ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

“நான் நூத்துல ஒருத்தி...” - மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி!

பவித்ரா ராஜசேகர்
பிரீமியம் ஸ்டோரி
News
பவித்ரா ராஜசேகர்

ஆரம்பத்துல நிறைய நஷ்டம் பண்ணேன். அப்புறம் மெள்ள மெள்ள லாபம் சம்பாதிக்கிறதுக்கான ரகசியம் பிடிபட ஆரம்பிச்சிடுச்சு.

குறையில்லா மனிதர்கள் பூமியில் கிடையாது. அவற்றை வென்று பலருக்கும் உந்துசக்தியாக இருப்பவர்களில் ஒருவர்தான் சென்னையைச் சேர்ந்த பவித்ரா ராஜசேகர்.

‘`நான் பிறந்ததும் 'இவ்ளோ அழகா பொறந்த குழந்தைக்கு கடவுள் ஏன் கால்கள்ல குறை வெச்சிட்டாரு'ன்னு அழுதாங்களாம் அம்மா. ஆனா அப்பா, கண்ணீரை அடக் கிட்டு என்னைக் கையிலெடுத்து கொஞ்ச ஆரம்பிச் சிட்டாராம். அப்பாவோட அந்த தைரியம்தான் இன்னிக்கு என்னை உங்க முன்னாடி உட்கார வெச்சிருக்கு...’’ என்கிற பவித்ரா ராஜசேகர், கடந்த 15 வருடங்களாக பங்குச்சந்தை ஆலோசகராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

‘`எனக்கு புத்தி தெரிய ஆரம்பிச்சி, ‘நம்மளால மத்தவங்க மாதிரி நடக்க முடியலையே’னு யோசிக்க ஆரம்பிச்சப்போவே, ‘உனக்கு ஒண்ணுமில்லடா; நீ நூத்துல ஒருத்தி’ன்னு அப்பா என் மனசுல பதிய வச்சிட்டார். நார்மல் ஸ்கூல்லதான் படிச்சேன். ஸ்கூல்ல சேரப் போனப்போ, சீட் கொடுக்க மாட்டேன்னு சொன்ன வங்க, ‘நீ வீட்லேயே டீச்சர் வெச்சுப் படிக்கலாமே’னு அட்வைஸும் செஞ்சாங்க. ‘எனக்கு எல்லார்கூடவும் சேர்ந்து படிக்கணும் மிஸ்’னு சொன்னேன். கொஞ்ச நேரம் யோசிச்சவங்க, ‘நீ எப்படி ஸ்கூலுக்கு வருவே; உன்னை யார் கூட்டிட்டு வருவாங்க; எப்படி படி ஏறுவே’ன்னு வரிசையா கேள்விகள் கேட்டாங்க. அத்தனைக்கும் அவங்க கன்வின்ஸ் ஆகுற அளவுக்கு பதில் சொன்னேன். அட்மிஷன் கிடைச்சுது. ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் நல்லாதான் போச்சு. டென்த் வந்தப்போ என்னோட உடல் நிலை காரணமா படிகள்ல ஏற முடியலை. டுட்டோரியல்ல சேர்ந்து ப்ளஸ் டூ வரை படிச்சேன்.

“நான் நூத்துல ஒருத்தி...” - மாற்றி யோசித்த மாற்றுத்திறனாளி!

அப்பா, இந்துஸ்தான் லீவர்ல விநியோகஸ்தரா இருந் தவர். ‘நான் சில ஷேர்ஸ் வாங்கி வெச்சிருக்கேன். அதுல எப்படி லாபம் சம்பாதிக்கிறதுன்னு சொல்லித் தர்றேன்’னு பங்குச்சந்தைக்கான சில அடிப்படை விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். நானும் ஆர்வமா கத்துக்கிட்டேன். அடுத்தகட்டமா இந்தத் துறையில இருந்த எக்ஸ்பர்ட்ஸ் கிட்ட பங்குச்சந்தை நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். அப்பா, என்கிட்ட ஒரு லட்ச ரூபாய் கொடுத்து, ‘இது என் பணமில்ல; நீ எந்தப் பங்குல வேணும்னாலும் இன்வெஸ்ட் செஞ்சுக்கோ; லாபமோ, நஷ்டமோ களத்துல இறங்கு’னு தைரியம் கொடுத்தார்.

ஆரம்பத்துல நிறைய நஷ்டம் பண்ணேன். அப்புறம் மெள்ள மெள்ள லாபம் சம்பாதிக்கிறதுக்கான ரகசியம் பிடிபட ஆரம்பிச்சிடுச்சு. ஒருபக்கம் ஷேர் மார்க்கெட், மறுபக்கம் கரஸ்ல பி.காம்னு என் எதிர்காலத்துக்கான ஒளி தெரிய ஆரம்பிச்சிது. அப்புறம் பத்திரிகைகள்ல எழுத ஆரம்பிச்சேன். பொதிகை, அகில இந்திய வானொலியில பங்குச்சந்தை பத்தி பேச ஆரம்பிச்சேன். தவிர, பங்குச் சந்தை தொடர்பா வகுப்பும் எடுக்க ஆரம்பிச்சேன். ‘இதெல் லாம் வாழ்க்கையில என்ன சாதிக்கப்போகுது’ன்னு பின்னாடி புரளி பேசினவங்க முன்னாடி வாழ்ந்து காட்டிட்டே இருக்கேன்’’ என்கிற பவித்ரா,

‘`பணத்தைச் சேமிக்கிறதை விட அதைப் பெருக்குறதுல பெண்கள் ஆர்வம்காட்டணும். ஷேர் மார்க்கெட் பத்தி நல்லா தெரிஞ்சுகிட்டு அதுக்குள்ள வந்தா நிறைய சம்பாதிக்கலாம். உங்களுக்கு வழிகாட்ட நான் ரெடி’’ என்கிறார் ஆயிரத்தில் ஒருத்தியாக!