள் எடுத்து, பழையபடி வங்கி இயல்பாக இயங்குவதற்கான வழிமுறைகளை செய்யச் சொல்லி அவரைக் கேட்டுக் கொண்டது. அதற்காக அவர் எடுத்த சில நடவடிக்கைகளில் ஒன்றுதான், 2020-ம் ஆண்டு, மார்ச் 14 அன்று அவர் `ரைட் ஆப்’ செய்த ரூ.8,415 கோடி மதிப்பிலான `டயர் ஒன் பாண்டுகள்’ (Tier 1 bond) .

`ரைட் ஆஃப்’ என்றால், வங்கி இனி அந்தப் பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டியதில்லை என்று பொருள். அட, இது என்ன அதிசயமாக இருக்கிறது! ஒரு வங்கி பலரிடம் கடன் பத்திரங்களை விற்று, கடன் வாங்குமாம். அந்த வங்கிக்கு ஏதாவது ஒரு சிரமம் எனில், அது வாங்கிய கடனை அதுவே, `இனி நான் தர முடியாது’ என்று சொல்லிவிடுமாம். கடன் கொடுத்தவர்கள், சரி என்று பணத்தை மறந்துவிட வேண்டுமாம்!

பாண்டுகளில் இப்படி ஒரு வகை இருக்கிறது என்று எத்தனை நபர்களுக்கு முதலீட்டாளர்களுக்கு குறிப்பாக, சிறு முதலீட்டாளர்களுக்குத் தெரியும்? 

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

இந்த அரிய (!) வகை பாண்டுகள் உருவாக்கப்பட்டது, வங்கிகளின் நன்மைக்காக. வங்கிகள் அவை வைத்திருக்கும் ஆரம்ப முதலான ஈக்விட்டித் தொகையைக் (Equity Capital) காட்டிலும் கூடுதல் நஷ்டம் செய்து, மூலதனப் பணம் மொத்தத்தையும் இழக்கிற ஆபத்து வந்தால், அதிலிருந்து வங்கி அதைக் காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒரு ஏற்பாட்டை உருவாக்கி இருக்கிறார்கள், இந்த வகை பாண்டுகளுக்கு `Tier 1 bond’ என்று பெயர்.

நிரந்தர வைப்புகள் (FD) மற்றும் வழக்கமான பாண்டுகளுக்குக் கொடுப்பதைவிட Tier 1 bond-களுக்கு கூடுதல் வட்டி கொடுப்பதால், ரிஸ்க் இருந்தாலும் கூடுதல் வருமானம் வேண்டுபவர்கள் இந்த பாண்டுகளை வாங்குவார்கள். 

அப்படிப்பட்ட பாண்டை யெஸ் வங்கி வெளியிட்டு, அதற்கு ஆண்டுக்கு 9% வட்டி கொடுத்து வந்தது. இந்த 9% என்பது, அந்த பாண்டு வெளியிட்ட நேரத்தில் நடப்பிலிருந்த வட்டி விகிதத்தைவிட 2%, 3% அதிகம் இருக்கலாம், அவ்வளவுதான். ஆனால், அந்த சிறியளவு கூடுதல் வட்டிக்காக அதில் முதலீடு செய்தவர்கள் எடுத்த பெரிய ரிஸ்க், வங்கியின் நிதிநிலை மோசமானால் தங்கள் பணத்துக்கு `வட்டியே வராமல் போகலாம்’ என்ற நிலை மட்டுமல்ல, ஒரு கட்டத்தில் `மொத்த முதலும் திருப்பித் தரப்படாமல் போகலாம்’ என்பதும்தான்.

2008-ம் ஆண்டு உலக அளவில் பல்வேறு பெரிய நிதி நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கியபோது உருவாக்கப்பட்ட இந்தப் புதிய வகை பாண்ட் என்பது அந்த நிதி நிறுவனங்களால் உடனடியாகப் பெரும் முதல் திரட்ட முடியாது என்பதற்கு மாற்றாக உருவாக்கப் பட்டவை. பெரும் நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனங்கள் முதல் திரட்ட பங்குகள் வெளியிட்டால், வங்கியின் நிதிநிலை அறிந்த எவரும் அந்தப் பங்குகளை வாங்க முன்வரமாட்டார்கள்.

யெஸ் பேங்க்
யெஸ் பேங்க்

எனவே, மோசமான நெருக்கடியில் இருக்கும் வங்கிகள் பங்குகள் வெளியிட்டு முதல் திரட்ட முடியாது. அதற்கு மாற்று, கடன் பத்திரங்கள் பாண்டுகள் வெளியிட்டு முதல் திரட்டுவது. பாண்டுகள் வெளியிட்டால் அவற்றுக்குத் தொடர்ந்து நிச்சய வட்டி கொடுக்க வேண்டும். தவிர, குறிபிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு பாண்டுகளைப் பணம் கொடுத்து திரும்பப் பெற (redeem) செய்ய வேண்டும். வங்கி இருக்கும் நிலையில் இதெல்லாம் சாத்தியப்படுமா என்று சொல்ல முடியாது. 

இப்படிப்பட்ட நிலையில், என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள், ஈக்விட்டி போலவும் இல்லாமல், பாண்டு போலவும் இல்லாமல், இரண்டும் கலந்த ஒரு புதிய `ஃபைனான்சியல் புராடக்ட்’டை உருவாக்கினார்கள். அதுதான் இந்த `Tier 1 bond'.  

Tier 1 bond அம்சங்கள் என்ன?

முதல் அம்சம், இவற்றை வங்கி எப்போது `ரெடீம் செய்யும்’ (பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்) என்கிற காலவரை இல்லை. பொதுவாக, பாண்டுகள் 5, 7, 10, 15 ஆண்டுகள் என்பது போல கால வரையறையுடன்தான் வெளியிடப்படும். குறிப்பிடப்பட்ட ஆண்டுகளுக்குப்பின் வங்கியானது இந்த பாண்டைப் பெற்றுக்கொண்டு பணத்தைத் திருப்பித் தர வேண்டும். ஆனால், Tier 1 bond -களை, அவற்றின் `ஈக்விட்டி கேப்பிடல்’ போல வங்கிகள் தொடர்ந்து வைத்துக்கொள்ளலாம். அவை நிரந்தர பாண்ட் (perputual) வகையைச் சேர்ந்தவை.

இரண்டாவது அம்சமும், ஏனைய பாண்டுகளில் இருந்து வேறுபடும் விதமும் அவை தரக்கூடிய வருமானம் பற்றியது. Tier 1 bond -களுக்கு ஒப்புக்கொண்ட அளவில் குறிப்பிட்ட வட்டி தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், வங்கியின் நிதிநிலை மோசமானால், வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கலாம்; அவசியம் என்றால் வட்டி கொடுப்பதை நிறுத்தவும் செய்யலாம். வங்கியின் நிதிநிலை மேலும் மோசமானால் பாண்டுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பித் தர வேண்டாம். தள்ளுபடி செய்யலாம். 

பணம்
பணம்

இதென்ன `ஈக்விட்டி கேப்பிடலுக்கு’ உள்ள அம்சங்களைச் சொல்லி, இவை எல்லாம் புதிய வகை பாண்டுகளின் அம்சங்கள் என்கிறீர்கள் என்று கேட்கலாம். சந்தேகமும் கேள்வியும் சரிதான்.

`மாப்பிள்ளை இவர்தான். ஆனால், அவர் போட்டிருக்கும் சட்டை என்னதில்லை’ என்று படையப்பாவில் ரஜினி சொல்வாரே அந்த மாதிரி, இவற்றுக்கு பெயர் என்னவோ பாண்டுகள்தான். ஆனால், அவை பாண்டுகளைப் போல நிலையான வருமானமும், முதலுக்கு உத்தரவாதமும் இல்லாதவை. பங்குகளைப் போன்ற டிவிடெண்ட் கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். அப்படிக் கொடுக்கவில்லை என்றால் ஏனென்று கேட்க முடியாது.

இப்படி ஒரு ரிஸ்க் இருந்தாலும் இவற்றை ஏன் சில முதலீட்டாளர்கள் வாங்குகிறார்கள்?

மற்ற பாண்டுகளைக் காட்டிலும் Tier 1 bond வாங்கியவர்களுக்குக் கூடுதல் வட்டி கிடைக்கும் என்பதுதான் காரணம்.

வட்டியைக் குறைப்பது, தள்ளுபடி செய்வது, போட்ட பணம் இல்லை என்பதெல்லாம் மிகப் பெரிய நஷ்டங்கள் வந்தால் மட்டும் தான் நடக்கும்... எடுத்தவுடனேயோ, எல்லா நேரத்திலோ இப்படி நடப்பதில்லை.. அப்படி நடக்க வாய்ப்பு உண்டு. ஆனால், நிச்சயம் நடக்கும் என்று சொல்ல முடியாது.

வங்கி `Tier 1 bond’ பணத்தை வைத்து அதன் நிலையை சரிசெய்துகொள்ளும். எல்லாம் சரியாகிவிட்டால், பாண்ட் வாங்கியவர்களுக்குக் கூடுதல் வட்டி கிடைத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கவர்ச்சி.

இந்த பாண்டில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு குறைவு என்று கணிப்பவர்கள் Tier 1 bond-களை வாங்குவார்கள். இப்படியாக எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி வங்கி போன்ற பல்வேறு வங்கிகள் Tier 1 bond-களை வெளியிட்டு ஒழுங்காக வட்டி கொடுத்து வருகின்றன.

டெபாசிட்
டெபாசிட்

எஸ் வங்கியின் Tier 1 bond-களும் அதே அடிப்படையில் வெளியிடப்பட்டவைதான். ஆனால், வாங்கிய முதலீட்டாளர் களுக்கு இந்த அம்சங்கள் எல்லாம் சரியாக தெரிவிக்கப் படவில்லை.

யெஸ் வங்கியில் பிக்ஸட் டெபாசிட் போட்டிருந்தவர்களை, `நீங்கள் உங்கள் FD-களை இந்த Tier 1 bond -களாக மாற்றிக்கொள்ளுங்கள். இவை `சூப்பர் FD’. இவற்றுக்குக் கூடுதல் பாதுகாப்பு உண்டு. தவிர, வட்டியும் அதிகம் கிடைக்கும்’ என்று இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி விற்றிருக்கிறார்கள்.

வங்கி அதேதான். சாதா டெபாசிட்டை சூப்பர் டெபாசிட் என்று ரீல் விட்டிருக்கிறார்கள். வட்டி அதிகம் என்றால், யாராவது வேண்டாம் என்பார்களா? பல வாடிக்கையாளர்கள் அவர்கள் FD பணத்தை அதில் மாற்றியிருக்கிறார்கள்.

அந்த பாண்டுகளில் முதலீடு செய்தவர்களில் நிப்பான் ரிலையன்ஸ் ஃபண்ட் உட்பட சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அடக்கம். முக்கியமாக 1,346 தனிநபர்கள். அதில் 1,311 பேர் எஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக ரூ.8,415 கோடிக்கு பாண்டுகள் வாங்கியிருந்தார்கள்.

2020-ம் ஆண்டு பல்வேறு காரணங்களினால் எஸ் பேங்க் பெரிய நஷ்டத்தைச் சந்தித்து, பெரும் நிதி நெருக்கடிக்குள்ளாகி மூழ்கும் நிலை வந்தபோதுதான் மேலே பார்த்தது போல இனி ’Tier 1 bond’-களுக்கு வட்டியோ, அசலோ தரப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.

கலங்கிபோன முதலீட்டாளர்கள், மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகினார்கள். விசாரித்த நீதிமன்றம், எஸ் வங்கியின் தலைவராக இருந்த ராணா கபூருக்கு Tier 1 bond-களை ‘சூப்பர் FD’ என்று ’மிஸ் செல்லிங்’ செய்த காரணத்துக்காக ரூ.2 கோடி தனிப்பட்ட அபராதம் விதித்தது. முக்கியமாக, எஸ் வங்கியின் Tier 1 bond-கள் குறித்து அறிவித்தது செல்லாது என்று தீர்ப்பு கூறியுள்ளது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து ரிசர்வ் வங்கியும் எஸ் வாங்கியும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளன.

சோம வள்ளியப்பன்
சோம வள்ளியப்பன்

பாண்ட் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் பணம் திரும்பக் கிடைக்குமா என்று தெரியவில்லை. கிடைத்தாலும் எப்போது எவ்வளவு என்று தெரியவில்லை. இந்த பாண்டுகளில் பணத்தைப் போட்டவர்கள் நீதிமன்றத்தில் சொல்லியிருப்பது, மொத்தத் தொகையைத் தராவிட்டாலும், ஒரு `ஹேர் கட்’ செய்து, குறைந்தபட்சம் 100-க்கு 80% குறைத்துக்கொண்டாலும் பரவாயில்லை. மீதப் பணத்துக்கு எங்களுக்கு எஸ் வங்கியின் பங்குகளாகக் கொடுத்துவிடுங்கள் என்பதாகும். தீர்ப்புக்காக காத்திருக்கிறார்கள் பணம் போட்டவர்கள்.

கூடுதல் வட்டியை எதிர்பார்த்தவர்கள், இப்போது கூடுதல் ரிஸ்க் இருப்பது தெரியாமல் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். அனைத்து Tier 1 bond-களும் யெஸ் பேங்க் வெளியிட்ட இப்படி Tier 1 bond-கள் மாதிரி ஆகிவிடவில்லை. ஆனால், ஒன்றிரண்டு பாண்டுகள் அப்படி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனவே, எதில் பணம் போடுவதாக இருந்தாலும் அதில் உள்ள ரிஸ்க் என்ன, பாதுகாப்பு என்ன என்பதை நன்கு புரிந்துகொண்டு பணம் போடுவது நல்லது!

(மீண்டும் அடுத்த திங்கள் வருவேன்)