மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! லாபம் பார்க்க உதவும் பேலன்ஸிங் டெக்னிக்..!

மியூச்சுவல் ஃபண்ட் ஆய்வு - புதிய தொடர்
வித்யா பாலா, இணை நிறுவனர், Primeinvestor.in
சென்செக்ஸ் 60000 புள்ளிகளைக் கடந்து ஏற்றம் கண்டுகொண்டிருக்கிறது. இந்தச் சமயத்தில் எல்லோரிடமும் எழும் கேள்வி மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் லாபத்தை புக் செய்யலாமா அல்லது இன்னும் சந்தை மேல்நோக்கி நகருமா?

இதுபோன்ற கேள்வி எழும்போது எப்போதுமே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட் டாளர்களுக்கு நாம் சொல்வது சந்தை என்ன ஆகும் என்று யோசிப்பதைவிட, நம்முடைய போர்ட்ஃபோலியோவை ‘ரீபேலன்ஸ்’ செய்து கொள்வது மிகவும் எளிது என்பதுதான். அதாவது, சந்தை இன்னும் ஏற்றம் காணுமா அல்லது சந்தையின் ஏற்றப்போக்கு முடிவுக்கு வந்துவிட்டதா என்று கணிப்பதைக்காட்டிலும், நம்முடைய போர்ட்ஃபோலியோவை ‘ரீபேலன்ஸ்’ செய்வது அல்லது நம்முடைய இலக்குக்கேற்ப ஒரு முதலீட்டு வகையிலிருந்து இன்னொரு முதலீட்டு வகைக்கும் நம்முடைய முதலீடுகளை மாற்றுவது என்பது சிறந்த வழியாகும்.
மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோ மேனேஜ்மென்டில் ‘ரீபேலன்ஸிங்’ மற்றும் ‘ரிவ்யூவிங்’ ஆகிய இரண்டையும் பலர் குழப்பிக் கொள்வதுண்டு. ஆனால், இரண்டுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. முதலில் அது பற்றி பார்த்துவிடலாம்.
ரீபேலன்ஸிங்: நம்முடைய போர்ட் ஃபோலியோவில் முதலீடுகளின் அஸெட் அலொகேஷன் பங்களிப்பு விகிதத்தை மாற்றி அமைப்பது ‘ரீபேலன்ஸிங்’ ஆகும். அதாவது, நாம் நிர்ணயித்த விகிதத்துக்கு அவற்றை மீண்டும் கொண்டுவருவது.
உதாரணமாக, உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் ஈக்விட்டி மற்றும் கடன் முதலீடுகளின் விகிதம் 60:40 என்ற விகிதத்தில் ஆரம்பித்து இருந்தால், அதை 70:30 என்ற விகிதத்துக்கு மாறியிருக்கும்பட்சத்தில், ஈக்விட்டியிலிருந்து முதலீட்டை விற்று கடன் திட்டத்தில் முதலீடு செய்து, அதை மீண்டும் 60:40 என்ற விகிதத்துக்கு மாற்றி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது.
ரிவ்யூவிங்: மியூச்சுவல் ஃபண்ட் போர்ட்ஃபோலியோவில் நாம் முதலீடு செய்துள்ள ஃபண்ட் சரியாக செயலாற்றவில்லை எனில், அதை விற்று அதிலிருந்து வெளியேறி வேறொரு நல்ல ஃபண்டில் முதலீடு செய்வது ‘ரிவ்யூவிங்’ ஆகும். இது எந்த விதத்திலும் அஸெட் அலொகேஷன் பங்களிப்பில் மாற்றங்கள் செய்யாது. ஃபண்டுகளில் மட்டுமே மாற்றம் இருக்கும். அதே சமயம், சரியாகச் செயலாற்றாத ஃபண்டுகளிலிருந்து வெளியேறு வதையும் ‘ரீபேலன்ஸிங்’ நடவடிக்கையில் ஒரு பகுதியாக மேற்கொள்ளலாம். எனவே, ‘ரீபேலன்ஸிங்’ செய்யும்போது ஃபண்டுகளை ‘ரிவ்யூ’ செய்வது அவசியமாகும்.
ரீஅலொகேஷன்: போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்வதற்காக அஸெட் அலொகேஷனில் மாற்றங்கள் செய்வதை ‘ரீஅலொகேஷன்’ என்கிறோம். உதாரணமாக, 70:30 விகிதத்தில் உங்களுடைய போர்ட்ஃபோலியோ இருப்பதாக வைத்துக்கொள்வோம். உங்களுக்கு 56 வயது எனில் உங்களுடைய ஈக்விட்டி பங்களிப்பைக் கணிசமாகக் குறைத்து, இன்கம் வரக்கூடிய ஆப்ஷன்களுக்கு மாற்ற நீங்கள் விரும்பலாம். அல்லது குறை வான ரிஸ்க் உள்ள கடன் திட்டங்களில் முதலீடு செய்ய நினைக் கலாம். அப்போது நீங்கள் உங்களுடைய போர்ட்ஃபோலியோவை ‘ரீஅலொகேஷன்’ செய்கிறீர்கள். அதாவது, ஈக்விட்டியிலிருந்து கடன் திட்டங்களுக்கு முதலீட்டை மாற்றுவதன் மூலம் போர்ட் ஃபோலியோவின் ரிஸ்க்கை மாற்றி அமைக்கலாம்.

போர்ட்ஃபோலியோவில் ரீபேலன்ஸிங் எப்படி செய்யலாம்?
பெரும்பாலான முதலீட்டாளர்கள் சந்தை எப்போது உச்சத்தில் இருக்கிறதோ, அப்போது லாபத்தை எடுக்கலாம் என்று ஆசைப்படுவார்கள். அதே போல, சந்தை இறக்கம் காணும்போது எப்போது முதலீட்டை அதிகரிக்கலாம் என்பது பற்றி யோசிப்பார்கள். ஆனால், இதைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இதற்குத் தகுந்த ஒரு வழிதான் ‘ரீபேலன்ஸிங்.’ ஆனால், இதுவல்ல இதன் நோக்கம்.
ரீபேலன்ஸிங் செய்வதன் நோக்கம், ஒன்றுதான். அதாவது, உங்களுடைய அஸெட் அலொகேஷனை உறுதி செய்வது மற்றும் உங்களுடைய போர்ட்ஃபோலியோவின் ரிஸ்க்கை சமநிலையில் வைப்பது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் எனில், இரண்டு குறிப்பிட்ட சமயங்களில் மதிப்பு உயரும் முதலீடுகளிலிருந்து லாபத்தை எடுப்பதும், மதிப்பு குறையும் திட்டங்களில் முதலீடு செய்வதும் ஆகும். மறைமுகமாக சந்தையின் நகர்வுகளை எப்போதும் கண்காணித்துக்கொண்டே இல்லை என்றாலும், உச்சத்தில் விற்கவும் இறக்கத்தில் வாங்கவும் உதவும்.
எப்போது பயன்படுத்தலாம்?
‘ரீபேலன்ஸிங்’ பிரதானமாக உங்களுடைய போர்ட் ஃபோலியோ அதிக இறக்கங்களுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கும். ஆனால், அதன் பக்கவிளை வாக சந்தையின் நீடித்த ஏற்றத்தின்போது போர்ட் ஃபோலியோவின் கணிசமான வளர்ச்சியை அது தடுப்பதாக வும் அமையும். இது குறித்து சற்றுக் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எனவே, எங்களின் கணிப்புபடி, ‘ரீபேலன்ஸிங்’ நடைமுறை 10 ஆண்டுகளுக்குக் குறைவான இலக்குகள் கொண்ட போர்ட்ஃபோலி யோவில் பெரிய பங்கு வகிப்ப தாக இருக்கிறது. ஏனெனில், நீண்ட கால அடிப்படை யிலான போர்ட்ஃபோலியோ சந்தையின் ஏற்ற இறக்கங் களால் பாதிக்கப்படுவதற் கான வாய்ப்பு குறைவாக இருக்கிறது.
குறுகிய கால இலக்கு கொண்ட போர்ட்ஃபோலியோ எனில், சந்தையின் கடும் இறக்கத்திலிருந்து மீண்டு வர போதுமான அவகாசம் இல்லாதபட்சத்தில் நஷ்டத் துக்கு உள்ளாகும். அதாவது, உங்களுடைய இலக்கு 10 ஆண்டுக்கால அடிப்படை யில் இருந்தால் சந்தையின் குறுகிய கால இறக்கங்களால் எந்த பாதிப்பும் இல்லை. அப்போது ‘ரீபேலன்ஸிங்’ அவசியம் இல்லை.
நீங்கள் முதலீட்டைத் தொடர்ந்து வந்தால் போதும், உங்கள் போர்ட்ஃபோலி யோவின் கூட்டு வளர்ச்சியில் எந்த பாதிப்பும் இருக்காது. சரியாகச் செயலாற்றாத ஃபண்டுகளை மட்டும் நீக்கி, அவசியமெனில் வேறு ஃபண்டுகளை மாற்றினால் போதும். ஒருவேளை, நீங்கள் உங்கள் போர்ட்ஃபோலி யோவில் ‘ரீபேலன்ஸிங்’ நடைமுறையை விரும்பும் போதெல் லாம் செயல்படுத்த நினைத்தால், உங்கள் லாபம் பெருகுவதைக் குறைக்கும் என்கிற விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
எப்படி போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸிங் செய்வது?
1. முதலில் நம்முடைய போர்ட் ஃபோலியோவுக்கு ‘ரீபேலன்ஸிங்’ அவசியமா என்பதை ஆண்டுக்கு ஒருமுறை பார்க்க வேண்டும். ஆண்டு தொடக்கத்திலோ, ஆண்டு இறுதியிலோ, நிதி ஆண்டு அடிப் படையிலோ இதைச் செய்யலாம்.
2. போர்ட்ஃபோலியோவில் குறைந்த அளவிலான ஏற்ற இறக்கங்கள் இருப்பின் அதற்காக ‘ரீபேலன்ஸிங்’ செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படிச் செய்தால் தேவையில்லாத வரி விதிப்பும், வெளியேறும் கட்டண மும் செலுத்த வேண்டிவரும்.
3. போர்ட்ஃபோலியோவில் உள்ள முதலீட்டுத் திட்டங்கள் அவற்றின் ஒரிஜினல் அலொ கேஷனில் இருந்து 5 சதவிகிதத்துக்கும் மேலான ஏற்ற இறக்கம் இருக்கும் எனில் ‘ரீபேலன்ஸிங்’ செய்யலாம்.
4. உங்கள் போர்ட் ஃபோலியோ மேற்குறிப்பிட்ட வரம்பைக் கடந்து ஏற்றம் அடையவில்லை என்றாலும், அந்த வரம்பைக் கடப்பதற்கான அறிகுறி இருந்தால்கூட, சந்தை 2007-ல் நகர்ந்தது போல, மிகக் கூர்மையாக நகரும்போது நீங்கள் ‘ரீபேலன்ஸிங்’ செய்யலாம்.
5. உங்களுடைய போர்ட் ஃபோலியோ ‘ரீபேலன்ஸிங்’ செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் அறிந்துகொண்ட பிறகு, உங்களுடைய ஃபண்டுகளை ‘ரிவ்யூ’ செய்ய வேண்டும். அவ்வாறு ‘ரிவ்யூ’ செய்து சரியாகச் செயல்படாத ஃபண்டுகளிலிருந்து வெளியேற வேண்டும். நன்றாகச் செயலாற்றும் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். உங்களுடைய போர்ட்ஃபோலியோ இலக்குக்கேற்ப ஈக்விட்டி மற்றும் கடன் திட்டங்களின் அலொகேஷனைத் தீர்மானிக்க வேண்டும்.
6. உங்கள் போர்ட்ஃபோலியோவில் ஈக்விட்டி பகுதி ஏற்றத்தில் இருக்கும்பட்சத்தில், உங்களுடைய எல்லா ஃபண்டுகளும் சிறப்பாகச் செயலாற்றும்பட்சத்தில் எந்த வகை திட்டம் அதிக மதிப்பில் இருக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப அவற்றில் முதலீட்டுப் பங்களிப்பைக் குறைத்துக்கொள்ளலாம்.
7. அதுவே உங்களுடைய போர்ட்ஃபோலியோவில் ஈக்விட்டி பகுதி இறக்கத்தில் இருந்தால், அவற்றை உங்கள் முந்தைய அலொகேஷன் நிலைக்குக் கொண்டு வர வேண்டும். சந்தையின் இறக்கம் உங்களை அச்சுறுத்தும் வகையில் இருந்தால், இண்டெக்ஸ் ஃபண்டுகளில் மட்டும் முதலீட்டை மேற்கொள்ளலாம். இதன் மூலம் லார்ஜ், மிட்கேப் இப்படி எந்தவகை பிரிவு மீண்டும் வரும் என்று பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை.
8. அதேபோல, உங்கள் கடன் திட்டங்கள் பகுதி அதிக ஏற்றத்தில் இருந்தால், அவை நீண்ட கால அடிப்படையிலான ஃபண்டுகள், ரிஸ்க்கான ஃபண்டுகளாக இருக்கலாம். அவற்றில் முதலீடுகளைக் குறைத்துக்கொள்ளலாம். அதற்குமுன் சரியாக செயலாற்ற ஃபண்டுகளை முதலில் நீக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
9. எப்போது கடன் ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் (எப்போது ஈக்விட்டியைக் குறைக்க வேண்டும்) என்று பார்க்கும்போது, இதற்கு கால வரையறையோ, கிரெடிட் அம்சங்களையோ பார்க்காமல், உயர்தர குறுகிய கால மற்றும் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்டுகள் அல்லது சமநிலைப்படுத்தும் வகையிலான லிக்விட் ஃபண்டுகளைக் கலவையாக போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக்கொள்ளலாம். பரவலான கால முதிர்வுகொண்ட ஃபண்டுகளின் கலவையாக இருந்தால் நல்லது. இதன்மூலம் வட்டி விகித ஏற்ற இறக்கம் சார்ந்த ரிஸ்க்கை சமநிலையில் வைத்துக்கொள்ளலாம்.
10. அவ்வப்போது கொஞ்சம் லாபத்தை புக் செய்து லிக்விட் ஃபண்டில் வைத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும். அடுத்த இறக்கம் வரும்போது முதலீடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும். லிக்விட் ஃபண்டில் எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்கிற கணக்கைத் தீர்மானமாகச் சொல்ல முடியாது. பொதுவாக, உங்களுடைய நீண்ட கால போர்ட்ஃபோலியோவில் 5% - 10% லிக்விட் ஃபண்டில் அல்லது ஓவர்நைட் ஃபண்டில் ஈக்விட்டியில் புக் செய்யும் லாபத்திலிருந்து சேர்த்து வைத்துக் கொள்ளலாம்.
11. உங்கள் போர்ட்ஃபோலியோவில் உள்ள ஃபண்டில் கூடுதலாக முதலீட்டை எப்போது மேற்கொள்ளலாம் என்பது மிகவும் முக்கியம். ஈக்விட்டி சார்ந்த ஒரு தனி ஃபண்டில் அதிகபட்சம் உங்கள் போர்ட்ஃபோலியோவின் 20% -25% முதலீட்டுக்குமேல் வைத்துக்கொள்ள வேண்டாம் (இண்டெக்ஸ் ஃபண்டுகளுக்கு இது பொருந்தாது). கடன் சார்ந்த ஃபண்டில் 10% - 20% அளவுக்கு வைத்துக்கொள்ளலாம். உங்களுடைய ஃபண்டுகள் இந்த அளவை எட்டிவிடும்பட்சத்தில் புதிய ஃபண்டைத் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள்.
12. இந்த அனைத்து விதிகளுமே நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்திருந்தாலும் பொருந்தும். அதேசமயம் ஏற்கெனவே மதிப்பு உயர்ந்த ஃபண்டுகளில் லாபத்தை எடுத்து ரீபேலன்ஸ் செய் வதற்குப் பதிலாக கைவசம் பணம் இருக்கும்பட்சத்தில் புதிதாக முதலீடு செய்வதன்மூலமும் ரீபேலன்ஸ் செய்யலாம். ஆனால், இதில் பலருக்கு எழும் கேள்வி வரி விதிப்பு அதிகமாக இருக்குமே என்பதுதான். மதிப்பு உயர்வு என்பது 5 சத விகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் சூழலின்போதுதான் ‘ரீபேலன்ஸிங்’ செய்ய வேண்டியிருக்கும். ஆனால் ஒரு வருட கால இடைவெளியில் இதுபோன்ற சூழல் மிகவும் அரிதாகவே நடக்கும். எனவே, பெரிதாக வரி விதிப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை. இவ்வாறு ‘ரீபேலன்ஸிங்’ செய்ய புதிய முதலீட்டை மேற்கொள்ளும்போது ஈக்விட்டி வகையில் முதலீடு செய்யலாம். ஏனெனில், ஈக்விட்டி பிரிவு இறக்கம் அடையும்போது உங்களு டைய மதிப்பு சராசரி செய்யப்படும்.
இன்னொரு விஷயம், கடன் பிரிவு இறக்கம் காண்பது, ஈக்விட்டி பிரிவு அதிக மதிப்பில் வர்த்தகமா வதால் நடக்குமே தவிர, கடன் பிரிவின் செயல்பாடு சரியில்லாததால் இறக்கம் காண வாய்ப்பில்லை என்பதை உணர வேண்டும்.அதே சமயம், எந்த ஃபண்ட் மதிப்பு குறைவாக இருக்கும் என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். சில ஃபண்டு களின் என்.ஏ.வி மதிப்பு திடீரென்று கடுமையாக வீழ்ச்சி அடையலாம். எனவே, பாதுகாப்பான ஃபண்டு களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்வது நல்லது. சுருக்கமாகச் சொன்னால் ஈக்விட்டியோ, கடன் சார்ந்த திட்டங்களோ அதன் வரம்பை மீறி ஏற்றம் அடையும்பட்சத்தில், அதை மீண்டும் சமநிலைக்குக் கொண்டுவரும் ‘ரீபேலன்ஸிங்’ செய்ய வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்து முதலீடு களை மேற்கொள்ள வேண்டும்.
‘ரீபேலன்ஸ்’ என்பது வருடாந்தர நிகழ்வாகக் குறிப்பிட்டிருந்தாலும், சந்தை இறங்கும்போது புதிதாக முதலீடுகளை மேற்கொள்ளக் கூடாதா எனில், தாராளமாக முதலீடு செய்யலாம். ஒரு பக்கம் எஸ்.ஐ.பி முதலீடுகள் நடப்பில் இருந்தாலும், சராசரி செய்வதற்கு மொத் தமாக கையிலிருக்கும் பணத்தை முதலீடு செய்வதில் தவறே இல்லை.
(ஆய்வு தொடரும்)
தமிழில்: ஜெ.சரவணன்
பிரைம்இன்வெஸ்ட்டார் வழங்கும் ஆய்வுக் கட்டுரைகள்!
‘மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்’ என்கிற இந்தப் புதிய பகுதியில் இடம்பெறும் ஆய்வுக் கட்டுரைகளை வாரம்தோறும் தரவிருக்கிறது பிரைம்இன்வெஸ்ட்டார் (Primeinvestor) நிறுவனம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள், பங்குச் சந்தை உட்பட முதலீடுகள் பற்றி பரிந்துரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் பிரைம்இன்வெஸ்ட்டார் நிறுவனம் அதன் இணையதளத்தில் (https://primeinvestor.in/) வெளியிட்டு வருகிறது. ஆண்டு சந்தா கட்டுபவர்கள் மட்டுமே படிக்கக்கூடிய வகையில் இந்தக் கட்டுரைகளை வெளியிடும் ப்ரைம் இன்வெஸ்ட்டார் நிறுவனம், நாணயம் விகடன் மூலம் வாரம்தோறும் அளிப்பது வாசகர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இதன்மூலம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய தங்கள் அறிவை வாசகர்கள் மேலும் வளப்படுத்திக்கொள்ள உதவும்!