Published:Updated:

பங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்? #DoubtOfCommonMan

முதலீடு

தற்போதுள்ள அசாதாரணச் சூழலில் பலருக்கும் எதிர்கால திட்டம் பற்றிய, சேமிப்பு பற்றிய யோசனை எழத் தொடங்கியுள்ளது.

Published:Updated:

பங்குசந்தை, தங்கம்... இப்போதைய சூழலில் எதில் முதலீடு செய்யலாம்? #DoubtOfCommonMan

தற்போதுள்ள அசாதாரணச் சூழலில் பலருக்கும் எதிர்கால திட்டம் பற்றிய, சேமிப்பு பற்றிய யோசனை எழத் தொடங்கியுள்ளது.

முதலீடு
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகர் அன்பரசன், அடுத்த 10 ஆண்டுகளில் எந்த முதலீடு லாபம் தரக்கூடியது எனக் கேட்டிருந்தார். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
Doubt of a Common Man
Doubt of a Common Man
சாதாரணமாக முதலீடுகளை நான்கு வகையாகப் பார்க்கலாம். தங்கம், நிலம், பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் சார்ந்த முதலீடுகள். கடன் சார்ந்தவைகளில் காப்பீடு, அஞ்சலக சேமிப்பு, பி.பி.எஃப் (Public Provident Fund), பி.எஃப் (Provident Fund) ஆகியன.
சொக்கலிங்கம் பழனியப்பன்

இந்தக் கேள்வியைப் பொருளாதார நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன் முன் வைத்தோம்.

"கடந்த 10 ஆண்டுக்கால முடிவைப் பார்த்தால் பங்குச்சந்தை நல்ல லாபத்தைப் பெற்றுதந்துள்ளது. இதோடு பங்கு சார்ந்த முதலீடான மியூச்சுவல் ஃபண்டும் நல்ல லாபத்தையே பெற்றுள்ளன. பொதுவாக எப்போதுமே ஒரே முதலீட்டை நோக்கிச் செல்லாமல் முதலீட்டுத் திட்டத்தைப் பரவலாக வைத்துக்கொள்வது நல்லது. ஒருவரின் தேவைக்கேற்ப முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். முதலீடுகளில் நீண்ட காலத்திற்கு அதிக லாபம் தரக்கூடியது, பங்கு சார்ந்த முதலீடுகள்தான்.

சாதாரணமாக முதலீடுகளை நான்கு வகையாகப் பார்க்கலாம். தங்கம், நிலம், பங்கு சார்ந்த முதலீடுகள், கடன் சார்ந்த முதலீடுகள். கடன் சார்ந்தவைகளில் காப்பீடு, அஞ்சலக சேமிப்பு, பி.பி.எஃப் (Public Provident Fund), பி.எஃப் (Provident Fund) ஆகியன.

சொக்கலிங்கம் பழனியப்பன்
சொக்கலிங்கம் பழனியப்பன்

இவற்றில் நிலத்தில் ஒருவர் வீடு கட்டினாலே அது அவர்களுக்கு முதலீடு போல ஆகிறது. இதனால் இதற்கு மேல் நிலத்தில் முதலீடு செய்யவேண்டிய அவசியம் கிடையாது. ஆனால், நிலத்தை நினைத்த நேரத்தில் நம்மால் விற்கமுடியாது. மேலும் அவசரகால தேவைக்கு உடனடியாக பணமும் திரட்ட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அதற்கடுத்து இந்தியாவில் தங்கத்தில் நிறைய ஆபரணங்கள் மக்களால் வாங்கப்படுகின்றன. இதையும் மீறி கையில் இருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அரசின் தங்க பத்திர திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். இதில் வருடத்திற்கு 2.5% வட்டி கிடைப்பதால் சாதாரண தங்க முதலீட்டைவிட கூடுதலாக வருமானம் தரக்கூடிய ஒன்று. நமது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்திசெய்ய தங்கத்திலும், நிலத்திலும் மட்டுமே முதலீடு செய்யலாம். இதற்கு அடுத்து கடன் சார்ந்த திட்டங்களான பி.எஃப், பி.பி.எஃப், அஞ்சலக சேமிப்பு போன்றவை முதலீடு செய்ய உகந்ததாக உள்ளது. இது நிச்சயம் திரும்ப கிடைக்கக்கூடிய ஒன்று என்பதால் மக்கள் அதிக அளவில் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

இதற்கடுத்து பங்கு சார்ந்த முதலீடுகள் அதிக லாபம் தரக் கூடியவையாக உள்ளன. பங்குச்சந்தை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாதவர்கள் நேரடியாகப் பங்குகளை வாங்குவது சிக்கலான ஒன்று. இதற்கு பதிலாக பங்கு சார்ந்த இக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் (Equity Mutual Funds) முதலீடு செய்யலாம். இதிலேயே மாதாந்திர முதலீடுகளான எஸ்.ஐ.பி (Systematic Investment Plan) போன்றவை உள்ளன. தொடர்ந்து 10, 15 வருடங்களுக்கு முதலீடு செய்துவந்தால் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. ஏற்கெனவே இது கடந்த 10 ஆண்டுகளில் நல்ல லாபத்தை பெற்றுத் தந்த முதலீடுதான். அதனால் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து லாபம் பெற விரும்புவோர் எஸ்.ஐ. பி மியூச்சுவல் ஃபண்டைத் தேர்வு செய்யலாம். இதில் மாதாமாதம் பணம் கழிக்கப்படும் என்பதால் முதலீட்டில் ஒழுக்கமும் இருக்கும். இது செபி (Securities and Exchange Board of India) போன்ற அமைப்புகளால் கண்காணிக்கப்படுகிறது என்பதால் பாதுகாப்பானது கூட. இதிலும் ஆபத்து நிறைந்துள்ளது என்றாலும் நிச்சயம் கணிசமான தொகை திரும்ப வந்துவிடும். அவசர கால தேவைக்கு இதிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம்.

Mutual funds
Mutual funds

மாதாந்திர தொகையைச் செலுத்த முடிவில்லை என்றால் திட்டத்திலிருந்து விலகவும் முடியும். இப்படி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது என்பது இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது போன்றது. அதனால் நீண்ட காலத்திற்கு இது சிறப்பான முதலீடு திட்டமாகும். கடந்த 10 ஆண்டுகளில் இது சார்ந்த முதலீடுகள் 10 முதல் 11 சதவிகித லாபத்தைக் கொடுத்துள்ளன. ஒரு நபர் 10 ஆண்டுகளுக்கு முன் ஒரு லட்சம் முதலீடு செய்திருந்தால் அவருக்கு 3 லட்சம் அளவிற்குத் தற்போது பணம் அதன் மூலம் கிடைத்திருக்கும். இப்போது சந்தை இறங்குமுகமாகக் காணப்படுவதால் இதுவும் குறைந்து காணப்படுகிறது.

நீண்ட கால முதலீடு என்று பார்த்தால் மியூச்சுவல் ஃபண்ட் நல்ல முதலீட்டைக் கொடுத்திருக்கிறது. தங்கம் அவ்வப்போது லாபம் கொடுக்கும்... இல்லையேல் கொடுக்காது. 2012- லிருந்து 2018 வரை தங்கத்தின் மதிப்பு அதிகமாகவேயில்லை. இப்போது 2019ல்தான் தங்கம் ஏற்றமடையத் தொடங்கியுள்ளது. கொரோனா சமயத்திலேயே பங்குச்சந்தை மூலம் கணிசமான லாபம் கிடைத்துள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு இது நிச்சயம் உயரும். அடுத்த 10 வருடங்களுக்குப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இதுவே சரியான தருணம். பங்குச் சந்தை 30 சதவிகித வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால் இந்த சமயத்தில் நீண்ட கால லாபம் அதிகமாகக்கூடும்" என்றார்.

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of a common man
Doubt of a common man