
- இல்லத்தரசியால் உருவான சாம்ராஜ்ஜியம்
மாம்பழ ஏற்றுமதிக்குப் புகழ்பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூரிலுள்ள ‘ஏ.பி.சி ஃப்ரூட்ஸ்’ நிறுவனத்துக்குச் செல்ல சாமானியர்களும் வழிகாட்டுகிறார்கள். பழக் கூழ் உற்பத்தியில் இந்தியாவில் மூன்றாம் இடத்திலும், தமிழகத்தில் முதலிடத்திலும் இருக்கிறது இந்த நிறுவனம். பெற்றோர், இரண்டு பிள்ளைகளுடன் குடும்பத் தொழிலாக நிர்வகிக்கப்படும் நிறுவனத்தின் ஆச்சர்ய வளர்ச்சிக்கு மூலகாரணம் சாந்தி விஜயன்.
பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர், இப்போது நிறுவனத்தின் நிதி நிர்வாக இயக்குநர். கூட்டு உழைப்பினால் பெரும் வெற்றியை வசப்படுத்தலாம் என்பதற்கு, பழக் கூழ் உற்பத்தியில் இவர்கள் அடைந்திருக்கும் உயரம், கண்கூடான உதாரணம்.
“பேங்க் மேனேஜர் வேலையில இருந்தேன். மாம்பழக்கூழ் ஃபேக்டரி ஒண்ணு விலைக்கு வந்துச்சு. முதலீடுக்குப் பணம் போதலை. குழப்பமான நேரத்துல, ‘நம்பிக்கை இருந்தா தாராளமா ரிஸ்க் எடுங்க’ன்னு சொன்னதுடன், தன் நகைகளையும் தயங்காம என்கிட்ட கொடுத்து ஊக்கப்படுத்தினாங்க என் மனைவி” என்று பெருமிதப்படும் விஜயன், 2000-ம் ஆண்டில் சிறிய அளவில் தொடங்கிய நிறுவனம், ஆண்டுக்கு 500 கோடிக்கும் அதிகமான வர்த்தகத்துடன் பெரிய ஸ்தாபன மாக வேர்விட்டுக் கிளைகள் பரப்பியுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சியில் ஆணிவேராக இருக்கும் சாந்தி உற்சாகமாக ஆரம்பித்தார்...

“ஆரம்பத்துல மூணு லிட்டர் கேன்ல பழக்கூழை விற்பனை செஞ்சோம். கேன்களை அடுக்கி வைக்க அதிக இடப்பரப்புடன், செலவும் உயர்ந்துச்சு. இத்தாலியி லேருந்து பிரத்யேக மெஷின்களை இறக்குமதி செய்ய கோடிக்கணக்குல கடன் வாங்கினோம். பிறகு, இருநூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட பேரல்ல பழக்கூழை நிரப்பினோம். அஞ்சு வருஷங்கள் ரொம்பவே போராடி கடனையெல்லாம் அடைச் சோம்” - வளர்ச்சிக்குத் திரும்பிய கதை யுடன் சாந்தி நிறுத்த, எதிர்பாராத அதிரடி திருப்பங்கள் குறித்துச் சொன்னார், நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான விஜயன்.
“குடோன்ல அடுக்கி வெச்சிருந்த பேரல்கள் திடுதிப்புனு வெடிக்க ஆரம்பிச்சது. எரிமலைக்குழம்பு வெடிக்கிற மாதிரி தினமும் நூற்றுக்கணக்கான பேரல்கள் பயங்கர சத்தத்துடன் வெடிக்க, அதோட மூடிகள் 100 அடி உயரத்துக்குப் பறக்கும்; பழக்கூழ் நாலாபுறமும் தெறிக்கும். ஊழியர்கள் பலரும் வேலைக்கு வரவே பயந்தாங்க. குழப்பத்துல நானும் வீட்டுலயே இருந்துட்டேன்” - கணவர் தடுமாறிய நேரத்தில் துணிச்சலாக முடிவெடுத்த சாந்தி, சமயோஜிதமாகச் சிக்கலைக் கையாண்டிருக்கிறார்.
“இருக்கிற பணியாளர்களையாச்சும் தக்கவைக் கணும்னு தைரியமா கம்பெனிக்குப் போனேன். சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்துல பழக் கூழை பேரல்ல அடைக்கிறதுலதான் சில சிக்கல்கள் ஏற்பட்டிருந்துச்சு. இத்தாலியிலேருந்து வல்லுநர்களை வரவெச்சு எங்க ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத் தோம். பிரச்னை சரியானாலும், அந்த வருஷம் ஏகப் பட்ட நஷ்டம். கடன் கொடுத்தவங்க வீடு தேடி வந்து சத்தம்போட ஆரம்பிச்சாங்க. இருந்த சில மனைகளை யும் வித்து, கடனையெல்லாம் அடைச்சோம்” என்ற சாந்தி, தொழிலில் ஏற்பட்ட அடுத்தடுத்த திருப்பங் களிலும் திடமாக இருந்திருக்கிறார்.
“2010-ல் உலக அளவுல பழக்கூழ் விலை குறைஞ்சு பல கோடி ரூபாய் நஷ்டம். மறுபடியும் போராட்டம், கூடுதல் உழைப்புனு நிலைமையை சமாளிச்சோம். 2012-ல் பழக்கூழ் இண்டஸ்ட்ரி வீழ்ச்சியடைஞ்சது. நிறைய நிறுவனங்கள் மூடப்பட்டன. நானும் பிசினஸ் வேண்டாம்ங்கிற முடிவுக்கு வந்துட்டேன். ஆனா, ‘இதுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டோம். எந்தச் சூழ்நிலையிலயும் தொழிலைக் கைவிடக்கூடாது’னு என் மனைவி பிடிவாதமா இருந்தாங்க. அதோட தொடர்ந்து ஊக்கம் கொடுத்தபடியே இருக்க... அடுக் கடுக்கான கஷ்டங்கள்ல இருந்து மீண்டு வளர்ச்சி பெற்றோம்” என்ற விஜயன், இதற்காக தன் மனைவி காட்டிய அர்ப்பணிப்பான பணிகளை நெகிழ்ச்சி யுடன் பகிர, சாந்தியின் முகத்தில் மலர்ச்சி.

“நான் கிராமத்து ஆளு. அனுபவப் படிப்புதான் என்னை இவ்வளவு தூரம் இயக்கிச்சு. 2012-ம் வருஷம் வரை மாம்பழக்கூழ் மட்டுமே தயாரிச்சோம். கோடைக்காலத்துல மூணு மாசங்களுக்குத்தான் அதன் உற்பத்தி நடக்கும். அந்தப் பழக்கூழை வருஷம் முழுக்க விற்போம். இனி என்ன நடந்தாலும் பிசினஸ்தான் நமக்குனு வைராக்கியமா முடிவெடுத்ததும், நிலை யான வளர்ச்சிக்காக, வெவ்வேறு சீசன்ல கிடைக்கிற பழங்கள்லேருந்தும் பழக்கூழ் தயா ரிக்க ஆரம்பிச்சோம். ஆரம்பத்துல ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணவே தடுமாறி னேன். வரவு, செலவுனு கம்பெனியோட பணம் சார்ந்த எல்லா வேலைகளையும் இப்ப நான்தான் கவனிச்சுக்கிறேன். எவ்வளவோ நெருக்கடிகள் வந்தும் நிறுவனத்தை விற்காம இருந்ததுதான் நாங்க எடுத்த சரியான முடிவு. இந்த இண்டஸ்ட்ரியில ஏற்றுமதிதான் வளர்ச்சிக்குக் கைகொடுக்கும். அதை எங்க பசங்க ரெண்டு பேரும் சாத்தியப்படுத்த, நிறுவனம் வேகமா வளர ஆரம்பிச்சது” வெற்றிச்சிரிப்புடன், மகன்களைத் தட்டிக் கொடுத்தவாறே சொல்கிறார் சாந்தி.
மாம்பழம், கொய்யா, தக்காளி, வாழை, அன்னாசி, பப்பாளிப் பழங்களிலிருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் பழக்கூழ் உற்பத்தி செய்கிறார்கள். அதில், 70 சதவிகிதம், சீனா, ஜெர்மனி, கனடா உள் ளிட்ட 80 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மூன்று கிளைகள், 1,000 ஊழி யர்கள் என இந்த நிறுவனம் வீறுநடை போடுகிறது.
“தனியார் நிறுவனங்கள் சிலதுல வேலை செஞ்சிட் டிருந்தேன். 2013-ல் எங்க நிறுவனத்துல சேர்ந்தேன். உற்பத்தி வேலைகளை கவனிச்சுக்கிட்டே, ஸ்டீல் டிரம் தயாரிப்புக்கான நிறுவனத்தையும் நடத்துறேன். எங்க கம்பெனிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருக்கிற பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றுக்கும் தேவையான ஸ்டீல் டிரம்களைத் தயாரிச்சுக் கொடுக்கிறேன்” என்று சந்தோஷமாகச் சொல்கிறார், விஜயன் - சாந்தி தம்பதியின் மூத்த மகனும், இந்த நிறுவனத்தின் உற்பத்தி இயக்குநருமான வினோத்.
சாந்தியின் இளைய மகனும், நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குநருமான விவேக், உற்பத்தி விஷயங்களைப் பகிர்ந்தார். “இயந்திரத்தின் உதவியுடன் தரமான பழங் களை நீரால சுத்தம் பண்ணி, கொட்டையைப் பிரிச்சு, சதையைச் சரியான பதத்துல அரைச்சு, பழக்கூழை வெப்பப்படுத்திக் குளிர்விப்போம். அதை 200 கிலோ முதல் 1,000 கிலோ வரை யிலான பேரல்கள்ல அடைச்சு ஏற்றுமதி செய் வோம். தவிர, பழக்கூழை மூணு கிலோ டின்ல அடைச்சு, இந்தியாவுக்குள் விற்பனை செய் றோம். பதப்படுத்தப்பட்ட பழக்கூழ் ரெண்டு வருஷங்களுக்குக் கெடாது. அவை ஜூஸ், ஜாம், ஐஸ்க்ரீம், கேக், ஜெல்லி, மில்க்ஷேக்னு பல்வேறு உணவுப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும்” என்றார் பிரமாண்டமான நிறு வனத்தைச் சுற்றிக்காட்டியபடியே.
“பிசினஸ்ல வெற்றி, தோல்வி சகஜம். எது நடந்தாலும் குறிக்கோளை நோக்கி அர்ப் பணிப்புடன் வேலை செஞ்சா உறுதியா ஜெயிக்கலாம்” வெற்றிச் சூத்திரத்தை உத்வேகத் துடன் சாந்தி சொல்ல, கணவரும் மகன்களும் அவரைக் கட்டியணைத்து தம்ஸ்அப் காட்டிச் சிரிக்கின்றனர்.