லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

இது என் அம்மாவின் நம்பிக்கை! - கீதாஞ்சலி

கீதாஞ்சலி
பிரீமியம் ஸ்டோரி
News
கீதாஞ்சலி

ஆச்சர்யம்

ல தொழில்களை வெற்றிகரமாக நடத்திய பெண் தொழிலதிபர், ஒடிசி மற்றும் பாலே நடனத்திலும் கில்லாடி, கராத்தேவில் பிளாக் பெல்ட், கல்வியாளர்... இப்படிப் பல துறைகளில் முத்திரை பதித்துக்கொண்டிருப்பவர் கீதாஞ்சலி. அத்துடன் லடாக் பகுதியில் ஹிமாலயன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆல்டர்னேட்டிவ்ஸ், லடாக் [HIAL] என்ற கல்வி நிறுவனத்தை உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறார் 46 வயதாகும் கீதாஞ்சலி.

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

``ஒடிசாவின் பாலசோர் என் சொந்த ஊர். பெண்கள் எப்போதும் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற நம்பிக்கை கொண்டவர் என் அம்மா. சிறுவயது முதலே அதே நம்பிக்கையை அளித்து என்னையும் வளர்த்தார். ஆர்வத்தோடு அறிவியலில் பட்டப்படிப்பும் எம்.பி.ஏ-வும் படித்து முடித்தேன். பிறகு வெளிநாட்டில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தேன். அங்கிருந்து தாயகம் திரும்பியபின் சென்னையில் இயங்கிக்கொண்டிருந்த எனது பதிப்பகத்தின் மூலம் கல்கியின் `சிவகாமியின் சபதம்' நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

2015-ம் ஆண்டு, சென்னையில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தை ஏற்றதுடன் சில பாடங்களை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தேன். அப்போதுதான் கற்பித்தலில் உள்ள மனநிறைவை முழுவதுமாக உணர்ந்தேன். அதோடு, கல்வி சம்பந்தமான பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டபோது தரமான கல்வியைப் பயிற்றுவிக்கும் முறைகளை அறிந்தேன். கல்வி முறையில் பல புதுமைகளைப் புகுத்தி ஆசிரியர்-மாணவர் உறவில் நல்லிணக்கம் நிலவ புதிய உத்திகளைக் கையாண்டேன். பல்துறை அனுபவங்களை ஒருங்கிணைத்து புதிய பள்ளி ஒன்றை உருவாக்கும் எண்ணம் இப்படித்தான் தோன்றியது.

2017-ம் ஆண்டு லடாக்கில் கல்வி நிறுவனத்தை நிறுவ சமூகச் செயற் பாட்டாளர் ஒருவர் முயற்சி செய்வதை அறிந்தேன். அவருடன் இணைந்து HIAL-ஐ உருவாக்கினேன். லடாக்கில் உள்ள கல்வி நிறுவனம் சமூக அக்கறையுடன் கூடிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆராய்ச்சியும் தொழில் முனைவுத் திறனும் ஒருங்கே கற்பிக்கப்படுகிறது. மாணவர்களிடம் இருந்து உணவு, உறைவிடம், கல்விக் கட்டணம் என எந்தவித கட்டணமும் வசூல் செய்வதில்லை. எல்லா வசதிகளையும் இலவசமாகவே அளிக்கிறோம். எதிர்காலத்தில் மாணவர்களின் தொழில் முனைவுத் திறத்தின் மூலம் பல சேவைகளை வழங்கியும் தொழிற்சாலைகளை உருவாக்கி லாபம் ஈட்டியும் இந்தக் கல்வி நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளோம்.

நான் லடாக்கில் பள்ளி-கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி அளிக்கிறேன். `பீஸ்ஃபுல் வாரியர்ஸ்' என்ற கராத்தே படையை உருவாக்கி இந்தியா முழுவதும் உள்ள பள்ளி - கல்லூரி மாணவிகளுக்கு இந்தத் தற்காப்புக் கலையை கற்றுத்தர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இதோடு, நான் பயின்ற ஒடிசி மற்றும் ரஷ்ய நடனத்தைப் பயிற்றுவிப்பதுடன், தேசிய, சர்வதேச நடன நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுகிறேன்.

கீதாஞ்சலி
கீதாஞ்சலி

இப்போது இந்திய பண்பாடு, கலாசாரத்தை சர்வதேச மாணவர்கள் உட்பட பலருக்கும் எங்கள் கல்வி நிறுவனத்தின் மூலம் விரிவுபடுத்த நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கென என் வாழ்நாளை அர்ப்பணிக்க உத்தேசித்துள்ளேன்’’ எனத் தன்னம்பிக்கை மிளிரப் பேசுகிறார் கீதாஞ்சலி.