மியூச்சுவல் ஃபண்ட்... தனிநபர்களின் முதலீடு உயர்வு..! - முதலீட்டில் புதிய முன்னேற்றம்

தனிநபர்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யக் காரணம், எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதே!
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில், தனிநபர்களின் (Individual Investors) முதலீடு 2020 செப்டம்பர் மாதத்தில் ரூ.14 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இது இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறை நிர்வகிக்கும் மொத்த தொகையில் 52% ஆகும். இது கடந்த 2019 செப்டம்பருடன் ஒப்பிடும்போது 4% அதிகம். தனிநபர்கள் என்பது சிறு முதலீட்டாளர்கள் மற்றும் உயர் வருவாய் பிரிவினரைக் (Retail Investors & HNIs) குறிக்கும்.
தனிநபர்கள், கடன் சார்ந்த ஃபண்டுகளைவிட பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகளில்தான் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். தனிநபர்களின் ஈக்விட்டி முதலீடு அதிகமாக இருக்க, சிறு முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் மேற்கொண்டு வரும் முதலீடுதான் முக்கிய காரணம் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஈக்விட்டி ஃபண்டுகளில் 88% பங்களிப்பு தனிநபர்களைச் சார்ந்ததாக இருக்கிறது. நிறுவன முதலீட்டாளர்களின் முதலீடு கடன் ஃபண்டுகள் (59%), லிக்விட் ஃபண்டுகள் (84%), இ.டி.எஃப்.கள் ((91%) ஆகியவற்றில் அதிகமாக உள்ளன.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஈக்விட்டி ஃபண்டுகளில் தனிநபர்களின் முதலீடு 68 சதவிகிதமாகவும், கடன் ஃபண்டுகளில் நிறுவன முதலீட்டாளர்களின் பங்களிப்பு 75 சதவிகிதமாக உள்ளது. நமது மாநிலத்தில் இன்னும் பலரும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது!