
அவன் இறந்த பிறகு ஸ்டூடியோவை நானே நடத்தறேன்னு சொன்னதும் யாருமே சப்போர்ட் பண்ணல. அதெல்லாம் தேவை யில்லாத வேலைன்னாங்க
சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் அமைந்துள்ளது ரெயின்போ ஸ்டூடியோ. 1992-ம் ஆண்டு நவநீதத்தின் மூத்த மகன் தொடங்கியது. மகனின் பிசினஸ் வளர்ச்சியைக் கண்குளிர ரசித்துக் கொண்டிருந்த நவநீதத்துக்கு இடியாக இறங் கியது அந்தச் சம்பவம். 1998-ல் நவநீதத்தின் மகன் திடீரென இறந்துபோக, சோகத்தை விழுங்கியபடி குடும்பத்துக்காக ஓடத் தொடங்கினார் நவநீதம். மகன் விட்டுச்சென்ற ஸ்டூடியோவை நடத்த ஆரம்பித்தவருக்கு இன்றும் நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு.
டிஜிட்டலில் போட்டோவை எடிட் செய்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார் நவநீதம்... ‘`மூத்த புள்ளதான் ஸ்டூடியோ வெச்சு நடத்திட்டிருந்தான். டூர் போனவன் திடீர்னு இறந்ததுக்கு அப்புறம் வாழ்க்கையே சூன்யமா தெரிஞ்சுது. அடுத்த மகனையும் மகளையும் எப்படி வளர்த்து ஆளாக்கப் போறேன்னு கலங்கி நின்னபோது, திடீர்னு ஒருநாள் அந்த ஸ்டூடியோவை நானே நடத்தினா என்னன்னு தோணுச்சு.
என் பையன் உயிரோட இருந்தபோதே எனக்கு போட்டோ எடுக்கவும் ஃபிலிம் கழுவவும் சொல்லிக் கொடுத்திருந்தான். அவன் இறந்த பிறகு ஸ்டூடியோவை நானே நடத்தறேன்னு சொன்னதும் யாருமே சப்போர்ட் பண்ணல. அதெல்லாம் தேவை யில்லாத வேலைன்னாங்க. எனக்கு வேலை தெரியுது... யார் என்ன சொன்னா என்ன.... இருக்குற ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்த எனக்கு அதைவிட்டா வேற வழி தெரியலைனு நானே போட்டோ ஸ்டூடியோவை நடத்த ஆரம்பிச்சேன். திரும்பிப் பார்க்குறதுக்குள்ள 25 வருஷங்கள் ஓடிப்போச்சு.
நான் நடத்த ஆரம்பிச்ச நாள்ல இருந்து இப்போ வரைக்கும் ஸ்டூடியோவை ஒருநாள் கூட மூடுனது இல்ல. ஆரம்பத்துல ஸ்டூடியோ வுக்கு வர்றவங்க, ‘நீங்களா போட்டோ எடுப் பீங்க’ன்னு ஆச்சர்யமா பார்த்திருக்காங்க. போட்டோ எடுத்து பிரின்ட் போட்டு கையில கொடுக்கும்போது என்னை பிரமிப்பா பார்ப் பாங்க. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா ஸ்டூடியோவை வளர்த்தெடுத்துட்டேன். இப்போ பெரம்பூர்ல `ரெயின்போ ஸ்டூடியோ'ன்னா தெரியாதவங்களே இருக்க மாட்டாங்க. ‘எங்களாலயே ஸ்டூடியோவை நடத்த முடியலையே... நீங்க தனி மனுஷியா எப்படி சமாளிக்கிறீங்கனு சக ஸ்டூடியோ காரங்க கேட்பாங்க. என்கிட்ட போட்டோ எடுக்கவும், பிரின்ட் போடவும் கத்துக்கிட்ட ஒருத்தர், இன்னிக்கு ஆறு ஸ்டூடியோ வெச்சி ருக்கார். இன்னிக்கும் என்ன சந்தேகம்னாலும் என்கிட்டதான் கேட்பாரு....’’ என்கிற நவநீதத்தின் கண்களில் பெருமித ஃப்ளாஷ்.
‘`அவுட்டோர் போய் போட்டோ எடுக்க வும் நிறைய வாய்ப்புகள் வரும். ஆனா, என்னை வாழவெச்ச கஸ்டமர்ஸ் வரும்போது ஸ்டூடியோவை பூட்டிட்டுப் போக மனசு வராது. அதனாலயே அந்த வாய்ப்புகளை ஏத்துக்கிறதில்லை. இப்போ என் ரெண் டாவது பையன் அவுட்டோர் எல்லாத்தை யுமே பார்த்துக்குறான். அவன்தான் எனக்கு டிஜிட்டல் கேமரா, எடிட்டிங்னு எல்லாமே சொல்லிக்கொடுத்தான். போட்டோ கிராபியில புதுசா எந்த விஷயம் வந்தாலும் உடனே சொல்லித்தருவான்.
கல்யாணமான கையோட தம்பதியா சேர்ந்து வருவாங்க. அவங்கள போட்டோ எடுக்கும்போது கிடைக்குற சந்தோஷமே தனி. என் மகன், மகள்னு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவெச்சிட்டேன். பேரன், பேத்தியோட வாழ்க்கை நிறைவா போயிட் டிருக்கு. இத்தனை வருஷங்களா என்னை வாழவெச்சிட்டிருக்கிற போட்டோ ஸ்டூடியோவை எந்தக் காலத்துலயும் விட்டுடக்கூடாதுனு தோணுது. கடைசி வரைக்கும் அந்த ஸ்டூடியோதான் என் உலகம்’’ என்கிற நவநீதம், கேமராவோடு தயாராகிறார். நவநீதத்தின் கேமரா ஒளிர, காத்திருக்கிற வாடிக்கையாளரின் முகம் புன்னகையால் மலர்கிறது.