கட்டுரைகள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட்: எவ்வளவு தொகை இருந்தால் முதலீட்டை ஆரம்பிக்கலாம்?

மியூ ச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மியூ ச்சுவல் ஃபண்ட்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான திட்டங்களின் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 5,000 என்ற அளவில்தான் இருக்கிறது. பல ஃபண்ட்களில் ஆரம்ப முதலீடு ரூ.1,000 தான்.

எவ்வளவு தொகை இருந்தால் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டை ஆரம்பிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது. இதில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை எவரும் முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு மிக மிகக் குறைவுதான். மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக இளைஞர்கள் மற்றும் கிராமப்புறத்தினர் அதிக எண்ணிக்கையில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். இளைஞர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக சிறிய தொகையில் முதலீட்டை ஆரம்பிக்கிறார்கள்.

கிராமப்புறத்தினர் மியூச்சுவல் ஃபண்டுக்குப் புதியவர்கள் மற்றும் அவர்களுக்கு வருமானம் குறைவு என்பதால் அவர்கள் ஆரம்பத்தில் குறைவான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் போடுகிறார்கள்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரும்பாலான திட்டங்களின் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 5,000 என்ற அளவில்தான் இருக்கிறது. பல ஃபண்ட்களில் ஆரம்ப முதலீடு ரூ.1,000 தான். சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்ற எஸ்.ஐ.பி (SIP - Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்ய மாதம் குறைந்தபட்சத் தொகை பல ஃபண்ட்களில் ரூ.100 ஆக உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட்: எவ்வளவு தொகை இருந்தால் முதலீட்டை ஆரம்பிக்கலாம்?

எப்போது குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை மாறுபடும்?

முதலீடு செய்வதற்கு முன் எந்தத் திட்டத்தில், குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு செய்ய வேண்டும் என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இது நிறுவனங்கள் மற்றும் திட்டங்களுக்கு ஏற்ப மாறுபடும்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் திட்டங்களிலேயேகூட குறைந்தபட்ச முதலீட்டுத் தொகையில் வேறுபாடு இருக்கலாம். உதாரணத்திற்கு, முதலீட்டாளர்களுக்கு வருமான வரிச் சலுகையை அளிக்கும் பங்குச் சந்தை சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (ELSS - Equity Linked Savings Schemes) குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வழக்கமான பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் அல்லது செக்டோரல் ஃபண்டோடு ஒப்பிடும்போது குறைவாக இருக்கும். ரூ.500 இருந்தாலே இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாத குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.500 ஆக உள்ளது.

அதேபோல், பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது, கடன் சந்தை சார்ந்த திட்டங்களின் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை குறைவாக இருக்கும்.

இதில் பாதிப்பு இருக்கிறதா?

குறைந்தபட்சத் தொகையை மட்டுமே முதலீடு செய்துவருவது ஏதாவது பாதிப்பைத் தருமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். யூனிட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மிக அதிக தொகையை முதலீடு செய்திருந்தால் லாபம் அல்லது நஷ்டம் அதிகமாகவும், குறைந்த தொகையை முதலீடு செய்திருப்பவர்களுக்குக் குறைவான லாபமும், குறைவான இழப்பும் இருக்கும்.

சதவிகித அடிப்படையில் பார்க்கும்போது குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்யும் அனைத்து முதலீட்டாளர்களும் ஒரே அளவிலான வருமானத்தைத்தான் பெறுவார்கள்.

தொகையைப் பின்னர் அதிகப்படுத்த இயலுமா?

முதலீட்டாளர்கள் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் ‘ஓப்பன் எண்டெட்’ வகை திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், வசதி வாய்ப்பு வரும்போது பின்னாளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் தொகையை தேவைக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ள முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட்: எவ்வளவு தொகை இருந்தால் முதலீட்டை ஆரம்பிக்கலாம்?

மாதம் ரூ. 100 முதலீடு செய்யும் திட்டங்கள்

நிப்பான் இந்தியா இண்டெக்ஸ் நிஃப்டி 50 ஃபண்ட், நிப்பான் இந்தியா குரோத் ஃபண்ட், நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், யூ.டி.ஐ மாஸ்டர்ஷேர் ஃபண்ட், ஐ.டி.எஃப்.சி கோர் ஈக்விட்டி ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. புளூசிப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மல்டி கேப் ஃபண்ட், ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. ஈக்விட்டி & டெப்ட் ஃபண்ட், சுந்தரம் மல்டி கேப் ஃபண்ட், எஸ்.பி.ஐ புளூசிப் ஃபண்ட், சுந்தரம் மியூச்சுவல் அக்ரசிவ் ஹைபிரிட் ஃபண்ட் உள்ளிட்ட பல ஃபண்ட்களில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் ரூ.100 முதலீடு செய்யலாம்.

நிதி இலக்கு

மியூச்சுவல் ஃபண்டில் ரூ. 100 கூட முதலீடு செய்யலாம் என்றாலும், மாதம் ரூ.1,000 தொடங்கி ரூ.5,000 வரை முதலீடு செய்து வருவது நல்ல தொடக்கமாக இருக்கும். முதலீட்டாளர்கள் தங்களது நிதி இலக்கு என்ன, அதனை அடைய தேவைப்படும் தொகை எவ்வளவு, எத்தனை ஆண்டுகள் கழித்து இந்தத் தொகை தேவைப்படும் எனக் கணக்கிட்டு மாதம்தோறும் அதற்கு ஏற்ப முதலீடு செய்துவர வேண்டும்.

பணத்தைச் சேர்த்து வைத்துப் பணக்காரர் ஆகலாம் என்பதைவிட மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து பணக்காரர் ஆவது சுலபம்!